ஐயய்யோ ஒரு சாதனை!

டான் கில்பர்ட் மற்றும் டான் எரய்லி போன்ற சோஷலாஜிஸ்ட்டுகள் மனித மனங்களை பற்றிச் சொல்லும் சில விஷயங்கள் யோசிக்க வைக்கின்றன. மனிதன் நடுநிலையுடன் யோசிக்கிறான் என்று நாம் நம்புகிறோம். ஆனால் எல்லோரும் அப்படி இல்லை. தனக்கு தேவையான விஷயங்களில் கூட அசமஞ்சமாகத் தான் செயல்படுகிறான். இரண்டு பிரபல உதாரணங்கள்-

உங்கள் பர்ஸில் ஒரு ஐம்பது ரூபாய் நோட்டும் ஒரு ஐம்பது ரூபாய் சினிமா டிக்கெட்டும் இருக்கின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சத்யம் தியேட்டரை சென்று அடையும் போது டிக்கெட் காணாமல் போய் விடுகிறது. கையில் இருக்கும் ஐம்பது ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி பார்பீர்களா இல்லையா?

இந்த முறை உங்களிடம் இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுகள் இருக்கின்றன. சத்யத்தை அடையும் போது, ஒரு ஐம்பது ரூபாய் காணாமல் போய் விடுகிறது. இப்போது என்ன செய்வீர்கள், கையில் இருக்கும் ஐம்பது ரூபாயை வைத்துக் கொண்டு டிக்கெட் வாங்குவீர்களா இல்லை வறுத்த வேர்க்கடலை கொறித்துக் கொண்டே திரும்பி வந்து விடுவீர்களா?

இதைப் பலரிடம் கேட்டுப் பார்த்த டான் கண்டுபிடித்தது, முதல் உதாரணத்தில், பலர் சினிமா பார்க்காமல் திரும்பி வந்து விடுவேன் என்றார்கள். ஏன் என்று வினவிய போது, மீண்டும் ஒரு முறை ஐம்பது ரூபாய் சினிமா டிக்கெட்டிற்குக் கொடுக்க விருப்பமில்லை என்றார்கள். அடுத்த உதாரணத்தில் கையில் இருக்கும் ஐம்பது ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குவேன் என்றார்கள்.

இரண்டு உதாரணங்களிலும் காணாமல் போனது இரண்டு பேப்பர்கள் தான். ஒன்றில் சத்யம் என்று போட்டிருக்கிற ஒரு ஐம்பது ரூபாய் டிக்கெட். அடுத்ததில் காந்தி படம் போட்ட ரூபாய். ஆனால் மனித மனமோ முதல் உதாரணத்தில் டிக்கெட் விலையை இரட்டடிப்பாக ஆக்கிக் கொள்கிறது, அடுத்த முறை தன் விதியை நொந்து கொள்கிறது.

இதே போல் அடுத்த ஒரு சிச்சுவேஷன், நீங்கள் வாங்க நினைத்த கார் ஸ்டீரியோ உங்கள் வீட்டின் அருகே தி.நகரில் ஆயிரம் ரூபாய்க்கும் பாரீஸ் கார்னரில் தொள்ளாயிரத்திற்கு கிடைக்கிறது. எங்கே வாங்குவீர்கள்? கொஞ்ச நாள் கழித்து நீங்கள் வாங்க நினைக்கும் கம்ப்யூட்டர், தி.நகரில் 50,000க்கும் பாரீஸ் கார்னரில் 49,900க்கும் கிடைக்கிறது. எங்கே வாங்குவீர்கள்?

மக்கள் சொன்ன பதிலும், நீங்கள் நினைத்த பதிலும் ஒன்றே தான். கார் ஸ்டீரியோவிற்கு பாரீஸ் கார்னருக்கும், கம்ப்யூட்டருக்கு தி.நகருக்கும் செல்வதாய்ச் சொன்னார்கள். இரண்டிலும் விலை வித்தியாசம் ஒன்றே தான், நூறு ரூபாய். அதே நூறு ரூபாய். இரண்டையும் முடிவு செய்வது உங்கள் மனம்.

ஆக மனிதர்களும் அவர்கள் மனங்களும் கால்குலேட்டர்கள் அல்ல. இதில் நன்மையை விட தீமை தான் அதிகமாக இருக்கிறது. என்ன தான் யோசித்து முடிவெடுக்கும் மனிதர் கூட கார் ஓட்டிக் கொண்டே டெக்ஸ் செய்கிறார், ரெட் லைட்டைச் சட்டென தாண்ட முயல்கிறார். மனிதர்கள் கால்குலேட்டர்களாய் இருந்தால், விபத்துகள் நடக்க வாய்ப்பேயில்லை. காரில் airbag இத்தியாதி எல்லாம் தேவையில்லை.

0000

காரைப் பத்தி பேசும்போது, கடந்த நூறு வருடங்களில் ஆட்டோமொபைல் டெக்னாலஜி கிட்டத்தட்ட வளரவேயில்லை. கிட்டத்தட்ட. ஆட்டோமொபைல் எனும் வார்த்தையில் மொபைல் உண்மையாகிவிட்டது. கார் போன்ற வாகனங்களால் நாம் இடம் பெயர்கிறோம். ஆனால் ஆட்டோவாக இல்லை. அதாவது இன்னமும் ஓர் ஆட்டோமொபைலை ஓட்ட ஆசாமி தேவைப்படுகிறார்.
மக்கள் வாங்கக் கூடிய விலையில் முதல் காரை தயாரித்த ஹென்றி போர்ட்(Henry Ford) சொன்ன ஒரு விஷயம் – “If I asked my customers what they want, they simply would have said a faster horse.” எங்கள் கம்பெனி போய் மார்க்கெட் வாக்கெடுப்பு எடுத்திருந்தால் வேகமான குதிரைகளை தான் எங்கள் வாடிக்கையாளர்கள் கேட்டிருப்பார்கள். கார் வேண்டும் என்று சொல்லியிருக்க மாட்டார்கள். ஆகவே தான் யாரையும் கேட்காமல் நாங்களாகவே மக்களுக்குத் தேவையானதைக் கண்டுபிடித்தோம் என்றார். ஆனால் அதற்குப் பின்னர் கடந்த நூறு ஆண்டுகளாக நான் அந்தக் காரை வேகமாக செலுத்துவது பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். தேவை அடுத்த ஹென்றி போர்ட் மற்றும் உண்மையான ஆட்டோ மொபைல்.

இந்தக் காரை கண்டுபிடிக்கும் முன் ஒரு நாள் தனது எஞ்சினியர்களை கூப்பிட்டு அனுப்பினார் போர்ட். அவர் சொன்னது -” I dream of a machine that runs on wheels and is driven by an engine. Go find it” இந்த மாதிரியான அடுத்த ஒரு visionary-க்காகத் தான் உலகம் இன்னமும் கார் ஓட்டிக் கொண்டிருக்கிறது.

0000

சமீபத்தில் படித்த Program or be Programmed என்னும் புத்தகத்தில் இது சுவாரஸ்யமான விஷயமாகப்பட்டது. எல்லோரும் சாப்ட்வேர் ப்ரோக்கிராமிங் கற்றுக் கொள்ள வேண்டும் எனும் சிந்தனை. இருக்கிற எஞ்ஜினியர்கெல்லாம் முதலில் வேலையிருக்கிறதா என்ற கேள்வியை தள்ளி வைத்துப் பார்த்தால், இதில் கொஞ்சம் நன்மையிருக்கிறது.

எனக்கு ப்ரோக்கிராமிங் சொல்லிக் கொடுத்த வாத்தியார் முதலில் சொன்னது, உங்களுக்கு கொடுக்கப்பட்ட ப்ரோக்கிராமிங் கேள்வி ஒரு கண்ணாடி போல. முதலில் கீழே போட்டு உடைத்து விடுங்கள். உடைந்த சில்லுகளை ஆராய்ந்து பாருங்கள், ப்ரோகிராம் எழுத உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும். எல்லா விஷயங்களும் இப்படித்தான். எல்லா கடினக்காரியங்களையும் சிறு சிறு கடினங்களாக ஆராய்ந்து முடிவெடுத்தால் அந்த பெரிய விஷயத்திற்கு முடிவு கிடைத்து விடும். இதே மாதிரி சிந்திப்பதற்குத் தான் ப்ரோக்கிராமிங் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் டக்லஸ் ரஷ்ஆஃப்.
இதையும் தாண்டி நம்மை சுற்றியுள்ள விஞ்ஞான உலகை அறிந்து கொள்ள ப்ரோக்கிராமிங் உதவும் என்று வாதிடுகிறார். புத்தகம் விற்று தீர்ந்தாகிவிட்டது.

0000

இந்த வருடத்தின் சிறந்த என்று போட்டு வரும் டிவி நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கும் நேரமிது. முந்திக் கொள்கிறேன். இந்த வருடத்தின் சிறந்த தமிழிசை அமைப்பாளர் – ஜி.வி. பிரகாஷ்.
போன வருடமே இசை வெளிவந்து விட்டது என்றாலும் ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியானது இந்த வருடம் என்பதால் அதிலிருந்து ஆரம்பிக்கலாம். அதோ அந்தப் பறவை ரீமிக்ஸை தவிர்த்து மற்ற எல்லா பாடல்களும் பிரமாதமான காம்பொசிஷன்கள். ரொம்பவும் பிடித்தது, ஓ ஈசா பாடல்.

வ.கு.கட்டிங் படத்தில் உன்னைக் கண் தேடுதே பாடல் ரொம்பவே கடினமான பாடல். கேட்டுப் பாருங்கள், ஆரம்ப கால ஏ.ஆர். ஆர் தெரிவார்.

சமீபத்தில் வெளியான தனுஷ்-வெற்றிமாறனின் ஆடுகளம் படத்தில் அய்யய்யோ(பாட்டின் பெயர் தான்) பாடல் ஒரு சாதனை. ரொம்பவே சாதாரணமாகத் தோன்றினாலும் இரண்டுமுறை கேட்டால் எஸ்.பி.பியின் குரலுக்கு மீண்டும் ஆட்படுவீர்கள். மீண்டும் மீண்டும் கேட்பீர்கள். ஆங்காங்கே இஞ்சி இடுப்பழகு தெரியலாம். ஒத்த சொல்லால மற்றும் யாத்தே எனும் பாடல்களும் அட சொல்ல வைக்கின்றன.

இந்த வருடம் பிடித்த வேறு சில பாடல்கள்: ஷ்ரேயா கோஷல் – ரஹ்மான் – மன்னிப்பாயா, ஆண்ட்ரியா-அஜீஷ் – இது வரை இல்லாத, கார்த்திக் – உசுரே போகுதே மற்றும் ஆண்ட்ரியா – Who’s the Hero?(மன்மதன் அம்பு). மற்றபடி அழகான ஹீரோயின்களும் வெகு அழகாக பாடுகிறார்கள் என்பது தான் இந்த வருடத்தின் வகைப்படுத்த முடியாத சாதனை.

– இது சமீபத்தில் தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.