ஒரு படமும் சில பழைய ரிக்கார்டுகளும்

‘இந்த வருடத்தின் சிறந்த’ லிஸ்ட்டில் அடுத்தது, சிறந்த தமிழ்ப் படம். என்ன தான் டப் செய்தாலும் தமிழ் நாடு தாண்டி இந்தக் கதை புரியாது என்று தெரிந்தும் மூன்று வருடங்களில் எடுக்கப்பட்ட பெரிய ரிஸ்க். ஆயிரத்தில் ஒருவன். கடைசியில் காட்பாடி தாண்டி ஆந்திராவில் பிய்த்துக் கொண்டு ஓட, தமிழ் கூறும் நல்லுலகம் கதை புரியவில்லை என்ற பழைய ரிக்கார்ட்டை தேய்த்துக் கொண்டிருந்தது.

இந்த மாதிரி 263 நாட்கள் படம் எடுத்தார்கள், 32 கோடி செலவு செய்தார்கள் என்ற நம்பர் சாதனைகளைத் தாண்டி, இந்தப் படம் பார்க்கும் போது என்னை ஆக்கிரமித்து கொண்டு விட்டது. அதாவது என்னையும் மறந்து முத்து, அனிதா மற்றும் லாவண்யாவுடன் நானும் கடல் மலைகளை தாண்டிச் சென்றேன், சோழ இளவரசனை(!) சந்தித்தேன், பைத்தியம் பிடிக்க ஓடினேன், சங்கம் வளர்த்த பாண்டியர்களை கடிந்து கொண்டேன், தஞ்சைக்காக ஏங்கினேன். நல்ல படம் என்பது பார்க்கும் உங்களை எதாவது வகையில் மூவ் செய்ய வேண்டும். தியேட்டரை விட்டு ஓட வைக்க வேண்டும் என்பதல்ல. எதாவது வகையில் பாதிக்க வேண்டும்.

ஆயிரத்தில் ஓருவனின் எழுத்தும் ஆக்கமும் தமிழ் சினிமாவில் ஒரு அரிய சாதனை. தனக்கு முன் இருந்த அத்தனை தமிழ் ப்ளாக்பஸ்டர் இயக்குநர்களையும் ஒரேடியாக அசுரத்தனமாக தாண்டி சென்ற செல்வாவிற்கு இவ்வருட சிறந்த திரைக்கதையாசிரியர் விருது. இவ்விருது எல்லாம் கொடுத்து செல்வராகவனை ஏமாற்றி விடாமல், டிவிடி வாங்கி படத்தை ஒருமுறையோ மீண்டும் ஒருமுறையோ பார்த்து விட்டு டுவிட்டரில் வாழ்த்தினால் சந்தோஷப்படுவார். இதைத் தவிர செய்ய வேண்டியது, இந்த மாதிரி அபாரத் திறமைகளை இந்திப் பக்கம் போய்விடாமல் பார்த்து கொள்வது.

0000

இந்த வாரம் ஒரு சிறுகதை.

“ஸ்ச்ச்….ஆஃப் பண்ணிட்டு வந்திருக்கணும், இத்தன்னேரம் வீடு எரிஞ்சுண்டு இருக்கும்”

“ ஆமா…இதையே சொல்லிட்டு வா, நீ தானே போட்ட, அப்புறம் என்ன”

“நான் தான் ரோட்ட விட்டு திரும்பும் போதே சொன்னேல்ல போய் ஆஃப் பண்ணிட்டு வரேன்னு, நீ தான் சகுனம் அது இதுன்னு. உனக்கு ஷாப்பிங் வரணும், எதையாவது தேவையில்லாதத வாங்கணும்” என்று சொல்லிக் கொண்டே ஷாப்பிங் கார்ட்டை வேகமாக தள்ளினான் கல்யாண்.

”டாட் ஸ்லோ டாட், பயமாயிருக்கு” என்று மிரண்டாள் விது. முன்னே முனகிக் கொண்டே போய்க் கொண்டிருந்த சுபா, விது சொன்னது கேட்டு திரும்பினாள்.

“அப்பா சாமி, ஆள விடு…என் குழந்தைய ஒன்னும் பண்ணாத போ போய்டு வா” என்று சுபா கும்பிடு போட, மேஸீஸ் கடையில் கிறிஸ்துமஸ் துணி எடுக்க வந்தவர்கள் பாஷை புரியாமல் திரும்பிப் பார்த்தார்கள்.

கல்யாண் பல்லைக் கடித்தான். “ நிக்காத போய்ண்டே இரு.. எல்லாரும் பாக்கறாங்க… எவனாவது 911ன்னு கூப்பிட்டுறப் போறான். அப்புறம் சிங்கி தான் அடிக்கணும்” என்று கார்ட்டை தள்ளிக் கொண்டு நடந்தான்.

“கொஞ்சம் நிறுத்து. நானும் என் பொண்ணும் எப்படியாவது போய்க்கறோம். நீ போய் உன் எரிஞ்சுட்டு இருக்கிற வீட்டை பார்த்துக்கோ. முடிஞ்சா பாஸ்போர்ட்டை எடுத்து வை. இந்த மிஷிகன் விண்டர் தாங்க முடியல. நாங்க மெட்ராஸுக்கு போறோம். நீ வீட்ட கட்டிண்டு அழு” நடந்து கொண்டே சொன்ன சுபா, கல்யாணின் கையை தட்டி விட்டு, கார்ட்டை பிடித்து கொண்டு நடக்க ஆரம்பித்தாள். கார்ட்டில் உட்கார்ந்திருந்த விது இந்த களேபாரத்திலும் மக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

கிட்டத்தட்ட நாற்பத்தி ஆறு நிமிடங்களுக்கு முன், வீட்டை விட்டு ஷாப்பிங்கிற்கு கிளம்புவதற்கு முன், ஜாக்கெட் க்ளவுஸ் எல்லாம் போட்டு கொண்டு, வெளியே வீட்டின் மேல் படரவைத்திருந்த ஹாலிடே லைட்ஸின் ப்ளக்கை போட்டான் கல்யாண். கொஞ்சம் தள்ளிப் போய் நின்று அந்த தொங்கும் சீரியல் விளக்குகளின் அழகை சுமார் 8 செகண்டுகளுக்கு பார்த்துக் கொண்டிருக்க, சுபாவும் விது ரெடியாகிவிட, ஓடிப் போய் காரை ஸ்டார்ட் செய்து ஹீட்டரை போட்டான். காரை எடுத்து கொண்டு ரோட்டை திரும்பும் போது அவனுக்கு உரைத்தது. அந்த லைட்டுகளை ஆஃப் செய்து விட்டு வந்திருக்கலாம்.

“ஐ திங்க் லைட்ட ஆஃப் பண்ணிட்டு வந்திருக்கணும். மழை வரா மாதிரியிருக்கு, எதாவது வயர் கியர் ஷார்ட் ஆகி வீடு பத்திக்கும்” என்றவனை தலையில் அடித்துக் கொண்டு தள்ளிக் கொண்டு வந்தாள் சுபா. வரும் வழியிலெல்லாம் கரண்டைப் பற்றியும், அமெரிக்க மர வீடுகளை பற்றியும் லெக்ட்சர் அடித்துக் கொண்டு வந்தவனை செய்வதறியாது பார்த்துக் கொண்டு வந்தாள். விது வெளியே தெரியும் கார்களை எண்ணிக் கொண்டிருந்தாள். ஐம்பதுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிலிருந்து எண்ண ஆரம்பித்தாள்.

ஷாப்பிங் கார்ட்டை தள்ளிக்கொண்டு போய் கண்ணை விட்டு மறைந்து போனாள் சுபா. ரொம்ப தூரமில்லை, ஒரு பதினேழு மைல்கள் தான், சீக்கிரம் போய்விட்டு லைட்டை அணைத்துவிட்டு வந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டே கல்யாண் கார் பார்க்கிங்கை நோக்கி நடந்தான்.

மால் முழுவதும் ஏராளமான சீரியல் லைட் செட்டுகள் போட்டிருந்தார்கள். ”இதெல்லாம் ஷார்ட் ஆகாம நம்ம வீட்டு லைட் மட்டும் எப்படி ஷார்ட் ஆகும். ஒருவேளை சுபா சொல்ற மாதிரி எனக்கு OCD வியாதி தான் போல இருக்கு” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டே நடந்தான்.

காரை ஸ்டார்ட் செய்து ஹெட்லைட்டை ஆன் செய்தான். பளிச்சென்று எதிரில் இருந்த கண்ணாடியில் அதன் பிரகாசம் தெரித்து கல்யாணின் கண்ணில் அடித்தது. ரிவர்ஸ் எடுக்கும் போது செல்போன் வைப்ரேட் ஆனது. அப்படியே ரிவர்ஸை மாற்றி காரை மீண்டும் பார்க்கிங் செய்தான். ஃபோனை எடுத்து பார்த்த போது, சுபாவின் மிஸ்டு கால் என்று தெரிந்தது.

ஃபோனைப் பார்த்தவுடன் தான் கல்யாணுக்கு அந்த ஐடியா தோன்றியது. “வீட்டுக்கு போன் பண்ணிப் பார்க்கலாம், லைட் ஷார்ட் ஆகி வீடு எரிஞ்சிண்டு இருந்தா, ஃபோனும் எரிஞ்சு போயிருக்கும், அதனால ரிங் போகாது. அப்படியே ரிங் போனா எவ்ரிதிங் ஈஸ் குட்”

வீட்டு நம்பரை அழுத்தினான். வீட்டில் ரிங் அடித்து ஓய்ந்தது. ”வாவ், ஆஸ்ஸம்” என்று சற்று சத்தமாய் சொல்லிக் கொண்டான். காரை அப்படியே விட்டு விட்டு, மீண்டும் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

சுபாவின் செல்லுக்கு ஒரு ஃபோன் போட்டான். “சுபா கண்ணு சாரிம்மா…. என்னது? நான் எங்கயும் போகல. நீ எங்க இருக்க சொல்லு, காபஷீனோ வாங்கிட்டு வரேன்” என்று துள்ளினான்.
காபி கடையில் லைனில் நிற்கும் போது, மீண்டும் சந்தேகம் வர, மீண்டும் வீட்டிற்கு ஒரு போன் போட்டு பார்த்துடலாம் என்று எண்ணி தன் செல்போனின் வீட்டு நம்பரை அழுத்த, செல்போனின் இருந்து புறப்பட்ட ரேடியோ அலைவரிசைகள் அருகில் இருந்த செல்போன் டவரை சென்றடைய, அது சாட்டிலைட்டுடன் தொடர்பு கொள்ள, அங்கிருந்து புறப்பட்ட கதிர்கள் வீட்டு டெலிபோன் நிறுவனத்தை தொடர்பு கொள்ள, ரேடியோ அலைகள் மாறி ஆறு மெகா ஹெட்ர்ஸ் வீரியத்தில் சும்மா சுற்றிக் கொண்டிருந்த எலக்ட்ரான்ஸை தாக்கி அவைகள் சட்டென பயணிக்க, கல்யாணின் வீட்டில் இருந்த கேபிள் மோடத்துடன் இணைக்கப்பட்டிருந்த டெலிபோனை அடைந்தவுடன் அது ரிங் அடிக்க அரம்பிக்க, “ஸ்..யப்பா வேலை முடிந்தது” என்று மீண்டும் திரும்பிப் போய் கல்யாண் காதுகளை எப்படியோ அடைந்தன.

பெருமூச்சுடன் போனை கட் செய்த கல்யாணுக்கு தெரியாத விஷயம் ஒன்று – புயலாய் விரைந்த எலக்ட்ரான்ஸ்களில் ஒன்றே ஒன்று வெகுவேகமாய் சென்று டெலிபோனைத் தாக்க, ஐந்து வருடங்களாக யூஸ் செய்யப்பட்ட அந்த டெலிபோன் ரிங் அடிக்க ஆரம்பித்தாலும், அந்த மெகா வேகத்தை தாங்க முடியாமல் சின்னதாய் தீப்பொறியாய் வெளியேறி வயரை காயப்படுத்த, தீ மெலிதாக ஆனால் சீராக பரவிக் கொண்டிருந்தது.

– இது சமீபத்தில் தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.