“ஜீனோ கை கொடுக்காமல், ‘ஹலோ, நிலா! இந்த வீட்டில் கொசு இருக்குமா?’ என்றது.
நிலா ஆச்சரியத்துடன் அதைப் பார்த்து, ‘நம்மவர்களைப் போலவே பேசுகிறதே!’
‘ஐயோ, அதுக்குத் தெரிந்தது நமக்குத் தெரியாது. ஜீனோ என்று பெயர் வைத்ததே அதற்காகத்தான். ஜீனோ! உன் பேர் எதுக்காக ஜீனோ?
’ ‘கிரேக்க தத்துவஞானி ஜீனோவின் ஞாபகார்த்தமாக!’
‘பார்த்தீர்களா!’
‘ஜீனோ, இதெல்லாம் எங்க கத்துக்கிட்ட?’ என்றாள் நிலா.
‘எல்லாம் கேள்வி ஞானம்தான். டயம் இருந்தா புக்ஸ் படிப்பேன்! என் ஸ்கானரைக் கொஞ்சம் பழுது பார்த்தா, இன்னமும் படிச்சு இன்னமும் உங்களுக்கு உபயோகமாக இருக்க முடியும்! அப்புறம் வால்ல ஒரு பேரிங்கு போயிருக்கு. ஆட்டறது கஷ்டமா இருக்கு. இஃப் யூ டோன்ட் மைண்ட், எனக்கு மத்தியானம் கொஞ்சம் தூங்கணும்!’”
— என் இனிய இயந்திரா / சுஜாதா
சுஜாதா எண்பதுகளில் எழுதிய என் இனிய இயந்திரா என்ற விஞ்ஞானக் கதை (சயின்ஸ்-பிக்ஷன்) ஆரம்பிப்பது 31-12-2021. கதை நடப்பது 2022ல் டிஸ்டோப்பிய நாடாக மாறிய தமிழ்நாட்டில். ஆக இன்று நடந்து கொண்டிருக்கும் கதை. 2021ன் கடைசி நாளில் தான் நிலாவிற்கும் சிபிக்கும் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதியை அரசாங்கம் கொடுக்க, நிலா சிபிக்கு ஒரு வீடியோ கால் செய்கிறாள். அப்போது அவள் புரட்சியாளன் ரவியையும் அவனது ரோபோ நாய்க்குட்டியான ஜீனோவையும் சந்திக்கிறாள். சிபி சிறையில் அடைக்கப்பட, நிலாவும் ஜீனோவும் சேர்ந்து செய்யும் சாகசங்கள் தான் கதை.
ஜீனோ மனித உணர்வுகள் கொண்ட ஒரு அடாவடி ரோபோ. சரியாக சொல்ல வேண்டுமானால் கணேஷ்-வசந்த் ஜோடியில் வஸந்தைப் போல புத்திசாலியான வாயாடி பாட். கதை வெளிவந்த போது ஜீனோ பிரபலமாக சில வருடங்கள் கழித்து ஒரு சீக்குவல் எழுதினார் சுஜாதா – மீண்டும் ஜீனோ.
தொடர்கதையாக நான் முதலில் படித்தது மீண்டும் ஜீனோவைத் தான். அப்போது கற்பனையில் தான் ஜீனோவை வரைந்து கொள்ள முடிந்தது. பின்பு எ.இ.இ தொலைக்காட்சித் தொடராக வந்த போது ஜீனோவை ஒரு வழியாகப் பார்க்க முடிந்தது. கடைசியாக அக்கடான்னு நாங்க உட போட்டா பாட்டில் கமல் ஒரு வர்சுவல் லீஷில் ஜீனோவை பிடித்துக் கொண்டிருந்தார்.
ஜீனோ தான் எனக்கு முதலில் அறிமுகமான ரோபாட். பிறகு ஐஸாக் ஆஸிமோவ் எழுதிய பல புத்தகங்களிலும்(The Naked Sun, Robot Dreams…) மூலமும், ஹாலிவுட் படங்கள் மூலமும் பலப்பல ரோபாட்களை பார்த்தாகிவிட்டது. ஆனாலும் ஜீனோ ஜீனோ தான்(சுஜாதா இருந்திருந்தால் மூன்றாம் பாகத்திற்கான தலைப்பு ரெடி). நான் வாங்கிய அத்தனை எலக்ட்ரானிக்ஸ் எந்திரங்களுக்கும், சீடி ப்ளேயர் முதல் ஃபோன், ஐபேட் என்று கடைசியாய் வாங்கிய கார் வரை எல்லாவற்றிற்கும் செல்லப் பெயர் ஜீனோ (ஜீனோ_போன், ஜீனோ_டொயோடா… ) . வீட்டிலிருந்த wifi கூட பல வருடங்களாக ஜீனோ என்றே இருந்தது. வீடு மாறும் போது எப்படியோ மாறிவிட்டது.
போன வருடம் ராபர்ட் கார்கில் எழுதிய அசிமோவ் வாசனை வீசிய, மிகப் பிரமாதமான டே ஸீரோ நாவலை படித்தபோது(க்யூட் புலிகுட்டி ரோபோட்) கூட ஜீனோவை நினைத்துக் கொண்டேன், சுஜாதாவையும் கூட.
Leave a Reply