kirukkal.com

  • about
  • archive
  • all that is
  • photoblog
  • August 10, 2021

    தாத்தாவின் அலமாரி

    இன்று இருந்திருந்தால் என் தாத்தா ஓங்கூர் துரைசாமியின் 95வது பிறந்தநாள். அவர் பிறந்தநாளன்று போன் செய்தால், ஆல் த பெஸ்ட் என்று மனதார வாழ்த்தி முடிப்பார். அந்த ஆல் த பெஸ்ட் என்னோடு நிறையவே ஒட்டிக்கொண்டு விட்டது. பிறகொரு நாள் நான் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்த போது கைகுலுக்கி, ஏதோ ஞாபகத்தில் ஆல் த பெஸ்ட் என்று சொல்லிவிட்டேன். ரஹ்மான் தன் தலையை உயர்த்தி ஒரு நொடி என்னை உற்று நோக்கிய போது தான் புரிந்தது நான் செய்த அபத்தம். அந்த அபத்தத்தைப் பற்றி தனியாக எழுதலாம்.

    பிறந்ததிலிருந்து இருபத்தேழு வயது வரை நான் பாட்டி தாத்தாவின் அருகிலேயே இருந்ததால் ஏகப்பட்ட ஞாபகங்கள். அதுவும் ஆறு வயது வரை அவர்களுடனே வளர்ந்ததால் தாத்தா சொன்ன உண்மைச் சம்பவங்களும், பாட்டி சாதம் ஊட்டச் சொன்ன கற்பனைக் கதைகளுமே என்னை வளர்த்தன. வீட்டில் முதல் பேரன் நான் ஆதலால் நிறையவே செல்லம்.

    தாத்தாவுடன் முதல் ஞாபகம் அவர் என்னை புரசைவாக்கத்தில் உள்ள மெயின் ரோடுக்கு கூட்டிச் சென்று ஏதோ ஒரு தட்டுமுட்டு கடையில் பொம்மை வாங்கிக் கொடுத்த ஞாபகம். அப்போது அந்த கடையை நான் சுவாமி கடை என்று சொன்னதால் அந்த கடைக்காரரும் இந்த கடைக்கு சுவாமிஸ் ஸ்டோர் என்று பெயரிட்டது பற்றி என் தாத்தா சொன்னார். அப்பொழுது நாங்கள் இருந்தது புரசைவாக்கத்தில் வெள்ளாளர் தெருவின் ஐந்தாம் நம்பர் வீட்டில். கொஞ்சம் பெரியவன் ஆனவுடன் பக்கத்தில் உள்ள ஒரு வீட்டைக் காண்பித்து இந்த வீட்டில்தான் ஆர்.கே. நாராயணன் பிறந்து வளர்ந்தார் என்றார். அதுவும் ஒரு வகையில் என்னை எழுத்தாளன் ஆவதற்குத் தூண்டியது என்று சொல்லலாம்.

    தாத்தாவுடன் கைப்பிடித்து கங்காதீஸ்வரர் கோவிலுக்குப் போன ஞாபகங்கள் நிறைய. “தாள்ள போட்டுக்கோ, விபூதியை நல்ல பட்டையா இட்டுக்கணும்” என்பார். சூரியன் இறங்கிப் போய் இருட்டும் முன் கோயிலின் வெளிப் பிரகாரம் சூடாக இருக்க, அங்கிருக்கும் மேடையில் கதா காலட்சேபம் சொல்ல ஆரம்பிப்பார்கள். அப்படியே அந்த சூட்டில் நானும் அவரும் உட்கார்ந்து கொள்வோம். கதை சொல்பவர் ஆரம்பிக்க அப்படியே கதை கேட்டுக் கொண்டே தாத்தாவின் மடியில் படுத்து உறங்கிப் போவேன். எட்டு மணி வாக்கில் என்னை எழுப்பி வீட்டிற்குக் கூட்டி வருவார், அங்கு நான் கதை கேட்டதை விட அக்கோயிலின் சத்தத்தில் அமைதியாக உறங்கியது தான் அதிகம்.

    ஆனால் தாத்தா சொன்ன கதைகள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். குறிப்பாக அவருடைய குழந்தைப் பருவக் கதைகள்.

    தாத்தா பிறந்தது ஓங்கூரில். மேல் மருவத்தூருக்கும் திண்டிவனத்துக்கும் சரியாக நடுவிலிருந்த ஒரு குக்கிராமம். இன்று எஸ்.ஆர்.எம் யூனிவர்சிடி வந்து கிராமம் டவுனாகிவிட்டது. 1927ல் அது ஒரு படு கிராமம். அந்த கிராமத்திலிருந்த ஓரிரு ஓட்டு வீடுகளில் இவரின் வீடும் ஒன்று. அப்பா கிராமத்தின் கணக்குப் பிள்ளை. தாத்தாவைத் தொடர்ந்து வீட்டில் ஒரு ஆண் மற்றும் நான்கு பெண் பிள்ளைகள் .

    “தினம் கார்த்தால எங்கம்மா என்னைக் குளிப்பாட்டி, மை இட்டு வீட்டு திண்ணையில் உட்கார வெச்சுடுவா. அங்க போற வரவா எல்லாம் என் கன்னத்தைக் கிள்ளி துரை துரைன்னு சொல்லியே வீரராகவன்ற என் பேர் துரைசாமி ஆகிப் போச்சு. அப்புறம் எங்கப்பா என்னைக் கூட்டிப் போய் எதிர் பக்கமா இருக்கிற வீட்டில விட்டுவார். அங்க தான் பள்ளிக்கூடம். திண்ணையில் மணலை விரிச்சு அதுல எழுதச் சொல்லிக் கொடுத்தாங்க” என்பார்.

    பெண்களை திருமணம் செய்ய வீட்டை விற்று அதன் எதிரிலேயே ஒரு மண் குடிசை வீட்டிற்கு குடும்பம் மாற்றலானது. 12வது வயதில் தாத்தாவின் தலையில் வீட்டின் பெரிய பையன் என்று பாரம் விழ சென்னையை நோக்கிப் பயணமானார். “எங்க மாமா என்ன தொழுப்பேடு ரயில்வே ஸ்டேஷன்ல ட்ரெயின் ஏத்தி விட்டார். சின்னப் பையன் நான் எனக்கு மெட்ராஸை பத்தி என்ன தெரியும், ஏதோ வந்தேன் எங்கெல்லாமோ வேலை செஞ்சேன்”.

    கொஞ்ச வருடங்களுக்குப் பிறகு தன் தங்கைகளுக்கெல்லாம் திருமணம் முடிந்தவுடன், விழுப்புரத்தில் இருந்த தன் அத்தை மகளான அன்னபூரணியை மணந்து கொண்டார். “டேய் எட்டாங் கிலாஸ் படிச்சிருகேன், நன்னா இங்கிலீஷ் வரும். உங்க தாத்தாவை கல்யாணம் பண்ணிக்காம் இருந்திருந்தா இன்னமும் படிச்சிருப்பேன்” என்று என்னிடம் சொல்வாள் என் பாட்டி.

    திருமணம் முடிந்த கையோடு புரசைவாக்கத்தில் வாடகை வீட்டில் குடியேறினார்கள் பாட்டியும் தாத்தாவும். மூன்று குழந்தைகள். வருமானம் போதாமல் இரண்டு மூன்று வேலைகள் செய்ய ஆரம்பித்தார் தாத்தா. தன் குடும்பம் மட்டுமல்லாமல் ஊரில் உள்ள அப்பா அம்மாவையும் பார்த்துக் கொள்ள வேண்டும். பாட்டி இழுத்துப் பிடித்து குடும்பத்தை நடத்தினாள். பாரிஸ் கார்னரிலிருந்தது தாத்தா கணக்கெழுதும் கம்பனி. அங்கிருந்து புரசைவாக்கத்திற்கு நடந்தே சென்று வருவார். பஸ்சில் போனால் பத்துப் பைசா. அதை சேமிக்க தினமும் நடராஜா தான்.

    இந்த கடினமான வருடங்களை பற்றி பாட்டியிம் தாத்தாவும் தனித்தனியாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். தாத்தாவின் வெர்ஷனில் எப்பவுமே ஒரு நம்பிக்கை தெரியும். கொண்டு வரும் காசில் வீட்டை நடத்த வேண்டிய பாட்டிக்கோ எப்பவுமே கஷ்டம் தான். “எனக்கு என்ன தெரியும், நான் ஆபீஸ் போயிடுவேன், இவ தான் குழந்தைகளையும் வளர்த்து குடும்பத்தையும் நடத்தினா” என்று பாட்டியை கைகாட்டி விடுவார் தாத்தா. ஆனால் பாட்டிக்கும் தாத்தாவிற்கும் எவ்வளவிற்கு அன்னியோன்யம் இருந்ததோ அவ்வளவுக்கு அவ்வளவு சண்டையும் வரும்.

    1970களில் போட்டோபோன் என்று ஒரு நிறுவனத்தில் கணக்கெழுத வேலைக்குச் சேர்ந்தார் தாத்தா. அந்த நிறுவனம் தியேட்டர்களில் புரஜக்டர்கள் விற்கும் வியாபாரத்தில் இருந்தது. ராணி சீதை ஹால் இருக்கும் அதே கட்டிடத்தில் இருந்தது அவருடைய ஆபீஸ். தினம் மதிய வேலையில் அங்கிருந்து நடந்து போய் ட்ரைவ்-இன் வுட்லண்ட்ஸில் காபி குடித்தை பற்றி சொல்வார். 1996ல் இருந்து 2000ம் வரை தினமும் நானும் ஆங்கே தினமும் ஆஜராகி அதே காபியை குடித்தது வேறு கதை.

    அப்படி ஒருநாள் ஆபிஸுக்கு கணக்கெழுத போன ஒரு நாளில் தாத்தாவிற்கு ஹார்ட்-அட்டாக் வந்தது. ஹாஸ்பிட்டலில் அனுமதித்த பின் அம்மாவின் ஆபிஸுக்கு போன் வர அவளும் மாமாவும் மாமியும் ஓடிப் போனார்கள். சின்னதாய் ஒரு பைபாஸ் செய்து வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். அன்றிலிருந்து ஆரம்பித்தது தாத்தாவிற்கு டையட். பாட்டி அன்று முதல் தாத்தாவிற்கு எதை கொடுத்தாலும் பார்த்துப் பார்த்து தான் கொடுப்பாள். சர்க்கரை கம்மியாய், தேங்காய் சேர்க்காமல், அப்பளம் இல்லாமல் என்று ஏகப்பட்ட கெடுபிடி. எற்கனவே தண்ணியாய் இருக்கும் ஆவின் பாலை காய்ச்சி அதை டீ வடிகட்டியினால் வடிகட்டிய பின் தான் காபி போட்டுக் கொடுப்பாள்.

    தாத்தாவை பற்றி முக்கியமாக ஒன்றை சொல்ல மறந்து விட்டேன். தாத்தா ஒரு hoarder. எதையும் தூக்கிப் போட மாட்டார். பரணிலில் என்றோ உபயோகப்படுத்திய பழைய இரும்பு சேர் இருக்கும், இரும்புப் பெட்டி இருக்கும், அதில் சில பல பேப்பர்கள் இருக்கும். தூக்கிப் போட யாரும் எத்தனித்தால், ” அது மாட்டம் இருந்துட்டுப் போறது, உங்களை என்ன பண்றது” என்பார். பழைய பேனாக்களை சேமித்து வைப்பார். தன் மகளின் திருமண பட்ஜெட் கடைசி நயா பைசா வரை எழுதி வைத்திருந்தார்.

    சில வருடங்களுக்கு பிறகு தாத்தா ரிட்டையரானார். அப்பொழுதும் தன் மகனின் நிறுவனத்திற்கு கணக்கெழுதினார். புரசைவாக்கத்திலிருந்து ராமாபுரத்திற்கு வீடு மாறினார்கள். அந்த வீட்டில் தாத்தாவிற்கு ஒரு அறை இருந்தது. அதில் உட்கார்ந்து தான் கணக்கெழுதுவார். அதில் தனக்கென ஒரு அலமாரி வைத்திருந்தார். நான்கு அடி உயரத்திற்கு ஒரு இரண்டடி அகலமான ஒரு கருப்பு மர அலமாரி. அதில் மூன்று அடுக்குகள் இருந்தன. கீழே இருந்த கடைசி அடுக்கு இழுக்கும் படி இருக்கும். அந்த அலமாரியை யாரையும் தொட விடமாட்டார், தன் பேரப்பிள்ளைகள் உட்பட. அதில் தான் அவருடைய இதர பொருட்களை வைத்திருந்தார். பஸ் டிக்கெட், செல்லாத நாணயங்கள், சட்டை பட்டன்கள், பேனாக்கள், பழுப்படைந்த காகிதங்கள். அந்த அலமாரியின் வெளியே சகலமும் ஓட்டப்பட்டிருக்கும் – பஞ்சாங்கக் குறிப்புகள், இவ்வருட மாத காலண்டர், கிரிக்கெட் அட்டவணை, இன்னபிற. அதில் நான் ஒரு ரஜினி படமும் ஓட்டப் பார்த்தேன். தாத்தா சில வாரங்களுக்குப் பின் அதன் மேல் சங்கராச்சாரியார் படத்தை ஒட்டி ஒரு ரஜினி ரசிகனின் பழியை சம்பாதித்துக் கொண்டார்.

    தாத்தா கிரிக்கெட் பார்ப்பார், தினமும் ஹிந்துவும் திணமணியும் படிப்பார். துக்ளக் படிப்பார், என்னையும் படிக்க்ச் சொல்லுவார். வாராவாரம் சோ எழுதிய மகாபாரதம் பேசுகிறதை படித்துக் கொண்டே டீவியில் மகாபாரதம் பார்த்தார். அதை அவருடன் சேர்ந்து படித்த ஞாபகம் இன்னமும் உள்ளது. ஜெயலலிதாவின் தீவிர அனுதாபியாய் இருந்தார். சங்கராச்சாரியாரின் கைதுக்குப் பிறகு அவருக்கு ஜெயலலிதாவின் மேல் இருந்த ஆதரவை பின் வாங்கிக் கொண்டார். அவரை திட்டித் தீர்த்தார், எங்களுக்கெல்லாம் ஆச்சரியமாய் இருந்தது.

    கொஞ்ச நாட்களுக்கு பிறகு பாட்டிக்கு கண் ஆப்பரேஷன் செய்தார்கள். அதில் கொஞ்சம் தப்பாய் போய் அவளுக்கு ஒரு கண் பார்வை சரியாக தெரியாமல் போயிற்று. ஆனாலும் தன் ஒற்றை கண்ணை வைத்துக் கொண்டு தாத்தாவிற்கு தானே உணவு கொடுப்பாள். 2013ல் அவள் இறந்து போகிற வரையில் தாத்தாவை பார்த்துக் கொண்டாள். அவள் இறந்த போது நான் அமெரிக்காவில் இருந்தேன். 2014கில் சென்னை சென்றிருந்த போது தாத்தாவை பார்க்கப் போனேன். வீட்டின் முன் அறையில் பாட்டியின் ஒரு படம் மாட்டப்பட்டிருந்து. தாத்தாவை பார்த்தவுடன், “என்ன தாத்தா இப்படி ஆயிடுச்சு” என்றேன். தன் தலையை திருப்பி பாட்டியின் படத்தை பார்த்து, அங்காலாய்ப்பாய், ” அவ போயிட்டா” என்று கைகளை போச்சு என்றபடி அசைத்தார். மற்றபடி ஒன்றும் சொல்லாமல் இருந்து விட்டார். இத்தனை வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு பாட்டியை பற்றி ஏதாவது சொல்வார் என்று நினைத்த எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாய் போய்விட்டது. மேலும் ஒன்றும் பேசாமல் இருந்து விட்டேன்.

    வயதாக ஆக அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாய் ஞாபகங்கள் தப்ப ஆரம்பித்தது. தள்ளாட ஆரம்பித்தார். 2017ல் சென்னை சென்றிருந்த போது இரண்டு நாட்கள் அவருடன் இருந்தேன். அவர் வாயை கிளரி ஏதாவது கதை சொல்வாரா என்று பார்த்தேன். அப்பொழுதும் தன் 90வது வயதில் இரண்டொரு வாழ்க்கைக் கதைகளை சொன்னார். கடந்த இரண்டு வருடங்களாக ரொம்பவும் முடியாமல் படுத்த படுக்கையாய் இருந்தார். அப்பொழுதும் வாக்கர் வைத்து நடந்து வந்து கிரிக்கெட் பார்ப்பார், பிறகு சென்று படுத்துக் கொள்வார்.

    இவ்வருட பிப்ரவரியில் பிஷ்மாஷ்டமி அன்று தன் 94ம் வயதில் தாத்தா அவரின் வீட்டில் அவர் மகனின் மடியில் அமைதியாக காலமானார். அவரின் கடைசிச் சடங்குகள் முடிந்த பின் அவரின் அறையை சுத்தம் செய்தார்கள். என் கஸின் வாட்ஸ்சாப்பில் மெசேஜ் அனுப்பினான். “தாத்தாவோட அலமாரியை கடைசியா நோண்ட முடிஞ்சது. you would have loved clearing his cupboard…full of life. ஆனா முன்ன மாதிரி ரொம்பவும் hoarding விஷயமெல்லாம் இல்ல, எதோ சின்ன சின்ன விஷயம் இருந்தது. ஆனா அலமாரியோட அந்த கடைசி drawerல ஒரே ஒரு கிழிஞ்ச போட்டோ மட்டும் தான் இருந்தது, interesting” என்றான்.

    தன் திருமணத்தன்று buff வைத்த ஜாக்கெட் போட்டிருக்கும் அழகான அன்னபூரணிப் பாட்டியின் அந்தப் புகைப்படத்தை அன்று தான் நாங்கள் முதலில் பார்த்தோம்.

  • May 23, 2021

    வோர்ட்பரஸ்ஸுடன் ஒரு வாரம்

    பழைய ப்ளாக்கையும் புதியதையும் இணைக்கப் போய் ஒரே களேபாரம். ஆங்கில வலைப்பதிவின் பாதி பதிவுகளை காணவில்லை. இருக்கும் பதிவுகளில் இருக்கும் படங்களை காணவில்லை. நாலு நாட்களாக பழைய பேக்-அப்களை தேடி அலுத்துப் போய் தற்பொழுது தேறிய வோர்ட்ப்ரஸ்ஸை பழுது பார்த்துக் கொண்டிருக்கிறேன். ப்ரேக் கே பாத்…

  • May 2, 2021

    ஹாப்பி பர்த்டே வாத்யாரே!

    writer sujatha

    வாத்தியார் இன்று இருந்திருந்தால் அவருடைய இளமையான 86ம் வயதில் ஐபிஎல்லையும், வைரஸையும், மாற்றமில்லாமல் கழகங்களுக்கு மாற்றி மாற்றி ஓட்டுப் போடும் தமிழனையும் பற்றி கற்றதும் பெற்றதும் கட்டுரை எழுதிக் கொண்டிருப்பார்.

    தமிழில் எழுதப்பட்ட பிரமாதமான coming-of-age நாவலான நிலா நிழல் படித்தவுடன் பிடித்த சுஜாதா பித்து இன்னமும் விட்டபாடில்லை. ஹாப்பி பர்த்டே வாத்யாரே!

  • May 1, 2021

    வாட்ஸ்சாப் வைத்தியர்களும் பக்கெட் பிரியாணியும்

    மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயிலின் குடமுழுக்கை 144ஐ போட்டு, கூட்டத்தை கட்டுப்படுத்தி நல்ல வெயில் அடிக்கும் நாளில் பிரகாசமாய், பிரமாதமாய் நடத்தியதை பொதிகையில் காணப்பெற்றேன். இந்த தொற்று நாட்களில் இம்மாதிரி கட்டுப்பாடுகளை விதிப்பது தவிர்க்கமுடியாதது தான். தொற்று பற்றற்று போனவுடன் கும்பாபிஷேக கோயிலை போய் பார்த்துக் கொள்ளலாம். அதுவரை பலப்பல ட்ரோன்கள் சமேதமாக சுத்தி சுத்தி விமானத்தையும் ராஜ கோபுரத்தையும் ஒரே நேரத்தில் பார்க்க வைத்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள் பல. பொதிகையில் கொஞ்சம் சத்தமாய் கூடவே உரை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

    இப்போதிருக்கின்ற நிலைமைக்கு மருத்துவக் கடவுளான வைத்திய ஈஸ்வரனைத் தவிர நம்மிடம் இருப்பது இரண்டே விஷயங்கள் – மாஸ்க் மற்றும் தடுப்பூசி. ஜடாயு ராவணனை வழிமறித்து சண்டையிட்டு மாண்டபோது ராம லட்சுமணர்களால் இங்குள்ள குளக்கரையின் அருகில் தான் கடைசிச் சடங்குகள் செய்யப்பட்டதாகவும் அதனால் ஜடாயு தீர்த்தம் என்று பெயர் பெற்றது இந்த குளம் என்றும் சொன்னார்கள். வரைப்படத்தை வைத்துப் பார்த்தால் நிலவியல் சரியாகத் தான் இருப்பதாய் தோன்றுகிறது. இருபது வயதில் நண்பன் ஒருவனுக்காக மெட்ராஸிருந்து நாடி சோதிடத்தை பார்க்கப் போனதாக ஞாபகம். தேடித் தேடி பிறகு கிடைத்ததாகவும் ஞாபகம்.

    தற்போதைய வைரஸ் தொற்றை ஏழாம் நூற்றாண்டிலேயே உணர்ந்த மாதிரி திருத்தாண்டகத்தில் பாடியிருக்கும் திருநாவுக்கரசருக்கும் அவரது இனிமையான தமிழக்கும் சமுக விலகலுடன் ஒரு மெய்நிகர் கைக்குலுக்கல்.

    பேரா யிரம்பரவி வானோ ரேத்தும்
        பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
    வாராத செல்வம் வருவிப் பானை
        மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்
    தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
        திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
    போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
        போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே

    – திருநாவுக்கரசு நாயனார் (திருதாண்டகம்)

    வாட்ஸ்சாப்பில் இந்த வாரம் வந்த 210 குறுஞ்செய்திகளில் எனக்காக வந்த தனிப்பட்ட கு.செய்திகள் 18. மற்றவை இரண்டு வகைப்படும் – முதலாவது குட்மார்னிங் குட்நைட் வகையறா, இதில் தப்பில்லை. அடுத்தது இந்த வைரஸை தவிடுபொடியாக்க வாட்ஸாப் வைத்தியர்களால் படித்து விட்டு பகிரவும் என்று அனுப்பப்படும் அரைகுறை உண்மைகள் நிரம்பிய பொய்கள். கற்பூரத்தை முகர்வதில் ஆரம்பித்து தடுப்பூசியில் 5ஜி சிப்புகள் பதித்துள்ளதாகவும், இந்த வைரஸ்ஸே இலுமினாட்டிகளின் வேலை எனவும் கற்பனை குதிரைகள் பறக்கும் கதைகள்.

    உண்மையைப் போலவே தோற்றமளிக்கும் இந்த குறுஞ்செய்திகளில் எதை மதிப்பது எதை அழிப்பது என்று தெரியாத ஜனம் எல்லாவற்றையும் எல்லோருக்கும் அனுப்பி இருக்கிற குழப்பத்தை அதிகமாக்கிக் கொண்டிருக்கிறது. கல்லூரி மாணவன், தினத்தந்தியில் தமிழ் கற்றுக்கொண்டவன் என்று பாகுபாடில்லாமல் இந்த வாட்ஸாப் போன்ற வசிகரமான டெக்னாலஜிகள் உலகை சமன்படுத்திக் கொண்டிருந்தாலும் இம்மாதிரி துஷ்பிரயோகங்கள் மக்களிடையே பீதியை அதிகரித்து வருவது துரதிஷ்டம் தான்.

    இந்த மாதிரி ஸ்பாம் குறுஞ்செய்திகளை தினமும் எழுதி அனுப்புவர்களின் மனதை புரிந்து கொள்ள முடியவில்லை. நிஜமாகவே இவர்கள் உதவ நினைக்கிறார்களா அல்லது தனியாய் உணர்வதால் யா மொய்தீனிலிருந்து பக்கெட் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டே எழுதி அனுப்புவதில் இன்பம் அனுபவிக்கிறார்களா என்று தெரியவில்லை. உலகம் இப்படி இருக்கும் நிலைமையில் எந்த விஷயத்தை அனுப்புவதற்கு முன்னும் கொஞ்சம் யோசிக்கவும். உங்களுக்கு யாராவது இம்மாதிரி குறுஞ்செய்திகளை அனுப்பி பகிரவில்லை என்றால் உங்கள் தலை சுக்கு ஆயிரமாய் வெடிக்கும் என்று சொன்னால் உத்தரவாதமாக அதை அழித்து விட்டு விஜய்யில் பாரதி கண்ணம்மா பார்க்க போய்விடவும்.


    பதினைந்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் அசோகமித்ரனின் 18வது அட்சக்கோடு படித்துக் கொண்டிருக்கிறேன். அசோகமித்ரனின் பெயரில் இருப்பதை போலவே லேசான சோகமும் கொஞ்சம் அவநம்பிக்கையும் அவரது கதைகளில் இடம்பெறும். ஆனாலும் நம்பிக்கை துளிர் விடும் இடங்களும் எட்டிப் பார்க்கும். சாமானிய மனிதனின் வாழ்வில் நடக்கும் அசெளகரியங்களின் மேலுள்ள உன்னிப்பான பார்வையும், அவரது அங்கதமான நடையும், கச்சிதமான கதை வடிவமும் அமையப் பெற்றது அசோகமித்ரனின் கதைகள். எத்தனை முறை படித்தாலும் – “பார்த்தியா எப்படி எழுதறேன்னு” என்று தன் மீது கவன ஈர்ப்பு கொள்ள வைக்காத எழுத்துக்கள். எழுத்தாளர்களின் எழுத்தாளர்.


    99 ஸாங்ஸ் – எ.ஆர். ரஹ்மான்

    சமீபத்தில் கேட்ட மிகச்சிறந்த தமிழ் ஆல்பம் 99 ஸாங்க்ஸ் என்ற ஆங்கில பேர் கொண்ட எ.ஆர்.ரஹ்மானின் சொந்தப் பட இசை. பதினாங்கு பாடல்களில் அரை டஜன் பாடல்களாவது காலத்தை தாண்டி நிற்கும் பாடல்கள். தமிழ்ப் பாடல்களில் ஆங்கிலக் கலப்பு என்பதை பற்றி பேச்சே போய்விட்டது. எங்கு தமிழ் எங்கு ஆங்கிலம் என்று புரியாமல் ஒன்றோடொன்று கலந்து போன பாடல்கள் – டக்குன்னு டக்குன்னு டக்குன்னு டக்குன்னு டக்குன்னு டக்குன்னு பாக்காத // பக்குன்னு பக்குன்னு பக்குன்னு பக்குன்னு பக்குன்னு பக்குன்னு ஆக்காத // கிக் ஒன்னு கிக் ஒன்னு கிக் ஒன்னு கிக் ஒன்னு கிக் ஒன்னு இருக்குது பார்வையில // லுக் ஒன்னு லுக் ஒன்னு லுக் ஒன்னு லுக் ஒன்னு விட்டுட்டு போனா தப்பே இல்ல.

    இம் மாதிரி பாடல்களுக்கு நடுவில் 99 ஸாங்க்ஸின் பாடல்களுக்கு வரிகள் எழுதியது கிட்டத்தட்ட 8 கவிஞர்கள். சுத்தமான தமிழ் மட்டும் தான் என்று சொல்ல முடியாவிட்டாலும் – நாளை நாளை பாடலில் கல்லூரிப் பருவத்தை ஞாபகப்படுத்தும் விவேக்கும், ஜுவாலாமுகி என்ற சமஸ்கிருத பெயரோடு வரும் பாடலில் தமிழில் விளையாடும் மதன் கார்க்கியும், குட்டி ரேவதியின் சீமந்தப்பூ மெலடியும், ஆகாய நீலங்களில் என்ற பாடலில் தாமரையின் தமிழும் ஸ்ரேயா கோஷலின் உச்சரிப்பும் தமிழ் இசை மேல் நம்பிக்கையை அதிகரிக்கின்றன. ஓராயிரம் வானவில் என்ற பாடலில் பியானோ இசையும் கவித்தமிழும் விஜய் யேசுதாஸின் குரலும் இழுத்துக் கொண்டு செல்கின்றன. கவிதைகள் புரிந்த மாதிரியும் இருக்க வேண்டும் புரியாத மாதிரியும் இருக்க வேண்டும் என்பார்கள். கவித்துவமான ஆல்பம்.

    -மே ஒன்று. சிஎஸ்கே மும்பை இண்டியன்ஸிடம் கடைசி பந்தில் தோற்ற தினம்.

  • April 4, 2021

    கரோனாவாசம்

    போன வருடம் பிப்ரவரி 29ம் தேதி அமெரிக்காவின் முதல் கரோனா(கொரோனா அல்ல) துக்கம் நடந்தது என் வீட்டின் கொல்லைப்புரத்தில் இருக்கும் ஆஸ்பத்திரியில். ஆறு மைல் தள்ளி இருக்கும் கர்க்லாண்டில் அகாலமாய் அந்த மரணம் நிகழ அமெரிக்காவே வாய் திறந்து பார்க்க, இந்தியன் ஸ்டோரில் மில்க்பிக்கீஸ் வாங்கப் போனவன் இந்த நியூஸ் கேட்டு இன்னும் இரண்டு பாக்கெட்களை அள்ளிக் கொண்டு வந்தேன். அதன் பிறகு உலகத்தில் நடந்தது எல்லாம் வரலாற்றுப் புத்தகங்களுக்கானது.

    வைரஸ் வந்து, எல்லோரும் பீதியில் உறைந்து போய், வாழ்வின் தற்காலிகத் தன்மை புரிய ஆரம்பிக்க, கைகளை சரியாக அலம்பக் கற்றுக்கொண்டு, முககவசம் அணியலாமா கூடாதா என்று புரியாமல் புரிந்து கொண்டு, வீட்டுக்கொரு மாஸ்க் தைக்கும் டைலர்களாக மாறி, ஜூம் செய்ய ஆரம்பித்து, வீட்டிலிருந்து வேலை செய்ய பழகி, டோர்டாஷில் பலகாரங்களை ஆர்டர் செய்து, குடும்ப உறுப்பினர்களைத் தவிர சகலமும் அமெசானிலிருந்து வீடு வந்து சேர, கோடையில் அமெரிக்கா சமூக நீதிக்காகப் போராடி, கலிபோர்னியா காட்டுத்தீ பரவி ஊரெல்லாம் புகைமூட்டத்தில் மூழ்கி, ஜனாதிபதி தேர்தலை ஒரு வழியாய் அஞ்சலிலும் கொஞ்சம் சண்டையிலும் முடித்துக் கொண்டு, ஊரெல்லாம் ஊசிமயமாய் மாறுவதற்குள் ஒரு வருடமாகி விட்டது. சரியாய் ஒரு வருடம் ஒரு மாதம்.

    முதல் சூடு பட்டதாலோ என்னவோ சியாட்டலில் மக்கள் அரசாங்க விதிமுறைக்கு கட்டுப்பட்டே இருந்தார்கள். டாக்டர் நர்ஸ்களெல்லாம் கலிங்கப் போருக்கு போவது போல் தினமும் ஆஸ்பத்திரி செல்ல, அந்த தியாகங்களுக்கு நடுவே வீட்டில் இருப்பதெல்லாம் ஒரு விஷயமா என்று தோன்றியது. இந்த பதிமூன்று மாதங்களில் நண்பர்கள் யாரும் வீட்டினுள் வரவில்லை. சமையலறை குழாய் ஒழுக ஆரம்பித்த போது, மாஸ்க் அணிந்து கொண்டு ஒரு ப்ளம்பர் வந்தார். ஒரு சின்ன வாஷர் போயிருந்தது. இதுக்காகவா என்னை அழைத்தாய் என்றபடி பார்த்துவிட்டு போனார். பிறகொரு முறை கார் பாட்டரி மக்கர் செய்ய அதை உயிர்ப்பிக்க இழந்த சக்தி வைத்தியராக ஒரு மெக்கானிக் வந்து போனார். வேறு வழியில்லாமல் ஓரிரு முறை டாக்டரிடம் செல்ல வேண்டியிருந்தது. இவைகளை தவிர வீடே கதி என்று இருந்தவனுக்கு, போன மாதக் கடைசியில் அரசாங்கம் விதிகளை கொஞ்சம் தளர்த்தியது ஆறுதலாயிருந்தது. அதனால் பதிமூன்று மாத வீடுவாசத்திற்குப் பின், கரோனா பற்றி இனி கொஞ்சம் கவலைப்படாமல் வெளியே தலை காட்டலாம் என்று தோன்றியது.

    போன வாரம் புனித வெள்ளியன்று, அதாவது சரியாக சார்வாரி வருடம் பங்குனி இருபதாம் தேதி சஷ்டியில் ராகுஎமகுளிகை காலங்களை கருத்தில் கொண்டு, வீட்டை விட்டு வெளியே வரலாமா என்று யோசித்து முடிவு செய்தேன். முதலில் செல்ல வேண்டும் என்று தோன்றியது அரை மைலில் இருக்கும் கோவிலுக்குத் தான். வாரத்திற்கு ஒரு முறையாவது போய்விடக் கூடிய, கூப்பிடு தூரத்தில் இருக்கும் கோவிலுக்கு ஒரு வருடம் போகாமல் இருந்தது கொஞ்சம் நினைத்துப் பார்க்க முடியாத விஷயம் தான். மார்கழிக் காலைகளில் திருப்பாவை சொல்லிக்/கேட்டு வந்தவனுக்கு இந்த வருடம் ஸ்பாட்டிபையில் எம்.எல். வசந்தகுமாரியின் திருப்பாவை தான் முடிந்தது.

    கோவிலில் எல்லாமே மாறியிருந்தது. முதலில் ஆன்லைனில் புக் செய்து கொண்டேன். ஆறரை மணிக்கு மாஸ்க் அணிந்து கோவிலுக்கு சென்ற போது ஒரு பத்துப் பேர் வெளியே நின்று கொண்டிருந்தார்கள். செருப்பை கூட அந்த குளிரில் வெளியே விட்டுத் தான் செல்ல வேண்டும் என்று போர்டு அறிவித்தது.

    கோவிலின் உள்ளே போனால் பெரிய மெஷின் ஒன்றில் நம் கையை காட்டச் சொல்கிறார்கள். Infrared அலைகள் பாய உடம்பின் சூட்டை உள்வாங்கி low… low.. என்று அந்த மெஷின் சொல்ல, நீங்க போகலாம் என்று நல்ல நெல்லைத் தமிழில் அந்தப் பெண்மணி சொல்ல உள்ளே நுழைகிறேன். எதிரில் பிரம்மாண்டமாய் விநாயகர். அதுவரை சென்னையை தாண்டி வெளியே வாழாதவனுக்கு 2005ல் சியாட்டல் வந்தபோது இருந்த கொஞ்சநஞ்ச கேள்விகள் விலக காரணமாயிருந்தது இந்த ஆஜானுவிநாயகர் தான். ஒரு வருடத்திற்கு பிறகு பார்த்த போது சட்டென ஒரு சிலிர்ப்பு. வீட்டைத் தாண்டி ஒரு உலகமே இருப்பதை ஞாபகப்படுத்திய கணம். பக்கதிலிருந்த மடப்பள்ளி கதவுகள் மூடப்பட்டிக்கின்றன. ஆக இன்று கோயில் பிரசாத கிச்சடி இல்லை என்பது உறுதியாகிறது.

    உள்ளே எல்லா இடத்திலும் six feet away ஸ்டிக்கர்கள், not beyond this point என்று எச்சரிக்கும் மஞ்சள் ரிப்பன்களின் பின்னால் வேங்கடேசன் நின்றிருக்க, வேண்டியது வேறில்லை எனத் தோன்றும் போதே நம்மாழ்வாரும் கூடவே ஞாபகத்துக்கு வந்தார்.

    கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்

    எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே

    வண்ண நன் மணிமாடங்கள் சூழ் திருப்பேரான்

    திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே

    – திருவாய்மொழி

    என்ன தான் கலிபோர்னியா காட்டுத்தீ வந்தாலும் கரோனா வைரஸ் வந்தாலும் எங்களூரில் எம்பெருமான் இன்னமும் அருள்பாலித்து கொண்டு தான் இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டேன். அதுவும் அந்த கரிய பெருமாளின் சிறிய புன்முறுவலை காணாமல் போக முடியாது. 2014ல் தான் இந்த கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயிலில் போட்டோ எடுக்க ஆள் தேட, காமிரா கையோடு போன என்னை பிடித்து நிறுத்தினார்கள். அன்றிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு நடந்த திருப்பணிகளை அருகிலிருந்து படம் பிடிக்க வாய்ப்புக் கிடைத்தது. மிகப்பெரிய மரப் பெட்டியில் இந்தியாவிலிருந்து வந்திறங்கிய அந்த பெருமாளின் விக்கிரகத்துக்கு ஜலதிவாசம் முதற்கொண்டு பூர்ணாஹுதி செய்யும் வரை கருங்கல்லில் வடிக்கப்பட்ட ஒரு சிலை பிறந்து, கண்திறந்து, அருட்பேராற்றலாக மாறும் வைபவத்தை அருகிலிருந்து பார்த்து படமெடுக்க முடிந்தது. அதனாலோ என்னவோ இந்த எம்பெருமான் கண்ணுள் நின்று அகலானாகிவிட்டான்.

    வழக்கமாய் தரப்படும் கற்பூரம் தீர்த்த சடாரி இத்தியாதிகளை காணோம். பட்டர் கர்ப்பக்கிரகத்திலிருந்து பூ பழம் என்று எடுத்து வந்து ஓரிடத்தில் வைத்து விட்டு போய் விடுகிறார். வேண்டியவர்கள் அவர்களே போய் எடுத்துக் கொள்ளலாம் என்கிறார். ஆனால் கோயிலின் வழக்கமான ஊதுபத்தியும் சாம்பிராணியும் கலந்த வாசனை சன்னமாய் வந்து கொண்டிருக்கிறது. பட்டர் என்னை பார்த்தவுடன், முககவசத்தின் பின்னாலிருந்து சிரிக்க, நானும் அதே போல் முககவசத்தில் மறைந்து கொண்டு சிரிக்க, “செளக்கியமா?” “ம்ம்ம்.. இருக்கேன்” என்று பதிலளித்து விட்டு ஸ்பீக்கரில் பாவயாமி போட போய்விட்டார். புதுசாக பார்க்கிற மாதிரி அந்தக் கோயிலை பார்த்து சுற்றி விட்டு, கண்ணாடி அறையில் வைக்கப்பட்டிருந்த நவகிரகங்களை பார்த்து வெளியே வரும் போது இன்னும் ஒரு பத்து பேர் லைனில் நின்றிருந்தார்கள்.

    சற்றே இருட்ட ஆரம்பித்திருந்தது, தேடி செருப்பை போடுவதற்குள் எலும்பு வரை குளிர் நுழைந்து விட்டது. பெருமாள் தரிசனத்திற்கு பிறகு கரோனாவே காணாமல் போனதாக தோன்றியது. காரில் ஏறியவுடன் மாஸ்கை இழுத்து தூக்கிப் போட்டேன். தாத்தா தாத்தா களவெட்டி, பொந்துல யாரு மீன் கொத்தி என்று டி-யும் அறிவும் ஸ்டீரியோவில் பாட கேட்டுக் கொண்டே வீடு வந்தேன். எதற்கும் இருந்து விட்டு போகட்டும் என்று நன்றாக சோப்பு போட்டு கைகளை அலம்பிக் கொண்டேன்.

←Previous Page
1 … 12 13 14 15 16 … 316
Next Page→
  • about
  • archive
  • all that is
  • photoblog
 

Loading Comments...
 

    • Subscribe Subscribed
      • kirukkal.com
      • Join 26 other subscribers
      • Already have a WordPress.com account? Log in now.
      • kirukkal.com
      • Subscribe Subscribed
      • Sign up
      • Log in
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar