
எழுத்தாளர் சுஜாதா மறைந்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னும் இம்மாதிரி வசனமெழுத ஆளில்லாதது ஆச்சரியமளிப்பதாய் இல்லை.
சிங்கமய்யங்கார் பேரன் நாடகத்திலிருந்து ஒரு காட்சி
நரசிம்மாச்சாரி: நான் அப்படிச் சொல்லலை. ஒரே கம்யுனிட்டி. அதான் முக்கியம்.
ராகவன்: வேற கம்யுனிட்டியில பண்றதில என்னப்பா தப்பு?
நரசிம்மாச்சாரி: சொல்றேன். நீ காத்தால எழுந்திருந்தா. காப்பி கேப்பே. அவ டீ போட்டுக் கொடுப்பா. நீ மோர்க் குழம்பு கேப்பே, அவ மீன் குழம்பு குடுப்பா. நீ விகடன் படிக்கணும்பே, அவ ஜிலேபி ஜிலேபியா எழுதியிருக்கிற பாஷையில படிக்க புஸ்தகம் கேப்பா. உனக்கு மதுரை சோமு பாட்டு பிடிக்கும். அவளுக்கு குலாம் அலிகான் பிடிவாதமா கைக்குழந்தை அழறா மாதிரி பாடறான் பாரு அதுதான் புடிக்கும். நீ நல்லெண்ணை, அவ கடுகெண்ணை. நீ தமிழ். அவ பஞ்சாபி. உங்களுக்குக் குழந்தை பிறந்தா இதுவும் இல்லாம அதுவும் இல்லாம, ரெண்டுங்கெட்டானா ‘டாடி முஜே பிசுக்கொத்து வேணும்’ங்கும். காதல் எல்லாம் ஆவியானப்புறம் அதுதான் மிஞ்சியிருக்கும்.
ராகவன்: அதெல்லாம் எங்க ப்ராப்ளம். நீங்க ஏன் கவலைப்படறீங்க?
…
நரசிம்மாச்சாரி: இதெல்லாம் ரிச்சுவல்ஸ்டா.
ராகவன்: இந்த ரிச்சவல்லையா நான் கல்யாணம் பண்ணிக்கணும்?
நரசிம்மாச்சாரி: இதுக்கு பின்னால இருக்கற அர்த்தங்களைப் புரிஞ்சுண்டு…
ராகவன்: என்ன அர்த்தம்? நீங்கதான் சொல்லுங்களேன் அப்பா. நீங்க நிஜமாகவே ஒரு ஐயங்காரா இருந்தா, இந்த மாதிரி சென்ட்ரல் கவர்மெண்ட் உத்தியோகம் பாத்திருக்கக் கூடாது. இப்ப ரிட்டயர் ஆனப்புறம்தானே திருமண் சீசுரணம் இட்டுக்கறங்க? உத்தியோகத்தில் இருக்கற வரைக்கும் குடுமியை குல்லாய்ல ஒளிச்சு வெச்சுண்டு, எரால்ட் ராபின்ஸ் படிச்சுட்டு இப்ப பகவத் கதை படிச்சா மறுபடி ஐயங்கார் ஆய்ட்ரா மாதிரியா? உண்மையான ஐயங்காரா இருந்தா, நீங்க காவேரிக்கரையை விட்டுட்டு வந்திருக்கக் கூடாது. அங்க உக்கார்ந்துண்டு அமாவாசை தர்ப்பணம் பண்ணிவெச்சு பகவத் விஷயம் காலட்சேபம்னு மத்தவா கொடுக்கற உஞ்சவிருத்தில சம்சாரம் பண்ணணும்.
நரசிம்மாச்சாரி: அது நடைமுறைக்கு ஒத்துவராது. அதனால காம்பரமைஸ் பண்ணிண்டாச்சு.
ராகவன்: அதைத்தான் சொல்ல வரேன். நீங்க ஆரம்பிச்ச காம்ப்ரமைஸைத்தான் நான் தொடர்ந்து இந்த மாதிரி ஐயங்கார், பஞ்சாபி எல்லாம் முக்கியமில்லை. மனசுதான் முக்கியமுன்னு…
நரசிம்மாச்சாரி: ரொம்ப கிளவரா பேசிட்டே இப்ப நான் கொஞ்சம் பேசலாமா?
ராகவன்: சரி.
நரசிம்மாச்சாரி: இது எல்லாம் தற்காலிகமான காம்ப்ரமைஸ். மிலிட்டரிகாரன் யூனிஃபார்ம் போல. ஆனா நீ பண்றது கல்யாணம். வாழ்க்கை பூரா கமிட் பண்ணிக்கிற சமாசாரம். கல்யாணம்ங்கறது வாழ்நாள் பூரா வியாபிக்கிற ஒருவிதமான டிஸ்கவரி. உங்கம்மா என்னோட முப்பத்திரண்டு வருஷம் வாழ்ந்தா. உயிர்போற இன்னி வரைக்கும்கூட அவளை நா முழுசா புரிஞ்சுக்க முடியலை. அதுவும் உறவில கல்யாணம் பண்ணிண்டேன். சொந்த அத்தை பொண்ணு. அப்படி அத்தனை க்ளோஸா ஒரே ஜாதி ஒரே குடும்பம்னு பண்ணிண்டாலே இத்தனை சண்டை போட்டோம். இது வேற்று பாஷை. மேரேஜ் ஸ்டேபிளா இருக்காது என்கிற கவலைனால்தானே.
ராகவன்: தாங்க்யு.
நரசிம்மாச்சாரி: என்ன மனசு மாறிட்டியா?
ராகவன்: இல்லை நீங்க சொன்னது இன்னும் எனக்கு எங்க கல்யாணத்தை மணவாழ்க்கையை வெற்றிகரமாக்கணுங்கற சவால்தான் ஜாஸ்தியாறது.
Leave a Reply