“திரைப்படம் எடுப்பது எப்படி என்பதைப் பற்றி புத்தகம் எழுதும் அளவு `மீடியா டிரீம்ஸ்’ நிறுவனத்தில் எனக்கு அனுபவம், ஐந்து திரைப்படங்களில் ஏற்பட்டுவிட்டது. எந்த பட்ஜெட்டும் குறிப்பிட்ட தொகையை இரண்டு மடங்கு மீறும். இதற்கு மனசுக்குள் தயாராக இருக்க வேண்டும். அதாவது, அவர்கள் ஒரு கோடிக்குள் படத்தை முடிக்கிறேன் என்று சொன்னால் இரண்டு கோடிக்குத் தயாராக இருக்க வேண்டும். அதேபோல் ஒரு படத்தை மூன்று மாசத்தில் முடிக்கிறேன் என்று ஒருவர் சொன்னால், ஆறு மாசத்துக்குத் தயாராக இருக்கவேண்டும். படத்தை பதினெட்டு நாளில் முடிப்பேன் என்று ஒருவர் சொன்னால் உடனே அவரை வழி அனுப்பவும். சம்மதத்துக்காக பொய் சொல்கிறார். படத்தில் ஏதாவது ஒரு ஸ்டார் இருந்தால் அதற்காக அரை மடங்கு கூடுதல் பணம், நேரம் இரண்டுக்குமே தயாராகவும், ஒரு நாளைக்கு ஷூட்டிங் செலவு முப்பதாயிரம் என்று சொன்னால் புளுகுகிறார் என்று அர்த்தம். தமிழ் சினிமாவின் ரேட் ஒரு நாளைக்கு ஒரு லட்சம். பெரிய டிபன் பாக்ஸில் குறைந்தபட்சம் இருநூறு பேர் தின்னே தீர்ப்பார்கள். இதை யாரும் எதுவும் செய்ய முடியாது. கலாசாரம் இப்படி.
இதையெல்லாம் படித்த பின்னும் உங்களில் சிலர் படம் எடுக்கும் தைரியம் பெற்றால் கடவுள் உங்களைக் காப்பாற்றட்டும்!”
– `படமெடுத்துப் பாழாய்ப் போக’ கட்டுரையில் சுஜாதா, 2003
இருபத்தி நான்கு வாரங்களாக குமுதத்தில் எழுதிக் கொண்டிருந்த சுஜாதாவின் கதைக்கு முற்றும் போட்டு விட்டார் ரஞ்சன். நாற்பது வருடங்களுக்கு மேல் எழுதிக் கொண்டிருந்த ஒரு மிகப் பிரபலமான எழுத்தாளனின் கதையை எழுதுவது சுலப(ம்/மன்று).
சுஜாதா அவருடைய வாழ்க்கையின் சுவாரசிய பக்கங்களை அவரின் பத்தி எழுத்துக்களில் அவ்வப்போது எழுதி வந்திருக்கிறார். அவை எல்லாவற்றையும் திரட்டி, மேலும் சிலரை சந்தித்து ஒரு பயோகிராபி தொடரை எழுதி முடித்திருக்கும் ரஞ்சனுக்கு நன்றிகள் பல.
எனக்குத் தெரியாத பல விஷயங்கள் தொடரின் கடைசி சில வாரங்களில் வந்தது. சுஜாதா சினிமாவில் ஒரு காட்சியில் நடித்தது, சினிமா டைரக்ஷன் செய்ய பெல் நிறுவன வேலையை ராஜினாமா பண்ண நினத்தது, தன்னுடைய கையெழுத்தை வைத்து தனக்காக ஒரு கணிப்பொறி ஃபாண்ட் அமைத்துக் கொண்டது, ராஜீவ் மேனனின் நட்பு மற்றும் குமுதத்தில் ஆசிரியர் அனுபவங்கள்.
குமுதம்காரர்கள் இதை வருகிற புத்தக சீசனில் புத்தகமாக கொண்டு வந்தால் சில ஆயிரமாவது போகும். தேசிகனும் சுஜாதா பற்றி பயோகிராபிக்கு சில வருடங்களாக யோசித்து கொண்டிருக்கிறார். சுஜாதாவுடனும் இதை பற்றி பல மணி நேரங்கள் பேசியிருப்பதாய் சொன்னார். செய்வார் என நம்பலாம்.
————-
அமெரிக்க வரைபடத்தின் வட மேற்கு மலைபகுதியை சூம் செய்தால் தெரியும் சியாட்டலில் ஏகப்பட்ட பனியுடன் வொயிட் கிறிஸ்துமஸ் கொண்டாடினோம். அப்படி ஒரு வெள்ளை விரிப்பு. பச்சை மரங்களையும் கார்களையும் சேர்த்து பனி விழுங்கிக் கொண்டு மீண்டும் ஒரு முறை தன் இருப்பை காட்டிக் கொண்டது.
நான்கு நாட்களாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் போல, டிவியில் சொல்வதற்கு நேர்மாறாக, பனி என்றால் மழை. மழை என்றால் கடும் பனி. சாட்டிலைட் புருடாவுக்கெல்லாம் அசைவதாய் இல்லை இயற்கைத் தாய்.
————
க்ளிஷேவாக சொல்வதானால், மாறணும் ஆயிரம். தமிழ் சினிமாவில் மாறவேண்டியவை என்று லிஸ்ட் போட்டால், கதை, நடிப்பு என்பதற்குப் பின் மேக்கப் கலை. தசாவதாரத்தை விட நன்றாக இருந்தாலும், அறுபது வயது பெரியவருக்கு முப்பது வயது கையிருக்கிறது.
கெளதம் மேனன் தன் அப்பா பற்றி ஒரு மெமாயிர் எடுத்ததெல்லாம் அவருடைய கதாசிரிய உரிமை. அதற்கு சரியாக ஒரு திரைக்கதை அமைக்காததால், தியேட்டரில் எத்தனை விளக்குகள் விசிரிகள் இருக்கிறதென்று எண்ண ஆரம்பித்து விட்டேன்.
ஹாரிஸின் பாடல்களும் படத்தோடு பார்க்கும் போது ஒரிஜினாலிடி இல்லை. சூர்யாவோ அபூர்வ சகோதர்கள் கமல் போல ஒல்லி மீசையில் நடனமாடும் எண்பதுகளின் பாடலில் அனக்ரானிசமாக contemporary சிந்தஸைஸர் ஒலி. சகிக்கவில்லை.
க்ளைமாக்ஸில் சூர்யாவின் துயரத்தில் பங்கெடுக்காமல் அந்த பின்சீட்டுப் பெண் சிரித்ததில், கெளதம் மேனனுக்கு எதோ ஒரு செய்தி இருக்கிறது.