வாரக்கடைசியில் ஆஸ்திரேலிய ஓப்பனை கண்விழித்துப் பார்த்தது வீணாகவில்லை. ராஃபா நடாலும் மேட்வடெவ்வும் ஆடிய ஆண்கள் இறுதிப் போட்டி, ஏறக்குறைய ஆறு மணி நேரத்திற்குப் பிறகு நகக்கடியாக முடிந்தது. தன்னை விளையாட விடாததினால் ஜோகோவிச் கோவிச்சுக் கொண்டாலும் இப்பொழுது நிலவும் தொற்று சூழ்நிலைக்குச் சரியே என்று தோன்றியது. ஜோகோ இருந்திருந்தால் இந்தப் போட்டி வேறு மாதிரி இருந்திருக்கும்.
ராஃபாவிற்கு ஆஸ்.ஓப்பன் சில வருடங்களாக கைக்கு எட்டாமலேயே இருந்தது. இதை வென்றால் 21வது கிராண்ட் ஸ்லாம் என்ற உலக சாதனை, எதிரில் மேட்வடெவ் என்ற இளைஞன் என்று பல அழுத்தங்கள். கடைசியில் அவர் வெற்றி பெற்றவுடன் அழுகை சந்தோஷம் என்ற உணர்ச்சிக் குழப்பத்தில் இருந்தது புரிந்துகொள்ளக் கூடியதே.
நம்முடைய எல்லோர் வீடுகளில் இருக்கும் ஒன்று விட்ட மாமா பையன் சாயலில் ரஷ்யாவின் மேட்வடேவ். உலக டென்னிஸ் வரிசையில் தற்போது இரண்டாவது இடம். நெடுநெடுவென வளர்ந்து ஒல்லியாக சற்றே முன்வழுக்கை விழுந்து, சொன்ன விஷயத்தை கச்சிதமாகச் செய்து முடிக்கும் இளைஞனின் முகம். புஜபல பராக்கிரமத்துடன் இருக்கும் நடாலின் எதிரில் அமைதியாக ஆனால் அதிரடியாக இருந்த மேட்வடேவ் கண்டிப்பாய் மனதில் இடம் பிடித்தார். வருகிற வருடங்களில் இவரின் மேல் எதிர்பார்பு அதிகமாகும். ஆனால் மேட்வடேவை ESPNல் கமெண்டரி சொல்பவர், ரயில் நிலையத்தில் டிபன் விற்பவர் போல், “மெதுவடே… மெதுவடே…” என்று சொல்லச் சொல்ல ஒவ்வொரு முறையும் அது என் கவனதிசை திருப்பலுக்குக் காரணமாகியது.
நடாலின் வியர்வை வழியும் முகத்தில் மூக்கு நுனி சிகப்பு வரை தற்போதைய உயர் தொழில்நுட்ப காமிரா பளீரென படம் பிடிக்க, இப்படி வீட்டில் பார்ப்பதை விட்டு விட்டு ஆஸ்திரேலியர்கள் மாஸ்க் இல்லாமல் மைதான அனுபவத்திற்கு ஏங்கியது நியாயம் தான் என்றாலும் உறுத்தியது. ஆக்ஷன் ரிப்ளேயிலும் புள்ளி விவரங்களின் 3டி புரொக்ஷனிலும் எங்குத் திரும்பினாலும் இன்போசிஸின் பல கோடி டாலர் விளம்பரங்கள்.
கடைசி செட்டில் அந்த களமே ஸ்லோமோஷனில் அமைதியாகிப் போனது. ஒரு விதத்தில் ஆர்.கே.செல்வமணி பட க்ளைமாக்ஸ் போல பந்தை அடிக்கும் நேரத்தில் இருவரும் “ஹாஹஹஹ…” என்ற உறுமல் ஒலி தாள கதியாய் காதில் விழ, மோனிகா செலஸைம் மரியா ஷரபோவாவையும் தாண்டிய டெசிபெல் அது. அதுவும் 4-2 என்று நடால் முன்னணியில் இருந்த கடைசி செட் கேமில், டுயூஸ் அட்வாண்டேஜ் என்று மாறி மாறிப் போய் ஒரு வழியாக மேட்வடேவ் ஜெயித்த போது அரங்கமே ஆர்ப்பரிக்க நான் பாத்ரூமுக்கு ஓடினேன்.