சில மாதங்களுக்குப்பின் மீண்டும் கலிஃபோர்னியா வருகிறேன். சின்ன வயதில் கேட்ட மூன்று நாட்டவர்கள் வானத்தில் பறக்கும்போதே தங்களது நாட்டைக் கண்டுபிடிக்கும் (அதாவது இந்தியாவைக் கிண்டலடிக்கும்) ஜோக்கைப்போல் கலிபோர்னியாவின்மேல் பறக்கும்போதே சிலிக்கான் வாசனை மூக்கைத் தொலைக்கிறது. ப்ளேனில் எல்லோரும் திடிரென்று #include என்றெல்லாம் ப்ரோக்ராம் உளறுகிறார்கள்.
விமானம் சான் ஃப்ரான்சிஸ்கோவில் எப்போதும் படர்ந்திருக்கும் மேகத்தைக் கிழித்தபடி அதிவேகமாக நகர்ந்து சான் ஹொசே ஸ்டேஷனில் இறங்கிவிடுகிறது. ரோடெல்லாம் தங்கமும் வைடூரியமும் கிடைக்கும் என்று நினைத்தலாகாது. பொட்டைக் காடாக எல்லா இடத்திலும் வானம் தெரியும் பாலைவனமாக இருந்த இடத்தில் திடீரென்று ஒரு முப்பது வருடங்களில் உலகம்முழுவதிலும் இருந்து டெக்னாலஜி ப்ரஜைகள் வந்து அடைத்துக்கொண்டிருக்கும் ஓர் artificial சொர்க்கம். எங்கெங்கும் பணச் செழிப்பு தெரிகிறது. ரேச்சல் வெங்கடாசலம் என்றெல்லாம் பெயர்கள் காணக் கிடைக்கிறது. சரவணபவன் இருக்கிறது. தக்காளி ரசத்தை சூப் என்கிறார்கள். மினி டிபன் முதற்கொண்டு அடை அவியல், கைமா இட்லிவரை எல்லாம் கிடைக்கிறது. ஏப்பம் உள்பட. எந்தக் கம்பெனி போனாலும் வந்தாலும் இந்தியன் ஸ்டோர்கள் மாறுவதே இல்லை. காய்ந்துபோன டஜன் கறிவேப்பிலைகளை ப்ளாஸ்டிக் பையில் போட்டு ஒரு டாலருக்கு விற்றுவிடுகிறார்கள்.
இங்கிருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ்தான் அமெரிக்காவிலேயே rudest நகரமாம். சாண்டா க்ளாராவில் பெல்ட் போடாத கார் ட்ரைவர்கள் வருகிறேன் வருகிறேன் என்று சித்த ஞாழி காக்கவிட்டு 101 ஹைவேயில் கம்ப்யூட்டர் இன்ஜினியர்களுடன் மல்லுக்கட்டி ப்ளேனை எடுக்கும்முன் எப்படியோ கொண்டுவந்து போட்டுவிடுகிறார்கள்.
0000
போன வருடம் படித்த ஆங்கில வரிசையில் எனக்குப் பிடித்த புத்தகம் பில் ப்ரைசன் (Bill Bryson) எழுதிய At Home – A Short History of Private Life என்ற புத்தகம். பில் ப்ரைசன் ஓர் ஆதர்ச எழுத்தாளர். படிக்கும் ஒவ்வொருவரிடமும் 1-1 பேசுகிறமாதிரி எழுதக்கூடியவர். ப்ரபஞ்சத்தில் இருந்து பெருவெடிப்பு, கல் மனிதன் எனக் கடினமான விஷயங்களை A Short history of nearly everythingல் விளக்கியிருப்பவர். ஓவ்வொரு புத்தகத்திலும் புதியவைகளைமட்டுமே எழுதக்கூடியவர்.
ஐம்பதுகளில் இருந்த அமெரிக்காவைப் பற்றி இவர் எழுதிய சுயசரிதையான The Life and Times of the Thunderbolt Kid எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஓரிரு அத்தியாயங்களை இரண்டு மூன்று முறைகூடப் படித்திருக்கிறேன். விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். ஓரிருவருக்குப் பிறந்தநாள் பரிசாக இந்தப் புத்தகத்தை அளித்திருக்கிறேன்.படித்தால் உங்களின் குழந்தைப் பருவத்தை மீண்டும் நினைத்துப் பார்ப்பீர்கள். படித்தபடியே சிரிப்பு வரவில்லை என்றால் நீங்கள் டாக்டரை நாடவேண்டிவரலாம்.
தற்போது இங்கிலாந்தில் வசிக்கும் ப்ரைசனின் வீட்டில் ஒரு நாள் எங்கிருந்தோ தண்ணீர் ஒழுகுகிறது. அவர் ஆட்டிக்(Attic) என்னும் வீட்டின் உட்கூரையின்மேலிருக்கும் அறையில் ஏறிப் பார்க்கிறார். முதன்முறையாக அந்த அறைக்கு வரும் அவருக்குத் தோன்றுவது, உலகத்தைப் பற்றியெல்லாம் பேசும் எனக்கு என் வீட்டைப் பற்றியே தெரியாத விஷயங்கள் எத்தனை இருக்கிறது!
இதையடுத்து அவர் தன் வீட்டில் இருக்கும் ஒவ்வோர் அறையாக நம்மை அழைத்துச்செல்கிறார். அந்த அறையின் பின்னணியில் இருக்கும் வரலாறை ஆராய்ந்து விளக்குகிறார். இப்படி உருவானதுதான் இந்தப் புத்தகம் At Home – A Short History of Private Life.
டைனிங் டேபிளில் ஏன் உப்பும் மிளகும்மட்டும் வைக்கிறார்கள், forkல் ஏன் நான்கு பற்கள்மட்டும் இருக்கிறது, பாத்ரூம் உருவானது எப்படி எனச் சுவாரசியமான, ஆனால் அதிகம் பிரசித்தம் இல்லாத விஷயங்களை ஆராய்கிறார். ப்ரசன் சொல்லவருவது உங்கள் வீட்டிற்கும் வரலாறுக்கும் சம்பந்தமில்லை என நினைக்காதீர்கள். வரலாறு கடைசியாக முடிவது வீட்டில்தான்!
ரோமானியர்கள்தான் குளியலறைப் பழக்கத்தைக் கொண்டுவந்தார்கள். அதற்குமுன் கிரேக்கர்கள் Gymnasium என்றோர் இடத்தை வைத்திருந்தார்கள். Gymnasium என்றால் ’ஆடையில்லாத அறை’ என்று அர்த்தம். கொஞ்சம் உடலை வியர்க்கவிட்டுவிட்டுக் குளித்த இடம்தான் அது. அவர்களோடு ஒப்பிடும்போது ரோமானியர்கள் கொஞ்சம் சொகுசானவர்கள். அவர்கள் குளியறை பல ஏக்கர்களுக்குப் பரந்து விரிந்தது. அதனுள் சலூன், நூலகம், ப்யூட்டி பார்லர், டென்னிஸ் கோர்ட், ரெட் லைட் ஏரியா என்று பலதும் இருந்ததாம். நகரத்தில் நடுவில் இருந்த இந்தக் காமென் குளியலறைதான் அவர்களின் டைம் பாஸ். கொடுத்துவைத்தவர்கள்!
ரொம்பவும் அபாயகரமான அறை அல்லது இடம் மாடிப்படிதான். அமெரிக்காவில் வருடத்திற்குப் பன்னிரெண்டாயிரம் பேர் கீழே விழுகிறார்கள். மீண்டும் எழுவதே இல்லை. அவர்கள் விழுவது படிகட்டிலா, மொட்டை மாடியிலிருந்தா, அல்லது மரக் கிளையிலிருந்தா எனத் தெரிவதில்லை. இங்கிலாந்தில் வருடத்திற்குச் சுமார் மூன்று லட்சம் பேர் படிகட்டிலிருந்து விழுந்து டாக்டர் க்ளினிக் செல்கிறார்கள். இந்த மாடிப் படி பற்றியே MIT ப்ரொஃபஸர் ஒருவர் ஆராய்ச்சி செய்திருக்கிறார். இதன்படி இந்த நம்பர்கள் ரொம்பவே குறைந்தவை என்கிறார் அவர். கார் விபத்திற்கு அடுத்தபடி அதிகமாக நடக்கும் விபத்து இந்த மாடிப்படிச் சறுக்கல்தான்.
ஆனாலும் மற்ற இடங்களுக்குச் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மாடிப்படிகளுக்குச் செய்யப்படுவதில்லை என்பதுதான் சோகமே. நியுயார்க்கில் ஒரு
சப்வேயில் சறுக்காமல் இருக்கப் போடப்பட்டிருந்த ரப்பர் படிகட்டுகள் எங்கு ஆரம்பிக்கின்றன என்று தெளிவாக தெரியவில்லை. அதனால் சுமார் ஆறு வாரங்களில் 1400 பேர் விழுந்துவிட்டிருந்தார்கள். அப்புறம் அதை விழுந்தடித்துக்(!)கொண்டு மாற்றினார்கள்.
கிட்டத்தட்ட எல்லோரும் ஏதாவது தருணத்தில் மாடிப்படியில் இருந்து சறுக்கி விழுகிறார்கள். 2,222 முறைகளில் ஒரு முறையாவது கண்டிப்பாக நீங்கள் ஒரு படியாவது தவறுவீர்களாம். 63,000 முறைகளில் ஒரு முறையாவது ஒரு சின்ன விபத்தாவது நேருகிறதாம். முப்பது லட்சம் முறைகளில் ஒரு முறையாவது ஹாஸ்பிட்டலுக்கு செல்ல நேர்கிறதாம். திருமணமாகாதவர்களும் கொஞ்சம் ஒல்லியானவர்களும் அதிகம் விழுகிறார்களாம். ஒருமுறை சறுக்கினீர்கள் என்றால் மீண்டும் சறுக்கும் வாய்ப்பு அதிகமாகிறதாம். ஏறுவதைவிட இறங்கும்போதுதான் விபத்துகள் அதிகம் நடக்கிறதாம். நல்ல ஆரய்ச்சி, ந.ப.
இப்படிக் கீழே விழுவதை ஒரு ஸ்லோ-மோஷனில் ஓட்டிப் பார்க்கலாம். படிகட்டில் இறங்குவதே ஒருவிதக் கீழே விழுதல்தான். என்ன, நாம் கொஞ்சம் கண்ட்ரோலில் இருக்கிறோம். ஆகவே விழாமல் இறங்குகிறோம். சட்டென அடுத்த படி சறுக்கிவிட்டால் இந்த மனிதன் இறங்கவில்லை, சறுக்க ஆரம்பித்திருக்கிறான் என மூளைக்குப் புரிந்து உங்கள் ரிஃப்ளக்ஸ் இயக்கத்தில் இறங்க ஆகும் நேரம் 190 மில்லி செகண்டுகள். இந்தப் பூதாகர இடைவெளியில் நீங்கள் சரியாக ஏழு இஞ்ச்கள் இறங்கியிருப்பீர்கள். விழலாம், அல்லது விழாமல் சுதாரித்துக்கொண்டும்விடலாம்.
இப்படியான மாடிப்படியில் அதிகம் கவனமாக இருக்கவேண்டிய இடம் முதலும் முடிவும்தான். மூன்றில் ஒரு விபத்து முதல் படியிலோ கடைசிப் படியிலோ நடக்கிறது. மிச்ச இரண்டு பங்குகள் முதல் மூன்று படிகளிலோ கடைசி மூன்று படிகளிலோ நடக்கிறது. ஆக நடுவில் மோட்டு வளையத்தை பார்த்தபடி நடக்கலாம். திடிரென்று ஒரு படி இருக்கக்கூடிய இடங்களும் நான்குக்கும் குறைவான படிகள் இருக்கக்கூடிய பிரதேசங்களிலும் அஜாக்கிரதை அதிகம் இருக்கிறது.
பெட்ரூம் பற்றிக்கூடச் சுவாரசியமான பல குறிப்புகள் இருக்கின்றன. எஜமானர்கள் தூங்கும் படுக்கைகளின் கால் பகுதியில் வேலைக்காரர்கள் படுத்து உறங்கியிருக்கிறார்கள். மன்னர் ஐந்தாம் ஹென்றி அவர் மனைவியுடன் கூடியபோது அவருடைய சமையல்காரரும் வேலைக்காரரும் உடன் இருந்ததாகத் தெளிவான குறிப்புகள் இருக்கின்றன. படுக்கையின் மேல் திரைச்சீலை ஒன்று இருந்திருக்கலாம் என்று சந்தேகத்துடன் எழுதிய குறிப்பும் மங்கலாக இருக்கிறது
0000