தமிழ்நாடு · பதிவுகள் · மனிதர்கள் · மற்றவை

பா – 3

பா – 1 , 2

3

அப்பா பம்பாயில் வேலை செய்த கதைகளை சொல்லும்போது அவனுக்குச் சுவாரசியமாய் இருக்கும். அந்த மனிதர்களும் அந்த ஊரும் அவனுக்கு அன்னியமானதால் இருக்கலாம். இடுக்கமான வீடுகள், பொங்கி வழியும் ரயில் பெட்டிகள், தெருவில் விற்கும் பூரி தின்பண்டங்கள். பம்பாயினால் அப்பாவுக்கு இந்தி சினிமாவும் பிடித்துப் போனது. ஆராதனாவிலிருந்து Nazia Hassan பாடும் Aap jaisa koi meri zindagi mein aaye to baat ban jaaye வரை எல்லாம் கேட்பார், பார்ப்பார். ஆனால் பம்பாயில் இருந்த போது அவருக்குத் தெரிந்த இரண்டே வார்த்தைகள், அச்சா மற்றும் நஹி. இந்த இரண்டு வார்த்தைகளை வைத்து அவர் எப்படி நாட்களைக் கடத்தினார் என்பது தான் கதைகளே.

பம்பாயிலிருந்து  திரும்பியதற்கு இரண்டு மூன்று காரணங்கள் இருந்தாலும், முதல் காரணம் அவருடைய அம்மா தமிழ் நாட்டில் இருந்ததாலும் அவரை விட்டு தள்ளி இருக்க மனமில்லாததாலும் தான். பம்பாயில் மேலும் தங்கியிருந்தால் தன் வாழ்வு எப்படி போயிருக்கலாம் என்பது பற்றி ஒரு alternative narrativeவை அப்பா சொல்லிக் கேட்டிருந்தான்.

”பம்பாயிலேயே இருந்திருந்தா இத்தனை வருஷத்துல ஒரு பெரிய பங்களா கட்டி..”

“ஏன் அங்கேயே நல்லா பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணியிருக்க வேண்டியது தானே. நல்லா… கவர்மெண்ட்ல வேலை செய்ற பொண்ணா வேணும்னு தானே ஒத்த கால்ல நின்னீங்க. இத்தனை நேரம் பம்பாய்ல அந்த ஒடுக்கு வீட்ல மழை ஓழுகிண்டு இருக்கும்” என்று சொல்லி அப்பாவின் புஜத்தில் செல்லமாய் குத்துவாள் அம்மா.

விக்ரமில் கமல் சொல்லும் ”…ப்பாத்துக்கலாம்” போல அப்பா அக்கறையற்ற, “அதெல்லாம் சல்தா ஹை…” என்பார்.

பம்பாயில் இருந்து அவர் கற்றுக் கொண்ட பாடம் என அவன் நினைத்தது, சல்தா ஹை என்ற மனப்போக்குத் தான். தன் வாழ்வில் அத்தனை ஒழுக்கத்தை கடைப்பிடித்தவர், தன் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயத்தைப் பற்றி ஒரு வித துறவியின் மனநிலையில் சல்தா ஹை என்று சொல்லிக் கடந்து சென்று விடக்கூடியதை அவன் கொஞ்சம் வியந்தான்.

அமெரிக்காவிலிருந்து வந்த அன்றே தகனம் முடிந்திருந்ததால், அடுத்தடுத்த காரியங்களை பற்றி வீடு யோசித்தபோது, அவனுடைய பயண களைப்பும், கரோனா களைப்பும் தீரட்டும் என்று எல்லா காரியங்களையும் ஒன்பதாம் நாளன்று தள்ளி வைத்து விட்டார்கள்.

அடுத்த மூன்று நாட்களுக்கும் அப்பாவின் அறையிலேயே தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். டீவி போர் அடித்தது, டுவிட்டர் கசந்தது, புத்தகங்களில் மன போக மறுத்தது. முதலில் அதை ஜெட்லாக் என்று நினைத்தவனுக்கு பிறகு தான் புரிந்தது, அது அப்பாவின் காரியங்களை முடிக்க வேண்டும் என்ற மன உணர்ச்சி உண்டாக்கும் தூக்கமின்மை என்று.

ஒன்பதாம் நாள் முதல் அத்தனை காரியங்களையும் ஸ்ரீ ராம தீர்த்தம் என்ற இடத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்குச் சென்றவுடன் அவன் கணினி தொழிலாளி மண்டைக்குள் தோன்றியது, “இது ஒரு FaaS” என்று. Funeral-as-a-service.

பத்தாயிரமோ பன்னிரெண்டோ கொடுத்து விட்டால், ஹோம சாமன்கள் முதற்கொண்டு , காரியம் செய்விக்க அறைகளும், குழி தர்ப்பணம் செய்ய குழிகளும், கோ பூஜை செய்ய மாடு கன்றுக்குட்டிகளும், அரிசி வாழைக்காய் தானம் வாங்கிக் கொள்ள அங்கேயே வேலை செய்யும் ஆட்களும் என்று எல்லா வசதிகளும் நிரம்பப் பெற்ற இடம். அடுக்குமாடி குடியிருப்புகள் நிரம்பி வழியும் சென்னை போன்ற பெருநகரங்களுக்குத் தேவையான all-in-one service.

”கர்தா பேர் சொல்லுங்கோ…”

“கீர்த்திக…”

“நீங்க தான கர்த்தா, உங்க பேர் சொல்லுங்கோ…”

சொன்னான்.

அப்போது தான் புரிந்தது அப்பாவின் காரியங்களில் கர்த்தா எனப்படுவன் அவன் தான் என்று. அடுத்தடுத்த நாட்களில் பஞ்சகச்சம் கட்டுவதற்கு கற்றுக் கொண்டு விட்டான். தலை குளியல், தர்ப்பணம் , அரிசி வாழைக்காய் என்று எல்லா நாட்களுக்கும் சேர்த்துக் குழி தர்ப்பணம் செய்யச் சொன்னார் வாத்தியார். கண்ணை மூடி கல் ஊன்றினான்.

“இன்னும் நல்லா நெறைய ஜலம் விடணும். இந்த பத்து நாளும், போன அப்பாவோட ஆத்மாவுக்குத் தெரிஞ்சது ஒண்ணு தான். பசி தாகம்… பசி தாகம்”

அந்த சிறிய ஸ்ரீ ராம தீர்த்த அறையில் தங்கை அடுப்பு பற்ற வைத்து சாதம் வடித்து பிண்டம் பல பிடித்து வைத்திருந்தாள்.

“மார்ஜயந்தா…”

“மார்ஜயந்தா…”

“மம-ன்னு சொல்லுங்கோ”

”மம” என்றான்.

“அப்படியே பித்ரு தீர்த்தம் போல கையில இருக்கிற எள்ளு கலந்த ஜலத்தை, கைய திருப்பி பிண்டத்தோட மேல விட்டுடுங்கோ”

விட்டான்.

“இப்ப பூணுல சரியாப் போட்டுக்கலாம்”

கலிபோர்னியா சென்றிருந்த மாமா அப்பாவின் செய்தி கேட்டு அவனுக்கு முன்னமே கிளம்பி வந்திருந்தார். பத்தன்று காலை அவனிடம் வந்து,” இன்னிக்கு காரியம் பண்றதுக்கு கொஞ்சம் கஷ்டமாத் தான் இருக்கும், கொஞ்சம் தைரியமா இரு” என்று எச்சரித்தார். பத்தாம் நாளன்று உறவினர்கள் வந்தார்கள், அழுதார்கள், பத்து கொட்டினார்கள்.

ஒத்தன் என்பவருக்கு உணவிடச் சொன்னார்கள். அவர் உண்டு முடிந்தவுடன் அவனை திரும்பி நிற்க சொன்னார்கள்.

“அப்பாவுக்காக கிளம்பி இவர் காசிக்கு போறார். அவரை பாக்காம திரும்பி நின்னுக்கோங்கோ”

அது ஒரு ஐதீகம் தான். காசிக்செல்லாம் பலரும் செல்லச் சொல்லவதில்லை. அதற்குச் செலவாகும் என்று பின்னர் புரிந்து கொண்டான்.

வாத்தியார்கள் கோஷ்டியாய் உட்கார்ந்து ஒரு சேர ருத்ரம், சமகம் சொன்னார்கள். அதுவரை செய்யப்பட்ட காரியங்கள் எல்லாம் புதிதாக இருந்தாலும், அவர்கள் சொன்ன ருத்ரத்துடன் சேர்ந்து அவனும் அரைகுறையாய் ருத்ரம் சொல்ல முற்பட்டான்.

சுபஸ்வீகாரத்துக்கு எல்லோரையும் வாட்ஸ்ஸாப்பில் அழைக்க அப்பாவின் படம் போட்டு அழைப்பு செய்து கொடுத்தான். அபார்மெண்டில் இருந்த எல்லோருக்கும் அழைப்பை அனுப்பினாள் அம்மா.

“அப்பாவுக்கு எல்லாரையும் கூப்பிட்டு சாப்பாடு போடணும்னா பிடிக்கும்”

வாத்தியார்கள் வந்தனர். நவக்கிரக ஹோமம் செய்தார்கள். புண்ய ஜலத்தினால் அவனை நனைத்தார்கள். சரம ஸ்லோகம் எழுதி வாசித்தார். அப்பாவின் திதி இத்தியாதி விஷயங்களை ஒரு அரை பேப்பரில் எழுதி கொடுத்தார்.

”இனிமே இதுதான் அப்பாவோட முக்கியமான சீட்டு. இதை நீங்க எங்க காமிச்சாலும், திதி பார்த்து மாசிகம் சோதமம் எல்லாம் பண்ணி வச்சிருவா. 27ம் நாள் , 45ம் நாள், ஆறாம் மாசத்தை மட்டும் விடாம பண்ணிடுங்க. அடுத்த வருஷம் வருஷாப்திகம் இங்கேயே ஜம்முன்னு பண்ணிடலாம். ஆக்சுவலா கர்த்தா ஒரு வருஷம் கோயில் போகப்பிடாது, மலை ஏறப்பிடாது, கடல் கடக்கபிடாது. ஆனா அமெரிக்கா போய் ஆகனுமே. ஒண்ணும் சிரமமில்ல, ஒரு ப்ரிதி பண்ணிக்கலாம்” என்று கொஞ்சம் சிரித்த படி சொன்னார்.

அப்பாவின் ஆஸ்தான அட்டோ ஓட்டுநர் முதற்கொண்டு மருந்து கடைக்காரர், ப்ளம்பிங் வேலை செய்பவர் என்று எல்லோரும் வந்தார்கள், அழுதார்கள். அப்பா அவர்களுக்குச் செய்திருந்த உதவிகளின் விவரங்களைச் சொன்னார்கள். சீனு ஒரு ஃபாண்டா பாட்டில் கொண்டு வந்து அப்பாவின் படத்தின் முன் வைத்தார்.

“அப்பாவுக்கு ரொம்ப பிடிச்சது இதுன்னு…”

அப்போது தான் அவனுக்குப் புரிந்தது. தான் சென்னையில் இல்லாத பதினேழு வருடங்களில் அப்பா பலருக்கும் பணத்தையும், மனத்தையும் கொடுத்து உதவியிருக்கிறார். அவர் சென்னை வரும்போது இவற்றைப் பற்றிக் கேட்டிருந்தாலும், அந்த எளிய மனிதர்களின் அக்கறையை அப்போது தான் புரிந்து கொண்டான்.

தங்கையுடன் சேர்ந்து வீட்டைக் கொஞ்சம் எளிதாக்கி அம்மாவிற்கு ஏற்றபடி மாற்றி அமைக்க நினைத்தான். அப்பா சேர்த்து வைத்திருந்த பலவித எலக்டிரிகல் கருவிகளை ஒன்றாக எடுத்து வைத்தார்கள். அவர்களின் ஆஸ்தான எலக்ட்ரீஷனை அழைத்து எடுத்துப் போகச் சொன்னார்கள்.

“என்னது சார் இறந்துட்டாரா” என்று அதிர்ந்து போனர் அந்த எலக்ட்ரீஷன்.

”இந்த ஸ்விட்ச் போர்டையெல்லாம் ரிமோட்டா மாத்தி அவர் செஞ்சிருந்க்கிற விஷயம் ஸ்டார் ஓட்டல கூட இல்லீங்க. அவர் சொல்லித் தான் இதயெல்லாம் நானே தெரிஞ்சுகிட்டேன்”

அப்பாவின் கனிணியை வீட்டு வேலை செய்பவரின் சிறுவனுக்கு உதவியாய் இருக்கும் என்று கழட்டிக் கொடுத்தான். ப்ரிண்டர் இன்னொருவருக்குச் சென்றது.

பாங்க் கணக்கு வழக்கைப் பார்த்த போது, அப்பா எல்லா கணக்குகளையும் எளிதாக்கி அத்தனை டாக்குமெண்டையும் சேர்த்து ஃபைல் செய்து தன் டைரியில் அழகான கையெழுத்தில் எழுதி வைத்திருந்தார். அம்மாவின் ஏர்டெல் ஃபோன் முதற்கொண்டு எல்லாவற்றிற்கும் ஒரு ஆண்டு சந்தா கட்டி வைத்திருந்தார். அவன் செய்ய வேண்டிய வேலை என்று ஒன்றுமே இல்லாமல் செய்து வைத்துப் போயிருந்தார். ஆஸ்பத்திரியில் அவர் இருந்த கடைசி நாட்களுகளுக்கான செலவு, பிடித்தம் போக அனைத்தும் ஏற்கனவே அவர் கட்டியிருந்த ஸ்டார் ஹெல்த் இன்ஷுரஸிலுருந்து ஒரே செக்காக வந்தது.

“அடுத்த ஒரு வருஷத்துக்கு என்னை எங்கேயும் கூப்பிடாதீங்க. அப்பா நினைவா நான் இங்க தான் இருக்க போறேன்” என்றாள் அம்மா. அவளைத் தனியாக எப்படி விடுவது என்று அவர்கள் வியந்த போது, அடுத்த இரண்டு மாதங்களாவது அங்கேயே தங்குகிறேன் என்றார் அவள் தம்பியான அவன் மாமா.

எமிரேட்ஸில் திரும்ப டிக்கெட் வாங்கினான்.

விமானத்தில் ஏறி, பறப்பதற்கு முன் உட்கார்ந்த அவன் ரெஸ்ட்ரூம் போக தன் இருக்கையை விட்டு எழுந்தான்.

“Sorry sir.. only one restroom in business class today. This one does not work. You can use the first class restroom if needed” என்றாள் அந்த விமானப் பணிப்பெண்.

எதோ சொல்ல எத்தனித்தவன், தன்னையும் அறியாமல், “fine.. சல்தா ஹை” என்றான்.

“What.. Waaz that” என்று வினவினாள்.

“Oh no, nothing… do you have cappuccino. I’ll take one.”

காப்பசீனோ வந்தது. ரொம்ப நாட்களுக்குப் பின் அன்று அவனுக்கு முதல் முறையாக நன்றாக உறக்கம் வந்தது.

இந்தியா · தமிழ்நாடு · பதிவுகள் · மனிதர்கள் · மற்றவை

பா – 2

பா – 1

2

பாட்டின் ஆரம்பத்தில் ஒரு விதமான முக்கல் தொனியில் ம்ம்ம்ம்ம்…. என்று ஒரு ஹம்மிங்குடன் ஆரம்பிப்பார் டி.எம்.சவுந்தரராஜன். பாலும் பழமும் கைகளில் ஏந்தி என்ற அந்தப் பாடலைத்தான் அப்பா தன் திருமணத்தன்று நலங்கு நிகழ்ச்சியில் அம்மாவிற்காகப் பாடியதாக அவனிடம் அடிக்கடி சொல்லியிருக்கிறார். என்றெல்லாம் அதைச் சொல்லுகிறாரோ உடனே சிவாஜி கணேசன் மாதிரியே உதட்டை அசைத்து அசைத்துப் பாடிக் காட்டுவார்.

”ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தேவி பாரடைஸ்ல ஏவி ரமணன் மியூசியானோ நடக்கும். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது ப்ளீர்ன்னு இசையோடு ரமணனும் உமா ரமணனும் பாட ஆரம்பிப்பாங்க. பிரமாதமாக இருக்கும்” என்று 70களின் மெட்ராஸைப் பற்றிச் சொல்வார். அப்போது தான் அப்பாவுக்கு மைக் பிடித்துப் பாடும் பாடகனாக வேண்டும் என்று ஆசை இருந்ததே அவனுக்கு தெரிந்தது.

மே பிற்பகுதியில் அவன் அமெரிக்கா திரும்பியவுடன் அப்பாவும் சகஜ நிலைக்குத் திரும்பினார். இரண்டு வாரங்களுக்குப் பின் ஜூன் மாதத்தில் அப்பா உட்கொண்ட உணவின் அளவு குறைந்தது.

“நல்லா தக்காளி ரசமும் அவரைக்காய் கறியும் செய்யுன்னு சொன்னார். ஆனா சாப்பிட உக்கார்ந்தா பிடிக்கல பிடிக்கலன்னு சொல்றார்” என்று அவன் போன் செய்யும் போதெல்லாம் சொல்ல ஆரம்பித்தாள் அம்மா.

அவருடைய டாக்டரிடம் வாட்ஸ்ஸாப்பில் அவன் பேசினான்.

”ரொம்பவும் பயப்பட ஒண்ணுமில்லை. கார்டியாலஜிஸ்ட் சொன்ன மாதிரி தண்ணியை அளவா பார்த்துக் குடிக்க சொல்லுங்க. எலக்ட்ரோலைட்ஸ் பார்த்துக்கோங்க” என்றார் டாக்டர்.

அவனுக்குத் திரும்பவும் இந்தியா போக இருக்கும் வேண்டியிருக்கும் போலத் தோன்றியது. அடுத்த நாள் எடுத்த PCR டெஸ்டில் அவனுக்கு கரோனா தொற்று உறுதியானது.

இரண்டு நாட்களுக்குப் பின் கொஞ்சம் கரோனா ஜூரம் தலைவலியெல்லாம் தேவலையானவுடன், போக்குவரத்து கட்டுப்பாடுகள் என்ன என்று படித்துப் பார்த்தால் கரோனா முடிந்து ஐந்து நாட்களுக்குப் பிறகே விமான பயணம் மேற்கொள்ளலாம் என்றது அரசு.

அப்பா உணவு வெறும் நீராகாரம் மட்டுமே என்றாகியது. அம்மா எல்லாவற்றையும் அரைத்துக் கொடுக்க ஆரம்பித்தாள். அப்பா அதையும் தவிர்க்கப் பார்த்த்தார். பக்கத்து அப்பார்ட்மெண்ட் வாசிகள் அவரை பார்க்க வந்த போது தள்ளாடிப் போய் கீழே உட்கார்ந்து விட்டார். அடுத்த நாள் ஆஸ்பத்திரிக்குப் போகமுடிவாகியது.

“நான் வேணும்ன்னா கிளம்பி போறேன். உனக்குக் கோவிட் சரியான உடனே நீ வா” என்றாள் தங்கை.

கலிபோர்னியாவிலிருந்து அவள் கிளம்ப, இன்னும் ஐந்து நாட்கள் தள்ள என்று எண்ணிக் கொண்டிருந்தான்.

ஆஸ்பத்திரிக்குப் போன அப்பாவிற்கு கார்டியாக் அரெஸ்ட் வந்தது. அப்பாவின் தம்பி, அவனுக்கு போன் செய்தார்.

“கண்ணு, அப்பாவுக்கு மூச்சு விட முடியல. அவங்க ஆறு நிமிஷத்துக்கு CPR செஞ்சு காப்பாத்திட்டாங்க. நீ உடனடியா எப்ப கிளம்ப முடியும்” என்றார் அவன் சித்தப்பா.

அடுத்த நாள் அவன் தங்கை அப்பாவைப் போய் ஐசியூவில் பார்த்தாள்.

“ஏன்னால பாக்க முடியல டா அப்பாவை. டீயூப்பெல்லாம் இழுத்து போட்டுடறார்னு, கைய கட்டி வச்சிருக்காங்க. பாவம் டா அப்பா. சரியாயிடும்பா கவலை படதேன்னு சொன்னேன். இல்லன்னு அப்பா தலையை அசைக்கிறார்டா” என்று அழுதாள்.

அவனுக்கு இப்பொழுது தானா தனக்கு கரோனா வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

பொய்யினில் சூக்கம் பொருந்தும் உடலையும் / கையினில் துல்லியம் காட்டும் உடலையும் / ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே” என்று திருமூலர் சொன்னது அவனுக்கு அன்று புரிந்தது.

அன்றிரவு அவன் தங்கையும் அங்கிருந்த ஒரு டாக்டரும் வாட்ஸாப்பில் அவனுக்கு போன் செய்தார்கள்.

மல்டிபல் ஆர்கன் டிஸ்பங்க்ஷன் என்றாகி அடுத்த நாள் அதிகாலை நான்கு மணிக்கு அப்பாவிற்கு மீண்டும் கார்டியாக் அரஸ்ட் வந்து காப்பாற்ற முடியாமல் இறந்து போனார்.

வீட்டிலிருந்த மற்றவர்க்கெல்லாம் கரோனா வந்து விடாமல் இருக்க தனி ரூமில் இருந்தவனுக்கு தங்கை அழுது கொண்டே போன் செய்த போது அவளைத் தேற்றுவதா தான் அழுவதா என்று புரியக் கொஞ்சம் நேரம் பிடித்தது. ஒரு வழியாகப் பேசி வைத்து விட்டு கண்ணீர் விட்டழுதான். இந்தியா போய் அப்பாவின் கடைசி கடமைகளைச் செய்து முடிக்க முடியுமா என்று கண்விழித்து யோசித்திருந்தான்.

“கண்ணு… நீ வராம ஒண்ணும் செய்ய முடியாது. நீ வந்து தான் எல்லா காரியமும் பண்ணனும். கரோனா எல்லாம் முடிஞ்ச அப்புறம் கிளம்பி எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ வா. மூணு நாளோ முப்பது நாளோ நாங்க அப்பாவை பத்திரமா ராமசந்திராவில வச்சி இருக்கோம்” என்றார் சித்தப்பா.

அம்மா தவித்துப் போனாள்.

”சித்தப்பா என்ன சொல்றாரோ அதே அப்படியே செய்.” என்றால் அம்மா.

மூன்று நாட்களுக்குப் பின் வீட்டில் டெஸ்ட் எடுத்து பார்த்த பிறகு கிளம்புகிற மாதிரி எமிரேட்ஸில் டிக்கெட் புக் செய்தான்.

சென்னை வந்து சேர்ந்தவுடன், அவன் குவாரண்டைனில் தனியாக இருப்பதற்கு வீட்டில் இருந்த அப்பாவின் அறை ஒழித்துக் கொடுத்தார்கள். கரோனாவின் களைப்பு இன்னமும் போன மாதிரியில்லை. அப்பா இறந்து ஐந்து நாட்களாகியிருந்தது. அவனுக்கு கரோனா வந்து பத்து நாட்கள்.

அன்று பகலில் அப்பாவை ராமசந்திராவிலிருந்து எடுத்து வந்திருந்தார்கள். மார்சுவரியிலிருந்து வந்ததால் அடுக்குமாடிக்குடியிருப்பின் கீழே இருந்த பெரிய கார் பார்கிங்கில், காரை எல்லாம் நகற்றி, S. Ramesh, Puthur என்று ஐஸ் பெட்டிக்கான விளம்பரம் எழுதப்பட்டிருந்த ஒரு ஐஸ் பெட்டியில் அப்பாவை வைத்திருந்தார்கள். அவன் வந்து அப்பாவைப் பார்த்த போது அவனையே எல்லோரும் பார்ப்பது போல தோன்றியது. கொஞ்சம் தள்ளிப் போய் அழுதான். மாஸ்க் நனைந்து போனது.

”அப்பாவுக்கு பக்கத்துல, பாலும் பழமும் பாட்டை போடச் சொல்லு” என்றான் தங்கையிடம்.

பாட்டு போடப்பட்டவுடன் அப்பா தலையாட்டிக் கொண்டே உதட்டைச் சுழற்றி சுழற்றி பாடுவது ஞாபகம் வந்து அழுகை சற்று அதிகமானது.

அவனுக்குப் பஞ்சகச்சம் கட்டி விட்டார்கள், தண்ணியைத் தலையில் விட்டுக் கொண்டு சொட்டச் சொட்ட வரச்சொன்னார்கள். வாத்தியார் மந்திரம் சொல்லி நெருப்பு உண்டாக்கினார். பின்பு அவனை அப்பாவின் தலையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு அவர் வலது காதில் தர்ப்பையைப் படுமாறு வைத்துக் கொள்ளச் சொன்னார்கள்.

அப்பாவின் தலையை மடியில் வைத்த நொடியில் அவனுக்கு ஒரு பெருவாழ்வே மின்னலாக ஒடியது. குடும்ப பாரத்தைச் சுமக்க அப்பா படித்து பம்பாய் போனது, மெட்ராஸுக்கு வந்து அம்பத்தூர் எஸ்டேட்டில் பதினேழு கம்பெனிகளில் வேலை செய்தது, தனக்கான வாழ்வை சிறுகச் சிறுக சேர்த்து அமைத்துக் கொண்டது, உறவினர் யார் வந்து திருமணத்திற்குப் பணம் என்று கேட்டாலும், அம்மாவை LTC போட வைத்தாவது பணம் குடுத்தது, பலப்பலப் பேருக்கு பலவகையில் உதவி செய்தது, குல தெய்வத்துடன் சேர்த்து நாகூர் தர்காவுக்கும், வேளாங்கண்ணிக்கும் அவனைக் கூட்டிச் சென்றது, கடைசி வரையில் ஒரு என்ஜினியராக வாழ்ந்தது என்று அப்பாவின் எழுபத்து ஏழு வருடங்களும் பளீரென வந்து போனது.

நெருப்பை எடுத்துக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் போய் வண்டியில் ஏறிக் கொள் என்றார்கள். வண்டியில் ஏறும் வரை தங்கையின் அழுகுரல் கேட்டுக் கொண்டிருந்தது. அப்பாவை வண்டியில் ஏற்றிப் போய் மின் மயானத்தில் 550 டிகிரியில் தகனம் செய்தார்கள்.

”தாடியை இங்கேயே நின்னு எடுத்துட்டு முழுசா தண்ணிய ஊத்திண்டு வா” என்றார்கள்.

அவன் குளித்து வருவதற்குள் எலும்புகளைச் சேகரித்து மயான ஊழியர் ஒருவர் எடுத்து வந்தார்.

“பீச்சுக்கு இந்த பானைய எடுத்துப் போய் நாராயணா நாராயணா சிவ சிவான்னு சொல்லி தண்ணில அமுக்கிட்டு வந்துடுங்கோ” என்றார் வாத்தியார்.

பெசண்ட் நகர் பீச்சுக்குப் போக முடியுமா என்று கேட்டான் அவன்.

“கண்டிப்பா அண்ணா. உங்களுக்கு எங்க வேணுமோ அங்க போகலாம்” என்றார்கள் சித்தப்பாவின் மகன்கள்.

கார்ல் ஸ்மித் மண்டபம், பெசண்ட் நகர்

அன்று குரு பவுர்ணமி, இரவு 8 மணி. இருள் கவிழ ஆரம்பித்திருந்தது. பெசண்ட் நகர் எலியட்ஸ் பீச்சுக்கு அருகில் கார் வந்த போது மழைத் தூறல் ஆரம்பித்தது. பீச்சில் ஆள் அதிகமில்லை.

கார்ல் ஸ்மித் மண்பத்துக்கு எதிரில் காரைப் பார்க் செய்தவுடன் தன் கையில் வைத்திருந்த பானையுடன் தண்ணீரை நோக்கி நடக்க ஆரம்பித்தான். மழைத் தூறல் அதிகமாக மக்கள் தண்ணீரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார்கள். வெற்று மார்போடு, பஞ்ச கச்சம் கட்டி பானை எடுத்துக் கொண்டு போனவனை சிலர் விசித்திரமாகப் பார்த்தார்கள்.

பவுர்ணமி என்பதால் கடல் பரபரப்பாய் இருந்தது. இடுப்பளவு தண்ணீர் வரும் வரை உள்ளே நடந்தான். அந்த முழு நிலவை ஒரு முறை தலை தூக்கிப் பார்த்தான்.

“பா…” என்று சத்தமாகச் சொல்லி ஒரு முறை அப்பாவின் சிரித்த முகத்தை நினைத்துக் கொண்டான். தன் கையிலிருந்த பானையைத் தண்ணீரில் வைத்து அழுத்தினான். பானை உடைந்து வங்காள விரிகுடாவில் விரிய ஆரம்பித்திருந்தார் அப்பா.

(தொடரும்)

உலகம் · பதிவுகள் · மனிதர்கள்

நடுநிசி நகக்கடி

Image
ரஃபேல் நடால்

வாரக்கடைசியில் ஆஸ்திரேலிய ஓப்பனை கண்விழித்துப் பார்த்தது வீணாகவில்லை. ராஃபா நடாலும் மேட்வடெவ்வும் ஆடிய ஆண்கள் இறுதிப் போட்டி, ஏறக்குறைய ஆறு மணி நேரத்திற்குப் பிறகு நகக்கடியாக முடிந்தது. தன்னை விளையாட விடாததினால் ஜோகோவிச் கோவிச்சுக் கொண்டாலும் இப்பொழுது நிலவும் தொற்று சூழ்நிலைக்குச் சரியே என்று தோன்றியது. ஜோகோ இருந்திருந்தால் இந்தப் போட்டி வேறு மாதிரி இருந்திருக்கும்.

ராஃபாவிற்கு ஆஸ்.ஓப்பன் சில வருடங்களாக கைக்கு எட்டாமலேயே இருந்தது. இதை வென்றால் 21வது கிராண்ட் ஸ்லாம் என்ற உலக சாதனை, எதிரில் மேட்வடெவ் என்ற இளைஞன் என்று பல அழுத்தங்கள். கடைசியில் அவர் வெற்றி பெற்றவுடன் அழுகை சந்தோஷம் என்ற உணர்ச்சிக் குழப்பத்தில் இருந்தது புரிந்துகொள்ளக் கூடியதே.

நம்முடைய எல்லோர் வீடுகளில் இருக்கும் ஒன்று விட்ட மாமா பையன் சாயலில் ரஷ்யாவின் மேட்வடேவ். உலக டென்னிஸ் வரிசையில் தற்போது இரண்டாவது இடம். நெடுநெடுவென வளர்ந்து ஒல்லியாக சற்றே முன்வழுக்கை விழுந்து, சொன்ன விஷயத்தை கச்சிதமாகச் செய்து முடிக்கும் இளைஞனின் முகம். புஜபல பராக்கிரமத்துடன் இருக்கும் நடாலின் எதிரில் அமைதியாக ஆனால் அதிரடியாக இருந்த மேட்வடேவ் கண்டிப்பாய் மனதில் இடம் பிடித்தார். வருகிற வருடங்களில் இவரின் மேல் எதிர்பார்பு அதிகமாகும். ஆனால் மேட்வடேவை ESPNல் கமெண்டரி சொல்பவர், ரயில் நிலையத்தில் டிபன் விற்பவர் போல், “மெதுவடே… மெதுவடே…” என்று சொல்லச் சொல்ல ஒவ்வொரு முறையும் அது என் கவனதிசை திருப்பலுக்குக் காரணமாகியது.

நடாலின் வியர்வை வழியும் முகத்தில் மூக்கு நுனி சிகப்பு வரை தற்போதைய உயர் தொழில்நுட்ப காமிரா பளீரென படம் பிடிக்க, இப்படி வீட்டில் பார்ப்பதை விட்டு விட்டு ஆஸ்திரேலியர்கள் மாஸ்க் இல்லாமல் மைதான அனுபவத்திற்கு ஏங்கியது நியாயம் தான் என்றாலும் உறுத்தியது. ஆக்‌ஷன் ரிப்ளேயிலும் புள்ளி விவரங்களின் 3டி புரொக்‌ஷனிலும் எங்குத் திரும்பினாலும் இன்போசிஸின் பல கோடி டாலர் விளம்பரங்கள்.

கடைசி செட்டில் அந்த களமே ஸ்லோமோஷனில் அமைதியாகிப் போனது. ஒரு விதத்தில் ஆர்.கே.செல்வமணி பட க்ளைமாக்ஸ் போல பந்தை அடிக்கும் நேரத்தில் இருவரும் “ஹாஹஹஹ…” என்ற உறுமல் ஒலி தாள கதியாய் காதில் விழ, மோனிகா செலஸைம் மரியா ஷரபோவாவையும் தாண்டிய டெசிபெல் அது. அதுவும் 4-2 என்று நடால் முன்னணியில் இருந்த கடைசி செட் கேமில், டுயூஸ் அட்வாண்டேஜ் என்று மாறி மாறிப் போய் ஒரு வழியாக மேட்வடேவ் ஜெயித்த போது அரங்கமே ஆர்ப்பரிக்க நான் பாத்ரூமுக்கு ஓடினேன்.

இந்தியா · பதிவுகள் · மனிதர்கள்

சங்கீதாவா சரவணபவனா?

நீயா நானா?

தமிழில் ஒரு சொல்லின் மூலத்தை அறிய முற்படுவது பல இடங்களுக்கு நம்மைக் கூட்டிச் செல்லும். போத்தீஸ் வாசலிலோ, டாக்டர் க்ளினிக்கிலோ நேரம் கடத்தும் போது நல்ல பொழுது போக்கு. இல்லையென்றால் வழக்கப்படி ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் பார்க்கலாம். இப்படி etymologyயை பற்றி யோசிக்கும் போது தமிழில் இதற்கென இணைய மென்பொருள் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன். ம்ஹூம் அகப்படவில்லை. ஒரு சொல்லை உள்ளிட்டு அதை வேர்ச்சொல்லாக ஆராயும்போது அந்த சொல்லுக்குப் பல விதங்களிலும் இணைக்கப்பட்ட சொற்கள் அந்த சொல் மரத்தில் இலைகளாக மிளிர்ந்தால் எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள்.

வாதம் என்ற சொல்லைப் பற்றித் தேடும் போது தோன்றியது இது. வாதம் என்றால் நமது நினைவுக்கு வருவது இரண்டு விஷயங்கள் – வாத நோய் அல்லது ஒரு தரப்பை எடுத்துக் கூறுதல். ஆனால் சற்றே ஆழமாகச் சிந்தித்தால் வாதம் பல சொற்களுடன் சேர்ந்து பலப்பல பொருள்களைத் தருகிறது. பக்க + வாதம், வி+வாதம், பிடி+வாதம், வாக்கு+வாதம், பிரதி+ வாதம், எதிர்+வாதம், தீவிர+வாதம், எழுத்தாளர்களுக்கு பிடித்த மாயயதார்த்த+வாதம், விதண்டா+வாதம் என போய்க்கொண்டே இருக்கிறது. இந்த ஆராய்ச்சி தமிழில் மட்டுமல்ல எல்லா மொழிகளிலும் ஒரு உற்சாகமான செயல் தான்.

ஜனநாயகம் என்பதே ஒரு பெரிய வாக்குவாதம் என்பார்கள். சரிதான். ஆனால் தினப்படி நாம் செய்யும் விவாதங்களையும் வாக்குவாதங்களையும் யோசித்துப் பாருங்கள், விஜய்யா அஜித்தா, தாமரையா சூரியனா, டிரம்ப்பா கிளிண்டனா, சரவணபவனா சங்கீதாவா என வேண்டாத வீணடிக்கப்பட்ட தருணங்கள் தமிழனுக்குப் பாயசம் போல.

எப்பவுமே நான் ஒப்பினியனேட்டட் என்று ஒரு காலத்தில் நானும் காட்டுக்கத்தல் கத்தியவன் தான். நாற்பதைத் தொட்டவுடன் விவாதமா இருதயமா என்று தோன்ற பார்த்தசாரதி கோயில் பசு போல் கொடுக்கும் அகத்திக்கீரையை உண்டு அமைதியா இருக்க பழகிக் கொள்கிறேன். இன்னமும் முடிந்தபாடில்லை.

அதெல்லாம் முடியாது காரசாரமான வாக்குவாதம் என் பிறப்புரிமை என சொல்பவர்களுக்கு, அந்த விவாதத்தில் அமைதியை கடைப்பிடித்து வெற்றி பெற நான் படித்த/கேட்ட விதிமுறைகள் இவ்விவை –

  1. முக்கியமானது – குரலை எழுப்பிப் பேசாதீர்கள். குரல் எழுப்புவதினால் உங்களில் முளையின் இருபுறமும் பாதாம் பருப்பு வடிவத்தில் உள்ள அமிக்டாலா(amygdala) என்ற பேட்டையில் amygdala hijack என்ற செயல் நடக்கிறது. செய் அல்லது செத்து மடி என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டு, உங்கள் உடம்பும் உணர்ச்சிகளும் கட்டுப்பாட்டிலிருந்து காணாமல் போகின்றன. அதன் பின்பு தலைச் சூடாகும், கைகால் நடுங்கும், பேச்சு குழறும். இந்த சமயத்தில் தான் நம்மையும் உணராமல் வார்த்தையாலோ செயலாலோ எதாவது சொல்லி/செய்து நட்புகளும் உறவுகளும் அறுந்து போகின்றன. உங்கள் குரல் கட்டுப்பாட்டில் இருக்கும் போது சிறப்பாக யோசிக்க முடியும்.
  2. உங்களோடு வாதம் செய்பவரைத் தாக்காமல் அவரின் வாதத்தைத் தாக்குங்கள். உதா: ”இப்பயெல்லாம் சரவணபவன் முன்ன மாதிரி இல்ல. சங்கீதா தான் டாப்.” என்று சொல்பவரை நோக்கி, “உனக்கும் உன் குடும்பத்துக்கும் லேட்டஸ்ட் எதுவோ அதுதான் டாப். சுட்டு சுண்ணாம்பா போனாலும் கோட்டு போட்டுட்டு ஆபிஸ் போறவன் தானே நீ” என்றெல்லாம் சொன்னால் மூக்கு உடைபடும் ஜாக்கிரதை.
  3. வாதங்களுக்கு இடையே ஜோக் அடிப்பது சூழ்நிலையின் வெப்பத்தைக் குறைக்கும்.
  4. எதிரிலிருப்பவர் ஏதாவது சொல்ல அதை கேளாது நீங்களும் ஏதாவது சொல்வதற்குப் பதில், உங்கள் வாதத்தைக் கேள்விகளாக மாற்றுங்கள். அவருடைய பக்க தர்மத்தை உங்களுக்குப் புரிந்து கொள்ளச் சிறந்த வழி. அப்படி பதில் சொல்லும் போது அவர் யோசிக்க ஆரம்பித்து தன்னுடைய வாதத்திலிருந்து கொஞ்சம் ஜகா வாங்கலாம்.
  5. உங்களுடைய பார்வையும் கோணமும் குறைபட்டதாக இருக்கலாம் என்று நம்புங்கள். நம் வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், படிப்பு, சூழ்நிலை இவற்றால் நம்முடைய வாதமும் உலக கண்ணோட்டமும் வேறுபட்டது என்று உணர்ந்தால் வாக்குவாதம் அனாவசியம் என்று புரியும் .
  6. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக – நம்மால் யாரையும் எதையும் மாற்ற முடியாது என்று உணருங்கள். அப்படியே மாற்றினாலும் அது வாக்குவாதத்தினால் முடியவே முடியாது. இம்மாதிரி வாக்கு வாதங்களினால் என்ன பயன் என்பது பற்றியே எனக்குக் கேள்விகள் இருக்கின்றன. பேசித்தான் ஆக வேண்டும் என்றால் பைக்கை எடுத்துக் கொண்டுபோய் எலியட்ஸ் பீச்சில் உட்கார்ந்து கடற்காற்றுக்கு நடுவே அமைதியாய் பேசலாம். அல்லது மொட்டை மாடியில் இரவில் இளையராஜா இசைக்க விட்டு மெல்லப் பேசினால் எதிராளி கேட்க முற்படுவார். மாறுவாரா என்பது கேள்விக்குறியே.

போன மாதம் சென்னை சென்றிருந்தபோது சங்கீதாவிலிருந்தும் பிறகொரு முறை சரவண பவனிலிருந்தும் சொமாட்டோவில் ஆர்டர் செய்து சாப்பிட முடிந்தது. இவைகளில் இருந்த வந்த சாம்பார்களுக்கிடையே கிட்டத்தட்ட ஆறு கிலோமீட்டர் தூரம். காபிக்கு 10 கி.மீ. அதாவது இன்னமும் சரவணபவனுக்கு அருகில் கூட சங்கீதாவால் வரமுடியாது. இல்லை என்று சொல்பவர்களுடன் விவாதம் செய்ய நான் ரெடி. நீங்கள் தோற்பது உத்தர+வாதம்.

எழுத்தாளர்கள் · பதிவுகள் · புத்தகம் · மனிதர்கள்

முராகமியின் டீஷர்ட்

நான் விரும்பிய டி ஷர்ட்டுகள் – ஹருகி முராகமி

நான் எழுதிக் கொடுத்தால் என் வீட்டு சலவைக் கணக்கைக் கூட பதிப்பிக்கத் தயாராக இருக்கிறார்கள் பத்திரிக்கையாளர்கள் என்று ஒருமுறை நகைச்சுவையாக எழுதியிருந்தார் சுஜாதா. ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முராகமி, சுஜாதா போலவே பிரபலமானவர். ஜப்பானையும் தாண்டி உலகப் புகழ் பெற்றவர். இவர் எழுதினால் யாரும் எதை வேண்டுமானாலும் பதிப்பிக்க ரெடி.

முராகமி கொஞ்சம் விவகாரமான ஆசாமி. அவர் எழுத்தைப் போலவே கொஞ்சம் வித்தியாசமானவர். போன வருடம் தான் சேகரித்து வைத்திருக்கிற டீஷர்ட்டுகளை பற்றி ஒரு புத்தகம் போட்டார். அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்கள். பிரகஸ்பதி நான் அதையும் படித்துப் பார்த்தேன்.

தான் ஒரு பதுக்கல் பேர்வழி இல்லை என்றாலும் நான்கைந்து விஷயங்கள் தன்னை அறியாமல் குவிந்து போனது என்கிறார். எல்.பி ரெக்கார்டுகள், புத்தகங்கள், பென்சில்கள், டிஷர்ட்டுகள் இன்ன பிற. டிஷர்ட் என்பது ஒரு மலிவான எளிமையான உடை. எதோ கலை பொக்கிஷமெல்லாம் அல்ல. அதனால் போகிற இடமெல்லாம் கொஞ்சம் மாறுபட்டுத் தெரிகிற ட்ஷர்டுகளை வாங்க ஆரம்பித்தார். அவர் அப்படி வாங்குவது தெரிந்து உலகெங்கும் இருக்கும் அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு டிஷர்டுகளை அனுப்ப ஆரம்பித்தார்கள். முதலில் முராகமி வீட்டின் அலமாரிகள் நிறைந்தன, பின்பு அட்டைப்பெட்டிகள் என கார் கராஜ் வரை ட்ஷர்டுகளால் நிரம்பி வழிய வேறு வழியில்லாமல் ரொம்பவும் வித்தியாசமான ட்ஷர்டுகளை படமெடுத்து புத்தகம் போட்டுவிட்டார். பெயர் – The T-Shirts I Love.

ஜப்பானிய உணவான சூஷீயில் ஆரம்பித்து, கெட்ச்சப், பர்கர், விஸ்கி, பியர், பறவைகள், விலங்குகள், இசை, கார்கள், மராத்தான், புத்தகங்கள், யூனிவர்சிடிகள், சூப்பர்ஹீரோக்கள் என்று எல்லா துறைகளிலும் சேர்த்து வைத்திருக்கும் டிஷர்டுகள் பற்றி அவற்றின் படங்களோடு கதை சொல்கிறார்.

”இவ்வளவு டிஷர்ட்கள் வைத்திருக்கிறீர்களே நீங்கள் பொக்கிஷமாய் நினைக்கும் டிஷர்ட் எது?” என்று ஒரு நிருபர் கேட்க, முராகமி சொன்னது சுவாரஸ்யமானது.

ஹவாய்த் தீவில் ஒரு மலிவு விலை டிஷர்ட் கடையில் “Tony” Takitani House (D) என்ற வாசகம் போட்டிருந்த டிஷர்ட் ஒன்றை வாங்கினார். விலை வெறும் ஒரு டாலர். வீட்டிற்கு வந்தவுடன் இந்த டோனி என்பவர் ஒரு உண்மை மனிதனாய் இருந்தால் எப்படியிருப்பான் என்று யோசிக்கப் போய், டோனி டாகிடானி என்று பெயரிட்டு ஒரு சிறுகதை எழுதினார். அந்த கதை பிரபலமாகப் போய் பிறகு அதே பெயரில் திரைப்படமாகவும் வெளியாகி பெரும் புகழை வாங்கித் தந்தது. “என் வாழ்க்கையில் எத்தனையோ முதலீடுகள் செய்திருக்கிறேன், ஆனால் அந்த ஒரு டாலர் டிஷர்ட் தான் பெஸ்ட்”.

டோனி டாகிடானி டிஷர்ட்

இந்த சம்பவத்திற்கு சுவையான ஒரு சிறுகதை முடிவு இருக்கிறது. அந்தப் படம் வெளிவந்து பிரபலமானவுடன், முராகமிக்கு டோனியிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. “நான் தான் அந்த உண்மையான டோனி டாகிடானி. அந்த டிஷர்ட் நான் டெமாகிரடிக் கட்சிக்காக ஹவுஸ் தேர்தலில் நின்ற போது தயாரித்தது. தேர்தலில் நான் தோற்றுப் போனேன். அந்த டிஷர்ட் உங்களுக்காகவாவது உதவியிருப்பது சந்தோஷம் தான். நான் ஒரு வக்கீல், ஒரு முறையாவது என்னுடன் கோல்ஃப் விளையாட வாருங்கள்”.

முராகமிக்கு நீங்கள் இன்னமும் டிஷர்டுகள் அனுப்பலாம். அப்படியே அடியேனுக்கும் ஒன்று அனுப்பினால் இப்பகுதியில் உபயதாரர் பெயர் விவரம் குறிப்பிடுகிறேன். அனுப்பும் போது இந்திய யானை, அகல் விளக்கு, பாரதி மீசை என்றெல்லாம் இல்லாமல் தற்காலத் தமிழ் வார்த்தைகளாக அனுப்பக் கோருகிறேன். வாழ்க தமிழ்!