போன வாரம் எழுதியிருந்த eclectic writing பற்றி இன்னமும் கொஞ்சம் கதைக்கலாம். அன்பர் ஒருவர் “நீர் சொல்ல வருவது வேலிக்கு ஓணான் சாட்சியாக இருக்கிறது. எதை வேண்டுமானாலும் எழுத இது ஒரு சாக்கு” என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இருக்கலாம், யோசித்துப் பார்த்தால் அதட்டல் தொனியோடு வரும் குறுக்கு வழிப் புத்தகங்களுக்கும் ’அழகி கொலை’ என மூன்றாவது பாராவில் மூன்று வரி எழுதிவிட்டுப் பாதி பக்கத்துக்குப் பாடியின் பயமுறுத்தும் போட்டோ போடுகிற தினசரிகளுக்கும் நடுவே பத்திரிக்கைகளைதான் சாமானியர்கள் அதிகம் படிக்கிறார்கள். காரணம் அவற்றை அணுக முடிகிறது என்பதுதான். ஏற்கனவே சொன்னமாதிரி எத்தனை பதற்றமான /சந்தோஷமான சூழ்நிலையிலும் படித்துவிட்டுப் போகக்கூடிய எளிய கட்டுரைகளைதான் மனித மனங்கள் விரும்புகின்றன. நான் சொன்னால் அடிக்க வருவீர்கள் என்பதால் சமுகவியலாளர்களைத் துணைக்கு அழைத்துக்கொள்கிறேன்.
உதாரணத்துக்கு எகனாமிஸ்ட் ஜார்ஜ் லோவென்ஸ்டைன் செய்து காண்பித்த ஓர் ஆய்வு. அதில் கலந்து கொண்டவர்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கப்பட்டது:
’இன்றிரவு பார்ப்பதற்கு ஒரு படமும், பின்னொரு நாள் பார்ப்பதற்கு ஒரு படமும் தேர்ந்தெடுங்கள்’.
ரொம்பவும் யோசித்து குழப்படி செய்யாமல் மக்கள் இன்றிரவு பார்ப்பதற்குத் தேர்ந்தெடுத்த படங்கள் காமெடிப் படங்கள் அல்லது ப்ளாக்பஸ்டர்கள். அதாவது பஞ்சதந்திரம் மற்றும் எந்திரன். மற்றொரு நாள் பார்ப்பதற்கு பத்திரமாகச் சேர்த்து வைத்த படங்கள் முக்கியமானவை – இருவர், ஹே ராம் மற்றும் நந்தலாலா போன்ற படங்கள்.
இதில் விஷயம் என்னவென்றால் அந்த ‘நல்ல’ படங்களைப் பார்க்கும் நாள் வரும்போது காவலனோ, சிறுத்தையோ, ஒட்டகச்சிவிங்கியோ ஏதாவதுஒரு காமெடி / ப்.பஸ்டர் படம் வந்துவிடும் ‘இன்று போய் நாளை வா’ கதைதான்.
இதன் பாடம் மக்கள் philistines என்பதல்ல, அவர்களின் தேர்ந்தெடுப்புகள் எல்லா நேரத்திலும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. எத்தனை பேர் ‘இந்த ஞாயித்துக்கிழமை எல்லா பில்லையும் டாலி செஞ்சு பாங்க் பாலன்ஸைக் கணக்கு பண்ணிடலாம்’ என்று நினைத்துக்கொண்டு வேட்டியை மடித்துக் கட்டிவிட்டு, கடைசியில் டிவி முன் தவமிருக்கிறார்கள். மக்களின் ஆசைகள் குறுகிய கால, நீண்ட காலத் திட்டங்களுக்கு நடுவே ஊசலாடிக்கொண்டிருக்கின்றன.
ஆக, சொல்ல வந்தது eclectic writing என்பது சுவாரசியமாக எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதுகிறேன் பேர்வழி என்ற சாக்கில் மக்களை நம்பவைத்துச் சற்றே கடினமான விஷயத்தையும் மக்களின் மனத்தினுள் கடத்தும் சாகசம். I rest my case, யுவர் ஆனர்.
0000
ஒத்திப்போடுதல் நமது வாழ்வுடன் இரண்டறக் கலந்த செயல். மேலே சொன்ன நல்ல படமா / லைட் படமா ஆய்வில் வந்த முடிவுக்குக்கூடக் காரணம் ஒத்திப்போடுதல்(Procrastination)தான். கேம் தியரி ஆய்வாளர் ஜேம்ஸ் ஷெல்லிங் இதை ’உங்கள் மனத்தில் இருக்கும் ’divided self’ செய்யும் காரியம்’ என்கிறார். நீங்கள் ஏதாவது ஒன்றை முடிவு செய்யும்போது உங்கள் மனத்தில் ஒரு பாராளுமன்றம் கூடுகிறது. ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் வாதிடுகின்றன. அதாவது குறுகிய கால ஆசைகள் கொண்ட மனத்தின் ஒரு பாதியும், நீண்ட நாள் குறிக்கோள்கள் கொண்ட உங்களின் மற்றொரு பாதியும் திட்டித் தீர்த்துக்கொண்டு கடைசியில் அனேகமாக வெற்றி பெறுவது குறுகிய கால ஆசையே.
நாளையிலிருந்து ஜாகிங் செய்யணும், அடுத்த வாரம் முதல் சிகரெட்டுக்குத் தடா, இதுதான் என்னோட லாஸ்ட் குவார்டர் மாமே என்று எத்தனையோ நீண்ட நாள் குறிக்கோள்கள் உங்களுக்கு முன் இருக்கும் ஷிவாஸ் ரிகலின் உடனடி கிக்கினால் தள்ளிப்போடப்படுகின்றன.
ஒத்திப்போடுதலை ஒத்திப்போடுவதற்கு ஓர் எளிமையான வழி, நமக்குள்ள தேர்வுரிமைகளை எளிமையாக்குதல். அதாவது 110 சானல்கள் இருந்தாலும், அவற்றை இரண்டு மணி நேரம் மாற்றி மாற்றிப் பார்த்தாலும் வராத திருப்தி, இரண்டே இரண்டு சானல்களை வைத்துக் கொண்டு பிடித்ததைப் பார்க்கும் திருப்தியை போலதான்.
உங்கள் கூகிள் ரீடரில் எத்தனை வலைப்பதிவுகள் படிக்கப்படாமல் கிடக்கின்றன? அவற்றைப் ’பிறகு படிக்கலாம்’ என்று தள்ளிப்போடாமல், தயவு தாட்சண்யம் பார்க்காமல் நீக்கிவிடுங்கள். மிச்சமிருப்பதுமட்டும்தான் நீங்கள் விரும்புவது.
0000
மேலே இருக்கும் இரண்டு விஷயங்கள் இப்படி ஒரே கோட்டில் இணையப்போகின்றன என்று எனக்கு முன்னமே தெரிந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை.
0000
சஞ்சய் லீலா பன்சாலியின் படங்கள் பன்சாலிப்பூர் என்ற இடத்தில்தான் நிகழ்கின்றன என்று இணையத்தில் நக்கலடித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் ரசிக்கும் சில இயக்குநர்களில் பன்சாலியும் ஒருவர். குருதத்போல மக்களிடம் இருந்து ஒதுங்கிப்போய்ப் படமெடுக்கும் இயக்குநர்.
போன வருடக் கடைசியில் வெளிவந்த Guzaarish(வேண்டுதல்) என்னும் படத்தைச் சமீபமாகப் பார்த்தேன். Quadriplegia என்னும் ஒருவிதமான பக்கவாத நோயினால் அவதிப்படும் மேஜிக் நிபுணன் தன்னை வலியின்றிக் கொன்றுவிடுமாறு கோர்ட்டில் மனுச் செய்கிறான்.
Euthanasia அல்லது Mercy Killing என்ற சற்றே சர்ச்சைக்கிடமான விஷயம் உலகத்தில் ஆங்காங்கே ஆதரிக்கப்பட்டுவருகிறது. இந்தியாவில் இன்னமும் இது சட்டமாக்கப்படவில்லை. ஆகவே இப்படி வரும் ஒரு வேண்டுதலைக் கோர்ட்டும், அவனைச் சுற்றி இருப்பவர்களும் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை உங்கள் டிவி / டிவிடியில் காண்க. ஏனென்றால் நல்ல படங்கள் ஓடுவதில்லை என்ற தியரிப்படி இதுவும் தியேட்டரை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டுவிட்டது.
பன்சாலியின் படங்கள் நடக்கும் இடங்கள் எங்கிருக்கின்றன என நினைக்கவைக்கும்படி ஓர் ஊரில் கதை நடக்கிறது. இந்தக் கதை கோவாவில் நடந்தாலும் அந்த வீடும் இப்படி 1910களில் வாழ்ந்தவர்கள்போல ஐரோப்பிய உடையணிந்த மனிதர்களும் இன்னமும் அங்கே இருக்கிறார்களா என்ன? ஓர் அழகுணர்ச்சிக்காகவே பன்சாலி இப்படிச் செய்கிறார் என்றாலும் மக்கள் இதை ஒரு குறையாக சொல்லிப் படத்தை டிஸ்கவுண்ட் செய்துவிடுகிறார்கள்.
உணர்ச்சியூட்டும் இசை, துல்லியமான ஒளிப்பதிவு, மிகச் சாதுர்யமான வசனங்கள் என எல்லாத் துறைகளிலும் படம் ஜொலிக்கிறது. கழுத்தைமட்டுமே அசைக்கமுடிந்தாலும் அதில்கூட அவார்டு சாகசம் காட்டும் ரித்திக் ரோஷனும், ’சுக்கு முளகு தட்டி என்ன சூப் வச்சு குடியா’ என்று தமிழ்நாட்டில் தட்டிப்போட்டுவிட்டுப் போய்ப் பாந்தமாக அருமையாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராயும், பன்சாலியும், அவருடைய எழுத்தாளர் பவானி ஐயரும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.
இடுப்பு மடிப்புகளையும் ’ஐ லவ் யூ’ பாடல்களையும் காட்டுக் கத்தல் காமெடிகளையும்மட்டுமே எத்தனை நாள்தான் பார்த்துக் கொண்டிருப்பது? ஒத்திப்போடாமல் பார்த்துவிடுங்கள்.
0000