தமிழில் ஒரு சொல்லின் மூலத்தை அறிய முற்படுவது பல இடங்களுக்கு நம்மைக் கூட்டிச் செல்லும். போத்தீஸ் வாசலிலோ, டாக்டர் க்ளினிக்கிலோ நேரம் கடத்தும் போது நல்ல பொழுது போக்கு. இல்லையென்றால் வழக்கப்படி ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் பார்க்கலாம். இப்படி etymologyயை பற்றி யோசிக்கும் போது தமிழில் இதற்கென இணைய மென்பொருள் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன். ம்ஹூம் அகப்படவில்லை. ஒரு சொல்லை உள்ளிட்டு அதை வேர்ச்சொல்லாக ஆராயும்போது அந்த சொல்லுக்குப் பல விதங்களிலும் இணைக்கப்பட்ட சொற்கள் அந்த சொல் மரத்தில் இலைகளாக மிளிர்ந்தால் எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள்.
வாதம் என்ற சொல்லைப் பற்றித் தேடும் போது தோன்றியது இது. வாதம் என்றால் நமது நினைவுக்கு வருவது இரண்டு விஷயங்கள் – வாத நோய் அல்லது ஒரு தரப்பை எடுத்துக் கூறுதல். ஆனால் சற்றே ஆழமாகச் சிந்தித்தால் வாதம் பல சொற்களுடன் சேர்ந்து பலப்பல பொருள்களைத் தருகிறது. பக்க + வாதம், வி+வாதம், பிடி+வாதம், வாக்கு+வாதம், பிரதி+ வாதம், எதிர்+வாதம், தீவிர+வாதம், எழுத்தாளர்களுக்கு பிடித்த மாயயதார்த்த+வாதம், விதண்டா+வாதம் என போய்க்கொண்டே இருக்கிறது. இந்த ஆராய்ச்சி தமிழில் மட்டுமல்ல எல்லா மொழிகளிலும் ஒரு உற்சாகமான செயல் தான்.
ஜனநாயகம் என்பதே ஒரு பெரிய வாக்குவாதம் என்பார்கள். சரிதான். ஆனால் தினப்படி நாம் செய்யும் விவாதங்களையும் வாக்குவாதங்களையும் யோசித்துப் பாருங்கள், விஜய்யா அஜித்தா, தாமரையா சூரியனா, டிரம்ப்பா கிளிண்டனா, சரவணபவனா சங்கீதாவா என வேண்டாத வீணடிக்கப்பட்ட தருணங்கள் தமிழனுக்குப் பாயசம் போல.
எப்பவுமே நான் ஒப்பினியனேட்டட் என்று ஒரு காலத்தில் நானும் காட்டுக்கத்தல் கத்தியவன் தான். நாற்பதைத் தொட்டவுடன் விவாதமா இருதயமா என்று தோன்ற பார்த்தசாரதி கோயில் பசு போல் கொடுக்கும் அகத்திக்கீரையை உண்டு அமைதியா இருக்க பழகிக் கொள்கிறேன். இன்னமும் முடிந்தபாடில்லை.
அதெல்லாம் முடியாது காரசாரமான வாக்குவாதம் என் பிறப்புரிமை என சொல்பவர்களுக்கு, அந்த விவாதத்தில் அமைதியை கடைப்பிடித்து வெற்றி பெற நான் படித்த/கேட்ட விதிமுறைகள் இவ்விவை –
- முக்கியமானது – குரலை எழுப்பிப் பேசாதீர்கள். குரல் எழுப்புவதினால் உங்களில் முளையின் இருபுறமும் பாதாம் பருப்பு வடிவத்தில் உள்ள அமிக்டாலா(amygdala) என்ற பேட்டையில் amygdala hijack என்ற செயல் நடக்கிறது. செய் அல்லது செத்து மடி என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டு, உங்கள் உடம்பும் உணர்ச்சிகளும் கட்டுப்பாட்டிலிருந்து காணாமல் போகின்றன. அதன் பின்பு தலைச் சூடாகும், கைகால் நடுங்கும், பேச்சு குழறும். இந்த சமயத்தில் தான் நம்மையும் உணராமல் வார்த்தையாலோ செயலாலோ எதாவது சொல்லி/செய்து நட்புகளும் உறவுகளும் அறுந்து போகின்றன. உங்கள் குரல் கட்டுப்பாட்டில் இருக்கும் போது சிறப்பாக யோசிக்க முடியும்.
- உங்களோடு வாதம் செய்பவரைத் தாக்காமல் அவரின் வாதத்தைத் தாக்குங்கள். உதா: ”இப்பயெல்லாம் சரவணபவன் முன்ன மாதிரி இல்ல. சங்கீதா தான் டாப்.” என்று சொல்பவரை நோக்கி, “உனக்கும் உன் குடும்பத்துக்கும் லேட்டஸ்ட் எதுவோ அதுதான் டாப். சுட்டு சுண்ணாம்பா போனாலும் கோட்டு போட்டுட்டு ஆபிஸ் போறவன் தானே நீ” என்றெல்லாம் சொன்னால் மூக்கு உடைபடும் ஜாக்கிரதை.
- வாதங்களுக்கு இடையே ஜோக் அடிப்பது சூழ்நிலையின் வெப்பத்தைக் குறைக்கும்.
- எதிரிலிருப்பவர் ஏதாவது சொல்ல அதை கேளாது நீங்களும் ஏதாவது சொல்வதற்குப் பதில், உங்கள் வாதத்தைக் கேள்விகளாக மாற்றுங்கள். அவருடைய பக்க தர்மத்தை உங்களுக்குப் புரிந்து கொள்ளச் சிறந்த வழி. அப்படி பதில் சொல்லும் போது அவர் யோசிக்க ஆரம்பித்து தன்னுடைய வாதத்திலிருந்து கொஞ்சம் ஜகா வாங்கலாம்.
- உங்களுடைய பார்வையும் கோணமும் குறைபட்டதாக இருக்கலாம் என்று நம்புங்கள். நம் வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், படிப்பு, சூழ்நிலை இவற்றால் நம்முடைய வாதமும் உலக கண்ணோட்டமும் வேறுபட்டது என்று உணர்ந்தால் வாக்குவாதம் அனாவசியம் என்று புரியும் .
- இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக – நம்மால் யாரையும் எதையும் மாற்ற முடியாது என்று உணருங்கள். அப்படியே மாற்றினாலும் அது வாக்குவாதத்தினால் முடியவே முடியாது. இம்மாதிரி வாக்கு வாதங்களினால் என்ன பயன் என்பது பற்றியே எனக்குக் கேள்விகள் இருக்கின்றன. பேசித்தான் ஆக வேண்டும் என்றால் பைக்கை எடுத்துக் கொண்டுபோய் எலியட்ஸ் பீச்சில் உட்கார்ந்து கடற்காற்றுக்கு நடுவே அமைதியாய் பேசலாம். அல்லது மொட்டை மாடியில் இரவில் இளையராஜா இசைக்க விட்டு மெல்லப் பேசினால் எதிராளி கேட்க முற்படுவார். மாறுவாரா என்பது கேள்விக்குறியே.
போன மாதம் சென்னை சென்றிருந்தபோது சங்கீதாவிலிருந்தும் பிறகொரு முறை சரவண பவனிலிருந்தும் சொமாட்டோவில் ஆர்டர் செய்து சாப்பிட முடிந்தது. இவைகளில் இருந்த வந்த சாம்பார்களுக்கிடையே கிட்டத்தட்ட ஆறு கிலோமீட்டர் தூரம். காபிக்கு 10 கி.மீ. அதாவது இன்னமும் சரவணபவனுக்கு அருகில் கூட சங்கீதாவால் வரமுடியாது. இல்லை என்று சொல்பவர்களுடன் விவாதம் செய்ய நான் ரெடி. நீங்கள் தோற்பது உத்தர+வாதம்.
Leave a Reply