இன்னொரு தல்

அமெரிக்காவில் பணம் கொழிக்கும் பல விஷயங்களில் ஒன்று Parenting. சாப்பிடுதல், தூங்குதல் போல இதுவும் ஒரு தல், குழந்தை வளர்த்தல். ஓயாது செய்யவேண்டியதாக மார்க்கெட்டிங் செய்யப்பட்டு ஏராளமான பெற்றோர்களின் இருதயத்திற்குப் பங்கம் விளைவிக்கும் விஷயம். இந்தியாவிலும் இது ஒரு ஸ்ட்ரெஸ் மிகுந்த விஷயமானதுதான் சோகமே.

நாற்பது ஆண்டுகளுக்குமுன் உலகெங்கும் பெற்றோர்கள் இருந்தார்கள், குழந்தைகள் இருந்தார்கள், பெற்றார்கள், வளர்ந்தன, சனிக்கிழமைகளில் கடை-கண்ணிக்குப் போய் வந்தார்கள், பந்து தூக்கி எறிந்தார்கள், மூக்கைச் சிந்திவிட்டார்கள், சண்டை போட்டார்கள், பாடம் சொல்லித் தந்தார்கள், கடுக்கண் இட்டார்கள், மணந்துகொண்டு சென்றார்கள். 1960களுக்குப் பின்னர் பெண்களும் வேலைக்கு போவது அதிகரிக்தபோது குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் கடமையை இரு பெற்றோர்களும் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்கள். கிட்டத்தட்ட அங்கிருந்துதான் ஆரம்பித்தது வினை.

மார்க்கெட்டிங் ஆசாமிகளுக்கும் குழந்தை டாக்டர்களுக்கும் சாக்குக் கிடைத்து, குழந்தை வளர்த்தல் என்ற விஷயம் ’பிறந்தது’. பின்னர் ஏராளமான புத்தகங்களும், ட்ரைனிங் க்ளாஸ்களும் தோன்றி, தேவையில்லாததை வாங்கவைத்து, நீச்சல், கிடார், கராட்டே,பந்து எறிதல், நண்டு பொரித்தல் என்று எல்லா க்ளாஸ்களிலும் பிள்ளைகளைச் சேர்த்து, அதற்குமேல் மற்ற நேரமெல்லாம் பாடங்களைத் திணித்து, குழந்தைகளும் பெற்றோர்களும் ஒருவிதமான செயற்கை உறவில் திளைத்து, பதினெட்டுக்குப்பிறகு விட்டால் போதுமென மற்றொருவரிடமிருந்து ஓடி ஒளிகிறார்கள்.

இதை இப்போது மாற்றமுடியாது, இது ஒரு sociological phenomenon. ஆனால் குழந்தை வளர்ப்பில் வரும் மனச் சோர்வைக் குறைக்கலாம் என்றே நினைக்கிறேன். பொறுப்பில்லாத பெற்றோரும் ஆர்வக்கோளாறுப் பெற்றோரும் எல்லாக் காலங்களிலும் இருந்திருக்கிறார்கள். இவர்களுக்கு நடுவே இயல்பாக இருப்பதற்கு ஸ்வீட்ஸ்பாட் ஒன்று இருக்கவேண்டும். கண்டுபிடித்தால் சொல்லுங்கள்.

0000

ஆஸ்திரேலிய ஓபனில் ஆண்கள் இறுதிப் போட்டி பிசுபிசுத்துப் போக, பெண்களின் பைனல்ஸ் கொஞ்சம் நகம் கடிக்கவைத்தது.பெரிய ஆள்கள் எல்லாம் தோற்றுப் போய், ஆசியாவிலிருந்து முதன்முறையாகக் கடைசிப் போட்டிக்கு வந்திருந்த லி நாவும், காணாமல் போய் மீண்டும் திரும்பி வந்திருந்த கிம் கிளிஸ்டர்ஸும் அசத்தினார்கள். முதல் செட்டில் தோற்றுப் போய் இரண்டாம் செட்டில் லூப் ஷாட்டெல்லாம் அடித்து விளையாடிய கிம் கிளிஸ்டர்ஸ் சைனாவின் கனவை இன்னும் ஒரு நான்கைந்து மாதங்களுக்குத் தள்ளிப் போட்டார். தோற்றுவிடப்போகிறோம் என்று தெரிந்தவுடன் ரசிகர்கள் கத்துகிறார்கள் என்றெல்லாம் புகார் செய்த லி நா நெருக்கடிக்கு ஆள்பட்டது தெளிவாகத் தெரிந்தது.

ஆனாலும் லி நா இரண்டாம் பரிசை வாங்கியபோது ரொம்பவும் இயல்பாகச் சிரித்து பேசிக் கொண்டே இருந்தவர், “That guy in yellow t-shirt, he is my husband, I tell him, whether you are fat or skinny, handsome or ugly, I will always follow you, I always love you” என்று எல்லோர் மனத்தையும் கவர்ந்து சென்றார்.

0000

தமிழ் சினிமாமட்டுமில்லை, சினிமாப் பாட்டும் பல கோடிகள் கொழிக்கும் ஒரு வியாபாரம். பாட்டுப் புஸ்தகம் விற்பவரிலிருந்து இசையமைப்பவர், பாட்டெழுதுபவர், பாடுபவர், ஹார்மொனி பாடுபவர், கஞ்சிரா வாசிப்பவர், சூப்பர் சிங்கர் ரியாலிட்டி ஷோ நிகழ்த்துபவர்வரை அது ஒரு தனி இயந்திரம். தமிழ் சினிமாப் பாட்டு என்பதே இல்லாமல் போய்விட்டால் பலப்பல பேரின் வேலை போய்விடும்.

கெளதம் மேனனின் அடுத்த படத்தில் பாட்டில்லையாம். மேற்சொன்ன அத்தனைப் பேரும் கொதித்துப்போயிருக்கிறார்கள். காரணம், சினிமாப் பாட்டு நம் வாழ்வில் ஒன்றாக கலந்து விட்டது. சினிமாப் பாட்டு சாராயம் என்று எழுதிய பாலகுமாரன்கூட ’காஃபி வித் அனு’வில் ’எங்கிருந்தோ வந்தான்’ பாடிவிட்டுப் போனார்.

பாட்டும் இசையும் வாழ்வின் இனிமைகளில் ஒன்று. ஆக அதில்லாமல் இருக்கமுடியாதென்றாலும் சினிமாப் பாடல்மட்டும்தான் என்ற நிலை கொஞ்சம் கடினம். தமிழ் பாப்மட்டும் வென்றிருந்தால் சினிமாப் பாட்டின் ஆக்கிரமிப்பு குறைந்திருக்கும். நமக்கும் வேறொருவிதமான புது இசை கிடைத்திருக்கும். மால்குடி சுபா, சுரேஷ் பீட்டர்ஸ், அனுராதா ஸ்ரீராம், பிரேம்ஜி, தேவன் எனச் சகலரும் தமிழ் பாப்பில் முயன்று ஓய்ந்து போய்விட்டார்கள். பீட்டர்ஸ் ’மின்னல்’ என ஒரு பிரமாதமான ஆல்பம் செய்திருந்தார். அது தோற்றபோதுதான் தமிழ் பாப் என்று ஒன்று இருக்கப்போவதில்லை என்று தெளிவாகத் தெரிந்தது. அதனால் நாலு ஃபைட், அஞ்சு பாட்டு ஃபார்முலாவிலிருந்து விடிவுகாலம் இன்னமும் கிடைத்தபாடில்லை.

சமீபத்தில் ’வானம்’ படத்தில் ”எவன்டி ஒன்னைப் பெத்தான் பெத்தான், அவன் கையில கிடைச்சா செத்தான் செத்தான்” என்று சிம்பு பாடி யுவன் இசையமைத்த பாட்டு கேட்டவுடன் பாலகுமாரன் சொன்னதுதான் ஞாபகம் வந்தது. Bad Arrack.

0000

இனிமேல் தமிழ் சினிமாவில் கதைத் திருட்டு நடப்பது கடினம். நந்தலாலா கதை இதிலிருந்துதான் சுடப்பட்டது என்று யாரோ சொன்னதுதான் தாமதம், இரண்டு பேர் டிவிடி எடுத்து அந்த ஜப்பானியப் படத்தை பார்த்துவிட்டார்கள். தட்டச்சு தெரிந்த மற்ற அத்தனை பேரும், ’அட, அந்த ஜப்பானியப் படமா? அதையெல்லாம் எப்பவோ பாத்து அனலைஸ் பண்ணியாச்சு’ என்று கதை விட்டுத் தனது பண்டிதத்தனத்தை காட்டிக்கொண்டார்கள். ரொம்ப தாங்க்ஸ்.

படம் நன்றாகவே இருந்தாலும் டைரக்டரின் டச் என்று ஒரேயடியாகக் கால்களை காட்டியபடியே எடுக்கப்பட்ட காட்சிகளும், எல்லாக் காரெக்டர்களும் பேசாமல் தலை குனிந்து நிற்பதும் கொஞ்சம் டூமச். இளையராஜாவின் இசையில் முதல் மரியாதை, நாடோடித் தென்றல் வரிசையில் இந்தப் பின்னணி இசையும் பிரமாதமான ஒன்று. மிஷ்கினின் லேசாகக் கீச்சும் குரல் அந்த கதாப்பாத்திரத்துக்கு ஒத்துப்போகிறது. இசையில்லாமல் ஆங்காங்கே விடப்பட்டிருக்கும் மெளனமான நொடிகளும், சொல்லாமல் விடப்பட்ட சில விஷயங்களும், மிக எளிமையான திரைக்கதையும்தான் மிஷ்கினைத் தொடர்ந்து எதிர்பார்க்கவைக்கின்றன.

0000

பெற்றோர்களைப் பற்றி மேலே இருப்பதை எழுதியபோது ஆக்டன் நாஷ் எழுதியிருந்த ஒரு குறும்புக் கவிதை ஞாபகம் வந்தது. தேடி எடுத்தேன். ’First Child… Second Child’ என்ற இந்தக் கவிதையில் வழக்கம் போல் ஆக்டன் நாஷின் வார்த்தை விளையாட்டும் உண்டு.

FIRST
..
..
This child is a marvel, a matchless wonder.
A staggering child, a child astounding,
Dazzling, diaperless, dumbfounding,
Stupendous, miraculous, unsurpassed,
A child to stagger and flabbergast,
Bright as a button, sharp as a thorn,
And the only perfect one ever born.

SECOND

Arrived this evening at half-past nine.
Everybody is doing fine.
Is it a boy, or quite the reverse?
You can call in the morning and ask the nurse.

Create a website or blog at WordPress.com