ரத்த சரித்திரத்தின் முதல் பகுதியை இந்தியில் பார்த்தேன். இம்மாதிரி கேங்ஸ்டர் படங்களில் திடீரென்று யார் யாரை சுடுகிறார்கள், கூறு போடுகிறார்கள், வெட்டிச் சாய்கிறார்கள் என்று புரிவதற்கு முன் இடைவேளை வந்து விடும். இதில் சின்ன மாற்றம் , படம் முடிந்தே போய் விடுகிறது. மார்ட்டின் ஸ்கார்ஸஸி இத்தகைய படங்களில் பேச்சின் மூலம் கதையை நகர்த்தி, பயமுறுத்தி, டக்கென்று கொன்று விடுவார்கள். இதில் நேரெதிர்.
சுவாரசியமாய் ஒன்றுமேயில்லை. ரத்தத்தை பார்த்து விட்டு தூங்கப் போக முடியாது என்பதால் வீடு வந்து ஒரு நூறு பக்கம் படித்து விட்டே தூங்கப் போனேன். அடுத்த பகுதியில் சூர்யா வருகிறார் என்று டைட்டிலுக்கு முன் ட்ரைலர் போட்டார்கள். பார்க்கலாம். ரத்தக் களறி சண்டைக்கு நடுவே நாகேந்திரஹாராய என்று உமாச்சி பாட்டை எல்லாம் போடுவது ரொம்பவும் மெல்லிழைவாக மனித மனங்களில் வன்முறையை நியாயப்படுத்தும் என்பதை இயக்குநர் அறிவாரா?
0000
பாவை பிரபந்தங்கள் பாடும் மாதமிது. சென்னை வெள்ளாளத் தெருவில் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலுக்கு அருகில் வசித்தவன் என்பதால் மார்கழியில் திருப்பாவை சொல்லச் செல்லும் அம்மாவுடன் கோவிலுக்கு போன ஞாபகங்கள் இன்னமும் மிச்சமிருக்கின்றன. திருப்பாவை என்பதை விட சுடச்சுட வெண்பொங்கல் வாசனை தான் என்னை ஈர்த்தது என்று சொல்ல வேண்டும். கோவிலுக்கு போகாத நாட்களில், அம்மா தொன்னையில் வெண் அல்லது சக்கரைப் பொங்கலோ வாங்கி வருவாள். மட மடவென எழுந்து பல் தேய்க்கிற மாதிரி தேய்த்து, கிச்சனில் நுழைந்து ஒரே அமுக்.
பத்தாவது படிக்கும் போது நண்பனின் காதலை ஆதரிக்க ஒரு குழாமாக போன போது தான் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் தினப்படி விஷயமானது. சுபா என்கிற அந்தப் பெண் ஆஞ்சநேயரை சுற்றும் போது எண்ணைக் கையால் அருகில் இருந்த சுவற்றில் ஒரு புள்ளி வைக்க, சுரேஷ் என்கிற என் நண்பன் அடுத்த புள்ளி வைக்க, தினமும் 108 புள்ளிகள் முடிய நாங்கள் எண்ணிக் கொண்டிருந்தோம். இதற்கு நடுவில் யாரோ ஒரு சிறுவன் வந்து அவன் ஹால் டிக்கெட் நம்பரை எழுதி விட்டு போவான். இப்படியே எண்களாலும் கோடுகளாலும் சூழப்பட்டிருந்த ஆஞ்சநேயருக்கு வெண்ணெயையும் தாண்டி மூச்சடைத்துப் போயிருக்கும்.
சட்டென்று ஒரு டைவர்ஷன். திருப்பாவை எப்படி மனப்பாடம் ஆகிற்று என்று இன்னமும் தெரியவில்லை. காலை சமையல் செய்து கொண்டே கிச்சனில் இருந்து பாடும் அம்மாவும் காரணமாய் இருந்திருக்கலாம். ஆடி மாத லவுட்ஸ்பீக்கரில் இருந்து தாயே கருமாரி என்று எல்.ஆர்.ஈஸ்வரி பாடியதும், எங்கள் வீட்டு மர்ஃபி டேப்ரிக்கார்டரில் இருந்து வந்த பெங்களூர் ரமணி அம்மாளின் கணீர் குரலும் மனனம் ஆயின. நானாகவே ரொம்பவும் விரும்பிக் கேட்ட டிவோஷனல் பாடல்களை பாடியது ஒன்று எம்.எஸ் அல்லது பித்துக்குளி முருகதாஸ். வீட்டில் அடிக்கடி ஒலிக்கும் டி.எம்.எஸ்ஸின் கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் பாடல்களும், நாகூர் ஹனிஃபாவின் இறைவனிடம் கையேந்தும் குரலும் பின்னர் பிடித்துப் போயின.
பள்ளியில் படிக்கும் காலத்தில், தினத்தந்தியில் அன்றைய திருப்பவையையும் திருவெம்பாவையையும், ஐந்து வரி தெளிவுரையோடு ஒரு கட்டம் கட்டி போடுவார்கள். திருப்பாவை அறிந்திருந்ததால் திருவெம்பாவையை திரும்பத் திரும்பப் படித்தேன். எம்பாவாய் வார்த்தையை காப்பியடித்தது ஆண்டாளா மாணிக்க வாசகரா என்று சந்தேகத்தோடு உலாத்தியதுண்டு. ஆண்/பெண் வித்தியாசங்கள் இருந்தும், திருவெம்பாவையின் பத்தொன்பதாம் பாடலில் தான் இரண்டிற்கும் ஒற்றுமை தெரிந்தன. இப்போது படித்தாலும், அந்த ஒற்றுமைகள் வாழ்கின்றன. இது திருப்பாவையா, திருவெம்பாவையா என்று தெரியாமல் படித்தால், கண்டிப்பாய் குழம்பிப் போவீர்கள்.
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.
0000
வாரப் பத்திரிக்கைகளில் Most read/emailed என்று செக்ஷன்கள் வைத்துப் பார்த்தால் டாப் டென்னில் வருவது எவை என்பதை யோசித்துப் பார்க்கலாம்.
1. இந்த வாரம் எப்படி?
2. எதாவது ஒரு பெயர்ச்சிப் பலன்.
3. கோலிவுட் ரவுண்ட்-அப்
4. _____ நடிகருக்கு பிறந்த குழந்தைப் படங்கள்
5. ______ நடிகை திரும்ப நடிக்க வரும் முன்னர் வரும் மணியோசை
6. எதாவது ஒரு கருத்துக் கணிப்பு
இப்படியாக முக்கிய செய்திகளில் முக்கியமாக இருப்பது ஜோசிய ஹேஷ்யங்கள். வருடத்தின் முதல் வாரத்தில் இந்த வருடம் எப்படி இருக்கும் என்று மாத வாரியாக எழுதும் ஜோசியர்கள், வார ஜோசியம் எழுதும் பொழுது வருட முதலில் எழுதியதை ரெஃபர் செய்து எழுதுகிறார்களா? இப்படி சமீபத்தில் தேடிப் பார்த்த பொழுது, அக்டோபர் மாதத்தில் அமேசிங் வைபவம் ஒன்றும் வேலை சார்ந்த கவலை ஒன்றும் வரலாம் என்று எழுதியிருந்தார் ஒரு ஜோதிடர். அக்டோபர் மாதத்தில் வார வாரம் என்ன எழுதியிருக்கிறார் என்று படித்துப் பார்த்த பொழுது இரண்டுக்கும் ஆறல்ல அறுபது வித்தியாசங்கள் தெரிந்தன. இம்மாதிரி ஜோசியங்கள் ஒருவேளை வானிலை மாதிரி மாறிக் கொண்டே இருக்கும் போலிருக்கிறது.
இவை எதனால், எவரால், எப்படி எழுதப்படுகின்றன என்பதை எல்லோரும் அறிவோம். ஆனாலும் எல்லோரும் வருங்காலத்தை எட்டிப் பார்க்கிற ஆர்வத்தில் இருக்கிறோம் என்பது தான் மனித இயல்பாய் இருக்கிறது. இந்த பத்திரிகையிலும் இப்படியெல்லாம் போட்டால் pageviews பிய்த்துக் கொண்டு பறக்கும் என்பதால், ஆசிரியரை இவற்றை பரிசீலிக்குமாறு மெயிலனுப்பியிருக்கிறேன். நீங்களும் பரிந்துரைக்கலாம்.
0000
சமீபத்தில் ஜூலியன் அசாஞ்ச் பற்றி நாராயணன் எழுதியிருந்த கட்டுரை மிகையாக அவரை ஒரு ஹீரோவாக மட்டுமே காட்டி இருப்பதாய் எனக்கு தோன்றினாலும், கட்டுரைக்குப் பின் இருந்த கடின உழைப்பு தெரிந்தது. பிடித்திருந்தது. ரெண்டு நாள் பேப்பர் படிக்காமல் போனால் இப்படி ஏதாவது ஒரு பெரிய விஷயம் நடக்கும் நாட்களில் நாமிருக்கிறோம். அப்படியிருக்க இந்த மாதிரி சுருக்கமான ஆனால் தெளிவான விவரிப்புகள் ரொம்பவும் முக்கியம். இவைகளை எழுத ஆள் அதிகமில்லை.
இந்த மாதிரி ஒரு 1000 வார்த்தை கட்டுரை எழுத அவர் குறைந்தது ஆறிலிருந்து பத்து மணிநேரம் வெறும் படிக்க மட்டுமே செலவழித்திருக்கலாம். இதற்கு பிறகு படித்ததில் இருந்து விவரங்களை தவிர்த்து கருத்துக் கூறுகளை மட்டும் உள்ளடக்கிய ஒரு கட்டுரை எழுதுவதற்கு முன் முழி பிதுங்கி விட்டிருக்கும்.
இம்மாதிரி கட்டுரைகளை முதலில் படிக்கவும், பிடித்திருந்தால் ஓரிரு வார்த்தைகளில் ஒரு மெயிலோ/கமெண்டோ அனுப்பலாம், தப்பில்லை.
– இது சமீபத்தில் தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.