இயேசுநாதரும் பி.சி. ஸ்ரீராமும்

இப்போதெல்லாம் டிசம்பர் சீசன் போய் நவம்பராகி விட்டது. பட்டாசு வாசனை போவதற்கு முன் கச்சேரி காண்டீன்களில் அடுப்பு பற்றவைத்தாகி விட்டது. வழக்கமாக நவம்பரில் ஷோபனா, அனிதா ரத்னம் போன்றவர்களின் alternative dance festival தான் நடைபெறும். ஸ்ரீநிதி கூட டிசம்பரில் தான் நிகழ்ச்சி செய்வார். ஓப்பனிங் வீக்கெண்டில் கல்லா ஃபுல்லாக்கும் தமிழ் சினிமா மார்க்கெட்டிங் போல, கடந்த சில வருடங்களாக ஒரேடியாக நவம்பரிலேயே தம்புரா சகிதம் ஆஜராகிவிடுகிறார்கள்.

சென்னையில் சீசன் ஆரம்பிக்கிற நேரமாகிவிட்டது என்று தெரிவதற்கு இந்து பேப்பர் படித்தல் முக்கியம். இந்துவும் சமீபமாக நவம்பர் பெஸ்ட் போன்ற விழாக்களை ஸ்பான்ஸர் செய்கிறார்கள். இந்தப் படங்களை பார்த்தால் கச்சேரிகளின் who’s who தெரியவரும். இதில் ப்ரம்ம கான சபா தலைவர் நல்லி செட்டியார் தான் மிஸ்ஸிங்.

சென்னை வாழ் தமிழ் மகா குடிமகனுக்கு சாஸ்திரிய இசையில் ஆர்வமெல்லாம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. கண்கள் இரண்டால் பாட்டு வந்த பொழுது ரீதிகெளளை ராகத்தை பற்றி தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று எல்லோரும் பேச ஆரம்பித்தவுடன் கொஞ்சம் ஏமாந்துதான் போய்விட்டோம். வருடத்திற்கு சுமார் இரண்டு சதவிகித சென்னைவாசிகள் மட்டுமே ஒரு கச்சேரியாவது கேட்கிறார்கள் என்று பட்சி சொல்கிறது. மற்றவர்கள் எல்லாம் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறார்கள். இரண்டை நாலாக்க நாமெல்லோருக்கும் சில யோசனைகள் –
நம்பர் ஒன் – சிந்து பைரவியிலிருந்து சொல்லி வரும் விஷயம், தமிழில் கொஞ்சமாவது பாடுங்கள். அட்லீஸ்ட் 33% ஆவது தமிழில் இருக்கவேண்டும் என்று சபா மேலாளர்கள் அட்வான்ஸ் கொடுக்கும்போது பேசிக் வைக்கலாம். முன்னமே சொன்ன அவாள் இசை அவங்க இவங்க இசை ஆவதற்கு இது ரொம்பவும் முக்கியம். மேலும் ப்ராக்டிகலாகப் பார்த்தால், தமிழில் பாடினால் புரிகிறது. புரியாத இசையை ரசிக்க அதை ரொம்ப நேரம் கேட்க வேண்டும். இந்த diminishing attention span கலாசாரத்தில் இது ரொம்பவும் கடினம்.

டிசம்பரை ஹாலிடே சீசனாக பாவித்து குடும்பத்துடன் ஓரிரு நாட்கள் டிவி, சினிமா அல்லாத எதோ ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்குச் சென்று வரலாம். இசைதான் என்றில்லை, கூத்துப் பட்டறை நாடகமோ, க்ரேஸியின் துணுக்குத் தோரணமோ, கதா காலட்சேபமோ, பல இருக்கின்றன. இரண்டொரு நாட்கள் சீரியல்களைத் தவற விட்டால் எந்தக் கதையும் ஓடிப்போய் விடாது.
குழந்தைகளை பாட்டு க்ளாசில் சேர்த்தால் மட்டும் போதாது. அவர்களை சீசனுக்கு இரண்டு மூன்று கச்சேரிக்காவது அழைத்துப் போங்கள். குருசரண், சு.ரகுநாதன் கச்சேரி தான் என்றில்லை. அவற்றின் டிக்கெட் கட்டுப்படியாகாமல் போகலாம். மதியம் இரண்டிலிருந்து நான்குவரை நடக்கும் இலவச கச்சேரிகளுக்குக் கூட்டிக் கொண்டு போகலாம். காண்டீன் மூக்கை தொலைக்காது, பட்டுப் புடைவை கண்ணை டாலடிக்காது, நடுநடுவே சீட்டனுப்பும் காமெடியெல்லாம் இல்லாது புதியவர்களின் இசையை சுகமாக ரசிக்கலாம்.

கச்சேரி முடிந்தவுடன் பின்பக்கமாக எஸ்கேப் ஆகாமல், சபையிலிருந்து இறங்கி வந்து கொஞ்சம் ரசிகாஸுடன் கலந்து பேசிய பின் கலைஞர்கள் வீடு திரும்பலாம் அல்லது அடுத்த கச்சேரிக்குத் தொண்டையை ரெடி செய்யலாம். போன வருடம் மியூஸிக் அகாடமியில் ஒரு கச்சேரி முடிந்தவுடன் அடித்து பிடித்துக்கொண்டு சஞ்சய் சுப்பிரமணியன் காரில் விரைந்ததைப் பார்க்க முடிந்தது. அவரின் பின்னே ஒரு பத்து பேராவது பேசலாம் என்று வந்து கொண்டிருந்தார்கள். இத்தனை ஓட்டமாய் வருபவர் கண்டிப்பாக தீவிர ரசிகராக இருந்தே ஆகவேண்டும். சில நிமிடங்கள் நின்று பேசிப் போயிருந்தால் அந்தப் பத்து இதயங்களை வென்றிருப்பார்.

சின்னஞ்சிறு கிளியே என்று அதே கிளியை எல்லா சபாவிலும் கூப்பிடாமல் பல்வேறு பாட்டுகளையும் வோக்கலிஸ்ட் தேர்ந்தெடுக்கலாம். அதே மாதிரி தங்களுடைய முத்திரைகளைத் தாண்டி எல்லா இசை நுணுக்கங்களையும் அணுகிப் பார்க்கலாம். அருணா சாயிராமுக்கு எத்தனை சீட்டு வந்தாலும் ஒரு கச்சேரியிலாவது அபங் பாடாமல் இருக்கலாம்.

மற்றபடி –

டி.டி.கே ரோடு ஏவிஎம் சங்கரா ஹாலில் நடக்கும் இசை/புத்தக/வீடியோ கண்காட்சிக்கு சென்று வாருங்கள். தனியார் கண்காட்சிதான் என்றாலும் இது போல எல்லா இசை சிடிக்களையும் ஒரே இடத்தில் பார்ப்பது கடினம். அதே நேரத்தில், நானும் கர்னாடிக் கேட்கிறேன் பேர்வழி என்று இரண்டாயிரம் ரூபாய்க்கு சீடி வாங்கி எல்லாவற்றிலும் தூசி படிய வைப்பதிலும் உபயோகமில்லை.

மக்மல் பூரி எந்த காண்டீனில் கிடைக்கிறது என்று தேடி சாப்பிடலாம். போன வருடம் நாரத கான சபாவில் கிடைத்தது.

n.shree just started, seems like a bad throat day. still awaiting the abheri classic – murugan song. #kutcheri போன்ற டுவிட்களை கச்சேரியின் இடைவேளையில் செய்யலாம். இரண்டு சாதகங்கள் – பின் தொடரும் நண்பர்களிடம் கொஞ்சம் ஜெர்க் விடலாம். கச்சேரிக்கு செல்வது ‘the in-thing” என்ற ஒரு ஃபாஷனை உருவாக்கலாம்.

0000

தாங்ஸ் கிவ்விங் தினத்திற்கு அமெரிக்கா ரெடியாகிக் கொண்டிருக்கிறது. கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் மதச் சடங்காக ஆரம்பித்தது பின்பு சமூக வழக்கமாக ஆனது. வான் கோழி பிரியாணி, மேஸீஸ் பரேட், அமெரிக்கன் கால்பந்து போட்டிகள், ப்ளாக் ப்ரைடே ஷாப்பிங் என்று இவைகளைத் தாண்டி தாங்க்ஸ் கிவ்விங்கிற்கு வேறுசில நல்ல காரணங்கள் உண்டு.

அதாவது அது ஒரு குடும்பப் பண்டிகை. எங்கெங்கோ இருக்கும் குடும்ப அங்கத்தினர்கள் எல்லோரும் வருடத்திற்கு ஒரு நாளாவது ஒரே இடத்தில் கூடிப் பேசி கடவுளுக்கும் மற்றவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு அமைதிப் பண்டிகை. இதனால் எல்லா ப்ளைட் டிக்கெட்களும் விற்று தீர்ந்தாகிவிட்டது. எல்லோரும் லீவில் போய் விடுவார்கள். இனி ஜனவரி வரை ஆபிஸ்களில் ஈ தான்.

0000

”I know…its a management school and I must be talking to you about compromises and how to manage. You don’t have to. You don’t have to compromise, you still can make money. I’m a standing proof” சொன்னவர் கமலஹாசன். கேட்டவர்கள் மேனேஜ்மெண்ட் கல்லூரி மாணவர்கள்.

இந்த youtube வீடியோ இன்னமும் ரொம்ப பிரபலமாகவில்லை. சீக்கிரம் ஆகிவிடும். பார்த்துவிடுங்கள்.

0000

2007ம் வருடம் மே மாதம் சியாட்டல்-கொரியா-பம்பாய் மூலம் சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன். சென்னைக்கு அடுத்த விமானம் காலை 6:30க்குதான் என்பதால், ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டு புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். எதற்காகவோ தலை தூக்கி பார்த்தபோது, விமான நிலைய நுழைவாயிலில் ஒருவர் கைகளை அகல விரித்து சிலுவையில் அறையப்படும் இயேசு நாதரைப் போல போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். செக்யூரிடி செக் செய்யும்போது அவர் கைகளை அகல விரிக்க, ஒரு போலீஸ்காரர் அவரின் மேல் அந்த பாம் டிடக்டரை தேய்த்துக் சோதனை செய்து கொண்டிருந்தார்.

பார்த்துக் கொண்டிருந்த எனக்கு கொஞ்சம் சிரிப்பாய் வந்தது. அவர் யார் என்று கொஞ்சம் யூகித்து விட்டேன். அவரும் செக் முடிந்து மிக மெதுவாக நடந்து எனக்கு ஒரு நான்கு ஸீட் தள்ளி அமர்ந்து எதோ படிக்கலானார். அடர்ந்த தாடி, ஜோல்னா போல ஒரு பை, கண்ணாடி, வெட்டாத சற்றே அழக்கடைந்த நகம், வாரப்படாத தலை, தூங்காத கண்கள் ரெண்டு. பி.சி.ஸ்ரீராம்.

ரசிகனான நான் அந்த நான்கு சீட்டுகளை தாண்டி அவரின் அருகே சென்று அமர்ந்து அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு முன் அவர் செக்யூரிடி செக்கின் போது யேசு கிரிஸ்துவாக தோற்றமளித்தை சொன்னவுடன், கையை பிடித்து அருகில் அமர்த்திக் கொண்டார். அடுத்த இரண்டு மணி நேரமும் தீர்க்கமாகக் கண்களை பார்த்து பேசினார். ரொம்பவே intensiveவாக கவனித்தார். ப்ளைட் கிளம்ப நேரமான போது, ‘டோண்ட் ஒர்ரி நானும் அதே ப்ளைட் தான்” என்றார். எல்லோரும் ப்ளைட் ஏறியவுடன் என்னையும் அழைத்துக் கொண்டு, எதோ மெட்ரோ பஸ் ஏறுகிற லாவகத்துடன், ப்ளைட் வாசலுக்கு போனார்.

ப்ளைட்டில் அருகே உட்காரச் சொன்னார். நான் தான், “ சார் இடம் மாத்தி உட்காந்தா…அதோ அந்த ஏர் ஹோஸ்டஸ் கோவிச்சுப்பாங்க” என்று சொல்லி என் இடத்தில் அமர்ந்து விட்டேன். காரணம் அவர் தூங்கி இரண்டு நாட்களாகி விட்டது என்றதுதான். அதற்கு முன் அந்த ஏர் ஹோஸ்டஸை கூப்பிட்டு, பேனா வாங்கி, என் டிக்கெட்டின் பின் போன் நம்பரை எழுதித் தந்தார். ”போன் பண்ணுங்க கண்டிப்பா திரும்பவும் மீட் பண்ணலாம்” என்றார். ப்ளைட் இறங்கும் போதும் ஐபாட் கேட்டுக் கொண்டே கர்னாடக ராகம் எதையோ முணுமுணுத்துக் கொண்டு இறங்கினார்.

அவருடன் பேசிக் கொண்டிருந்த அந்த இரண்டு மணி நேரமும் அவரின் தலையைத் தின்று விட்டேன். அக்னி நட்சத்திரம் படத்தை எடுக்கும் போது இருந்த அவரின் மற்றும் மணி ரத்னத்தின் மனநிலையும், நாயகன் பட கடினங்களையும் கேட்க கேட்க கிட்டத்தட்ட ஒரு டூ-வே பேட்டி போல இருந்தது. சீனி கம் திரைப்படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைக்காக பம்பாய் வந்ததாகச் சொன்னார். இணையம் பற்றி அதிகம் கேட்டார். அதில் ஈடுபட ஆர்வம் காட்டினார். என்னுடைய புகைப்பட ஆர்வத்தைப் பற்றி சொன்னேன். ப்ளிக்கரைப் பற்றியும், குறும்பட எண்ணங்களைப் பற்றியும் பேசினோம். சுவாரசியமாய் இருந்தது. அவருக்கும் இருந்தது என்றார். டிவியில் அவரின் பேட்டியை பார்க்கும் போது பொறுமை இல்லாது போனதுண்டு. நேரடியாகப் பேசியபோது அவர் பேசியபடியே நிறைய யோசிக்கிறார் என்பது புரிந்தது. சென்னைக்கு வந்தவுடன் குடும்பத்தினரிடம் இந்த விஷயத்தை சொன்ன போது. ““சினிமா கினிமான்னு போய்ட போறான்” என்று குசேலர் கதை ருக்மணியாகத் தடுத்து விட்டார்கள். கோலிவுட் ஒரு அருமையான கேமராமேனை இழந்தது அன்று தான்.

போன வாரம் அவர் மகள் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்த செய்தியை பார்த்து ரொம்பவே வருத்தப்பட்டேன். அந்த நல்ல மனிதருக்கு இந்த தசரத சோகம் அநியாயம்.

— இது சமீபத்தில் தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.

Create a website or blog at WordPress.com