மணிரத்னசோழன் – வந்ததும் வருவதும் 2

2

தளபதி படப்பிடிப்பில் மணி ரத்னம், ரஜினி மற்றும் ஷோபனா

மணி ரத்னத்தின் எந்தப் படம் வெளி வருவதற்கு முன்னும் பின்னும் விமர்சனம் வந்தே தீரும் என்பதைக் கடந்த மூன்று பத்தாண்டுகளில் பார்த்திருக்கலாம். விமர்சகர்களும் அ-விமர்சகர்களுக்கும் ஒரு ஏற்ற இலக்காக அவர் படங்கள் இருப்பதே காரணம். ஆளாளுக்கு அல்வா கிடைத்த மாதிரி பந்தாடித் தீர்ப்பார்கள். அவரின் பிரபலம் அவருடைய எல்லா படத்துக்கும் ஒரு விதமான liability தான்.

முதலில் மெளன ராகத்திற்கு பிறகு ”தமிழ் நாட்டில் விவாகரத்து கேஸ்கள் அதிகமாகிறது” என்றார்கள். பிறகு அஞ்சலியில் ”வயதுக்கு மீறி மைனர் சிறுவர்கள் செய்யும் வேலையா இது”, ரோஜாவில் ”அம்மாவின் எதிரில் ஆங்கிலம் பேசியபடி வீட்டிலேயே சிகரெட் பிடிக்கும் ஆள் எங்கிருக்கிறான்”, பம்பாயில் ”இரண்டு சமூகங்களுக்கு இடையே சண்டை மூட்டி விடப் பார்க்கிறார் மணிரத்னம்”, அலை பாயுதேவிற்குப் பின் ”வீட்டிற்கு தெரியாமல் திருட்டுத் திருமணங்கள் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்”, ஆய்த எழுத்தில், “பிராமண மாதவனைக் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இருக்கும் ரவுடியாகச் சித்தரிக்கும் நக்கல்”, ராவணன் வந்த போது, ”ராமாயணத்தை மாற்றி எழுதத் தமிழ்க் கழகங்களின் கடைசி முயற்சி” கடல் படம் படுத்துக் கொண்டாலும்,” மீனவக் கிராமத்தை இப்படியா சோத்துக்கு கஸ்டப்படறவங்களா சித்தரிப்பது”, ஓகே கண்மணியினால் “இதைப் பார்த்து தான் சென்னையிலேயே லிவ்-இன் செய்ய ஆரம்பிச்சுடுச்சுங்க இளசுங்க” என்று வகை வகையாகத் திட்டித் தீர்த்ததெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகத்தின் வரலாறு. திருடா திருடா போல லைட்டாக ஒரு படமெடுத்தால் “கதை டுபாக்கூர்” என்பார்கள். இருவர் எடுத்தால் ”இது ஒரு ஆர்ட் பிலிம்” என்று ஜிப்பா போட்டுக் கொண்டு விழாவெடுத்து நகநுனியில் கைத் தட்டுவார்கள், இரண்டு மணி நேரம் ரேவையும் அடூரையும் பற்றி சிலாகித்து விட்டு போய் விடுவார்கள், படமெடுத்தவருக்கு சில்லரை புரளாது.

இத்தனைக்கும் மணி ரத்னம் ஒரு மென்மையான இலக்கு. அவர் திரைப்படங்களுக்கு வரும் எந்த பாரட்டுகளுக்கும் விமர்சனங்களுக்கும் அவர் பதிலளிப்பதே இல்லை. இவர்களும் விடுவதாயில்லை. கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு நக்கீரர் பரம்பரையாக மாறி விடுகிறார்கள். பக்கம் பக்கமாய் எழுதி பேசித் தள்ளுகிறார்கள். இவையெல்லாம் அபத்தமாயிருந்தாலும் தப்பில்லை, அவரவர்கள் கருத்துச் சுதந்திரம்.

ஓகே கண்மணி – மணி ரத்னம், துல்கர் சல்மான், நித்யா மேனன் மற்றும் பி.சி. ஸ்ரீராம்

மணி செய்வதெல்லாம் தன் கண் முன்னே மாறிக் கொண்டு வரும் சமுதாயத்தைப் பற்றி படம் பிடித்துக் காட்டுவது தான். தன் சமகாலத்தில் நடந்த / நடக்கும் விஷயத்தைப் பற்றி ஒரு கதையாய் கடத்த முயல்பவருக்குத் தான் என்னவெல்லாம் சிக்கல். மணி ரத்னம் ஒரு அறிய வகை என்பது மட்டும் உறுதி. தான் எடுத்துக் கொண்ட கதைக்கு உண்மையாக எதைச் சொல்ல வேண்டும் எப்படிச் சொல்ல வேண்டும் என்பதை தனக்கு உண்டான ஒரு ரசனையில் mainstream formatல் சொல்லும் கலைஞன். சிக்கனமாய்ச் செலவழித்து, சிறப்பாய் மார்க்கெட்டிங் செய்து பணம் செய்யும் பிரமாதமான வியாபாரி.

நம்மூர் விமர்சகர்களுக்கு மணியை வகைப்படுத்த முடியாதது தான் காரணமே என்று சொல்லத் தோன்றுகிறது. சோஷலிஸ்டா, நாத்திகனா, கழக கண்மணியா, சமூக குழப்பவாதியா, வரலாற்றை வளைக்கும் குறும்புக்காரரா, பூர்ஷ்வா இலக்கியவாதியா என்று குழப்பங்கள்.

பொன்னியின் செல்வனைத் திரைப்படமாக்க முயல்கிறார் மணி ரத்னம் என்பது பல வருடமாக ஊரறிந்த ரகசியம். அதைப் படமெடுத்து வெளியிட்டவுடன் வரப்போகும் விமர்சனங்கள் பற்றிப் பல ஹேஷ்யங்கள் இருந்தன. ஆனால் படம் வந்து பின் ஒரே நேரத்தில் எல்லா பக்கத்திலிருந்தும் எதிர்ப்புகள், விமர்சனங்கள். இப்படி ஒரு வரலாற்று புதினத்தை படமாக்கியதால் மணி ரத்னம் ஆனதென்னவோ ஒரு equal opportunity offenderஆக.

“டிஜிட்டலில் கடைசியாகச் சேர்க்கப்பட்ட விபூதிப் பட்டைகள், ஒரு பிள்ளையார் கோயிலாவது எங்கேயாவது ஒரு தடவையாவது தெரியுதா? தெலுங்கில் நாராயணான்னு சொல்ற நம்பி தமிழ்ல ஏன் ஐய்யயோன்னு கத்துகிறார். உண்மையான ஆத்திகனான ராஜ ராஜ சோழனைப் பத்தி நாத்திகனான மணிரத்னத்திற்கு என்ன தெரியும். கர்ணன் கதைய உல்டா செஞ்சவர் தானே இவரு” என்கிறது வலது.

”சோழனைப் பத்தி மெட்ராஸிலேயே வளர்ந்தவனுக்கு என்ன தெரியும்…. சாமி படத்தை எடுக்க ராஜ ராஜ சோழனை இழுத்து வரார். பிராமண கல்கியின் பிராமண பிரசார படம்” என்று இடது. ஆனால் இவர் தான் கழகத்தைப் பத்தி இருவர் படம் எடுத்தவர் என்று எடுத்துச் சொன்னால், உஷ்… என்று விரல் வைத்து வாய் மூடுகிறார்கள்.

“But Greta Gerwig’s best work in Little Women is also somehow one of her most personal as well. That’s what making her adaptation from Louisa May Alcott’s novel amazing. Mani Ratnam needs to learn adapting movies for the modern screen” என்று மாஸ் காட்டும் புருடா பேர்வழிகள்.

“கல்கி புக் படிச்சா இருக்கிற த்ரில் இதில் இல்ல.. எதோ எல்லாம் அவசர அவசரமா இருக்கு” என்று எழுதிவிட்டு, இண்டர்வெலில் சமோசா ஆர்டர் செய்யும் மாமிகள்.

“This movie is one helluva vagrant and mind numbingly boring ride by a confused and deviously motivated distortionist masquerading… ” என்னும் வாட்ஸ்ஸாப் விமர்சகர்கள்.

மீண்டும் தமிழ் நாட்டில் சேரசோழபாண்டிய உலகப்போர் வருகிற மாதிரி பலரும் அவரவர் பிறந்த இடத்தை ஆண்ட மன்னனின் கொடியைத் தூக்கிப் பிடிக்கிறார்கள். அடுத்த படம் வருவதற்குள், சோழர் மன்னர்களின் மண்ணை தோண்டி எடுத்து, சோழர்கள் முற்பட்ட சாதியா பிற்படுத்தப்பட்டவர்களா, ஹிண்டூவா எக்ஸ்பிரஸ்ஸா, ஆரியர்களா திராவிடர்களா, காப்பி குடிப்பவர்களா ஜின்ஜர் சாயா பருகுபவர்களா, வேற்று நாட்டுக்காரர்களா அல்லது வேற்று கிரகவாசிகளா என்றெல்லாம் அக்கப் போர் செய்யப் போகிறார்கள். அவர்களைச் சோழ நாட்டுப் ப.பு.தி.

(தொடரும்…)

மணிரத்னசோழன் – வந்ததும் வருவதும் 1

2 responses to “மணிரத்னசோழன் – வந்ததும் வருவதும் 2”

  1. மணிரத்னசோழன் – வந்ததும், வருவதும் 1 – kirukkal.com Avatar

    […] மணிரத்னசோழன் – வந்ததும், வருவதும் 2 […]

    Like

  2. மணிரத்னசோழன் – வந்ததும், வருவதும் 3 – kirukkal.com Avatar

    […] மணிரத்னசோழன் – வந்ததும், வருவதும் 2 […]

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

%d bloggers like this: