மாதா, பிதா, சுஜாதா

கண்ணீர் அஞ்சலி என்றெல்லாம் எழுதினால், சுஜாதா என்கிற ரியலிஸ்ட், தமிழனின் உணர்ச்சிவசப்படும் குணம் என்பார். என்ன…எதை எழுதுவது, எதை விடுவது என்று ஒன்றும் புரியாத நிலையில், இப்போதைக்கு எதுவுமே எழுதாமல் இருப்பது சரி என்றே தோன்றுகிறது.

கமல் அவரது அஞ்சலியில் சொன்னது போல், பிச்சைக்காரர்கள் தர்மம் கொடுக்கும் இடத்துக்குத் தான் மீண்டும் மீண்டும் செல்வார்கள். அதைப் போல் அவர் எழுத எழுத புரிந்து கொண்டதை, விட்டு விட முடியும் என்று தோன்றவில்லை. அதனால்,

விண் நாயகன் என்றொரு மாதமிருமுறை இதழில் அவர் எழுதிய தொடர் கட்டுரை ஒன்றை படிப்பதற்காகவே வாங்கி, அசோக் நகர் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் உள்ள கடையில் உட்கார்ந்து படித்து விட்டு, தூக்கிப் போட்டு விடுவேன். அந்த கட்டுரை முடியும் தருவாயில், ஒரு ஸ்திரமான பதிலைச் சொல்லாமல் முடித்தார். ரொம்ப நாட்களாய் விடைத் தேடுகிறேன்.

இப்பொழுதாவது சொல்லுவார் என்று எதிர்ப்பார்த்து – “சுஜாதா, கடவுள் இருக்கிறாரா ?”