போன வார தமிழ் பேப்பரில் வெளியான இன்ன பிற பத்தி.
சமீபமாக ஃபாரினில் எடுக்கப்படும் பாடல் காட்சியில் ஹீரோ ஹீரோயினுடன் ஆடுவது எப்போதும் போல அந்த இருபது இந்தியப் பெண்களல்ல. அந்நாட்டு டான்ஸர்கள். இதற்கெல்லாம் எப்படியும் ஏதாவது யூனியனில் ஸ்ட்ரைக் பண்ணிவிடுவார்களே, எங்கே அவர்கள்? யாராவது எதையாவது செய்து இந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்தலாம். காதல் பாடம், அன்பே உன் இடையோ, ராஜ வேர்வை, நெலாவே டல்லா இருக்கு, லவ் கன்பர்ம், கண்மணி ஓ, கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா போன்ற தமிழிசையின் பொன் வரிகளுக்கு க்யூட்டாகத் தோற்றமளிக்கும் ஐரோப்பிய இளைஞன் நம்மூர் ஹீரோவுடன் டப்பாங்கூத்து ஆடுவது தமாஷாக இருக்கிறது. அதுவும் வீட்டின் வாண்டுகள் ரிமோட்டை ஒளித்து வைத்து விட்டதாக நினைத்துக் கொண்டு வால்யூம் குறைத்துப் பார்த்தால் உங்கள் பி.பி குறைந்துவிடும்.
எங்கிருந்து ஆரம்பித்தது இந்த சம்பிரதாயம்? சூர்யாவிலிருந்து ஆர்யா வரை எல்லோருடனும் அவர்கள் ஆடிவிட்டார்கள். குறிப்பாக விஜய். ஒரு வாரமாக ஒளிபரப்பாகும் எல்லா பாடல்களையும் கூர்ந்து பார்த்ததில், இது இந்தியனில் ஆரம்பித்தது தெரிந்தது. சாகிர் ஹுசைனின் எதுவோ என்று கமல் மனிஷாவைத் தட்டிவிடும்போது பிண்ணனியில் ஆஸ்திரேலியப் பெண்கள். அந்தப் படத்தின் முதல் பாடலில், கோடம்பாக்க டான்ஸர்களை விடுத்து மும்பை மாடல்களுக்கு மல்லிப்பூ கட்டி கூட்டி வந்த போதே எதிர்ப்பு தெரிவித்தார்கள். இன்று எங்கே போனார்கள்? உடனடித் தேவை – அந்த இருபது பின்னணிப் பெண்கள்.
கும்பகோணம் வடக்கு மாட வீதியில் காதலைச் சொல்லப் பின்தொடரும் ஹீரோ, அடுத்த ஷாட்டில் கூலிங் க்ளாஸ் குளிர் கோட்டு எல்லாம் போட்டுக் கொண்டு பார்சிலோனாவில் ஹீரோயினின் இடுப்பைக் கிள்ளுகிறார். Offending. இந்த மாதிரி படத்தின் நடுவே பாடல்கள் நுழைவதைப் பெரும் புரட்சியாகக் கருதுவதை நம்மூர்க்காரர்கள் விட்டு விட்டு, கொஞ்சம் நேராக யோசிக்கலாம். கதை சொல்லல்(Narrative) என்ற ஒரு விஷயத்தைக் கிட்டத்தட்ட மறந்து விட்டோம். அந்தக் காலத்தில் பாடல்கள் இருந்ததற்கு நாடகக் காரணங்கள் இருந்தன. இப்போது இந்த ஹசிலி பிசிலி காரணங்கள் போதா. கெளதமின் விண்ணைத் தாண்டிய காதல் கதையில் தன் வீட்டு இரும்பு கேட்டைத் தாண்டிக் குதிக்கும் அந்த இருபத்தைந்து வயது இளைஞன் இறங்குவது ஏதோ ஒரு குறுகிய மொண்டே கார்லோவின் தெருவில். ராயப்பேட்டையில் நடக்கும் கதாநாயகி ரோட்டை திரும்பியவுடன் திடிரென்று சிகாகோ இளைஞர்கள் Grafitti அடித்த சுவர்களின் முன்னே நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள். சினிமா என்பது suspension of disbelief என்பார்கள். இது டூ மச் சஸ்பென்ஷன்.
நமக்கு தேவை ஒரேயொரு நிகழ்வை ஒட்டிய கதைகளும் அவற்றுக்கான சிறுகதை முடிவுகளும். அதாவது incident based திரைக்கதைகள். தசாவதாரம் போல. உதாரணத்துக்கு ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கும் கதை என்று வைத்துக் கொள்ளுங்கள், ஹீரோவின் முன்- கதை சுருக்கத்தை ஒரு ப்ளாஷ்பேக்கில் சட்டென சொல்லிவிட வேண்டும் . அதை விடுத்து பாங்கினுள் நுழையும்போது நிதானமாக இரண்டாம் க்ளாஸ் படிப்பதில் இருந்து ப்ளாஷ்பேக் சொன்னால், குட் லக். அதே மாதிரி, ஹிரோயின் பாங்கினுள் மாட்டிக் கொள்கிறாள் என்றால், அவளை எதாவது ஒரு ரூமில் அடைத்து வைத்திருக்கும்போது, பப்பிள்ஸ் போட்டு ட்ரீம் ஸீக்குவன்ஸ் எப்படி வரும். இந்தக் கதையும் வங்கி கொள்ளையைப் போல பத்து மணிக்கு ஆரம்பித்து பனிரெண்டுக்கு முடிய வேண்டும். இம்மாதிரி கதைகளை பாட்டு இல்லாமல் தைரியமாக எடுக்கலாம். பாட்டுக்கள் இருந்தாலும் மகேந்திரன் – பாலு மகேந்திரா படங்கள் போல Montageகளாக இருக்கலாம். ஒரு பல்லவியும் ஒரு சரணமும் படத்தில் காட்டினால் போதும், மிச்சத்தை எம்பி3யில் கேட்டுக் கொள்ளலாம். இம்மாதிரி திரைப்படங்கள் எடுத்தால் தமிழ் நவ-சினிமாவின் உதயத்தை எதிர்பார்க்கலாம். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு சுவிசர்லாண்டின் தெருக்கள்.
OOO
2050ல் 9 பில்லியன் மனிதர்கள் இந்த பூமியில் நடமாடிக் கொண்டிருப்பார்கள் என்கிறார்கள். இந்த 9 பில்லியன் நம்பரில் பல பில்லியன் கவலைகள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. முதல் இரண்டு கவலைகளை மேலோட்டமாக கண்டுக்கலாம்.
ஜனத்தொகை. நமக்குத் தெரிந்து இவ்வுலகத்தில் இத்தனை பேர் இருந்ததேயில்லை. வெத்துப் பெட்டி அப்பார்ட்மெண்டுகளுக்கு சண்டை போடும் நாம், நிற்க நடக்க சண்டையிட வேண்டியதாகலாம் என்கிறார்கள். இதில் கொஞ்சமாவது உண்மையுள்ளது. இரண்டாவது குழந்தையைப் பெற்றுக் கொண்டால் சீன அரசாங்கம் கன்னாபின்னாவென்று வரி போட, கடந்த முப்பது வருடங்களில் கிட்டத்தட்ட 300 மில்லியன் அதாவது முப்பது கோடி பிறப்புக்களைத் தடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த மாதிரி, இன்னும் கடினமான சட்டங்கள் வரலாம். Population pressure அதிகமாகி இயற்கை பேராபத்துகள் வரலாம். ஆட்டோ, கார்கள் அதிகமாகி ட்ராபிக் ஸ்தம்பிக்கலாம் எனச் சில டிஸ்டோபியன் சிந்தனைகள் நடமாடுகின்றன.
உணவு மற்றும் உணவுப் பழக்கங்கள். தனியொருவனுக்கு இல்லாவிட்டால் பரவாயில்லை, இத்தனை ஜனத்துக்கும் எப்படி உணவளிக்கப் போகிறோம். ஏற்கெனவே சென்னையில் 300-400அடியாவது தோண்டினால்தான் குடிநீர் வருகிறது. எந்த மரத்தின் வேர்கள் 300 அடிக்குக் கீழே போய் தண்ணி உறியமுடியும். ஆகவே மரங்கள், செடி கொடிகள் மறித்துப் போன சென்னை ஜெய்ப்பூருடன் போட்டியிட்டு வெல்ல முடியும்.
அமெரிக்காவில் 100 மைல் உணவு என்று ஒரு விஷயம் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. அதாவது 100 மைல் சுற்றளவிற்குள் உருவாக்கப்படும் உணவுகளை உண்ணும் ஒரு வகை டயட். இப்படி செய்தால் சூப்பர் மார்க்கெட்டுகளை சார்ந்திருக்காமல் உழவர் சந்தையிலிருந்து வாங்கி சமைக்கலாம். இந்த வழிமுறை இன்னும் பிரபலமாவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். பெட்ரோல் கிணறுகள் காய்ந்து போனால் உணவுப் பொருட்களை நகர்த்துவது சிரமமாகும்.
ஒரு முறை பூந்தமல்லியில் ஒரு லாரியிலிருந்து மற்றொரு லாரிக்கு முட்டை கோஸ்களை ட்ரான்ஸ்பர் செய்து கொண்டிருந்தார்கள். முதல் லாரியிலிருக்கும் க்ளீனர்(!) ஒரு முட்டைகோஸை எடுத்து, நீல நிற திரவம் கொண்ட பக்கெட்டில் முக்கி தூக்கி வீசுகிறார். அடுத்த லாரிக்காரர் அதை காட்ச் பிடித்து அழுக்கே அழுக்கான அந்த லாரியின் பின்புறத்தில் போட்டுக் கொள்கிறார். கேட்டதுக்கு, ப்ரஷ்ஷாக இருக்க க்ளோரின் வாஷ் என்றார்கள். முட்டைக்கோஸை பூட்டகேஸ் என்று சாப்பிடுவதை விட்டுவிட்டேன். ஆகையால் லோக்கல் உழவர்களை பேஸ்புக்கில் நண்பர்களாக்கிக் கொள்ளுதல் உத்தேசம்.
இது மாதிரி எதுவுமே நடக்காமல் போனாலும் சரி, உங்களூர் சூப்பர் மார்க்கெட்டுகள்தான் நீங்கள் சாப்பிடுவதைத் தேர்ந்தெடுக்கின்றன. இதில் ஏகப்பட்ட அரசியல் இருக்கிறது. ஒரு சூப்பர் மார்க்கெட்டின் அமைப்பிலிருந்து, உள்ளே நுழைந்தவுடன் உங்கள் கண்ணில் தெரியும் முதல் பொருளிலிருந்து இருந்து பில் போடும் போது பக்கத்தில் instinct buyக்காக வைக்கப்பட்டிருக்கும் சாக்லேட் சமாசாரங்கள் வரை எல்லாமே கன்ஸூமர் விஞ்ஞானப்படி அமைக்கப்பட்டது. சூப்பர் மார்கெட்டுகளைத் தவிர்த்தால் உங்களின் டின்னரை நீங்களே முடிவு செய்ய முடியும். இதே மாதிரி பாஸ்ட் புட் டிஷ்கள், கொறிக்கும் சிப்ஸ் என்று தவிர்க்க ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கிறது.
இப்பொழுதெல்லாம் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடுவது ஒரு ஃபாஷானாகி விட்டது, கவனித்தீர்களா? பலர் ப்ரேக் பாஸ்டே சாப்பிடுவது இல்லை. நள்ளிரவுக்குப் பின் டின்னர் சாப்பிடுவது சாதாரணமாகி விட்டது. இருபது-முப்பது வருடங்களுக்கு முன்னால் சாப்பாடுகளின் நடுவே ஏதாவது சாப்பிட்டால் ஏளனமாய்ப் பார்ப்பார்கள். இது எப்போது மாறியது?
இதற்கு நேரெதிராக உணவுப் பசியால் மாண்டவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது. இன்னும் இப்படித்தான் இருக்கும் என்கிறார்கள், இதைத் தடுக்கலாம்.
யோசித்துப் பார்த்தால் தீவிரவாதத்தை விட தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டியது உணவுப் பசி தான். தீவிரவாதத்தினால் மாண்டவர்களின் எண்ணிக்கையை விட இது அதிகம். ஒரு நாள் மட்டுமாவது குறை சொல்லாது, பாலிடிக்ஸ் பண்ணாது, லஞ்சம் கொடுக்காது/வாங்காது, புறம் பேசாது, தூங்கி வழியாது சில பசித்தவர்களுக்கு புசிக்கக் கொடுத்தால் உலக அழிவை ஓரிரு தீபாவளியாவது தள்ளிப் போடலாம்