இன்ன பிற – நாராயண் இருந்த வீடு

போன வார தமிழ் பேப்பரில் வெளியான இன்ன பிற பத்தி.

சியாட்டல் ரொம்பவே பரந்த மனப்பான்மை கொண்ட நகரம். அதைப் போலவே Indie Films என்னும் தனியார் எடுக்கும் திரைப்படங்களுக்கு இங்கே ஏக ஆர்வம். சினிமா ஆர்வம் கொண்ட இந்திய இளைஞ-ஞிகளும் அதிகம். பார்க்கிற ஆர்வம் போக திரைப்படம் எடுப்பதற்கும். போன வருடம் இப்படி ஒரு இந்தியக் குழுவை என் நண்பர் எப்படியோ கண்டுபிடித்தார். இவர்கள் எல்லாம் வீக்கெண்ட் இரவுகளில் யாராவது ஒரு வீட்டில் தங்கி எதாவது ஒரு ‘நல்ல’ சினிமா பார்த்து, அதைப் பற்றி விவாதித்துகொண்டிருக்கிறார்கள் என்று என்னையும் வரச் சொன்னார்.

ஓரிரு மாதங்கள் கழித்துப் போனேன். அன்றைக்குப் பார்த்து அந்தக் குழுவில் இருந்த ஒருவர் தேர்ந்தெடுத்திருந்த ‘பனாரஸ்’ என்ற இந்திப் படம் படு போர். படம் முடிந்தவுடன் பயங்கரமாக இந்திய சினிமாவை திட்டும் விவாதம். விவாதத்தின் முடிவில், ‘இவங்கெல்லாம் படமெடுக்கறாங்க, நாமேகூட ஒரு குறும் படமெடுத்து பார்க்கலாம்’ என்ற ஒரு முடிவு. அங்கிருந்த மற்றொரு பெண், தான் கேள்விப்பட்ட ஒரு நிஜ வாழ்க்கைக் கதையை சொல்ல, எல்லோரும் தம் ஐடியாக்களை சேர்க்க, கதை கிட்டத்தட்ட ரெடி. சற்றே கடினமான கதை. படித்தால் அல்லது பார்த்தால் மட்டுமே புரியக்கூடிய கதை. மற்றவர்கள் சொன்னால் மொத்தக் கதையும் புரிவது கடினம். இருபது நிமிடப் படமாக எடுக்க முடிவு செய்தார்கள். விட்டால் ஆச்சு என்று நான் ஒதுங்கிக்கொண்டேன்.

இரண்டு வாரங்களுக்குப் பின் திரைக்கதை ஆசாமி கேமராமேனாக மாறி ஜகா வாங்க, நான் எழுதித் தருவதாக ஒப்புக்கொண்டேன். ஓரிரவு உட்கார்ந்து அந்தக் கதையை கொஞ்சம் மாற்றி திரைக்கதையாக்கி, முதல் பாதியை எழுதிவிட்டேன். மற்றொரு நாள் மறு பாதியும் எழுதிவிட, அந்தக் கடினக் கதை தன்னையே விடுவித்துக்கொண்டு சுலபமாகிப் போய்விட்டது. மொத்தம் 42 பக்கங்கள். திரைப்பட இலக்கணத்தில் ஸ்கிரிப்டின் ஒரு பக்கம் ஒரு நிமிடப் படமாகும் என்பது தியரி. இருபது நிமிடப் படம் என்று ஆரம்பித்து நாற்பது நிமிடத்தில் போய் நிற்பதால் இயக்குநரும், உப-இயக்குநரும், எடிட்டரும் சேர்ந்து அங்கே இங்கே கட் செய்து ஒரு முப்பது பக்கத்துக்குக் கொண்டுவந்தார்கள். ’கார்த்திக்கும் நானும்’ என்னும் அந்தக் குறும்படத்தின் ஸ்கிரிப்ட் ரெடி.

அப்புறம் ஒரு முப்பது நாற்பது பேர்களைப் பேசவைத்து, அழவைத்து, கண்ணடிக்கவைத்து ரெக்கார்ட் செய்து, கேமரா டெஸ்ட் செய்து, கடைசியாக ஹிரோயின்களும் ஹீரோவும் ரெடி. ஆறு மாதங்களாக எல்லோருக்கும் ஒத்துப்போகும் நேரத்தில் ஷூட் செய்கிறார்கள். போன மாதம் கார்த்திக்கும் அந்தப் பெண்ணும் சந்திக்கும் ஒரு பார்க் சீனை ஷூட்டிங் பார்க்கப் போயிருந்தேன். நகரத்தின் நடுவே ஒரு கூட்டமான பார்க்கில் போவோர் வருவோர் பார்க்க ஷூட்டிங். முதலில் ஏகமாகக் காற்றடித்து ஒலிப்பதிவில் மக்கர். அதற்கப்புறம் சூரியன் மறைய ஆரம்பித்துவிட ஒளிப்பதிவில் மக்கர். நடுவே ஹீரோ ஸ்டார்பக்ஸ் காப்பி கேட்க, ஹீரோயினுக்குக் குளிர மட மடவென, ஷூட் செய்து தள்ளி பேக்-அப் சொன்னார்கள்.

க்ளைமாக்ஸ் காட்சியும் ஒரு பார்ட்டி சீனும் மட்டுமே பாக்கி என்று போன வாரம் இயக்குனர் மெயில் அனுப்பியிருந்தார். நடுவே ஹீரோயினாக நடிக்கும் பெண் இந்தியா போய் வந்தார். ஹீரோ இளைஞன் ப்ளோரிடா போய்விட்டார். எடுத்த வரையில் இன்னும் ஃபர்ஸ்ட் கட் ரெடியாகவில்லை. இயக்குநருக்குக் கதை கிட்டத்தட்ட மறந்துவிட்டது. இப்படி, படமெடுக்கும் பிரசவ வலி புரிகிறது.
எப்படியும் இன்னும் ஓரிரு மாதங்களில் வந்துவிடும். எதாவது விழாவுக்கு அனுப்பிவிடுவார்கள். காசு கேட்காமல் யூட்யூபில் போடுவார்கள். சொல்கிறேன்.

oo0000oo

சூர்யா அட்டைப்படம் போட்ட வருட விகடன் தீபாவளி மலர் 2010-த்துக்குப் பணம் செலுத்திவிட்டேன். ஏறுமயிலேறி ஏர்மெயிலில் வந்துகொண்டிருக்கும். நானூறு பக்கங்கள் என்று விளம்பரம் செய்திருந்தார்கள். நல்ல வேளை, அதில் எத்தனை கலர் பக்கங்கள் என்றெல்லாம் போடவில்லை.

ரொம்ப வருடங்களுக்குப்பின் போன வருடத்தின் தீபாவளி மலர் பிடித்திருந்தது. எழுத்தாளர்களின் மனைவிகளைக் கதை எழுத வைத்திருந்தார்கள். அருளுரை, சினிமா பேட்டிகள் என்பதை எல்லாம் தாண்டி அதைப்போல ஏதாவது வித்தியாசமாகச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

oo0000oo

மார்கழி மாசம் இந்தியா வந்திருந்தபோது, கிட்டத்தட்ட பதினேழு வருடங்கள் பிறந்து வளர்ந்த புரசைவாக்கத்தில் இருந்த நண்பன் வீட்டுக்குப் போயிருந்தேன். புரசையைத் தெருத் தெருவாகச் சுற்றித் திரிந்திருக்கிறேன். ஏகப்பட்ட நண்பர்கள் இருந்தார்கள். இப்போது பம்பாயிலோ, மஸ்கட்டிலோ, வெஸ்ட்மின்ஸ்டரிலோ, மினியாபோலிஸிலோ இருக்கிறார்கள். ஆனால் இன்னமும் வெள்ளாளத் தெரு அப்படியே இருக்கிறது. சில வருடம் கழித்துச் செல்வதால், ரோடு ரொம்பவும் குறுகியதாகத் தோன்றியது. செல்வ வினாயகரும் கங்காதீஸ்வரரும் பிரசித்தமாகியிருக்கிறார்கள். குளங்களைக் காணவில்லை.

மணிகண்டனும் நானும் பைக்கில் கிளம்பி நாங்கள் படித்த பள்ளிக்குப் போனோம். அங்கேயேதான் இருக்கிறானே தவிர அவனும் சில வருடங்கள் கழித்துத்தான் அந்தப் பக்கம் வருவதாகச் சொன்னான். ஸ்கூலின் முன்னாடி பெரிய சுவர் எழுப்பி, உள்ளே இருந்த தூங்குமூஞ்சி மரங்களை வெட்டி, இன்னுமொரு பெரிய கட்டடம் எழுப்பி விளையாட இடமில்லாமல் செய்திருக்கிறார்கள். ஒரு போட்டோ எடுக்கச் சொன்னபோது, “ஏதாவது புள்ள புடிக்கறவங்கன்னு நினைக்கப் போறாங்க” என்று கேமராவைக் கையால் மூடினான். சிரித்துக்கொண்டே Aunty shopபில் லெமன் ட்ராப் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு வந்துவிட்டோம்.

வெள்ளாளத் தெருவில் நானிருந்த வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளியிருந்த வீடு பெயர் போனது. ராசிபுரம் கிருஷ்ணசாமி ஐயர் நாராயண சாமியின் வீடு. ஆர்.கே. நாராயண் என்றால் ஊர் அறியும். ஆர்ப்பாட்டமில்லாத யதார்த்தக் கதை எழுத்தாளர். சுவாமியும் நண்பர்களும் புத்தகத்தை இன்று படித்தாலும் அவருக்கு நோபல் கொடுக்கப்படாததன் அரசியல் புரியாது. அவரின் My Days புத்தகம் ஒரு ஆட்டோபயோகிரபிகல் மைல்கல். இணையத்தில் கொஞ்சம் தேடினால் சங்கர் நாக் இயக்கிய மால்குடி டேஸை பார்க்கலாம். ஜும்பா லஹரி எழுதிய நாரயணின் நாட்களும் படிக்கலாம்.
அவர் வெள்ளாளத் தெருவின் முதல் வீட்டில்தான் வளர்ந்தார். பின்பு மைசூர் போய் எழுத்தாளர் ஆனார். அவரிருந்த வீட்டை சில வருடங்களூக்குமுன் இடித்துக் கட்டினார்கள். தற்போது சரவண பவன் இருக்கிறது. நான் மணிகண்டனைத் தள்ளிக்கொண்டுபோய் அங்கே காப்பி குடிக்கும்போது, RKN-னை ஒரு மடக்கில் நினைத்துக்கொண்டேன்.

oo0000oo

க்ரந்தா(Granta) என்னும் இலக்கிய காலாண்டிதழின் சென்ற பதிப்பு செக்ஸ் ஸ்பெஷல். அதனால் இந்த மாதிரி ஒரு பர்ஸின் போட்டோவைப் போட்டு (பர்ஸ் மட்டும் தெரிந்தால் இதற்குமேல் படிக்காதீர்கள்), பிரபல எழுத்தாளர்களை செக்ஸைச் சுற்றி நடக்கும் கதைகளை எழுதவைத்திருக்கிறார்கள். இதிலிருக்கும் மூன்று கதைகளை வைத்துக் குறும்படங்கள்கூட எடுத்துவிட்டிருக்கிறார்கள்.

ராபர்ட் பொலானோ எழுதிய “The RedHead” என்னும் கதை பதினெட்டு வயதுப் பெண்ணுக்கும் ஒரு போதை மருந்து ஒழிப்பு போலீஸ் ஆபிசருக்கும் இடையே நடக்கும் ரொம்பவே தொந்தரவு செய்யக்கூடிய கதை. இதைப்போல தமிழில் கதைகள், எழுத்தாளரின் உயிருக்கு உத்தரவாதத்தோடு, காலச்சுவடிலோ, உயிர்மையிலோ வருவதெப்போது?

oo0000oo

சிகாகோ அட்டாமிக் விஞ்ஞானிகளின் குழு ஒன்று 1947-ல் The Doomsday Clock என்னும் ஒரு கடிகாரத்தை அமைத்தார்கள். அதாவது உலகம் நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு அழியப்போகிறது என்று வைத்துக் கொண்டால் இப்போது மணி என்ன என்று நியமிக்கும் குழு இவர்கள். கடிகாரம் ஒரு குறியீடுதான். உலகில் தற்போது நடக்கும் சாதக பாதக நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டு அதற்கேற்றாற்போல இந்தக் கடிகாரத்தின் முட்களை நகர்த்தி வைக்கிறார்கள். உலக அமைதி, இயற்கை அழிவுகள் எனச் சில பிரபல நிகழ்ச்சிகள்தான் இதை தீர்மானிக்கின்றன.

1947-ல் 11:53 pm என்று ஆரம்பித்தார்கள். அதற்குப் பின் இந்தக் கடிகாரம் முன்னும் பின்னும் போய் வந்து கொண்டிருக்கிறது. 1949-ல் ரஷ்யா அணுகுண்டு தயார் செய்தபோது மணி 11:57-க்கு நகர்த்திவைக்கப்பட்டது. 1953-ல் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் பகை உச்சியில் இருந்தபோது 11:58 க்கு போய்விட்டு 1991-ல் 11:43 என்று அமைதியாகியது. கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி இந்த வருடம் நடந்த அணுகுண்டு ஒப்பந்தத்தினால் 11:54 என்று இறங்கியிருக்கிறது. இதற்கு மற்றொரு காரணம் எந்திரன் ரிலீஸ் என்றும் சொல்கிறார்கள். நம்பலாம்.

oo0000oo

One response to “இன்ன பிற – நாராயண் இருந்த வீடு”

  1. ஒரு என்ஆர்ஐ குறும்படம் – kirukkal.com Avatar

    […] காரியமல்ல. சில வருடங்களுக்கு முன் ஆறெழு படங்களில் பங்கு பெற்றவன் என்ற முறையில் இதை நன்கு ஆறிவேன். […]

    Like

Create a website or blog at WordPress.com