நான் எழுதிக் கொடுத்தால் என் வீட்டு சலவைக் கணக்கைக் கூட பதிப்பிக்கத் தயாராக இருக்கிறார்கள் பத்திரிக்கையாளர்கள் என்று ஒருமுறை நகைச்சுவையாக எழுதியிருந்தார் சுஜாதா. ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முராகமி, சுஜாதா போலவே பிரபலமானவர். ஜப்பானையும் தாண்டி உலகப் புகழ் பெற்றவர். இவர் எழுதினால் யாரும் எதை வேண்டுமானாலும் பதிப்பிக்க ரெடி.
முராகமி கொஞ்சம் விவகாரமான ஆசாமி. அவர் எழுத்தைப் போலவே கொஞ்சம் வித்தியாசமானவர். போன வருடம் தான் சேகரித்து வைத்திருக்கிற டீஷர்ட்டுகளை பற்றி ஒரு புத்தகம் போட்டார். அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்கள். பிரகஸ்பதி நான் அதையும் படித்துப் பார்த்தேன்.
தான் ஒரு பதுக்கல் பேர்வழி இல்லை என்றாலும் நான்கைந்து விஷயங்கள் தன்னை அறியாமல் குவிந்து போனது என்கிறார். எல்.பி ரெக்கார்டுகள், புத்தகங்கள், பென்சில்கள், டிஷர்ட்டுகள் இன்ன பிற. டிஷர்ட் என்பது ஒரு மலிவான எளிமையான உடை. எதோ கலை பொக்கிஷமெல்லாம் அல்ல. அதனால் போகிற இடமெல்லாம் கொஞ்சம் மாறுபட்டுத் தெரிகிற ட்ஷர்டுகளை வாங்க ஆரம்பித்தார். அவர் அப்படி வாங்குவது தெரிந்து உலகெங்கும் இருக்கும் அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு டிஷர்டுகளை அனுப்ப ஆரம்பித்தார்கள். முதலில் முராகமி வீட்டின் அலமாரிகள் நிறைந்தன, பின்பு அட்டைப்பெட்டிகள் என கார் கராஜ் வரை ட்ஷர்டுகளால் நிரம்பி வழிய வேறு வழியில்லாமல் ரொம்பவும் வித்தியாசமான ட்ஷர்டுகளை படமெடுத்து புத்தகம் போட்டுவிட்டார். பெயர் – The T-Shirts I Love.
ஜப்பானிய உணவான சூஷீயில் ஆரம்பித்து, கெட்ச்சப், பர்கர், விஸ்கி, பியர், பறவைகள், விலங்குகள், இசை, கார்கள், மராத்தான், புத்தகங்கள், யூனிவர்சிடிகள், சூப்பர்ஹீரோக்கள் என்று எல்லா துறைகளிலும் சேர்த்து வைத்திருக்கும் டிஷர்டுகள் பற்றி அவற்றின் படங்களோடு கதை சொல்கிறார்.
”இவ்வளவு டிஷர்ட்கள் வைத்திருக்கிறீர்களே நீங்கள் பொக்கிஷமாய் நினைக்கும் டிஷர்ட் எது?” என்று ஒரு நிருபர் கேட்க, முராகமி சொன்னது சுவாரஸ்யமானது.
ஹவாய்த் தீவில் ஒரு மலிவு விலை டிஷர்ட் கடையில் “Tony” Takitani House (D) என்ற வாசகம் போட்டிருந்த டிஷர்ட் ஒன்றை வாங்கினார். விலை வெறும் ஒரு டாலர். வீட்டிற்கு வந்தவுடன் இந்த டோனி என்பவர் ஒரு உண்மை மனிதனாய் இருந்தால் எப்படியிருப்பான் என்று யோசிக்கப் போய், டோனி டாகிடானி என்று பெயரிட்டு ஒரு சிறுகதை எழுதினார். அந்த கதை பிரபலமாகப் போய் பிறகு அதே பெயரில் திரைப்படமாகவும் வெளியாகி பெரும் புகழை வாங்கித் தந்தது. “என் வாழ்க்கையில் எத்தனையோ முதலீடுகள் செய்திருக்கிறேன், ஆனால் அந்த ஒரு டாலர் டிஷர்ட் தான் பெஸ்ட்”.
இந்த சம்பவத்திற்கு சுவையான ஒரு சிறுகதை முடிவு இருக்கிறது. அந்தப் படம் வெளிவந்து பிரபலமானவுடன், முராகமிக்கு டோனியிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. “நான் தான் அந்த உண்மையான டோனி டாகிடானி. அந்த டிஷர்ட் நான் டெமாகிரடிக் கட்சிக்காக ஹவுஸ் தேர்தலில் நின்ற போது தயாரித்தது. தேர்தலில் நான் தோற்றுப் போனேன். அந்த டிஷர்ட் உங்களுக்காகவாவது உதவியிருப்பது சந்தோஷம் தான். நான் ஒரு வக்கீல், ஒரு முறையாவது என்னுடன் கோல்ஃப் விளையாட வாருங்கள்”.
முராகமிக்கு நீங்கள் இன்னமும் டிஷர்டுகள் அனுப்பலாம். அப்படியே அடியேனுக்கும் ஒன்று அனுப்பினால் இப்பகுதியில் உபயதாரர் பெயர் விவரம் குறிப்பிடுகிறேன். அனுப்பும் போது இந்திய யானை, அகல் விளக்கு, பாரதி மீசை என்றெல்லாம் இல்லாமல் தற்காலத் தமிழ் வார்த்தைகளாக அனுப்பக் கோருகிறேன். வாழ்க தமிழ்!


Leave a Reply