புரட்சியாளன் கதை

போன வாரம் நடந்த நிகழ்ச்சிகள் சில –

1. இன்ன இன்ன மத்திய மந்திரி இன்ன இன்ன ஊழலில் லஞ்சம் வாங்கிவிட்டதாகச் சொன்னார்கள்.
2. இன்ன இன்ன எதிர்க்கட்சி போர்க்கொடி தூக்க, இன்ன இன்ன பிரதமர் பேசாமடந்தையாய் இருந்தார்.
3. இரண்டொரு நாளில் தொல்லை தாங்க முடியாமல் இ.இ மந்திரி ராஜினாமா செய்தார்.
4. இன்ன இன்ன எதிர்க்கட்சி இந்த நியாயம் கிடைத்ததற்கு தான் தான் காரணம் என்றது.
5. இந்தக் கணத்தில் இதில் சம்பந்தபட்ட இன்ன இன்ன லாபியிஸ்ட் ஒருவருடன் பலர் பேசிய தொலைப்பேசி உரையாடல்கள் இன்ன இன்ன பத்திரிக்கையில் வெளியிடப்பட்டன.
6. இந்த இ.இ உரையாடல்கள் இ.இ இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
7. வேலை நேரத்தில் தத்தம் திரைகளில் ஃபேஸ்புக்கில் வம்பிக் கொண்டிருந்த இ.இ குடிமகனுக்கு பல நண்பர்கள் இந்த உரையாடல் லிங்க்கை அனுப்பி வைத்தார்கள்.
8. இந்த இ.இ. உரையாடலை கேட்டு கொதித்துப் போன அவன் தன் பல நண்பர்களுக்கும் அதை அனுப்பி வைத்தான்.
9. அவர்களும் வேலையை விட்டுவிட்டு இதைக் கேட்க ஆரம்பித்தார்கள்.
10. உரையாடலில் பேசியது இ.இ தொலைக்காட்சி நிரூபினியா இல்லையா என்று # போட்டு டுவிட்ட ஆரம்பித்தார்கள்.
11. அது சம்பந்தமாக சில வலைபதிவுகள் உருவாக்கப்பட்டன. பல எதிர்வினைகள் எழுதப்பட்டு இணைய பாண்ட்வித்தை அடைத்துக் கொண்டன.

இந்த வார நிகழ்ச்சி நிரல்-

1. இ.இ குடிமகன் இ.இ தேதியில் வெளியாகப் போகும் இ.இ. ஸ்டாரோ, நாயகனோ நடித்த புதுப் படத்தின் ட்ரைலர் பார்க்க ஆரம்பிப்பான்.
2. இ.இ நண்பர்களுக்கு அந்த லிங்கை அனுப்புவான்.
3. இ.இ நண்பர்களும் அதைப் பற்றி டுவிட்ட ஆரம்பிக்க, இ.இ அரசியல்வாதி பழைய படி ஆரம்பித்துவிடுவார்.
4. இ.இ நிரூபினி பிரபலமாகி இ.இ சபாவிற்கு பரிந்துரை செய்யப்படுவார்.
5. இ.இ நண்பர்கள் குழாம் இந்தப் பரிந்துரையை ஆதரித்துக் கொண்டிருப்பார்கள்.
6. இ.இ நாட்டில் எல்லாம் ஷேமமாயிருக்கும்.

இன்ன இன்ன என்றிருக்கும் இடத்தில் பெயர் மாறிக் கொண்டிருப்பதைத் தவிர வேறொன்றும் புதிதாய் நடப்பதில்லை. அஷ்டே!

0000

ஞான ராஜசேகரனின் பாரதி படத்தை மீண்டும் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தப்படம் கண்டிப்பாக வியாபார நோக்கங்களை மீறியது. பிரமாதமாக எடுக்கப்பட்ட இந்தியப் படம். இதை இந்திய மொழிகளில் டப்…வேண்டாம் சப்-டைட்டிலாவது செய்து ஸ்டார், சோனி சானல்களில் ஒரு சனிக்கிழமை மதியம் ஒளிபரப்பலாம். நமக்கும் இம்மாதிரி ஆத்தெண்டிக்காக பீரியட் படமெடுக்க முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

ஷாயாஜியில் ஆரம்பித்து தேவயானி, பாரதி மணி, நிழல்கள் ரவி என சின்ன சின்னச் ரோல்களில் கூட அழுத்தமான திறமை. இளையராஜாவின் மயக்கும் வயலின்கள், பி.கிருஷ்ணமூர்த்தியின் நேர்த்தியான கலை, வி.டி. விஜயனின் எடிட்டிங், ஞா.ரா.சேகரனின் இயக்கம் என பல நல்ல விஷயங்கள். இவையெல்லாம் தாண்டி பாரதி என்னும் புரட்சியாளனின் உண்மைக் கதை.

பாரதியின் சம்பவங்கள் நிறைந்த பயோகிராபியில் ஏகப்பட்ட க்ளைமாக்ஸ் காட்சிகள். காதலை பற்றிக் பேசிக் கொண்டிருக்கும் கொஞ்சம் நெகிழ்வான காட்சியில் திடீரென பாரதி அதிர்ந்து சொல்லும், ஆதலினால் காதல் செய்வீர் போன்ற வரிகளில் தமிழ் விளையாடுகிறது.

நான் பள்ளியில் படிக்கும் போது பிலிம் ஷோ என்று சிறந்த படங்களின் ரீல்களை வாங்கி வந்து லைப்ரரி தரையில் உட்கார வைத்து புரஜக்டரில் படம் காட்டுவார்கள். இப்பொழுதெல்லாம் இப்படி உண்டா என்று தெரியவில்லை. எல்லா பள்ளிகளிலும் எல்லா குழந்தைகளுக்கும் இந்த மாதிரிப் படங்களை வருடங்களுக்கு ஒரு முறையாவது பிலிம் ஷோ போல போட்டுக் காட்ட வேண்டும் என்று
சட்டம் வர வேண்டும்.

பாரதி இன்னும் பார்க்கவில்லையென்றால் பரவாயில்லை, இந்த வருட டிசம்பர் 11க்குள்ளாவது பார்த்துவிடுங்கள். அமேஸிங் அனுபவம்.

– இது சமீபத்தில் தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.

Create a website or blog at WordPress.com