டிசம்பரின் கடையிறுதி வாரங்களில் ஆபிஸில் லீவு சொல்லி விட்டு, வீட்டில் இருந்தேன். சுவாரஸ்யமாக எதாவது தென்படுகிறதா என்று டிவியை மேய்ந்தேன். அமெரிக்கத் தாய்மார்கள் எப்படித்தான் மதிய நேர டெலிவிஷனைப் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. எல்லா முக்கிய சானல்களிலும் பொழுதெல்லாம் பேசித் தொலைக்கிறார்கள். பெண்களுக்கான டாக்-ஷோவாம். ராவிலும் இதே தொல்லை. லேட்-நைட் ஷோ. ஹூஹும் நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை, அவையும் டாக்-ஷோக்கள் தான். பேசுவது ஆண்கள்.
எல்லா டாக்-ஷோக்களும் ப்ரைம் டைம் ஷோ மாதிரி மார்க்கெட்டிங் செய்யப்பட்டு, அதற்கேற்ற மாதிரி பேச்சுக்கள் திசை திருப்பப்பட்டு, டிவி சீரியல் மாதிரி கமெர்ஷியல் ப்ரேக்குகளுக்காக கரெக்டாக கொக்கிக் கேள்விகள் கேட்கப்படுகின்றன. பதில் ப்ரெக் கே பாஸ்.
என்.பி.சியில் வரும் ஓப்ரா வின்ப்ரே ஷோவிற்கு இது கடைசி சீசன். மனுஷி ரிடையர்டாகி விடுவார் என்று பார்த்தால், பெப்பே. ஒரு மணிநேர ஷோவுக்கு OWN(Oprah Winfrey Network) என்று ஒரு சானலே ஆரம்பித்து விட்டார். ஆடின காலும் பேசின வாயும் என்று பழமொழியை மாற்றி விடலாம். தாய்க்குலங்களின் பேராதரவோடு 25 வருடமாக பேசிக் கொண்டிருக்கிறார் ஓப்ரா. ஆங்காங்கே நல்ல விஷயங்கள் செய்தாலும், பேசப்படும் விஷயங்களை விரல்களால் எண்ணிவிடலாம். கைவிட்ட கணவனும், கடன் தொல்லையில் மூழ்கியவர்களும் அவர்களை மீட்க எடுக்கப்படும் முயற்சிகளும், குண்டாவது மற்றும் ஒல்லியாவது மற்றும் ஒன்றும் ஆகாகது எப்படி எனப்படும் ஹவ்-டூ வகை விஷயங்கள்.
நான் பார்த்த ஒரு மதிய ஷோவில், ஹாரி பாட்டர் கதாசிரியர் ஜெ.கே, ரவுலிங்கை ஸ்காட்லாண்டில் சந்தித்து உரையாடினார். ஓப்ரா வாய்க்கு அவல் கிடைக்குமா என முடிந்த மட்டும் தேட, ரவுலிங்கோ நேரெதிர். மொத்தத்தில் அந்த பேட்டி சுத்த வேஸ்ட். ரவுலிங் ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லை, பாவம் ஓப்ரா.
ஓப்ரா ஒரு புக்-கிளப் வைத்திருக்கிறார், அவற்றில் பரிந்துரைக்கப்படும் புத்தகங்கள், ஜெயமோகனின் உலோக வேகத்தை தூசி ஆக்கி விடக்கூடியவை. சமீபத்திய பரிந்துரை, டிக்கின்ஸின் The Tale of Two Cities. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
நான்சி க்ரேஸ் என்று ‘ரொம்பப் பேசும்’ ஒரு வக்கீல் மாலை நேரங்களில் தொலைந்து போன சிறுவர்களின் கேஸ்களை சத்தமாக பேசியபடியே ஆராய்கிறார். மற்ற நேரங்களில் ப்ரைவேட் கோர்ட் நடத்துகிறார். அதை ஒளிபரப்பவும் செய்கிறார்கள். மற்ற குடும்பங்களின் சண்டையை நாமும் அந்த குடும்ப கோர்ட்டுகளில் பார்க்க நேர்கிறது. மெகா சிரியலாய் இருந்தால் என்ன கோர்ட்டாக இருந்தால் என்ன, நமக்கு தேவை அண்டை குடும்பங்களின் கண்ணீர் வம்புகள். ரொம்ப சந்தோஷம்.
இதற்கு நடுவில் ஜெர்ரி ஸ்பிரிங்கர் எனும் ஒரு செக்ஸ் வம்பு டாக் ஷோவும் உண்டு. இந்த ஷோவில் சக்காளத்தி சண்டை நடக்கிறது. திடீரென்று இரண்டு பெண்மணிகளும் அல்லது இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணுக்காகவோ/ஆணுக்காகவோ தலை மயிரை பிடித்துக் கொள்கிறார்கள். எனக்கு சென்னையின் மெட்ரோ பம்பு சண்டை ஞாபகம் வந்தது, குடம் தான் இல்லை, மற்றபடி அதே குழாயடி கூத்து. Pun Intended.
இவைகளின் நடுவே எலன் டிசெனரஸ் எனும் ஒரு பெண்மணி செய்யும் டாக் ஷோ கொஞ்சம் ப்ராக்டிகலாக தெரிந்தது. ஷோவின் நடுவே எலன் தினம் ஒரு டான்ஸ் ஆடுகிறார், இதைத் தவிர அச்சு பிச்சு கேள்விகள் கேட்பதில்லை, வேண்டுமென்றே ட்ராமா செய்வதில்லை எனப் பட்டது. எதுவாக இருந்தாலும் பகலில் டிவி பார்ப்பது உங்கள் IQவிற்கு ஆபத்து.
இரவுகளின் டாக் ஷோக்கள் 8 மணிக்கு ஜான் ஸ்டுவேர்டில் (Jon Stewart) ஆரம்பித்து Conan O’Brien, Jay Leno என எல்லோரும் ஜோக் அடிக்கிறார்கள். ஜோக் அடிக்கப்படுபவர்கள் அ.சியல்வாதிகள், ஹாலிவுட்காரர்கள் மற்றும் சாமானியர்கள். ஆக அமெரிக்காவில் யாரையும் விட்டு வைப்பதில்லை. இப்படி தன்னைப் பற்றியே ஜோக் அடித்துக் கொள்வது, அந்த சகிப்புத்தன்மை இந்த நாட்டின் ஆரோக்கியத்துக்கு நல்லது. நக்கல் கொஞ்சம் அதிகமாகிப் போய் யாராவது கேஸ் போட்டால் அந்தந்த சானல்கள் பார்த்துக் கொள்கின்றன. இவர்கள் சிலரின் ஷோக்களை நான்கைந்து வருடங்களாக பார்த்துக் கொண்டு வருகிறேன். ஜே லெனோ மாதிரி ஜோக்கை ரசித்துக் கொண்டே அடிப்பவர் யாரும் இலர். என்னுடைய பேவரைட். கொஞ்சம் பி.பி குறைந்த மாதிரி தெரிகிறது.
000000
இந்தப் பத்தியை பற்றி கொஞ்சம் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இது eclectic writing எனும் வகையை சேர்ந்தது. அதாவது கலவை எழுத்து என்று சுமாராய் தமிழில் சொல்லலாம். இதைப் பற்றித்தான் என்றில்லாமல் எதைப் பற்றி வேண்டுமானாலும் எவ்வளவு ஆழமாகவோ மேலோட்டமாகவோ எழுதப்படும் ஒரு பத்தி. இதைத் தமிழில் சிலர் எழுதியிருந்தாலும் பிரபலமாக்கியது சுஜாதா தான். ஆங்கிலத்தில் மிகவும் ரசித்து படிக்கப்படும் ஒரு எழுத்து வகை. இவ்வகை பத்திகளை படிக்க ஒருவர் எந்த மனநிலையிலும் இருக்கலாம். பிசியான ஆபிஸ் லஞ்சுகளிலும், காபி ஷாப்களிலும், ஷேர் ஆட்டோக்களிலும் பெண்கள் கல்லூரி பஸ் நிலையங்களிலும் படிக்கக் கூடிய அளவிற்கு லைட் ரீடிங் வகையை சார்ந்தது.
அமெரிக்காவில் இவ்வகை eclectic எழுத்தாளர்கள் ஒரு வரியில் கூட சில செய்திகளை சொல்வார்கள், ஐம்பது வரிகளிலும் இழுத்து ஆடிப்பார்கள். அது சொல்லப்படும் விஷயத்தை ஒட்டியது. ஒரு முறை ஒரு எழுத்தாளர் பத்தியை ஆரம்பித்த ஐந்தாவது வரியில், இந்த வாரம் உங்களுக்கு விடுமுறை தருகிறேன், படித்தது போதும் என்று அந்த வாரப் பத்தியை அத்தோடு நிறுத்தி விட்டார். ஆக எடிட்டர் என்ற ஒரு நல்ல மனிதரைத் தாண்டி வாசகர்களுடன் நேரடியாக உறவாடும் வகையை சார்ந்தது. இந்த மாதிரி ஒரு பத்தியை அந்த காலத்தில் வாரப் பத்திரிகைகளில் அனுமதித்தார்கள் என்றால் அந்தந்த எழுத்தாளர்களுக்கு கொடுக்கப்பட்ட சுதந்தரம் புரிகிறதா? அவர்களும் சுதந்தரத்தை பயன்படுத்தி குப்பையாக்காதது தான் முக்கிய காரணம்.
ஹிந்துவின் கடைசி பக்கத்தில் வரும் ஆர்ட் புக்வால்ட் ஞாபகம் இருக்கலாம். ஆர். கே.நாராயணை நினைவு படுத்தும் சாயல். இவரின் எழுத்தை எக்லெடிக் வகையில் சேர்க்க முடியாது என்று சிலர் சொன்னாலும் மிகப் பிரபலமான eclectic columnist இவராகத் தான் இருக்க முடியும். இவர் எழுத்தின் உச்சத்தில் இருந்த போது உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 550 நாளிதழ்கள் இவரது வாரப் பத்தியை பிரசுரித்தன. சுத்தமான காமெடி ஜென்மம். இவரின் எழுத்து புரிய கொஞ்ச அமெரிக்க அரசியல் தெரிந்திருத்தல் அவசியம். தன் கடைசி நாள்வரை எழுதிக் கொண்டிருந்தார். வாஷிங்டன் போஸ்டில் Goodbye, My Friends என்று இவர் எழுதிய கடைசி பத்தி எதிர்ப்பார்த்தபடி மிக பிரசித்தம். கொஞ்சம் முயற்சித்தால், You Can Fool All of the People All the Time எனும் இவரின் புத்தகத்தில் இருந்து ஆரம்பிக்கலாம். பேசப்படும் விஷயம் பழையதாய் இருந்தாலும் சுவாரசியம் கொஞ்ச நஞ்சமல்ல.
00000
அல்செய்மரின் வியாதி என்று அமெரிக்க மீடியா ரொம்பவே கூக்குரலிட்டாலும் நானும் எதோ பணக்காரர்களின் வியாதி போலும் என்று விட்டுவிட்டேன். 2006ல் நண்பர்(ரொம்பவே வயதான) ஒருவரின் மனைவி இறந்ததை பற்றி அவரிடம் உரையாடும் போது தான் இந்த வியாதியின் பயங்கரம் புரிந்தது. சமீபத்தில் படித்த Finding Life in the Land of Alzheimer’s எனும் புத்தகத்திலும் இப்படியே.
அல்செய்மரின் வியாதி எனும் பெயர் புதிதாய் இருந்தாலும் இது இந்தியாவில் புதிதல்ல. நமக்கெல்லாம் தெரிந்த டிமென்ஷியா தான். அலோய்ஸ் அல்செய்மா எனும் ஜெர்மனிய நியூரோ டாக்டர் இதை அழுத்தமாக விளக்க அவரின் பெயரே நிலைத்து விட்டது. 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே அதிகமாய் வரும் இவ்வகை டிமென்ஷியாவில் ஞாபகங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் விலகுகின்றன. மறக்கிறார்கள். மறந்து மறந்து மரிக்கிறார்கள். இதற்கு முற்றிலுமாக குணப்படுவதற்கு மருந்தில்லை, தள்ளிப் போடவும் முடிவதில்லை, வந்து விட்டால் மறதி தான். எதோ ஒரு ஆராய்ச்சியில் அல்செய்மர் வந்த பிரபலங்களை அனலைஸ் செய்த போது மிக அதிகமாக இருந்தது எழுத்தாளர்கள் மற்றும் நடிகர்கள். பள்ளியில் இருந்த போது ரசித்துப் படித்த எனிட் ப்ளைடன் என்ற எழுத்தாளரும் அல்செய்மர் வந்து தான் காலமானார்.
இதில் பயங்கரம் என்பது இவ்வகை நோயாளிகளை பார்த்துக் கொள்ளும் கணவனோ மனைவிக்கோ தான். இன்றைய நிலவரப்படி, நோயாளிகளை விட அவர்களை பார்த்துக் கொண்டு அவர்களின் மறதியுடன் போராடும் கடினத்தை தாங்கிக் கொண்டுள்ளவர் நோயாளிகளுக்கு முன் இறந்து விடுகிறார்கள் என்பது.
இவ்வியாதியில் ஞாபகங்கள் விலகுவதும் பயங்கரம் தான். அதாவது, கணினித் துறையில் சொல்வது போல Last In First Out Stack. கடைசியாக நடந்த விஷயங்கள் முதலில் மறந்து விடும் என்கிறார்கள். கடைசியாய் பிறந்த குழந்தையை ஒரு பெண்மணி மறந்து விட்டார். தன் முதல் பையனை மட்டும் ஞாபகம் வைத்திருந்தார். மற்றோரு மனைவி தன் கண் முண் நடமாடும் கணவனை மறந்து விட்டார். ஆனால் ஸ்டீவ் எனும் பெயரில் இருந்த தனக்கு அன்பான கணவன் ஒருவர் இருந்தார் என்று தன் கணவரிடமே சொல்லிக் கொண்டிருந்தார். அல்செய்மர் நோயாளிகள் ஞாபகத்தில் இளைமையாகிக் கொண்டே போகிறார்கள் என்பதற்கு காரணம் இது தான். பலரின் ஞாபக செல்களில் இருந்து கடைசியாய் கரைவது அவர்களின் தாய். கவித்துவம் என்று சொல்லலாமா?
00000
One response to “மறந்து போனவை”
[…] வாரம் எழுதியிருந்த eclectic writing பற்றி இன்னமும் கொஞ்சம் கதைக்கலாம். […]
LikeLike