
“எழுதுகிறவனுக்குக் கவனம் முக்கியம். எல்லோரும் கவனிக்கிறோம். ஆனால், எல்லாவற்றையும் கவனிப்பதில்லை. யோசித்துப் பார்த்தால் நாம் கவனிக்க விரும்புவதைத்தான் கவனிக்கிறோம், நம் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப, எப்படி? சொல்கிறேன்.
….
காண்கிற எல்லாவற்றையும் கவனிக்க எனக்குச் சில வருடங்கள் ஆயின. கவனித்தது அத்தனையும் எழுத வேண்டும் என்பதில்லை; எழுதத் தேர்ந்தெடுக்கப்படும் விஷயத்தில் சில பொது அம்சங்கள், முக்கியமாக மானுடம் வேண்டும்.
என் கண்ணெதிரில் நடந்த ஒரு சாலை விபத்தில் முதலில் எனக்கு எழுத விஷயம் ஏதும் கிடைக்கவில்லை. எல்லா ஊரிலும்தான் போக்குவரத்து. எல்லா ஊரிலும்தான் கிழவர்கள் கிழட்டு சைக்கிள்களில் அடிபட்டுச் சாகிறார்கள். ஆனால், இறுதியில் விபத்து நடந்த இடத்தில் இறைந்திருந்த கால் கிலோ அரிசியை ஒரு சிறுவன் ரத்தம் படியாததாகப் பொறுக்கி டிராயர் பைக்குள் திணித்துக்கொண்டபோது எனக்கு அங்கே கதை கிடைத்துவிட்டது.
எனக்கு, சில வருடங்கள் எழுதிய பிறகு கவனிப்பதில் கஷ்டம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், எழுதும்போது சொந்த விருப்பு வெறுப்புகளிலிருந்து விடுபடுவதுதான் கஷ்டமாக இருந்தது. இருக்கிறது. ‘என்னே சமூகத்தின் கொடுமை’ என்று சுட்டிக்காட்டுவதைத் தவிர்ப்பது எத்தனை சிரமம் என்பது எழுதிப் பார்த்தால்தான் தெரியும். வாசகர்கள் புத்திசாலிகள்; அவர்களால் இடைவெளிகளை நிரப்ப முடியும். முகவாயைப் பிடித்து ஸ்பூன் வைத்துப் புகட்ட வேண்டாம்; எழுதியதை இடைவெளி விட்டுப் படிக்கையில் ஒரு வாசகனின் கோணம் கிடைத்து எத்தனை முறை திரும்ப எழுதினாலும் ஒவ்வொரு முறையும் எழுதியது மெருகேறுகிறது என்பதெல்லாம் இருபத்தோரு வருடங்களாகக் கற்ற பாடங்கள்.”
— ரயில் புன்னகை, சுஜாதா
Leave a Reply