3

1950களில் கல்கி பத்திரிக்கை வெளியாகும் வியாழனன்று ரயில் நிலையங்களில் காத்திருந்து, ரயில் நின்றவுடன் அடித்துப் பிடித்து முதல் பிரதியை பிடுங்கி, அங்கேயே பெரிய தூண்களுக்கு அருகில் உட்கார்ந்து பொன்னியின் செல்வனின் அந்த வாரக் கதையை படித்து விட்டு, கை இடுக்கில் சொருகிக் கொண்டு வீட்டிற்கு சென்றவர்கள் ஏராளம். இது உலகமெங்கும் நடந்த விஷயம் தான், சார்லஸ் டிக்கின்ஸின் பிக்விக் பேப்பர்ஸ் அத்தியாயங்களாய் எழுதிய போதும், சர் ஆர்தர் கோனன் டாய்லின் ’எ ஸ்கேன்டல் இன் போஹேமியா’ வெளியான போதும், லியோ டால்ஸ்டாயின் ‘அன்னா கரேனினா’ தி ரஷியன் மெசஞ்சரில் வெளிவந்த போதும் நடந்த அதே தவிப்பு தான் பொன்னியின் செல்வனுக்கும் இருந்தது.
நள்ளிரவன்று வெளியாகும் ஹாரி பாட்டர் புத்தகத்தைப் படிக்க பார்னஸ் அன்டு நோபிள் கடைகளில் காத்துக் கிடந்த சிறுவர்களைப் போலத் தான். விஷுவல் மீடியாக்களின் காலமான இன்று திரைப்படத்தின் முதல் காட்சிக்கு க்யூவில் நிற்பது போலத் தான். இது தப்பென்றால் 50களில் ரயில் நிலையங்களில் நின்றதும் தப்புத்தான்.
ஆனால் தமிழ் நாட்டில் அது நடந்தது முதல் முறை. உரைநடை திரண்டு வந்து கொண்டிருக்கும் போது வந்த முதல் ப்ளாக்பஸ்டர் புத்தகம். என்ன தான் கல்கி கிருஷ்ணமூர்த்தி அதற்கு முன்னரே பார்த்திபன் கனவும், சிவகாமியின் சபதமும் எழுதி முடித்திருந்தாலும், பொன்னியின் செல்வன் வெளியான சில வாரங்களிலேயே அவற்றை மிஞ்சும் படைப்பாகி விட்டது என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
தமிழ் நாட்டில் பலருக்கும் புத்தக வாசிப்பை உண்டாக்கியதும் பொ.செ தான். பலரும் பொ.செ.யின் வழியாக இலக்கியத்திற்குள் வந்திருக்கிறார்கள். பலர் படித்த முதல் மற்றும் கடைசி புத்தகமும் இது தான். அல்லது கடல் புறா. “நிறைய புக் படிப்பேங்க, இந்த பொன்னியின் செல்வன், கடல் புறா, யவன ராணி மாதிரி.” பலர் இதைத் தான் தமிழில் எழுதப்பட்ட மிகச் சிறந்த இலக்கிய படைப்பு என்பது மாதிரியும் நினைத்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஜே.ஜே சில குறிப்புகள், கரைந்த நிழல்கள், கடலிலே ஒரு தோணி, என் பெயர் ராமசேஷன், ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன என்பவை எல்லாம் வெறும் தமிழ் வார்த்தைகளே. கேள்விப் படாத புத்தகங்கள். கேள்விப்படவும் தேவையுமில்லை. இரண்டாயிரம் பக்கங்களுக்கு கல்கி எழுதி வைத்துப் போனதை மீண்டும் மீண்டும் ரசித்து படிக்கவே நேரம் போதவில்லை.
வாரயிதழ்களில் வரும் தொடர்களின் பக்கங்களைப் பிரித்து எடுத்து பைண்ட் செய்து பின்பு படிப்பது என்பது பழக்கம். அப்படி அக்கம் பக்கத்து வீடுகளில் பைண்ட் செய்யப்பட்ட பொ.செ தொடரை வாங்கிப் படித்ததை பற்றி அம்மா சொன்னதுண்டு. அஞ்சலி திரைப்படம் வெளியான வருடம் தான் முதல் முறையாக பொ.செ.வை நான் படித்தேன். தேவநேயப் பாவாணர் நூலகத்திலிருந்து எடுத்துக் கொண்டு வந்து இரண்டொரு வாரங்களில் படித்து முடிக்கப்பட்டது. அது வரை படித்துக் கொண்டிருந்த தமிழ்வாணன், சங்கர்லால், லயன் காமிக்ஸ் வகையறாவிலிருந்து விலகி எளிமையாக எழுதப்பட்ட கதை. படிக்கப் படிக்க இழுத்துக் கொண்டு சென்ற புத்தகம். முடித்தவுடன் மீண்டும் படிக்கத் தோன்றிய முதல் புத்தகம். ஒரே ஒரு குறை, புத்தகம் ஆரம்பிக்கும் போது உடைபடும் நான்காவது சுவர். கல்கி வாசகர்களுடன் அப்படி நேரடியாக உரையாடுவது சற்றே புதிதாக இருந்தது. ஒரு ஊர்ல ஒரு ராஜா என்று சொல்லாமல், வாருங்கள் நாம் ஆயிரம் வருடங்கள் பின்னோக்கி செல்வோம் என்று எழுதியது கொஞ்சம் பிடிபடாமல் போனது. ஆனாலும் வந்தியத்தேவனும், நம்பியும், பூங்குழலியும் பிடித்துப் போனார்கள்.
இப்படி பலருக்கும் கனவாக இருந்த ஒரு புத்தகத்தை மணிரத்னம் படமாக எடுக்க எத்தனிக்கிறார் என்று கற்றதும் பெற்றதும் தொடரில் சுஜாதா ஒரு முறை எழுதியிருந்தார். பல வருடங்களுக்குப்பின் அப்போது பொ.செ.வை மீண்டும் படிக்க முற்பட்ட போது பாதிக்கு மேல் முடியாமல் போனது. அப்போது அசோகமித்ரனும், இந்திரா பார்த்தசாரதியும் ஆதர்சமாயிருந்தார்கள். பொ.செ ஒரு வெறும் சாகச கதையாகப் பட்டது.
பொ.செ.வின் முதல் பாகத்தை பார்த்த போது மணிரத்னம் இதை ஏன் தன் கனவுப் படமென்கிறார் என்பது புரிந்தது.
(தொடரும்…)
Leave a Reply