
2008-ல் சுஜாதா மறைந்த போது sujathaology.com என்று ஒரு வலைத்தளம் ஆரம்பிக்க நினைத்தேன். அந்த டொமைனை வாங்கினேன். அதோடு சரி. பதினெட்டு வருடங்கள் கழித்து இப்போது sujatha.space என்ற பெயரில் ஒரு டிஜிட்டல் மியூசியம் கட்டிக்கொண்டிருக்கிறேன். தமிழிலும் ஆங்கிலத்திலும். இணையத்தில் சுஜாதாவை அறிந்து கொள்ள, புரிந்து கொள்ள ஒரு இடம்.
இன்று அவருடைய பிறந்தநாளுக்கு வலைத்தளம் இயங்கிக் கொண்டிருக்கிறது. புத்தகங்களின் பட்டியல் இருக்கிறது. அவர் எழுதிய திரைப்படங்களின் பட்டியல் இருக்கிறது. அடுத்த கட்டம் படங்கள், புத்தக அட்டைகள். இரண்டு மாதங்களாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் வேலை செய்து கொண்டிருக்கிறேன். இவ்வளவு முடிக்கவே நேரம் ஆகிவிட்டது.
இதில் ஒரு பகுதி மட்டும் இன்னும் வரவில்லை, சுஜாதா AI.
சுஜாதா மாதிரியே பதில் சொல்லக்கூடிய ஒரு AI மாடல் கட்ட முயற்சி செய்கிறேன். ஆனால் அவருடைய எழுத்தை அதற்குக் கொடுக்க முடியாது, காப்புரிமை இருக்கிறது. அதனால் வேறு வழிகளில் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். எப்படிச் செய்தாலும் சுஜாதா போல பதில் வராது என்கிறது. இது சுஜாதாவை மீண்டும் கொண்டுவரப்போகிறது என்று நான் சொல்லவில்லை. அப்படிச் செய்யவும் முடியாது. ஒரு மனிதரின் மூளையை, அவரின் கேலியை, அவரின் டைமிங்கை, ரெண்டு வரியில் ஒரு சித்திரம் வரைகிற அந்த மாயத்தை எந்த கம்ப்யூட்டரும் முழுவதுமாகப் பிடிக்க முடியாது. முயற்சி செய்யலாம்.
அவர் விட்டுப் போன இடம் இன்னமும் வெற்றிடமாய்த்தான் இருக்கிறது. உலகம் இன்னொரு போரில் இறங்கியிருக்கிறது, சுஜாதா என்ன எழுதியிருப்பார்? ஐம்பது வருஷம் கழித்து மனிதர்கள் மீண்டும் சந்திரனுக்குப் போகிறார்கள், அவர் என்ன சொல்லியிருப்பார்? ரோபோக்கள் வீட்டுக்கு வந்துவிட்டன, கார்களே ஓட்டிகளை விரட்டுகின்றன, ஒரு பத்தியில் அவர் எப்படி இதைச் சுருக்கியிருப்பார்? பெங்களூர் டிராஃபிக்கில் இரண்டு மணி நேரம் சிக்கிக்கொண்டு, பக்கத்து காரில் ஒருவர் வீடியோ காலில் யோகா கிளாஸ் எடுத்துக்கொண்டிருப்பதைப் பார்த்தால் அவர் எழுதியிருக்கக்கூடிய அந்த ஐந்து வரி குறிப்பு என்னவாயிருக்கும்?
சுஜாதாவே அவருடைய AIயைப் பார்த்திருந்தால் முதலில் சிரித்திருப்பார். பிறகு அதன் குறைபாடுகளை ஒரு கட்டுரையில் பட்டியலிட்டிருப்பார். மூன்றாவதாக, அதே மாடலிடம் தானே ஒரு கேள்வி கேட்டு, பதிலைப் பார்த்து, “இது நான் சொல்லியிருக்க மாட்டேன் பா” என்று குறிப்பு எழுதியிருப்பார். அந்தக் குறிப்பும் அந்த மாடலுக்கு டேட்டாவாக போயிருக்கும். ஒரு லூப். அவருக்குப் பிடித்திருக்கும்.
ஒருநாள் அந்த சுஜாதா AI வேலை செய்தால் உங்களுக்கு தெரிவிக்கிறேன். வேலை செய்யவில்லை என்றால், அதுவும் சரிதான்.
உங்கள் கருத்துக்கள், யோசனைகளை வரவேற்கிறேன். அதுவரை, சுஜாதாவைப் படித்துக்கொண்டிருங்கள். 🙂
ஹாப்பி பர்த்டே வாத்யாரே!

Leave a comment