”நேற்று ஜீனோ ஜீனோ தான் என்றெல்லாம் சொன்னாயே, நீ ஏன் இன்னமும் ஒரு நாய்க்குட்டி எல்லாம் வாங்கல?” என்று நண்பர் ஒரு வாட்ஸ்அப்பில் கேட்டிருந்தார்.
போன இரண்டு வருடங்களில் வீட்டிலிருந்த போது செய்வதறியாது, பல நண்பர்கள் பாண்டமிக் பப்பிக்களை வாங்கியிருக்கிறார்கள். குறிப்பாக இதற்கு முன்பின் நாய்களை வளர்க்காத இரண்டு நண்பர்கள் வாங்கியிருப்பதை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். இந்த தொற்று காலத்தில் சட்டென விலையேறிப் போன வஸ்துக்கள் மூன்று – டாய்லெட் பேப்பர், வீடு மற்றும் நாய்க்குட்டிகள்.
ஒரு ஆறு மாதத்திற்கு முன்பாவது இந்த பப்பிகளுக்கு முன்பதிவு செய்ய வேண்டும். இதற்கென தனியாக ப்ரிடர் க்ரூப்புகள் இயங்குகின்றன. ரிட்ரீவரோ டூடுலோ என்று என்னென்னவோ ப்ரீட்களில் கலர் கலராக சைஸ் வாரியாக விற்கப்படுகின்றன. $50 முதல் $5000 வரை அமெரிக்காவுக்கே உரித்தான பாணியில் க்ரெடிட் கார்டில் முன்பதிவு செய்து கொள்ளலாம். நீங்கள் கேட்டிருந்த குட்டி பிறந்தவுடன், அதன் புகைப்படம் உங்கள் மொபைலுக்கு அனுப்பப்படும். பிரதி ஞாயிறு நீங்கள் போய் உங்கள் நாய்க்குட்டியுடன் விளையாடிவிட்டு வரலாம். எட்டு வாரங்களுக்குப் பிறகு உங்கள் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வரலாம். ஓரிரு வாரங்களுக்குள் திரும்பிக் கூட கொடுக்கும் வசதியெல்லாம் இருப்பதாகச் சொன்னார்கள்.
பிறந்த குழந்தையைப் போல உங்கள் வீட்டிற்கு வரும் முதலிரு மாதங்கள் கடினமாதே. ஹவுஸ்ப்ரேக் செய்ய இரவெல்லாம் கண்விழித்து ஒரு வழியாக நாய்க்குட்டியைப் பயிற்றுவித்த பின் அதிரடி தான்.
எனக்குத் தெரிந்த நண்பர்கள் எல்லோர் வீட்டிலும் ஆண்கள் ரொம்பவும் தயங்கியே இப்படி ஒரு பாண்டமிக் பப்பியை வாங்க ஒத்துக்கொண்டார்கள். அல்லது ஒத்துக்கொள்ள வைக்கப்பட்டார்கள். ஆறு மாதம் கழித்து அந்த செல்லப்பிராணியிடம் அதிகம் ஒட்டிக் கொண்டதென்னவோ அந்த ஆண்கள் தான். இதில் எதோ சிண்ட்ரோம் இருப்பதாக உளவியளாளர்கள் கதைவிடலாம் நம்பாதீர்கள். இப்படியெல்லாம் சொல்கிறாயே உன் பதிலென்ன என்று நீங்கள் நினைக்கலாம். என் வீட்டிலும் பிக்கல் பிடுங்கல் இல்லாமலில்லை.
சில வருடங்களுக்கு முன் மகனின் பிடுங்கல் தாங்க முடியாமல் ஒரு பேட்டா மீன் வாங்கினோம். Petco என்றொரு கடைக்குப் போய் மீன், தொட்டி, அதில் வைக்க இரண்டு மூன்று அலங்கார பொருட்கள், அதற்கான உணவு என வாங்கி வரும்போதே, “லெட்ஸ் கால் திஸ் ஃபிஷ் மேக்ஸ், ஹி ஹிஸ் மை ப்ரதர்” என்று பெயர் வைத்தான். பேட்டா மீன் தனியாகவே வாழும். அது ஒரு முழு மீன் தொட்டியையும் எடுத்துக் கொண்டது. சரியாக மூன்று வாரங்களுக்குப் பின் அதற்கான உணவு கொடுப்பதும், தொட்டித் தண்ணீரை மாற்றுவதும் என் தலையில் விழுந்தது. தினமும், “ ஹாய் மேக்ஸ்” என்று சொல்லிவிட்டு எல்லோரும் ஜகா வாங்கிக்கொள்ள, அடுத்த மூன்று வருடமும் அதைப் பராமரித்தது உங்கள் நான்.

கடைசியாய் சில வாரங்கள் சரியாக உணவருந்தாமல் தண்ணீர் தொட்டியின் அடியிலேயே படுத்துக் கிடந்து, ஒரு நாள் மாலை உயிர் துறந்தது மேக்ஸ். சோகமாகியது வீடு. மகன் அழ ஆரம்பிக்க, மூன்று வருடமாக மேக்ஸை பார்த்துக் கொண்ட எனக்குப் பரம சோகம். இணையத்தில் தேடி, பலரும் சொன்ன மாதிரி மேக்ஸை கொண்டு போய் டாய்லெட்டில் போட்டு, அதைச் சுற்றி நின்று ஒரு முறை உச்சுக் கொட்டி, ப்ளஷ் செய்தோம். மகன் இன்றிரவு பாடம் படிக்க மூடில்லை என்று சொல்லிவிட்டு காமிக்ஸ் படிக்கப் போய்விட்டான்.
அடுத்த நாள் காலை, “நீ மேக்ஸ ப்ளஷ் பண்ணியிருக்க கூடாதுப்பா. ப்ளஷ் பண்றதுக்கு முன்னாடி மேக்ஸ் லைட்டா அசைஞ்ச மாதிரி இருந்தது” என்று ஜெர்க் விட்டான் மகன். பாவம் அவன் சோகம் அவனுக்கு என்று நினைத்துக் கொண்டேன். “நீ கொஞ்சம் ஒழுங்கா மேக்ஸோட தண்ணிய மாத்தி சரியா சாப்பாடு போட்டிருந்தா இன்னமும் ஆறு மாசம் இருந்திருக்கும்” என்றாள் மனைவி. கடைசி வரை பார்த்துக் கொண்டவனுக்கு இது தேவைதான் என்று நினைத்துக் கொண்டேன். இன்னமும் மேக்ஸ் ஞாபகம் வரும் போதெல்லாம், “ யூ ஷுடுண்ட் ஹாவ் ப்ளஷ்ட் இம், ஹி மஸ்ட் பி இன் ஹெவன் நவ்” என்று சொல்வான் மகன்.
இம்மாதிரி இன்னுமொரு பிரிவைத் தாங்க முடியாது என்றே தோன்றுகிறது. அதுவும் தொட்டுக் கூட பார்க்காத மீனுக்கே இப்படி என்றால், கொஞ்சி, முத்தமிட்டு, மடியில் அமர்த்தி, ஆரத்தழுவிய செல்ல நாய்க்குட்டிகளைப் பற்றி நினைத்துக் பார்க்க முடியவில்லை. இப்படியெல்லாம் சொல்லி பார்த்தாயிற்று, ஆனாலும் ஒரு நாய்க்குட்டியையாவது வாங்கியே தீருவது என்று வீட்டில் நடத்தப்படும் எதிர்ப்புக் கூட்டணியை எதிர்ப்பதற்குப் பைரவரை வேண்டுகிறேன்.
இப்படியெல்லாம் நான் சொல்லிவிட்டு, திடீரென ஒரு நாள், நாய் குட்டியை கட்டிக் கொண்டு இன்ஸ்டாகிரமில் ஒரு செல்பி போடலாம், சொல்வதற்கில்லை. பெயர் என்னவோ கண்டிப்பாய் ஜீனோவாகத்தான் இருக்கும்.
Leave a Reply