சமீபத்திய பேட்டி ஒன்றில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சித்தி திரைப்படத்தில் வரும் காலமிது காலமிது என்ற பாடலை கேட்டுக் கொண்டிருக்கும் போதே தன் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடியதைப் பற்றிச் சொல்லியிருந்தார். ஒரு தாய் தன் மகளுக்குச் சொல்லும் நடைமுறை அறிவுரைப் பாடல் அது. அந்தக் கருப்பு வெள்ளைப் பாடல் வெளிவந்த காலமும் தற்போதைய காலமும் தாய்களும் மகள்களும் எப்படி மாறியும் மாறாமலும் இருப்பதைச் சொல்லும் குறும்படம் தான் நண்பர் ஹேமந்த் குமாரின் – காலமிது காலமிது.
பொழுது புலர்ந்து, பறவைகள் பறந்து, சூரியன் எழுந்து என்றெல்லாம் வழக்கமான சம்பிரதாயங்களுடன் இல்லாமல், படம் சடுதியில் ஆரம்பிக்கிறது. ஒரு பெண் மருத்துவர் தன் வேலையிலிருந்து வீட்டிற்குத் திரும்பும் போது காரிலேயே கதை ஆரம்பித்து முடிந்து போகிறது. இயக்குநர் பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 படம் போல நாம் பார்ப்பது இந்த ஒரே கதாபாத்திரத்தைத் தான். அந்தப் பெண் காரில் ஏறியவுடன் ஆன் செய்யும் ரேடியோ மூலம் தான் புரிகிறது அது கரோனா வைரஸ் காலம், அவள் இருப்பது கலிபோர்னியாவின் பே ஏரியாவில். ஆஸ்பத்திரியில் கரோனா கடமைகளை முடித்து விட்டு களைத்துப் போய் வீட்டிற்கு செல்ல காரில் ஏறி தனக்கு வந்த வாய்ஸ்மெயில்களை கேட்கிறாள் அந்தப் பெண். விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு அழைக்கும் கணவன், என்னை இங்கிருந்து கூட்டிப் போய் நல்ல சாப்பாடு வாங்கிக் கொடு என்று அழும் மகள், உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை கூப்பிட்டுப் பேசு என்று சென்னையிலிருந்து அழைக்கும் மாமா, உங்க அம்மா செய்கிற அழிச்சாட்டியம் தாங்க முடியவில்லை என்று சென்னையிலிருந்து குறை சொல்லும் பக்கத்து அப்பார்ட்மெண்ட்டுப் பெண் என்று எல்லா பக்கத்திலிருந்தும் அவளைப் பிடித்து இழுக்கிறார்கள்.
காரை ஓட்டிக் கொண்டே இவர்களுடன் கதைத்துக் கொண்டிருப்பவள், இந்தக் கவலைகளால் களைத்துப் போய் ரோட்டின் ஒரமாகக் காரை நிறுத்தி, அந்தக் கும்மிருட்டில் ஒரு சிகரெட் பிடிக்கிறாள். பிறகு ஒரு வழியாய் மனதை ஒருமுகப்படுத்திக் கொண்டு தன் தாய்க்கு போன் செய்கிறாள். மற்றதை யூடுப் திரையில் காண்க.
என்ஆர்ஐகள் என்றால் விடுமுறையின் போது தாத்தா பாட்டியிடம் குழந்தையைக் காட்டுவதற்காக ஷார்ட்ஸ் போட்டுக் கொண்டு, மெட்ராஸ் விஜயம் செய்து, திருப்பதியில் ஒரு மொட்டை போட்டு, எக்ஸ்பிரஸ் வேகத்தில் உறவினர்களுக்கு ஒரு ஹாய் சொல்லி , குழந்தையைக் கொசு கடித்து வீங்கி, ஓலா ஓட்டுநர்கள் சொன்ன நேரம் தவறி வந்து, அக்கார்டு ஓட்டலில் நண்பர்களைச் சந்தித்து டாலர் பார்ட்டிகள் வைத்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி உங்க ஊரே இப்படித்தான் என்று லுஃப்தான்ஸா ஏறுபவர்கள் தான் என்ஆர்ஐகள் என்னும் ஸ்டீரியோடைப் பிம்பங்களை உடைக்கும் இம்மாதிரி கதைகள்/வாழ்க்கைகள் கண்டிப்பாகப் பதிவு செய்யப்பட வேண்டும். அப்படிப் பார்த்தால் இப்படம் பிரமாதமாக திட்டமிடப்பட்டு எடுக்கப்பட்டிருக்கும் ஒரு என்ஆர்ஐ குறும்படம்.
மற்றபடி அமெரிக்காவில் படமெடுப்பது சுலபமான காரியமல்ல. சில வருடங்களுக்கு முன் ஆறேழு படங்களில் பங்கு பெற்றவன் என்ற முறையில் இதை நன்கு அறிவேன். இங்கே சென்னையைப் போல கூப்பிட்டால் ட்ராலி பிடிப்பதற்கும் க்ளாப் தட்டவும் நான்கு பேர் ஓடியெல்லாம் வர மாட்டார்கள். முதலில் ஒரு குழுவை அமைக்கப் பல மாதங்களாகிவிடும். படத்தில் பங்கு பெறும் எல்லோரும் தன்னார்வலர்கள் என்பதால் இது கொஞ்சம் சிரமமான காரியம் தான். அதன் பின் எல்லோரையும் ஒருங்கிணைத்து, ஒரே நாளில் வரவழைத்து, அவர்கள் நடுநடுவே போன் பார்த்துக் கொண்டிருப்பதை அரவணைத்து, எல்லோருக்கும் ஸ்டார்பக்ஸிலிருந்து காபி பீட்சா வரை ஆர்டர் செய்து படமெடுப்பதற்குள் நடுமண்டையில் முடி உதிர்ந்து விடும். மற்றபடி சட்டப்படி படத்தில் நடித்திருப்பவர் முதல் க்ளோஸ்-அப் ஷாட்டில் தலை தெரியும் ரோட்டில் நடப்பவர் வரை நோ அப்ஜெக்ஷன் கையெழுத்து வாங்கவில்லை என்றால் கோர்ட்டு நோட்டீஸ் வரலாம். இவையெல்லாவற்றையும் தாண்டி படமெடுப்பதற்கு ஒரு விதமான பித்து அவசியம்.
ஹேமந்திற்கு இந்தப் பித்து பல வருடங்களாக இருப்பது எனக்குத் தெரியும். நவீன சினிமாவின் காதலன் அவர். சிறந்த ரசனை உடையவர். சில வருடங்களுக்கு முன் அவரும் நானும் சேர்ந்து 25 வாரங்கள் பேசும்படம் என்று ஒரு சினிமா விமர்சன podcast செய்து கொண்டிருந்த போது இதை உணர முடிந்தது. அதே ரசனையுடன் தன் கட்டுப்பாடுகளுக்குள் ஒரு ஆர்ப்பாட்டமில்லா திரைப்படமாக இதை எழுதி, இயக்கி, எடிட் செய்துள்ளார். வாழ்த்துக்கள் ஹேமந்த், உங்களுக்கும் மொத்த படக் குழுவினருக்கும். படம் முழுவதும் தெரியும் ஒரே முகமாக வரும் ஜ்யோத்ஸ்னாவின் குரலுக்கும் அவர் காட்டும் மிகத்துல்லியமான முகபாவங்களுக்கும் பாராட்டுக்கள். கார் ஓட்டும் போது வைக்கப்படும் காமிரா கோணங்களுக்காக ஒளிப்பதிவாளருக்கும் ஒரு ominous சூழ்நிலையை இசையால் உணர்த்திய இசையமைப்பாளருக்கும் சிறப்பு பாராட்டுக்கள்.
படத்தில் குறைகள் இல்லாமலில்லை. ஆங்காங்கே வரும் உச்சரிப்பு பிழைகளும், இசையின் மூலம் கதையை உணர்த்த முயல்வது என சிறு குறைகள் இருந்தாலும், கதையின் உள்ளர்த்தத்தை உரக்கச் சொல்லாமல் பார்வையாளர்களின் முடிவுக்கே விட்டு விடுவதால் இந்த நவ தமிழ் சினிமாவை வரவேற்கலாம்.
Leave a Reply