இன்ன பிற – ஆயிரம் முகம் கொண்ட நாயகன்

போன வாரம் தமிழ் பேப்பரில் வெளியான இன்ன பிற தொடர்.

Heroes journey

கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்கு முன்னால் ஜோசப் காம்ப்பெல் எழுதிய ‘A hero with thousand faces’ என்னும் புத்தகத்தில் நாமறிந்த நாயகனைப் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறார். பல கலாசாரங்களையும் மதங்களையும், அவை சொல்லும் ஆயிரமாயிரம் மரபுக்கதைகளையும் படித்து எல்லா நாயகர்களுக்கும் ஓர் ஒற்றுமை இருப்பதைக் கண்டார். அதை வைத்து ஒரு ஹீரோவின் இலக்கணத்தை எழுதி விட்டார். அதாவது எல்லா நாயகர்களுக்கும் if-else கண்டிஷன், for loop உட்பட ஓர் அல்காரிதம் இருக்கிறது. இந்திரன் சந்திரனிலிருந்து எந்திரன் வரை இதே இலக்கணம்தான், ஆங்காங்கே சில இடைவெளியும் சில தாவல்களும் மட்டும்தான் வித்தியாசம். இந்த இலக்கணத்தை ஒற்றைப் புராணம் (mono myth) என்றழைத்தார்.

அதாவது ஒரு நாயகனின் பயணத்தில் சில மைல்கல்கள் உள்ளன. டுவிட்டர் வேகத்தில் சொன்னால் – ஒரு நாயகன் சாமானிய உலகத்திலிருந்து இயல்பை கடந்த ஆச்சரியங்கள் நிறைந்த உலகத்தில் நுழைகிறான். அங்கே அற்புத ஆற்றல்கள் வெளிப்பட்டு ஒரு முடிவான வெற்றி வெல்லப்படுகிறது. நாயகன் அந்த மாய உலகத்திலிருந்து மீண்டு தன் சகமனிதனுக்கு வரமளிக்கும் சக்தி கொண்டவனாகிறான். கிருஷ்ணர், புத்தர், கிறிஸ்து என்று எல்லாருடைய கதைகளும் இதில் அடக்கம். இந்த ஒற்றைப்புராணத் தியரியை அடிப்படையாகக் கொண்டு பல புத்தகங்களும் படங்களும் வெளிவந்தன, வந்துக்கொண்டிருக்கின்றன. ஸ்டார்வார்ஸ் ஜார்ஜ் லூகாஸிலிருந்து ஹாரி பாட்டர் ஜேகே ரவுலிங் வரை இதுதான் இன்ஸ்பிரேஷன்.

காம்ப்பெல் ஒரு கப்பல் பயணத்தில் நம் அடையாறு கிருஷ்ணமூர்த்தியை (ஜேகே) சந்தித்தார். ஜேகே அவருக்கு இந்திய கலாசாரத்தையும் அதன் தத்துவ ஞான மரபையும் விவரிக்க அதில் ரொம்பவே சொக்கிப்போய் கத்தோலிக்கராய் இருப்பதைத் துறந்தார். அவர் இறக்கும் வரை ஹிந்து மற்றும் இந்தியத் தத்துவத்தின் மேலும் ரொம்பவும் ஆர்வமாயிருந்தார். காம்பெல்லின் இந்த நாயக ஆராய்ச்சிக்கு ஜேகே மிக முக்கியக் காரணம்.
இந்தப் புத்தகத்தில் காம்ப்பெல் சொல்ல வருவது எப்பொழுது புராணத்தில் இருக்கும் கவித்தன்மையை கேள்வி கேட்க ஆரம்பிகிறோமோ அப்போது அந்த புராணம் மறித்துப் போகிறது. கிருஷ்ணன் ‘அஸ்வத்தாமா அத குஞ்சரஹ’ சொல்லச் சொன்னது சரியா, கிறிஸ்து தண்ணீரில் நடந்தாரா என்று கேட்கும்போதே அவர் மூழ்கிவிடுகிறார். ரஜினிவிஜயஷாருக்கமிதாப ஹீரோக்களும் அவர்கள் செய்யும் வீரதீர செயல்களையும் கேள்வி கேட்பதாகாதென இதனால் அறிக.

OOO

சொக்கன் எழுதிய ரஹ்மான் – ஜெய்ஹோ புத்தகத்தை வீட்டின் எல்லா அறைகளிலும் கொஞ்சமாக படித்து முடித்தேன். முடித்த இடம் குளியலறை. 90களில் ரஹ்மான் இசை வர ஆரம்பித்ததிலிருந்து அவரைப் பற்றி நிறைய அறிந்திருந்ததால், இந்தப் புத்தகம் ஒரு வாக் டவுன் த மெமரி லேன் போலத் தோன்றியதில் ஆச்சரியமில்லை. திலீப் என்ற அந்தச் சிறுவன் ரஹ்மானாகிய புராணம்தான் புதிதாயிருந்தது. இத்தனை தகவல்கள் இருக்கும் புத்தகத்தில் ஒரே ஒரு தகவல் பிழையைத்தான் தேற்ற முடிந்தது, அதுவும் இப்போது மறந்து விட்டது. இதற்காக சொக்கனுக்கு ஷொட்டு.

இம்மாதிரி வேகமாய் நகரும் பயோகிராபிகள் அ-புனைவுகள் எழுதுவது ஒரு கலை. அதுவும் பயோகிராபிகளுக்கு மெனக்கெடல்கள் பல. மனைவி வீட்டில் இல்லாத ஒரு நாளில், சுஜாதாவின் வாழ்க்கைக் குறிப்பை எழுதுகிறேன் பேர்வழி என்று வீடெல்லாம் அவர் புத்தகங்களைப் புரட்டிப் போட்டு, அது ஒரு பக்கம், ஃபாஸ்ட் ஃபுட் டப்பாக்கள் ஒரு பக்கம் என அந்த புத்தகங்களிலிருந்து ஒரு இரண்டு பக்க குறிப்பெழுதுவதற்குள் முழி பிதுங்கி விட்டது. அதை சுஜாதா படித்து விட்டு, “ஓகே… அங்கங்க கொஞ்சம் தப்பு இருக்கு” என்று சொன்னதாக ஒரு சமயம் தேசிகன் சொன்னார்.

OOO

டால்பின் தண்ணீரில் குதிப்பதைக் கவனித்ததுண்டா? முதல் முறை மேலெழுந்து குதித்து தண்ணீருக்குள் மூழ்கி ஓரிரு வினாடிகள் கழித்து சற்றே மேலே தலைகாட்டி மீண்டும் தண்ணீருக்குள் மூழ்கும். இதற்கும் அமெரிக்க பொருளாதாரத்திற்கும் என்ன சம்பந்தம். அதுவும் டால்பினைப்போல மேலெழுந்து ரிசஷனாகி திரும்பவும் மேலே வருகிற போது ரிசஷனாவதுதான். இதைத்தான் டபுள் டிப் என்று கடந்த இரு மாதங்களாக இடஞ்சுட்டிப் பொருள் விளக்கமளிக்கிறார்கள்.

ரிசஷன் போனாலும் வந்தாலும் கவலைப்படாமல் சூரியன் போய் குளிர் வர ஆரம்பித்தாயிற்று. இனி மூன்று மாதங்களுக்கு வீடு வாங்குவோர் யாரும் இலர். மால்களில் கைப்பிடித்து கோக் குடித்துக் கொண்டிருப்பார்கள் அல்லது 60 இஞ்ச் பிரகாசத்தில் தன்னை மறத்தல் மட்டுமே. எல்லா சீரியல்களும் இலையுதிர்காலத்திற்கு ரெடி. ஆறு ஆண்டுகளாக வெளிவந்து சக்கைபோடு (தமிழ்-தினசரித் தமிழ்) போட்டுக்கொண்டிருக்கும் டெஸ்பரேட் அவுஸ்வொய்ப்ஸ் என்னும் சீரியலை கொண்டு செய்வதரியாது டைரக்டர் முழிப்பது தெரிகிறது. ஒரு காலனியில் இருக்கும் 5-6 பெண்மணிகளின் சுவாரசிய வாழ்க்கைதான் கதை. இப்படிப் போய்க் கொண்டிருந்தது. ஐந்து வருடங்களுக்குப் பிறகு டைரக்டர் ஆர்வமிழந்து, அடுத்த வீட்டுக் கணவனையும் பையனையும் பெண்ணையும் மற்ற வீட்டுக்காரர்கள் துரத்துவதும், ஆபிஸ் போகிறேன் பேர்வழி என்று பக்கத்து வீடுகளில் கெட்ட காரியம் பண்ணவைத்து மீதிக் கதையை பூசி மொழுகிறார். இதைப் போல நம்மூர் மெகாசீரியல் வகையறாக்கள் ‘சுவாரசியமாய்’ போய்விடும் அபாயமுண்டு.

OOO

“We were discussing string theory and its infinite possibilities on human existence till 3 am while listening to Miles Davis but now it’s time for Rajini” என்று சிலர் ஜெர்க் விடுவதை காது கொடுத்து கேட்டீர்களா?

சமீபமாக ரஜினி பற்றிய ஒரு செயற்கைக் கவர்ச்சி பரவி வருவதைப் பார்க்க முடிகிறது. அதாவது என்னதான் தான் இண்டலெக்சுவலாக இருந்தாலும் என்னுடைய ரிலாக்சேஷன் ரஜினிதான் என்கிறார்கள். ஒரு காலத்தில் ரஜினியின் படங்களை விழுந்தடித்துக் கொண்டு பார்த்தவன் என்ற முறையில் இதிலுள்ள மயக்கம் புரிகிறது. ஓப்பன் மேகஸினில் மனு ஜோசப் எழுதியுள்ள The Revenge of Rajinikanth கட்டுரையில் சில விஷயங்களில் உண்மையிருக்கின்றன.

இத்தனை சொல்லிவிட்டு அந்த ஹூமனாய்டைப் பற்றிச் சொல்ல விட்டுவிட்டால் எப்படி. இன்றைக்கு எந்திரன் பார்க்கப் போயிருந்த போது, ரஜினியின் எட்டடி கட்-அவுட்டும், மாலையும், activation date: 10:01:10 என்று ப்ரிண்ட் செய்யப்பட்ட எந்திரன் டீஷர்ட்டையும் பார்க்க முடிந்தது. கட்-அவுட்டின் கீழ் உபயதாரரின் பெயரும் அச்சிடப்பட்டிருந்தது என்பது உப தகவல். அதன் அருகில் நின்று கொண்டு ஃபோட்டோ எடுத்துக் கொண்ட அனைவரும் உடனடியாக ஃபேஸ்புக்கிற்கு அப்லோட் செய்தது வம்புத் தகவல்.

கதையில் ஆங்காங்குதான் சுஜாதா தெரிகிறார் என்று எழுதியவர்களுக்கு – எனக்குத் தெரிந்து படம் முழுக்க வியாபித்திருக்கிறார். தலை நிறைய சடாமுடியுடன் முடிவெட்ட வரும் ரஜினியிடம், “என்ன சார் ஐயப்பாவா?” என்று கேட்கும் நாவிதனிடம், “வேலைப்பா” என்பதும், ராகம் திருத்தும் ரோபோவும், கொசு ரங்குஸ்கியிலும், “என்னங்க இது போரிட வாங்கன்னா பொயட்டரி சொல்லுது இந்த ரோபோ” என்று சொல்லும் ஆர்மி ஆபிஸர் வரை சுஜாதாலஜி. இந்த சமுதாயத்தில் ஒரு மனித ரோபோ இருந்தால் எப்படி என்ற கேள்விக்கு முதல் பாதியில் க்ரியேடிவாக பதில் சொல்லுகிறார் ஷங்கர். அவ்வை சண்முகியில் கமல்-ரவிகுமார் செய்யாமல் விட்ட க்ரியேடிவ் விஷயங்களைப் போல், இந்த சந்தர்ப்பத்தைத் தவறவிடாத ஷங்கர் கெட்டிக்காரர். இதே போல் தியேட்டருக்கு பணம் கொடுத்து வந்து என்னை சுவாரசியப்படுத்து, அழவை, சிரிக்கவை, பிரமிக்கவை என்று சொல்லும் பார்வையாளனை ஏமாற்றாமல் யதார்த்தம், அ-யதார்த்தம், காதல், ரசனை என்று சரியான கலவைச் சமன்பாட்டைத் தன்வசப்படுத்தி விட்டார். ஆனால் இரண்டாம் பாதி ரொம்பவே இரைச்சல். குழந்தைகளெல்லாம் அழ ஆரம்பித்து வெளியே போன தந்தையர்கள் வரும் முன் முடிந்து போனது அரிமா அரிமா.
மக்களுக்கு பிடித்துப்போன ஒரு கதாபாத்திரம் பின்பாதியில் மாறிப்போய், கிட்டத்தட்ட காணாமல் போய் கடைசியில் மீண்டும் வருவதும், அதன்பின் வரும் க்ளைமாக்ஸில் அதை எமோஷனலாகப் பயன்படுத்த முயல்வதும் திரைக்கதை கவனக்குறை. டாட்.

Create a website or blog at WordPress.com