இன்ன பிற – பன்றிகள், பறவைகள் மற்றும் புத்தகங்கள்

போன வார தமிழ் பேப்பரில் வெளியான இன்ன பிற பத்தி.

முதலில் ஒரு அரேபிய சிறு-சிறுகதை, அதற்கு முன் ஒரு கேள்வி. ஒரே ஒரு நாவலில் உலகப்புகழ் பெற்ற Harper Lee என்னும் பெண் எழுத்தாளரைத் தெரிந்திருக்கலாம். அவரின் ஒரே நாவலான To Kill a Mocking Bird-ஐ நீங்கள் படித்திருக்கக்கூடும். அவருக்கு முன்னமே ஒரே-நாவல் பெண் பிரபலம் ஒருவர் இருந்தார். யார்?

பாக்தாத் நகரில் வசித்துவந்த ஒரு சுல்தான் அவரது வேலைக்காரர்களில் ஒருவனை காய்கறிகள் வாங்கிவர மார்க்கெட்டுக்கு அனுப்பினார். போன சிறிது நேரத்தில் திரும்பிவந்த வேலையாள் பயத்தால் நடுங்கிக்கொண்டிருந்தான், “சுல்தான், மார்க்கெட் கூட்டத்தில் ஒரு பெண் என்னை நெருக்கித் தள்ளினாள். அவள் யார் என்று திரும்பிப் பார்த்தால் சாவு தேவதை. அவள் என்னைப் பயமுறுத்துகிறமாதிரி பார்த்தவுடன் ஓட்டமாக வந்துவிட்டேன். நீங்கள் தயவுசெய்து உங்களுடைய குதிரை ஒன்றைக் கொடுத்தால், என் விதியைத் தவிர்க்க, இந்நகரத்தை விட்டுப் போய்விடுகிறேன். சமாராவுக்குப் போய்விட்டால் சாவு தேவதை என்னைக் கண்டுபிடிக்க இயலாது.” சுல்தானும் அவனுக்கு மனமிரங்கி குதிரையைத் தர, முடிந்த அளவுக்கு வேகமாகக் குதிரையை முட்டித் தள்ளி ஓட்டிக்கொண்டு போய்விட்டான் வேலைக்காரன்.

அவன் சென்றவுடன் சுல்தான் மார்கெட்டுக்கு வந்து சேர்ந்தபோதுதான், கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த என்னைப் பார்த்தார். “காலையில் என் வேலையாளை எதற்காக பயமுறுத்தும் பார்வை பார்த்தாய்?”

“ஐயோ அது பயமுறுத்தும் பார்வை இல்லையே, ஆச்சரியமான பார்வை. அவனை பாக்தாதில் பார்த்ததில் எனக்கோ வியப்பு. இன்றிரவு சமாராவில் அல்லவா அவனைச் சந்திப்பதாக ஏற்பாடு” என்றேன்.

இந்தக் கதையை இயற்றியவர் பெயர் தெரியாது. ஆனால் இத்தனை குறைவான வாக்கியங்களில் என்ன ஒரு பிரமாதமான கதை. இந்தக் கதையை ஜெஃப்ரி ஆர்ச்சர் முதற்கொண்டு சிறு-சிறு கதைகள் எழுதும் எழுத்தாளர்கள் அனைவரும் எடுத்துக் காட்டிவிட்டார்கள். தமிழில் இவ்வாறான, சுஜாதா சொன்னதுபோல, சி.சி கதைகள் வருவதே இல்லை. வாராந்திரிகளில் வரும் ஒரு பக்கக் கதையை எதிலுமே சேர்த்துக்கொள்ளக்கூடாது.

சி.சி.கதைகளை Flash Fiction அல்லது Micro Fiction என்கிறார்கள். அவற்றை எழுத, சில எழுதப்படா விதிமுறைகள் உண்டு. கதையை கதை முடியும்போது ஆரம்பித்தல் அவசியம். அதாவது ‘கடைசியில் கதையில் நுழை, சீக்கிரமாக வெளியேறு’ என்னும் விதி. கடைசி வரி அதிர்ச்சி முக்கியம். கண்டிப்பாக ஒரே ஒரு நிகழ்வுத் தொடர்பாக இருத்தல் வேண்டும். சிறுவனாக இருப்பதில் ஆரம்பித்து ஹீரோயினை மணம் செய்யும் வரையில் 5 வரிகளில் சொன்னாலும் இதில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது. சுவாரஸ்யமான கதைக்களன் ஒரு ப்ளஸ். ஒரு போர் நடக்கும் தெருவிலோ, அன்னிய உலகின் ஒரு சூரிய அஸ்தமனத்திலோ கதை நடக்கலாம். நல்ல சிறுகதைகள் என்றுமே மறக்கப்படுவதில்லை. இன்றைக்கு இருக்கும் கவனக் கலைப்புகளுக்கு நடுவே வாசகரைப் படிக்கவைக்க இம்மாதிரி சி.சி.கதைகள் தேவைப்படுகின்றன. Kurt Vonnegut சொன்னமாதிரி, “Use the time of a total stranger in such a way that he or she will not feel the time was wasted.”
அன்பர்கள் பெஞ்சு நாற்காலிகளை விட்டெறியாத பட்சத்தில் குறிப்பெடுத்து வைத்திருக்கும் சி.சி.கதைகளை இங்கே எழுதுகிறேன்.

oo0000oo

இ-புத்தகங்களின் விற்பனை அதிகமாயிருப்பதாகப் படித்தேன். கொஞ்ச நாட்களுக்குமுன்புவரை, ‘படித்தால் மாண்ட மரத்தின் பேப்பரில் ப்ரிண்ட் செய்யப்பட்டதை அன்றி வேறொன்றையும் படிப்பதாயில்லை’ என்று இருந்தவர்களும் கொஞ்சம் மாறியிருக்கிறார்கள். கிண்டில் போன்ற இயந்திர புத்தகப் படிப்பான்களை யூஸ் செய்தவுடன் திடீரென்று புத்தக ஆர்வம் பிய்த்துக்கொள்வதாக வேறு சொல்கிறார்கள். எப்படியோ இணைய/டிவி மேய்வதைக் காட்டிலும் இது ஷேமம்.

கிண்டிலின் விலை குறைந்து கட்டெறும்பாக ஆகிவிட்டது. இன்னும் கொஞ்ச நாளில் யூஸ் அண்ட் த்ரோ இ-புத்தகங்கள் வந்துவிடும். கடைக்கு போய் ராணி வாங்குவதற்கு பதிலாக ராணி என்ற அட்டை போட்ட வஸ்துவை வாங்கித் திறந்து பார்த்தால் எல்சிடி திரையில் குருவியார் கேள்வி பதில் ஓடும். மூடி வைக்கும் முன் அடுத்த வார பி.டி.சாமி ராணி முத்துவுக்கு இ-ஆர்டர் கொடுத்துவிடலாம். பேப்பர்காரர் இ-பேப்பர்காரர் என்று மலையாள வாசனையுடன் அழைக்கப்படுவார்.

iPad போன்றவற்றுக்கும் Kindle வகையறாவுக்கும் ஆதாரமான வித்தியாசங்கள் இருக்கின்றன. iPad என்பது ஒரு கைக்கணினி. ஆகையால் இ-புத்தகத்தின் முன்னுரை படிக்குமுன் மெயில் செக் பண்ணப்போய் எதாவது facebook அக்கப்போரில் ஆஜராகி வெளிவரும் முன்னர் தூக்கம் வரலாம். கிண்டிலில் இவையெல்லாம் செய்ய முடியா. புத்தகம் அல்லது பேப்பர் மட்டுமே படிக்கமுடியும். ஆகையால் இணையத் தொல்லைகள் கம்மி.

இவையிரண்டின் ஆடியன்ஸும் வெவ்வேறு ஆசாமிகள். iPad-ன் இணையக் கடையில் மக்கள் அதிகமாக வாங்குவது, Angry Birds என்னும் ஒரு விளையாட்டு. பன்றிகள் தங்களின் முட்டைகளை தூக்கிக்கொண்டு போய்விட்டதால் கோபப்படும் பறவைகள் தங்களை உண்டிக்கோலில் வைத்துக்கொண்டு எறியச் சொல்கின்றன. விளையாடுபவர் அதை இழுத்து அடித்தால் அவை சென்று பன்றிகளை தாக்குகின்றன. இதே கிண்டிலின் இணையக் கடையில் பெஸ்ட்செல்லராக இருப்பது, Steig Larsson எழுதிய The Girl with a Dragon Tatoo என்னும் புத்தகம். புரிகிறதா?

oo0000oo

கார்பரேட்டுகள் அறவழியில் நடக்கிறார்களா என்பது சம்பந்தமான ஒரு டிவி நிகழச்சியை ரசித்துப் பார்த்தேன். சாட்டிலைட் சானல் பட்டிமன்றம் போல் காச்மூச்சென்று கத்தாமல், மற்றவன் மனைவியைச் சண்டைக்கு இழுக்காமல் தலைப்புடன் ஒட்டிப் பேசினார்கள். என்னதான் கார்ப்பரேட் என்றாலும், லாபத்துக்கு மட்டுமே செயல்படும் ஸ்தாபனமாக இருந்தாலும், ethics என்பது அவர்களுக்கும் உண்டு. காரணம் தனி மனிதனைப்போல் இந்த சொசைட்டியில் அவர்களும் ஒர் அங்கம் என்பதால்.

லாபத்துக்கு ஓடும்போதும் காம்படிஷனுக்கு ஆட்படும்போதும் ஆங்காங்கே நெறி தவறுவது இப்போதெல்லாம் தப்பாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனாலும் corporate ethics என்பதற்கு ஒரு சமீபத்திய உதாரணம் Pixar Animation Studios. Wall-E என்னும் படம் எடுத்துக்கொண்டிருந்த நேரம் ட்ரைலர் ரிலிஸ் செய்துவிட்டார்கள் ஆனால் படத்தின் கதை விவாதத்தில் ஒரு தொய்வு ஏற்பட்டது. படத்தில் வேலை செய்யும் அனிமேட்டர்களை எப்படி inspire செய்வது என்று கையைப் பிசைந்துகொண்டிருந்தார்கள் Pixarகாரர்கள்.

கிட்டத்தட்ட அதே சமயம் கோர்ட்னி என்னும் ஒரு பெண், தினமும் Wall-E ட்ரைலரைப் பார்ப்பதாகவும் அதில் வரும் அந்தக் குட்டி ரோபோ அழும்போது தினமும் அழுவதாகவும் தன்னுடைய வலைப்பதிவில் எழுதியிருந்தார். தான் அழும் அந்த வீடியோவையும் யூ-ட்யூபில் போட்டிருந்தார். இதை எப்படியோ படித்த/பார்த்த Pixar டீம், தாங்கள் எடுக்கும் படங்கள் எப்படியெல்லாம் மனிதர்களைத் தொடுகின்றன என்று நினைத்தார்கள். தினமும் காலையில் அந்தப் பெண் அழும் வீடியோவைப் பார்த்தார்கள், இன்ஸ்பயர் ஆனார்கள். படம் வெளிவந்தது.

இந்தப் படம் வர மிகவும் உதவிய அவளையும் அவள் பாய் ப்ரண்டையும் விமானத்தில் கூட்டிவந்து, ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்கவைத்து, படத்தின் டீமுடன் ஒரு ஸ்பெஷல் ஷோ போட்டார்கள் (http://blog.moviefone.com/2008/07/02/pixar-honors-the-girl-who-cried-at-the-wall-e-teaser/ ). இத்தனையும் எந்தவித விளம்பரமும் இல்லாமல். அதற்குப்பின் அந்தப் பெண் அதைப் பற்றி வலைப்பதிவில் எழுதியவுடன்தான் வெளியுலகத்துக்குத் தெரிய வந்தது.

யாருக்கும் தெரியாதபோதும், எந்தவித எதிர்ப்பார்ப்பும் இன்றி எதையாவது செய்வீர்களா? உங்கள் மானேஜர் லீவில் இருந்த அன்றும் எப்போதும்போல் வேலை செய்வீர்களா? ரொம்ப சிம்பிளாக, அதுதான் ethics.

oo0000oo

விடை: Wuthering Heights எழுதிய ப்ராண்ட்டி சகோதிரிகளில் ஒருவரான எமிலி ப்ராண்ட்டி (Emily Bronte). ப்ளாஷ்பேக்களின் முலமாக முன்பும் பின்புமாகச் சொல்லப்பட்ட பிரபல நாவல்.

Create a website or blog at WordPress.com