சொர்க்கத்துக்குப் போவேனா மாட்டேனா?

போன வார தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.

உலகத்தின் டாப் டென் கவலைகளில் முதலிரண்டைப் போன வாரம் நுனிப்புல் மேய்ந்தோம். டாப் டென் கவலைகளுக்கு எதோ ஒரு பிரகஸ்பதியின் வெப்சைட்டில் ஓட்டுப் பதிவு வைக்க, டாப் டென்னுக்கு பின் வந்த கவலைகளின் லிஸ்ட் கவலை கொள்ள வைக்கிறது. பதினேழாமிடம் – பீனட் பட்டர் மேல் வாயில் ஒட்டிக் கொள்வது, முப்பத்தி ஆறாமிடம் மலச்சிக்கல், பதினைந்தாமிடம் – பெண்கள் என்று காமெடி டைம். உலகின் மூன்றாம் கவலை என்று பலரும் வாக்களித்தது சொர்க்கத்துக்கு போவேனா மாட்டேனா என்பது தான். சுத்தம்!

oo0000oo

வாழ்வில் நடக்கக்கூடிய சோகங்களில் மிகப் பெரியது குற்றம் செய்வதோ ஆட்படுவதோ என்கிறார்கள் விஞ்ஞானிகள். இறப்பைப் போன்று நமது செல்களில் பதிவு செய்யப்படாதது குற்ற உணர்ச்சி தான். ஜெனட்டிக்காக குற்றம் செய்வது நம்முள் பதிவு செய்யப்படவில்லை. எல்லோருக்கும் வரும் ஜலதோஷம், ஜுரம் போல குற்றங்கள் எல்லோருக்கும் வருவதில்லை. எதோ ஒன்று இருப்பதாலேயே வருகிறது. அழகோ, ஆடி காரோ, அடையார் பங்களாவோ இப்படி ஏதோ இருப்பதால் தான் குற்றங்கள் அவர்களை நோக்கி வருகின்றன என்பது தான் சோகமே.
ஆனால் குற்றங்கள் நடக்க ஆதாரக் காரணம் தான் என்ன. 2008 அமெரிக்காவில் மிகப்பெரிய ரிசஷன் வந்த எல்லோருக்கும் வேலை இழந்து, வீட்டை இழந்த போது சமூக வல்லுனர்கள் குற்றங்கள் அதிகமாகலாம் என்றார்கள். மோசமான ஒரு பொருளாதாரத்தினால் கடுங் குற்றங்கள் அதிகமாகலாம் என்று நம்புகிறோம். அது கிட்டத்தட்ட தப்பு. அமெரிக்காவில் 60-70களில் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தபோது குற்றங்கள் அதிகரித்தன. 80களில் பொருளாதாரத்துடன் குற்றங்களும் குறைந்தன. அப்போது பொருளாதாரத்திற்கும் குற்றங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றால், பிறகு? தேவையில்லாமை தான்.

குழந்தை தேவையில்லை என்று நினைக்கும் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகள் கிரிமினல்களாகின்றன என்கிறார்கள். கொஞ்சம் நெளிய வைத்தாலும் 1973ல் நிறைவேற்றப்பட்ட Abortion Actக்கு பிறகு பத்து வருடங்களுக்குப் பிறகு குற்றங்கள் குறைய ஆரம்பித்தது அமெரிக்காவில். தேவையில்லை என்று நினைக்கும் பெற்றோர்களின் சிசுக்கள் அபார்ஷனில் போய்விட்டதால், அந்தத் தலைமுறையின் நிறைய குற்றவாளிகள் பிறக்கவேயில்லை என்பது தான் Freakonomics எழுதிய லெவிட் மற்றும் டப்னரின் வாதம். இதனை data வைத்துக் கொண்டு நிருபித்தார்கள்.
குற்றவாளிகள் நம்முடன் தான் இருக்கிறார்கள். நம்மைப் போலவே பிள்ளையாரை பார்த்தால் குட்டிக் கொள்கிறார்கள், அயர்ன் பண்ணி ட்ரஸ் போடுகிறார்கள், சேனல் தாவுகிறார்கள்.நம்மைப் போலவே ஊக்கம் இல்லாவிட்டால் ஒரு விஷயத்தைச் செய்யாதிருப்பார்கள். ஆக அவர்களுக்கு ஊக்கம் இல்லாது செய்துவிட்டால். அதாவது காசு வாங்காது கைது செய்து,நேரத்திற்கு கேஸ் ஃபைல்களை பிரித்து, தண்டனையளித்து, உள்ளே போட்டால் ஊக்கமிழந்து விடுவார்கள். இதை முடியாமல் செய்யும் உப-குற்றக்காரர்களைத் தான் முதலில் உள்ளே போடவேண்டும்.
இதையெல்லாம் விட அமெரிக்காவில் டெலிவிஷனால் தான் குற்றங்கள் அதிகரிக்கின்றன என்கிறார்கள். டிவி பார்த்துக் கொண்டு பாப்கார்ன் கொறித்துக் கொண்டிருக்கும் அந்தச் சிறுவர்கள் மற்றவர்களுடன் பழகுவதை விட்டுவிடுகிறார்கள். தனித்துப் போய் விடுகிறார்கள். அல்லது அவர்கள் பெற்றோர்கள் டிவி பார்த்துக் கொண்டே இருப்பதால் வெறுப்படைந்து போய் கதவை மூடிக் கொள்கிறார்கள்.

“பேப்பர திறந்த கொலை கொள்ளை, நம்மூர் கெட்டுப் போச்சு” என்று சொல்லும் மாமாக்களுக்கு கொஞ்சம் வித்தியாசமான பதில் இருக்கிறது. சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் கண்டுபிடித்த உண்மை எல்லோரையும் உறைய வைத்தது. இத்தனை ஜனநெரிசல் அதிகமான உலகத்தில் ஐநூறு வருடங்களாக கடுங்குற்றங்கள் குறைந்து வருகின்றன. 15ம் நூற்றாண்டில் லட்சத்தில்73 கொலைகாரர்கள் இருந்தார்கள், 20ம் நூற்றாண்டில் மூன்றே பேர் தான். இதே போல் வேறு பல நாடுகளிலும் இதே கதை தான். ஆக மக்கள் தொகை அதிகமாகும் இக்காலத்தில் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதா, குறைகின்றன என்பதா?

இம்மாதிரி உலக மகா ரிசஷன்கள் வரும் போதும் கூட பொய் சொல்லாமல், பிக் பாட்கெட் அடிக்காமல், கொலை வழிப்பறி செய்யாமல் எத்தனையோ சான்ஸ்களை வேண்டாம் என்று விட்டுவிட்ட நமக்குள் இருக்கும் குற்றவாளிகளுக்கு ஒரு கைக்குலுக்கல்-சல்யூட்.

மற்றபடி குற்றத்திற்கு ஆதாரமான காரணம் கஞ்சத்தனம். யோசித்துப் பார்த்தால் புரியும்.

பி.கு – சூர்யா-ராமுவின் ரத்த சரித்திரம் இன்னமும் பார்க்கவில்லை.

oo00000oo

நாத்திகத்தின் போஸ்டர் பாய் என்றழைக்கப்படும் சாம் ஹாரிஸ் எழுதிய The moral landscape என்ற புத்தகத்தினால் ஆத்திக-நாத்திக சண்டைகள் அதிகமாகியுள்ளன. சாம் சொல்ல வருவது இதைத்தான் – மதங்கள் ஒருவர் ஒழுங்காக இருப்பதற்கு மோசமான காரணங்களைக்க் கொடுக்கின்றன. ஆப்பிரிக்காவில் பசிக் கொடுமை இருக்கிறது. கிறிஸ்து என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார், ஆப்பிரிக்காவுக்கு எதாவது பண உதவி செய்தால் என்னை சொர்க்கத்தில் சேர்த்துக் கொள்வார் என்பதனால் செய்கிறீர்களா? அல்லது மற்றவர்களின் மேலிருக்கும் தூய்மையான அன்பினாலா?
அவரிடம் சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டியில் கேட்கப்பட்ட கேள்வி சிந்திக்க வைக்கிறது – Why is science a better alternative? Science is the most durable and non divisive way of thinking about the human circumstance. It transcends cultural, national, and political boundaries. You don’t have American science versus Canadian science versus Japanese science.

oo0000oo

பாஸ் (எ) பாஸ்கரன் படம் கொஞ்சம் பிடித்திருந்ததுக்கு காரணம் சந்தானம். அவரின் விஜய் டிவி காலத்திலிருந்தே அவரைப் பார்த்து வருகிறேன். வத்திப் போன தமிழ்க் காமெடி உலகில் கொஞ்சம் வித்தியாசமாக தெரிந்தவர், இப்போது தமிழ் சினிமாவுக்காக மாறிக் கொண்டு வருகிறார். எந்திரனில் எதோ மெக்கானிக்கிடம் வேலை பார்க்கும் ( “டேய் அந்த எட்டு ஸ்பானரை எடுத்துப் போடு”) சைட் கிக் போல வந்தவர், இந்தப் படத்தில் ஆர்யா விட்டுக் கொடுக்க, ஓரிரு தருணங்களில், விலா நோக வைக்கிறார். சித்ரா லட்சுமணனைப் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. மற்றபடி படத்தில், ஒரு பாடலில் பணக்காரனாகும் விக்கிரமன் படத்தைக் கிண்டல் செய்து கொண்டே ஒரே பாடலில் பணக்காரர்கள் ஆகிறார்கள். என்ன ஒரு cliché reversal.