இன்ன பிற – இருபது கோடி விளையாட்டு

போன வார தமிழ் பேப்பரில் வெளியான இன்ன பிற பத்தி.

தி அட்லாண்டிக்கின் ஆண்டுச் சிறப்பிதழான fiction 2010 படிக்கக் கிடைத்தது. இந்த ஆண்டு கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில், இவ்வருடத்தின் சிறந்த கட்டுரைகளில் ஒன்று என இதில் இடம்பெற்றிருக்கும் Joyce Carol Oatesன்(JCP) உடையதைச் சொல்லலாம். ரொம்பவே காதலித்த கணவர் ரேமண்ட் ஸ்மித் இறந்த ஒரு வாரத்தில், அந்த சோகத்தை மறக்கத் தன் பேராசிரியர் வேலைக்குச் சென்ற முதல் நாளைப் பற்றிய ஒரு குறுங்கட்டுரை.

ஜாய்ஸ் குழந்தையிலிருந்தே எழுத்தாளர். நாற்பது வருடங்களாக எழுத்துப் பிரபலம். ப்ரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் எழுத்து வாத்தியார் என எழுத்துக்கும் எழுத்துப் பிரபலங்களுக்கும் நெருக்கம். ஜாய்ஸின் எழுத்தை ரசித்துப் படித்திருக்கிறேன். அவரின் 1000ம் பக்க தின டைரியை வாயரிசத்தின் அருகே நின்று வாசித்திருக்கிறேன். எழுத்தாளரை எழுதச் செய்வது எது என்பதை பற்றி அதன் பல பக்கங்களில் இருந்து கொஞ்சம் புரிந்து கொண்டேன்.

என்னதான் பிரபலமாக இருந்தாலும், தன் பர்சனல் விஷயங்களை வெளியே பேசாத ‘அந்தக் கால’ப் பெண்மணி. இதனால் கணவர் இறந்த விஷயம் அவரது மாணவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எப்போதும்போலப் பாடமெடுக்கச் செல்கிறார். அன்றைய பாடம் – கதை எழுதும் கலை. வரி வரியாக எல்லோருடனும் கதையைப் படித்து முடித்து, பின்பு அதைப் பற்றி உரையாடுவதுதான் அன்றைய திட்டம். அன்றைய கதை – ஹெமிங்வேயின் முதல் கதைத் தொகுதியிலிருக்கும் நான்கே பக்க நீளமுள்ள Indian Camp. அந்த தினத்திற்கு ஏற்றாற்போல ஓர் இறப்பைப் பற்றிய சிறுகதை.

அந்தச் சில மணிநேரங்கள் என்றும்போல் கழிகின்றன. மாணவர்களுடன் உரையாடும்போது எந்த விதமான அநாவசிய ரியாக்‌ஷனும் காட்டாமல் இருக்கிறார் ஜாய்ஸ். அவர்கள் சந்தேகப்படும்படி ஒன்றும் நடக்கவில்லை. அந்தப் பாடம் முடிந்து அறைக்குத் திரும்பும்போது வாசலில் இரு மாணவர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். “Professor Oates, We heard about your husband and want to say how sorry we are…If there is anything we can do…” என்கிறவர்களுக்கு, நன்றி- எல்லாம் சுகம் என்றி மழுப்பிவிட்டு உள்ளே வந்துவிடுகிறார். When they leave, I shut my office door. I am shaking. I am so deeply moved. But mostly shocked. Thinking they must have known all along today. They must all know. இதில் ஒரு சிறுகதையிருக்கிறது.
ஜாய்ஸும் அவரது கணவரும் கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக நடத்திக் கொண்டிருந்த இலக்கிய சிறுபத்திரிகையான Ontario Reviewவை கணவர் மறைவிற்குப் பிறகு நிறுத்துகிறார். ஆனால் அதற்கு முன் பல கட்டுரைகளும் கதைகளும் வீட்டிற்கு வந்திருக்கின்றன. என்ன செய்வது? அவர்களுக்கெல்லாம், “எடிட்டர் ரேமண்ட் ஸ்மித்தின் எதிர்பாராத மரணத்தினால் இனிமேல் இந்தப் பத்திரிகை வராது. மன்னிக்கவும்” என்று லெட்டர் எழுதுகிறார். அனுப்புவதற்கு முன்னர், அதைத் திரும்பப் படிக்கும் போது ’எதிர்பாராத மரணம்’ என்று எழுதியிருப்பது கொஞ்சம் யோசிக்கச் செய்கிறது. இந்தப் பத்திரிக்கைக்கு அனுப்பினால் போடுவார்கள் என்று அனுப்பிய எழுத்தாள அன்னியர்களுக்கு ரேமண்டின் மரணம் எப்படி எதிர்பாராததாகும். மனைவியான தனக்குத்தானே இது எதிர்பாராதது என்று கொஞ்சம் கலங்கிவிட்டு, எதிர்பாராத மரணம் என்பதை மரணம் என்று மாற்றி அனுப்புகிறார். மீண்டும் ஒரு சிறுகதை.

ooOOOOoo

மேலே சொன்ன ஹெமிங்வேயின் இந்தியன் காம்ப் ஒரு சிறந்த கதை. அது வெளிவந்த 1925ல் ரொம்பப் பேசப்பட்டது. எர்னஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway) அமெரிக்கர். 1920களில் ஐரோப்பாவுக்கு டிரைவராகச் சென்றவர் டொரண்டோ ஸ்டார் பத்திரிகைக்கு நிருபராகி, பின்பு பாரிஸில் செட்டில் ஆகி, எழுத்தாளராகி, பிரபலமாகி, நான்கு மங்கைகளை மணந்து, 1954ல் கிழவனும் கடலும் என்ற நாவலுக்காக நோபல் பரிசு பெற்றபின்தான் அடங்கினார். அமெரிக்கர்களின் எழுத்தாள ஹீரோ.

இந்தியன் காம்ப் கதை மிஷிகன் மாகாணத்தில் நடக்கிறது. நிக் ஆடம்ஸ் என்ற சிறுவனின் டாக்டர் தந்தையை ஒரு கடினமான குழந்தை பிறப்பு கேஸுக்காகக் கூப்பிட்டு அனுப்புகிறார்கள். ஒரு பங்க் பெட்டின் கீழ்ப் பகுதியில் அந்த அமெரிக்க-இந்தியப் பெண் குழந்தை பெறத் தவித்துக் கொண்டிருக்கிறாள். அதன் மேல்புறத்தில் அவள் கணவன் கத்தியால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறான். நிக் இந்த பயங்கரத்தைப் பார்க்கிறான். அதன் பின் அவன் தந்தை அவனை வெளியே போகச் சொல்கிறார். அவன் தந்தை அந்த இந்தியனின் கழுத்தைத் தூக்கி வெட்டுக்காயத்தை ஆராய்வதையும் பார்க்கிறான். படகிற்குத் திரும்பிச் செல்லும்போது, நிக் அந்த இந்தியனின் தற்கொலைக்குக் காரணம் கேட்க, டாக்டர் சொல்கிறார், “I don’t know, Nick. He couldn’t stand things, I guess.”

இத்தனை பட்டவர்த்தமான தற்கொலைக்கு எந்த விதக் காரணமும் சொல்லப்படவில்லை, தத்துவார்த்தமான உரையாடலும் இல்லை. இதுதான் ஹெமிங்வே. இதனை ஹெமிங்வே, ஐஸ்பெர்க் தியரி எனக் குறிப்பிட்டார். அதாவது உண்மைகள் மேலே மிதந்து கொண்டிருக்க, அதன் பின்புலமும் குறியீடுகளும் மறைமுகமாகத் தெரிவிக்கப்படும் எழுத்துக்கலை.
இந்தக் கதையைப் போலவே ஜூலை 1961ல், தனக்குப் பிடித்தமான துப்பாக்கியைத் தன் தலைக்குக் கொடுத்தார். தற்கொலை. ஹெமிங்வேவின் A Moveable Feast பற்றித் தனியே சொல்லவேண்டும். அது அவருடைய கடைசிப் புத்தகம். பிறகு.

ooOOOOoo

தினமும் யாராவது ஒரு நண்பர் facebookல் மெயிலனுப்பி மாட்டையோ, முட்டைகளையோ, கோழிக் குஞ்சுகளையோ பரிசளித்திருப்பதாகக் கூறுகிறார். திறந்து பார்த்தால் Zyngaவின் Farmville எனும் விளையாட்டு அழைப்பு. அதாவது வர்ச்சுவல் உழவராகி உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் நிலத்தை உழுது பயிரிட்டுக் காப்பாற்ற வேண்டும். ரொம்பவும் சுலபமான விளையாட்டு. மவுஸைத் தட்டிக்கொண்டே இருந்தால் போதும். நம்பர்கள் மாற நெல் சாகுபடி செய்துவிடலாம். இத்தனையும் facebookல். கிட்டத்தட்ட 7 கோடி பேர் விளையாடும் உழவர் சந்தை.

இது கன்னாபின்னாவென்று பிரபலமாகி Zyngaவிற்கு கூகிள்காரர்கள் 20 கோடி டாலர்கள் அளித்திருக்கிறார்கள். மற்ற விளையாட்டு கம்பெனிக்காரர்கள் காதில் புகை. அவர்களின் குற்றச்சாட்டு, “வெறும் மவுஸைத் தட்டிக் கொண்டே, எந்த விதமான சுவாரசியமும் இல்லாத இந்த மாதிரி விளையாட்டுகள் அதிகமாகி, இந்தத் துறையிலுள்ள கற்பனைத் திறனை காணாமல் செய்து விடும்” என்பதுதான். இதே மாதிரி இன்னும் சில வருடங்களில் கோடம்பாக்கத் தெருக்களில் ரோபோக்கள் அலைக்கழிக்கப்பட்டு வேலைக்கு ஆளெடுக்கும் க்யூக்களில் நிற்கப் போகின்றன. ஜாக்கிரதை.

ooOOOO00

நான் மகான் அல்ல. நகநுனியில் எழுதிவிடக்கூடிய கதை. அதை இரண்டு மணி நேரப் படமாக எடுத்ததே பெரிய விஷயம். அதிலும் முதல் 90 நிமிடத்திற்கு ஒன்றுமே நடக்கவில்லை. கதை கால் இஞ்ச் நகரக் கூட அடம்பிடிக்கிறது. ஆனாலும் பொறுமையாக எந்தவித சினிமாத்தனமும் (கிளைக் காதல் கதையைத் தவிர) இல்லாமல், பிரமாதமாகச் செய்திருக்கிறார்கள். கடைசி அரை மணி நேரத்திற்கு வெறும் அட! மட்டுமே சொல்ல முடிந்தது. அதுவும் அந்த நாலு பேரும் சுற்றி வர, கார்த்தி ஏறெடுத்து பார்க்கும்போது யுவனின் எலக்ட்ரிக் கிட்டார் அதகளம் பண்ணுகிறது. யதார்த்தமான க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள்.

கொஞ்சம் கூட ஹீரோத்தனம் இல்லாமல் திரைக்கதை அமைப்பதற்கும் அதில் நடிப்பதற்கும் தைரியம் வேண்டும். டைரக்டர் சுசீந்திரனுக்கு இந்த வருட ஸ்பெஷல் பாராட்டு.

ooOOOOoo

கொலுவுக்குக் கூப்பிட்டிருந்த நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். தெருவடைச்சானாக கார்கள் நின்றுகொண்டிருக்க, திருவல்லிக்கேணி ஸ்பெஷல் ப்ளாஸ்டிக் தோரணங்களும் மாவிலைகளும் தொங்கவிடப்பட்டிருந்த அவர் வீட்டினுள் ஏகக் கூட்டம்.

முன் அறையில் சரிகை வேட்டி போர்த்தப்பட்ட படிகள் வைத்து, அழகான பொம்மைகள் கூட்டம். உள்ளே போய் சுண்டலும், பைனாப்பிள் கேசரியும் எடுத்துக் கொண்டேன். அங்கே ஆண்கள் H1B, EAD கவலைகளை பேசிக்கொண்டிருக்க, “ஏய் படம் பார்த்தியாப்பா?”, “அத்து சொன்னோல்லியோ, don’t jump கண்ணா”, பெண்கள் சிலர் கேரம் போர்ட் ஆட, சிறுவர்கள் சிலந்தி ரோபோ பொம்மைகளை ரிமோட்டால் இயக்க, பட்டுப் பாவாடை குட்டிப் பெண்கள் தாவித் தாவி குதித்துக்கொண்டிருக்க, முன் அறையிலிருந்த கொலு வரிசை ரங்கநாதரும் கருமாரி அம்மனும் சீரான பளிச் கருப்பு கலரடிக்கப்பட்டு ஆதிசேஷனுக்குத் தங்க முலாம் பூசப்பட்டு, மூன்றாம் படியில் அமைதியாக உட்கார்ந்திருக்க, அது நடந்தது. இந்த குதூகலமான களேபரத்திலும் கிருஷ்ண பஜன் பாடி தம்புரா வாசித்துக்கொண்டிருந்த மீரா பொம்மை சட்டென தலை திருப்பிச் சிரித்தது. நிஜமா!

ooOOOOoo

Create a website or blog at WordPress.com