டென்னிஸ் ஆட்டக்காரர்கள் ஒரு சர்வ் செய்யும் முன் பந்தை ஏன் அத்தனை முறை கீழே அடிக்கிறார்கள் என்று யோசித்ததுண்டா? சுலபமான கேள்விகளுக்கு என்றுமே கடினமான பதில்கள் தான். இதற்குப் பல விதமான காரணங்கள் இருந்தாலும் கொஞ்சம் பெளதிகம் பக்கம் போய் ஜல்லியடிக்கலாம். முதலில், மற்ற காரணங்கள் –
- ரொம்பவும் சிம்பிளாக பல ஆட்டக்காரகளுக்கு அது ஒரு சடங்கு. டென்னிஸ் ஆட ஆரம்பிக்கும் போது கற்றுக்கொள்ளும் பால பாடம், பந்தை சரியாக பவுன்ஸ் செய்து மட்டையில் பட வைத்தல். ஸ்ரீகாந்த் மூக்கு உறிவது, சூரியனைப் பார்ப்பது போல், சச்சின் இடது தோள் பட்டையைச் சுழற்றுவது போல். நோவாக் ஜோகோவிச் ஒவ்வொரு முறையும் கிட்டத்தட்ட 12-15 முறை பந்தை பவுன்ஸ் செய்யப் போய், “ஸ்டாப் இட்” என்றெல்லாம் ரசிகர்கள் கத்தியிருக்கிறார்கள்.
- சரியான ஒரு நிலைக்குத் தன்னை கொண்டு வரலாம் – பந்தை பவுன்ஸ் செய்யும் நொடிகளில் சரியான கவனக்குவிப்பு நடைபெறலாம், உடம்பை சரியான ஒரு நிலையில் கொண்டு வர முடியும்.
- மாட்ச் தனக்கு எதிராகப் போய்க் கொண்டிருந்தால், கொஞ்சம் நிதானம் வரவழைத்துக் கொள்ளலாம்.
- போன சர்வில் இருந்து மீண்டு மூச்சை சீராக ஆக்கிக் கொள்ளலாம்.
- அடுத்த சர்வில் என்ன செய்யப் போகிறோம் என்ற யோசனை, ஒரு வகையான காட்சிப்படுத்துதல்(visualization) செய்து கொள்ளலாம்.
இவற்றைத் தவிர இயற்பியல் காரணமும் இருக்கிறது. பொதுவாக ஒரு டென்னிஸ் பந்தினுள் நைட்ரொஜன் வாயு அல்லது காற்றுடன்(இதுவும் வாயு தான்) நிரப்பப்படுகின்றன. எல்லா வாயுக்களைப் போலவே, டென்னிஸ் பந்தின் உள்ளே இருக்கும் காற்றும் அது ஆக்கிரமித்துள்ள இடத்தை நிரப்ப எளிதாகச் சுற்றி நகர்கிறது. தளர்வாக ஒழுங்கமைக்கப்படுவதால் (loosely organized), வாயுவின் மூலக்கூறுகள்(ஆங்கிலத்தில் மாலிக்யூல்கள்) ஒன்றுடன் ஒன்று இடித்துக்கொள்கிற மாதிரியோ அல்லது பிரிகிற மாதிரியோ நகரலாம் (இது பௌதிக விதி), இதனால் வாயு மிக எளிதாக விரிவடைகிறது அல்லது சுருங்குகிறது.
ஒரு டென்னிஸ் பந்து தரையில் படும்போது, தரை பந்தின் மீது ஒரு விசையைச்(force) செலுத்தி, மேல்நோக்கி அழுத்தி, பந்தின் அடிப்பகுதியை உள்நோக்கித் தள்ளுகிறது. இந்த விசை பந்தின் உள்ளே இருக்கும் வாயுவை அழுத்துகிறது. உடனடியாக, வாயு மீண்டும் விரிவடையத் தொடங்குகிறது, பந்தை அதன் இயல்பான வடிவத்திற்குத் திருப்புகிறது. இந்த ஸ்பிரிங் போன்ற செயலினால் பந்தை மீண்டும் காற்றில் குதிக்க வைக்கிறது. ஆக ஒரு டென்னிஸ் ஆட்டக்காரர் பந்தை சர்வ் செய்யும் முன்பு இப்படி பந்தை அடிப்பாராயின் ஒவ்வொரு முறையும் அந்த விசை செலுத்தப்பட்டு பந்து மேல்நோக்கி நகர்கிறது. இது ஒரு விதத்தில் பந்தின் வேகத்தைச் சற்றே அதிகமாக்குகிறது.
ஒரு குறிப்பிட்ட டென்னிஸ் பந்து எவ்வளவு உயரத்தில் துள்ளும் என்பது பந்தின் உள்ளே இருக்கும் காற்றின் அழுத்தத்தைப் பொறுத்தது. பௌதிகத்தில் இந்த அழுத்தத்தின் அளவைக் கண்டறிய ஒரு சமன்பாட்டை பயன்படுத்தலாம்: p=rRT, இங்கு “p” என்பது அழுத்தம்(pressure), “r” என்பது அடர்த்தி(density), “R” என்பது வாயுவின் constant மற்றும் “T” என்பது தட்ப வெப்பநிலை(temperature).
இந்த சமன்பாட்டில் வெப்ப நிலையைத் தவிர மற்ற எல்லாமும் மாறாமல் இருக்கும் என்று வைத்துக் கொண்டால்(இவற்றை அவ்வளவு எளிதாக ஒரு டென்னிஸ் பந்தில் மாற்ற முடியாதென்பதால்), அதிக வெப்பநிலை அதிக அழுத்தத்திற்கு வழிவகுக்கும் என்று புரிந்து கொள்ளலாம். ஏனென்றால், வெப்பநிலை அதிகரிக்கும் போது பந்தின் உள்ளே இருக்கும் வாயு மூலக்கூறுகள் விரிவடைகின்றன. வாயு மூலக்கூறுகள் விரிவடையும் போது, அவற்றின் ஆற்றல் அதிகரிக்கிறது மற்றும் அவை பந்தின் உள்ளே வேகமாகச் சுற்றி வருகின்றன. அதனால்தான் அதிக அழுத்தம் பந்தின் அதிக துள்ளலுக்கு வழிவகுக்கிறது. டென்னிஸ் விளையாட்டின் போது பெரும்பாலான ஆட்டக்காரர்கள் சர்வீஸின் வேகத்திற்குப் பந்தின் விரைவான துள்ளலை நம்பியிருக்கிறார்கள். அந்த துள்ளலுக்காகத் தான் ஆட்டக்காரர் ஒரு பந்தைப் பல முறை அடித்து அடித்து அதன் உஷ்ணத்தை அதிகமாக்கி சர்வ் செய்கிறார்.
எதிர்காலத்தில் இந்த பந்துகளினுள் சிலிக்கான் சிப்புகள் பதித்து வரப்போகின்றன. “அடிச்சது போதும், சட்டுனு சர்வ் பண்ணித் தொலை” என்று உள்ளிருந்து கணினிப்பெண் குரல் கேட்க வாய்ப்புண்டு.