
செப்டம்பர் 1977ல் அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடா மாகாணத்திலிருந்து வாயேஜர் என்ற விண்கலத்தை வானில் ஏவினார்கள் நாசா விஞ்ஞானிகள். வாயேஜரின் ஒரே குறிக்கோள் சூரியக் குடும்பத்தையும் அதைச் சுற்றியிருக்கும் விண்வெளியைப் பற்றியும் புரிந்து கொள்வது தான்.
90களில் வாயேஜர் பூமியிலிருந்து கிட்டத்தட்ட 600 கோடி கிலோமீட்டர்கள் தள்ளிப்போய்விட, அது சூரியக்குடும்பத்தை தாண்டிப் போவதற்கு முன், திரும்பி நின்று ஒரு குடும்பப் படமெடுத்து அனுப்பிவிட்டு போகுமாறு கேட்டுக் கொண்டார் கார்ல் ஸாகன் என்ற விஞ்ஞானி. அப்படி எடுக்கப்பட்ட போது தெரிந்த பூமியின் படம் தான் மேலே இருக்கும் இருட்டுப் படம். படத்தில் ஒரு தூசியைப் போல ஒரு பிக்சலுக்கும் (படத்துணுக்கு) குறைவாகத் தெரியும் அந்த வெளிர் நீல புள்ளிதான் நாமிருக்கும் இந்த பூமி. சரியாகத் தெரியவில்லையென்றால் நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் சாதனத்தின் திரையை துடைத்து விட்டு மீண்டும் பார்க்கவும்.
கார்ல் ஸாகன் எழுதிய Pale Blue Dot புத்தகத்தில் பின்வருமாறு எழுதுகிறார் –
அந்த புள்ளியை மீண்டும் பாருங்கள். அது இங்கே தான். அதுதான் வீடு. அதில் இருப்பவர்கள் நாம் தான். நீங்கள் விரும்பும் அனைவரும், உங்களுக்குத் தெரிந்தவர்கள், நீங்கள் கேள்விப்பட்டவர்கள், கேள்விப்படாதவர்கள், வாழ்ந்து மறைந்த அத்தனை மனிதர்களும் தான்.
அந்தப் புள்ளி தான் நமது இன்ப துன்பங்களின் தொகுப்பு, ஆயிரக்கணக்கான மத நம்பிக்கைகளும், சித்தாந்தங்களும், பொருளாதார கோட்பாடுகளும், ஒவ்வொரு வேட்டைக்காரனும் வேட்டையாடப்படுவனும், ஒவ்வொரு வீரனும் கோழையும், ஒவ்வொரு நாகரீகங்களை உருவாக்கியவனும் அழித்தவனும், ஒவ்வொரு நாடாண்ட ராஜாவும் ஆளப்பட்டவனும், ஒவ்வொரு இளம் ஜோடியும், ஒவ்வொரு தாயும் தந்தையும் குழந்தையும், ஒவ்வொரு விஞ்ஞானியும் முன்னோடியும், ஒவ்வொரு ஒழுக்க நெறி ஆசிரியனும் ஊழல் அரசியல்வாதியும், ஒவ்வொரு சூப்பர் ஸ்டாரும் உச்ச தலைவரும், ஒவ்வொரு துறவியும் பாவியும் என நம் இனத்தின் வரலாற்றில் வாழ்ந்த அத்தனை அத்தனை மனிதர்களும் வாழ்ந்தது இங்கு தான் – சூரிய ஒளியில் தொங்கவிடப்பட்ட அந்தச் சிறு தூசியின் மீது .
….
நமக்கிருக்கும் தோரணைகள், கற்பனையான சுய-முக்கியத்துவங்கள், பிரபஞ்சத்தில் நமக்கு மட்டும் சில சலுகைகள் இருப்பது போன்ற மாயை என எல்லாவற்றையும் சேர்த்து சவால் விடுகிறது இந்த வெளிர் ஒளிப்புள்ளி.
நமது பூமிக் கிரகம் அண்ட இருளில் இருக்கும் ஒரு தனிமையான புள்ளி. பரந்து விரிந்த அண்டத்தில் இருக்கும் ஒரு குட்டிப் புள்ளியில் வாழும் நம்மை நம்மிடமிருந்து காப்பாற்ற வேறு எங்கிருந்தோ உதவி வரும் என்பதற்கான குறிப்பு எதுவும் இல்லை.
A Pale Blue Dot, Carl Sagan
ஆதலினால் காதல் செய்வீர்!
Leave a Reply