4

கனவென்றால் சும்மா காமா சோமா கனவல்ல. கிட்டத்தட்ட 40 வருடங்களாக வளர்த்திருந்த கனவு. நேற்று புத்தகத்தைப் புரட்டி விட்டு, இன்று காலை வரை மோவாயைத் தடவிக் கொண்டு மோட்டுவளையத்தை பார்த்த பின் எடுத்த முடிவல்ல. மணி ரத்னம் சொன்னது போல, கல்லூரி நாட்களில் ஈஸ்வரி லெண்டிங் லைப்ரரியில் பொ.செ. புத்தகத்தை எடுத்துப் படித்த போது வந்த கனவு. “இதற்காகத் தான் சினிமா எடுக்கவே வந்தேன்” என்ற வாக்கியத்தைத் தவிர எல்லாவற்றையும் சொல்லி விட்டார்.
80களில் கமலஹாசனைக் சந்தித்தவுடன் அந்தக் கனவு கொஞ்சம் கொஞ்சமாக நனவாக ஆரம்பித்துத் தள்ளிப் போனது. பிறகு 90களின் இறுதியில் தான் செய்து வைத்திருந்த திரைக்கதையை நகாசு வேலை செய்ய எழுத்தாளர் சுஜாதாவுடன் இணைந்து படம் செய்யலாம் என்று நினைத்த போதும் தள்ளிப் போனது. சுஜாதாவின் மறைவிற்குப் பின், மீண்டும் திரைக்கதையை தூசு தட்ட எழுத்தாளர் ஜெயமோகனை நாட, அவர் எழுதிக் கொடுத்த திரைக்கதையையும் எடுக்க முடியாமல் போனது முன்கதைச் சுருக்கம்.
என்னதான் தமிழ் சினிமாவின் உச்ச இயக்குநராக இருந்தாலும், தனது கனவுப் படத்தை எடுக்க ஆனதென்னவோ 40 ஆண்டுகள். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக யோசித்து எடுத்த படத்தை எப்படி எடுத்திருப்பார்?
”அதாவது பாகுபலி பத்மாவத் படத்தை எல்லாம் பார்த்தீங்கன்னா ஒரு பத்து இருபது நிமிஷத்துக்குள்ள இவர் தான் ஹீரோ இவர் தான் வில்லன் அப்படின்னு சொல்லிடுவாங்க. பொன்னியின் செல்வன்ல யாரு ஹீரோ யாரு வில்லன் ஒண்ணும் புரிய மாட்டேங்குது, ஒரே ஃபிளாட்டா எடுத்து வச்சிருக்காய்ங்க…”
தைலம் விற்கிற வியாபாரி மாதிரி யூடுப்பர்கள் பொன்னியின் செல்வன் புத்தகத்தைப் படிக்கவும் படிக்காமல், டிஸ்னி படக்கதையில் குழந்தைகளுக்கு good guy bad guy என்று கதை சொல்வது போல் சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கும் philistines ஒரு பக்கம்.
”குடந்தை ஜோசியரும், புதை மணல் சீன் ரெண்டும் வரல, இதுக்கு எதுக்கு படமெடுக்கணும் மணி ரத்னம்”.
இப்படி பொன்னியின் செல்வன் புத்தகத்தை மனனம் செய்து அதிலேயே ஊறிப்போன வாசக வெறியர்கள் ஒரு பக்கம்.
மேலோட்டமாய் பார்த்தால் ராஜா ராணிக் கதை தான். உடம்பு சரியில்லாத ராஜா, இரண்டு வீரப் புதல்வர்கள், ஒரு புத்திசாலிப் பெண், ஒரு பேரழகி, குதிரை, போர், வெள்ளம், பாதாள சுரங்கம் இத்தியாதி இத்தியாதி.
ஆனால் மணிரத்னத்தை இத்தனை காலமாகத் துரத்தும், ”நீங்க… நல்லவரா கெட்டவரா?” கேள்விக்கான விடையை இதிலும் தேடுவதைத் தான் விரும்பியிருக்கிறார். அடுத்த ராஜாவாகப் போகும் அண்ணன் தம்பி தங்கை கதை என்று மட்டுமே பார்க்காமல், அவர்களுக்கு இருக்கும் குணாதிசயங்கள் மூலம், நமது அரசியலையும், அக்காலத்தில் இருந்த சூழலையும் திரையில் கொண்டுவரும் சாகசம் தான் பொன்னியின் செல்வன். அது புத்தகத்திலில்லாத ஒரு புதுப் பரிமாணம்.
செபியாத்தனங்கள் இல்லாத திரைக்கதை. திணித்த மாதிரி இல்லாமல், ரொம்பவும் இயற்கையாக நடக்கும் உள்நாட்டு உறவு சண்டையின் நடுவே கொண்டு விடப்படுகிறோம். அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் என்று திருக்குறள் சொன்ன நான்கும் கருமேகமாகச் சூழ்ந்து கொண்டு புயலாய் வீச, கப்பலோடு கப்பலாய் அருண்மொழியும் வ.தேவனும் மூழ்க முடியும் முதல் பாகத்தின் திரைவடிவம் சினிமா எடுக்க நினைப்பவர்களுக்கு ஒரு பாலபாடம். கல்கி பார்த்திருந்தால் இதன் துள்ளலான திரைக்கதைக்காகவே ரசித்திருப்பார்.

யார் எதை ஒத்துக் கொண்டாலும் இல்லையென்றாலும், இது நிஜம்: தமிழ் சினிமா வரலாற்றில் ஒவ்வொரு ஃப்ரேமும் ஒரு இம்ப்ரெஷனிஸ்ட் ஓவியமாக வரையப்பட்ட முதல் திரைப்படம் பொன்னியின் செல்வன். மணி ரத்னத்தின் எல்லாம் படமும் அழகாகத் தான் இருக்கும். குறிப்பாக இப்படத்தில் தீப்பந்தங்களினால் ஒளியேற்றப்பட்ட கோட்டைகள், கிரீடங்கள், சிம்மாசனங்கள், முத்து மாலைகள், மூக்குத்தி, தோடு, தொங்கட்டான், காப்பு, சிலம்பு என்று எங்கு நிறுத்தி எந்த ஃப்ரேமை பார்த்தாலும் அழகாய் ஓவியமாய் இருக்கிறது. தோட்டா தரணி, ரவி வர்மன், பிருந்தா, ஏகா லகானி என்று சகலரும் சேர்ந்ததினால் வந்த அழகு இது.

முதல் பாகத்தைப் பல முறை திரையிலும், அமேசான் ப்ரைமிலும் பார்த்திருந்தாலும், காட்சிகளைப் பார்க்காமல், வெறும் ஒலிச்சித்திரமாகக் கேட்ட போது, படத்தை புதிதாக ரசிக்க முடிந்தது. ஒரு சனிக்கிழமை காலை நடையின் போது, படத்தை ஃபோனில் ஓடவிட்டு, காட்சிகளைப் பார்க்காமல் ஹெட்போன் மாட்டிக் கொண்டு கேட்டேன். குறைந்த நிறைவான வசனமும், குதிரையின் குளம்புச் சத்தமும், க்ளீங் என்று கத்தியின் ஒலியும், புயலில் சிக்கிக் கொண்ட கப்பலின் ambienceம் துல்லியமாகப் படத்தைப் புரிய வைத்தன. சவுண்ட் டிசைனர் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தியின் ஒலியமைப்பு ஒரு sublime experience.
இவர்களை மீறி ஏ.ஆர். ரஹ்மான் செய்திருப்பது ஒரு அமைதியான சாதனை. ஹீரோ கிழே விழுந்து எழும் போது டம் டம் டம் என்று தலைவலி இசை செய்யும் படங்களின் நடுவே, பின்னணி இசையின் மூலம் படம் பார்ப்பவர்களின் ரசனையை முன் தள்ள முற்பட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

புயலில் சிக்கிய கப்பலை அடையும் அருண்மொழி வர்மன் கயிற்றைப் பிடித்தபடி உயரே ஏறி வந்தியதேவனை விடுவிக்கும் போது நமக்கும் ஜிவ் என்கிறது. தேவநேயப் பாவாணர் நூலகத்திலிருந்து எடுத்து வந்த பொ.செ.வின் சுழல் காற்று படித்த போது, அந்த பதிமூன்று வயது டீனேஜருக்கு வந்த அட்ரினலின் ரஷ்ஷை 33 வருடங்கள் கழித்து மீண்டும் அனுபவிக்க வைத்ததற்கு நன்றிகள் பல, மணி ரத்னம்!
(தொடரும்…)
மணிரத்னசோழன் – வந்ததும் வருவதும் 1
Leave a Reply