போன வருடம் பிப்ரவரி 29ம் தேதி அமெரிக்காவின் முதல் கரோனா(கொரோனா அல்ல) துக்கம் நடந்தது என் வீட்டின் கொல்லைப்புரத்தில் இருக்கும் ஆஸ்பத்திரியில். ஆறு மைல் தள்ளி இருக்கும் கர்க்லாண்டில் அகாலமாய் அந்த மரணம் நிகழ அமெரிக்காவே வாய் திறந்து பார்க்க, இந்தியன் ஸ்டோரில் மில்க்பிக்கீஸ் வாங்கப் போனவன் இந்த நியூஸ் கேட்டு இன்னும் இரண்டு பாக்கெட்களை அள்ளிக் கொண்டு வந்தேன். அதன் பிறகு உலகத்தில் நடந்தது எல்லாம் வரலாற்றுப் புத்தகங்களுக்கானது.
வைரஸ் வந்து, எல்லோரும் பீதியில் உறைந்து போய், வாழ்வின் தற்காலிகத் தன்மை புரிய ஆரம்பிக்க, கைகளை சரியாக அலம்பக் கற்றுக்கொண்டு, முககவசம் அணியலாமா கூடாதா என்று புரியாமல் புரிந்து கொண்டு, வீட்டுக்கொரு மாஸ்க் தைக்கும் டைலர்களாக மாறி, ஜூம் செய்ய ஆரம்பித்து, வீட்டிலிருந்து வேலை செய்ய பழகி, டோர்டாஷில் பலகாரங்களை ஆர்டர் செய்து, குடும்ப உறுப்பினர்களைத் தவிர சகலமும் அமெசானிலிருந்து வீடு வந்து சேர, கோடையில் அமெரிக்கா சமூக நீதிக்காகப் போராடி, கலிபோர்னியா காட்டுத்தீ பரவி ஊரெல்லாம் புகைமூட்டத்தில் மூழ்கி, ஜனாதிபதி தேர்தலை ஒரு வழியாய் அஞ்சலிலும் கொஞ்சம் சண்டையிலும் முடித்துக் கொண்டு, ஊரெல்லாம் ஊசிமயமாய் மாறுவதற்குள் ஒரு வருடமாகி விட்டது. சரியாய் ஒரு வருடம் ஒரு மாதம்.
முதல் சூடு பட்டதாலோ என்னவோ சியாட்டலில் மக்கள் அரசாங்க விதிமுறைக்கு கட்டுப்பட்டே இருந்தார்கள். டாக்டர் நர்ஸ்களெல்லாம் கலிங்கப் போருக்கு போவது போல் தினமும் ஆஸ்பத்திரி செல்ல, அந்த தியாகங்களுக்கு நடுவே வீட்டில் இருப்பதெல்லாம் ஒரு விஷயமா என்று தோன்றியது. இந்த பதிமூன்று மாதங்களில் நண்பர்கள் யாரும் வீட்டினுள் வரவில்லை. சமையலறை குழாய் ஒழுக ஆரம்பித்த போது, மாஸ்க் அணிந்து கொண்டு ஒரு ப்ளம்பர் வந்தார். ஒரு சின்ன வாஷர் போயிருந்தது. இதுக்காகவா என்னை அழைத்தாய் என்றபடி பார்த்துவிட்டு போனார். பிறகொரு முறை கார் பாட்டரி மக்கர் செய்ய அதை உயிர்ப்பிக்க இழந்த சக்தி வைத்தியராக ஒரு மெக்கானிக் வந்து போனார். வேறு வழியில்லாமல் ஓரிரு முறை டாக்டரிடம் செல்ல வேண்டியிருந்தது. இவைகளை தவிர வீடே கதி என்று இருந்தவனுக்கு, போன மாதக் கடைசியில் அரசாங்கம் விதிகளை கொஞ்சம் தளர்த்தியது ஆறுதலாயிருந்தது. அதனால் பதிமூன்று மாத வீடுவாசத்திற்குப் பின், கரோனா பற்றி இனி கொஞ்சம் கவலைப்படாமல் வெளியே தலை காட்டலாம் என்று தோன்றியது.
போன வாரம் புனித வெள்ளியன்று, அதாவது சரியாக சார்வாரி வருடம் பங்குனி இருபதாம் தேதி சஷ்டியில் ராகுஎமகுளிகை காலங்களை கருத்தில் கொண்டு, வீட்டை விட்டு வெளியே வரலாமா என்று யோசித்து முடிவு செய்தேன். முதலில் செல்ல வேண்டும் என்று தோன்றியது அரை மைலில் இருக்கும் கோவிலுக்குத் தான். வாரத்திற்கு ஒரு முறையாவது போய்விடக் கூடிய, கூப்பிடு தூரத்தில் இருக்கும் கோவிலுக்கு ஒரு வருடம் போகாமல் இருந்தது கொஞ்சம் நினைத்துப் பார்க்க முடியாத விஷயம் தான். மார்கழிக் காலைகளில் திருப்பாவை சொல்லிக்/கேட்டு வந்தவனுக்கு இந்த வருடம் ஸ்பாட்டிபையில் எம்.எல். வசந்தகுமாரியின் திருப்பாவை தான் முடிந்தது.
கோவிலில் எல்லாமே மாறியிருந்தது. முதலில் ஆன்லைனில் புக் செய்து கொண்டேன். ஆறரை மணிக்கு மாஸ்க் அணிந்து கோவிலுக்கு சென்ற போது ஒரு பத்துப் பேர் வெளியே நின்று கொண்டிருந்தார்கள். செருப்பை கூட அந்த குளிரில் வெளியே விட்டுத் தான் செல்ல வேண்டும் என்று போர்டு அறிவித்தது.
கோவிலின் உள்ளே போனால் பெரிய மெஷின் ஒன்றில் நம் கையை காட்டச் சொல்கிறார்கள். Infrared அலைகள் பாய உடம்பின் சூட்டை உள்வாங்கி low… low.. என்று அந்த மெஷின் சொல்ல, நீங்க போகலாம் என்று நல்ல நெல்லைத் தமிழில் அந்தப் பெண்மணி சொல்ல உள்ளே நுழைகிறேன். எதிரில் பிரம்மாண்டமாய் விநாயகர். அதுவரை சென்னையை தாண்டி வெளியே வாழாதவனுக்கு 2005ல் சியாட்டல் வந்தபோது இருந்த கொஞ்சநஞ்ச கேள்விகள் விலக காரணமாயிருந்தது இந்த ஆஜானுவிநாயகர் தான். ஒரு வருடத்திற்கு பிறகு பார்த்த போது சட்டென ஒரு சிலிர்ப்பு. வீட்டைத் தாண்டி ஒரு உலகமே இருப்பதை ஞாபகப்படுத்திய கணம். பக்கதிலிருந்த மடப்பள்ளி கதவுகள் மூடப்பட்டிக்கின்றன. ஆக இன்று கோயில் பிரசாத கிச்சடி இல்லை என்பது உறுதியாகிறது.
உள்ளே எல்லா இடத்திலும் six feet away ஸ்டிக்கர்கள், not beyond this point என்று எச்சரிக்கும் மஞ்சள் ரிப்பன்களின் பின்னால் வேங்கடேசன் நின்றிருக்க, வேண்டியது வேறில்லை எனத் தோன்றும் போதே நம்மாழ்வாரும் கூடவே ஞாபகத்துக்கு வந்தார்.
கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நன் மணிமாடங்கள் சூழ் திருப்பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே
– திருவாய்மொழி
என்ன தான் கலிபோர்னியா காட்டுத்தீ வந்தாலும் கரோனா வைரஸ் வந்தாலும் எங்களூரில் எம்பெருமான் இன்னமும் அருள்பாலித்து கொண்டு தான் இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டேன். அதுவும் அந்த கரிய பெருமாளின் சிறிய புன்முறுவலை காணாமல் போக முடியாது. 2014ல் தான் இந்த கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயிலில் போட்டோ எடுக்க ஆள் தேட, காமிரா கையோடு போன என்னை பிடித்து நிறுத்தினார்கள். அன்றிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு நடந்த திருப்பணிகளை அருகிலிருந்து படம் பிடிக்க வாய்ப்புக் கிடைத்தது. மிகப்பெரிய மரப் பெட்டியில் இந்தியாவிலிருந்து வந்திறங்கிய அந்த பெருமாளின் விக்கிரகத்துக்கு ஜலதிவாசம் முதற்கொண்டு பூர்ணாஹுதி செய்யும் வரை கருங்கல்லில் வடிக்கப்பட்ட ஒரு சிலை பிறந்து, கண்திறந்து, அருட்பேராற்றலாக மாறும் வைபவத்தை அருகிலிருந்து பார்த்து படமெடுக்க முடிந்தது. அதனாலோ என்னவோ இந்த எம்பெருமான் கண்ணுள் நின்று அகலானாகிவிட்டான்.
வழக்கமாய் தரப்படும் கற்பூரம் தீர்த்த சடாரி இத்தியாதிகளை காணோம். பட்டர் கர்ப்பக்கிரகத்திலிருந்து பூ பழம் என்று எடுத்து வந்து ஓரிடத்தில் வைத்து விட்டு போய் விடுகிறார். வேண்டியவர்கள் அவர்களே போய் எடுத்துக் கொள்ளலாம் என்கிறார். ஆனால் கோயிலின் வழக்கமான ஊதுபத்தியும் சாம்பிராணியும் கலந்த வாசனை சன்னமாய் வந்து கொண்டிருக்கிறது. பட்டர் என்னை பார்த்தவுடன், முககவசத்தின் பின்னாலிருந்து சிரிக்க, நானும் அதே போல் முககவசத்தில் மறைந்து கொண்டு சிரிக்க, “செளக்கியமா?” “ம்ம்ம்.. இருக்கேன்” என்று பதிலளித்து விட்டு ஸ்பீக்கரில் பாவயாமி போட போய்விட்டார். புதுசாக பார்க்கிற மாதிரி அந்தக் கோயிலை பார்த்து சுற்றி விட்டு, கண்ணாடி அறையில் வைக்கப்பட்டிருந்த நவகிரகங்களை பார்த்து வெளியே வரும் போது இன்னும் ஒரு பத்து பேர் லைனில் நின்றிருந்தார்கள்.
சற்றே இருட்ட ஆரம்பித்திருந்தது, தேடி செருப்பை போடுவதற்குள் எலும்பு வரை குளிர் நுழைந்து விட்டது. பெருமாள் தரிசனத்திற்கு பிறகு கரோனாவே காணாமல் போனதாக தோன்றியது. காரில் ஏறியவுடன் மாஸ்கை இழுத்து தூக்கிப் போட்டேன். தாத்தா தாத்தா களவெட்டி, பொந்துல யாரு மீன் கொத்தி என்று டி-யும் அறிவும் ஸ்டீரியோவில் பாட கேட்டுக் கொண்டே வீடு வந்தேன். எதற்கும் இருந்து விட்டு போகட்டும் என்று நன்றாக சோப்பு போட்டு கைகளை அலம்பிக் கொண்டேன்.