ஆர்தர் சி. கிளார்க்கின் Childhood’s end என்ற நாவலில், ஆறிவுஜீவிகளான வேற்றுகிரகவாசிகள் சிலர் ஒரு கச்சேரியில் கலந்துகொள்ள பூமிக்கு வருகிறார்கள். கச்சேரியின் இறுதியில், இசையமைப்பாளரை வாழ்த்துகிறார்கள் ஆனால் இன்னும் அவர்களுக்கு ஒன்று புரியவில்லை. மனிதர்கள் இசையை உருவாக்கும்போது அல்லது கேட்கும்போது என்ன நடக்கிறது என்று அவர்களால் சிந்திக்க முடியவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு அதே இசையைக் கேட்கும் பொழுது அவர்கள் மனதில் எதுவுமே நடப்பதில்லை. அவர்களுக்குள் இசை என்றே ஒன்று இல்லை. அவர்கள் தங்கள் உலகத்திற்கு தங்கள் விண்கலங்களில் திரும்பிச் செல்வதை நாம் கொஞ்சம் கற்பனை செய்து பார்க்கலாம்.
” இவனுங்க இசைன்னு சொல்ற இந்த விஷயம் எதோ ஒருவிதத்தில இந்த மனுஷங்களுக்கு பயன்படுற மாதிரி தோணுது, சில சமயம் இவிங்க வாழ்க்கையில ரொம்ப முக்கியமா கூட இருக்குது. இருந்தும் அதற்கு எந்த விதமான ஒரு வடிவமும் இல்லை. ”
“ கரெக்ட், இத்தனை பில்லியன் பேர் இசைக்காக இத்தனை நேரம் செலவழிச்சு, அர்த்தமே இல்லாத ஏதோ சத்தங்களோட விளையாடுறானுங்க, கேட்கறானுங்க பாஸ்”
இப்படி இந்த அறிவுஜீவி வே.கி.வாசிகள் தலையைச் சொறிந்து கொள்வது தெரிகிறது. நமக்கும் கூட இசையென்பது என்ன என்பது பற்றி கேள்விகள் உண்டு. இசை என்ற இந்த சத்தங்கள் ஒரு நாள் நம்வாழ்விலிருந்து மறைந்து போனால் நம் வாழ்க்கை குறைபட்டதாக ஆகிவிடுமா? இசையில்லாத வாழ்வை யோசித்துப் பார்ப்பதற்குப் பயமாக இருந்தாலும் விஞ்ஞானம் சொல்வது என்ன என்பது தான் ஆலிவர் ஸாக்ஸின்(Oliver Sacks) புத்தகமான – மியூஸிகோபீலியா.
ஆலிவர் ஸாக்ஸ் ஒரு நரம்பியல் நிபுணர். அவர் எழுதிய அவரின் நினைவுக்குறிப்புகள் – On the move நிறையப் பிடித்திருந்ததினால் இதைப் படித்துப் பார்த்தேன்.
ஸாக்ஸ் சொல்ல வருவது இதைத்தான் – நம் மூளையினுள் இசைச் சதுக்கம் (music center) என்று ஒன்று இல்லை. ஆனாலும் இசை என்பது எங்கோ ஆயிரமாயிரம் ந்யூரான்களில் ஒளிந்துள்ளது. இந்தப் புத்தகத்தில் இசைக்கும் மூளைக்கும் இருக்கிற உறவையும், அவர் பார்த்த இசை சம்பந்தமான நரம்பியல் நோயாளிகளின் கதையையும் சுவையாகச் சொல்கிறார்.
இதில் ஒரு கதை என்னை வசிகரித்தது. அந்தக் கதையின் கருவும் இளையராஜா ஒரு முறை சொன்ன பதிலும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.
(தொடரும்…)