மேற்கில், அதாவது சியாட்டலில், இன்னும் மழை பெய்து கொண்டுதானிருக்கிறது. நாளை 80 டிகிரி என்று சொல்லியிருக்கிறார்கள். இருந்தாலும் ஒரு ஃபிளீஸ் ஜாக்கெட்டாவது மாட்டிக் கொண்டு தான் போகப் போகிறேன். சியாட்டல் ஆகாயத்தை நம்புவதற்கில்லை.
ஆனால் மரங்கள் குளிர் கால சோம்பலை முறித்து/முடித்துக் கொண்டு பச்சையாய் குலுங்க ஆரம்பித்துவிட்டன. பார்க்க கண்கொள்ளாக் காட்சி(என்ன ஒரு cliched statement).
——-
போன வார அன்னையர் தினத்தன்று அதிகமாக கொடுக்கப்பட்ட கிஃப்ட், பத்து பவுண்ட் அரிசி மூட்டையாகத் தான் இருக்கும். அமெரிக்காவில் அரிசி கிடைப்பதில்லை என்ற செய்தியை கேள்விப்பட்டீர்களா ? அதெல்லாம் டுபாக்கூர்.
உண்மையில் பற்றாக்குறை சகாய விலை அரிசிக்குத் தான். ஏதோ உண்மையாக அரிசி பற்றாக்குறை வந்து விட்டதாக நினைத்துக் கொண்டு, ஆசியர்கள், முக்கியமாய் இந்தியர்கள் வீட்டில் மூட்டை மூட்டையாக அரிசியை வாங்கி அடுக்க, எல்லா இந்திய ஸ்டோர்களும் இதுதான் சாக்கு என்று பத்து டாலர் அரிசியை இருபதாய் உயர்த்த, கடைசியாய் artificial demand.
ஆபிஸில் அரிசி அலோவன்ஸ் கேட்கலாம் என்று தோன்றும் அளவுக்கு, ஆளாளுக்கு அரிசிப் பைத்தியம் பிடித்திருக்கிறது. அரிசி இல்லாமல் ஒரு பத்து நாளைக்காவது வாழ முடியாதென்பது மனதைச் சார்ந்த விஷயம் தான். அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் கார்போஹைட்ரேட்ஸை விட இத்தாலியன் பாஸ்தாவில் கார்போஹைட்ரேட்ஸ் அதிகம்.
இதனால் சகாய விலையில் அரிசி போடும் காஸ்ட்கோ போன்ற அங்காடிகளில் கூட்டம் அம்முகிறது. காலையில் கடை திறந்தவுடன், எல்லோரும் அரிசி வாங்க முண்டியடித்துக் கொண்டு ஓடுகிறார்கள். ஆளுக்கு இரண்டு மூட்டை என்று ரேஷன் கடையை போல அரிசி விற்கப்படுகிறது.
——-
போன வாரம், பெரிய திரையில் பார்த்த மிஷ்கினின் அஞ்சாதே படம் ரொம்பவும் பிடித்திருந்தது. மீண்டும் ஒரு முறை பார்த்து விட்டு அதைப் பற்றி எழுத எண்ணம்.
தமிழ் சினிமாவுக்குத் தேவை, சில டஜன் மிஷ்கின்கள் தான்.
——-
பா. ராகவன் கிழக்கு ப்ளஸ் என்று கிழக்குப் பதிப்பகத்தின் கதையை விவரமாக எழுதுகிறார். பீக்கன் இந்தியா பிரைவேட் ஈக்விடி ஃபண்ட் என்னும் நிறுவனம், கிழக்கு பதிப்பகத்தின் நிறுவனமான நியு ஹொரைசன் மிடியாவில் முதலிடு செய்திருக்கும் இந்நிலையில் கிழக்கின் கதையை எழுத இதுதான் நேரம் என்று நினைத்திருப்பார் போலும்.
இன்னும் விரிவாக கிழக்கு பதிப்பகத்தின் ஆரம்ப எண்ணங்களும் அதைச் சார்ந்த பிற விவாதங்களையும் பற்றி எழுதியிருக்கலாம் என்று தோன்றினாலும், படிக்க சுவாரசியமாக இருக்கிறது.
‘என்னைப் பார் யோகம் வரும்’ என்று கிட்டத்தட்ட கெஞ்சிக் கொண்டிருந்த தமிழ் பதிப்பகத் தொழிலை கவனிப்பாரற்ற நிலையில், எதோ கிரிக்கெட் வெப்சைட் தொழிலில் இருந்த ஒரு இளைஞரும், வார பத்திரிகைத் தொழிலில் வாரா வாரம் உழன்று கொண்டிருந்த மற்றோரு இளைஞரும் இணைந்து கிழக்குப் பதிப்பகத்தை தொடங்க, பதிப்பகத் தொழில் செழிக்க ஆரம்பித்தது என்னவோ உண்மை தான்.
அதன் வளர்ச்சியை பார்த்து பல நிறுவனங்கள் தங்கள் பதிப்பகங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பதும் உண்மை தான்.
——
சமீபத்தில் ஜெயமோகன் அவரது வலைப்பதிவில் எழுதிய ஆன்மீகம் ,தத்துவம், மதம் பற்றிய ஒரு கட்டுரை, தமிழில் மிக அரிது. மிகத் துல்லியமாக, தெளிவாக எழுத்ப்பட்ட ஒரு கட்டுரை. புரியவில்லை என்றால் மீண்டும் படிக்கலாம்.
——
போஸ்ட் கவரில் தலைகிழாய் அட்ரஸ் எழுதி வந்தடைந்த வார்த்தை மாத இதழ் கிடைக்கப் பெற்றேன். நன்றி.
செழியனின் முகங்களின் திரைப்படம் கட்டுரையும், கோபால் ராஜாராம் எழுதியிருந்த சுஜாதாவின் அஞ்சலிக் கட்டுரையும் பிடித்திருந்தது. இதழ் நிர்வாகம் செய்யும் ஹரன் பிரசன்னாவின் அன்பு என்னும் கவிதை அபாரம்.
வீடெங்கும் அன்பு சூழ
அன்பே பிரதானம்
அப்படியே ஆகுக
அன்பைப் பற்றியே
எழுதத் தொடங்கினேன்
அடித்தல் திருத்தல்களில்
கிழித்தெறியப்பட்ட
காகிதப் பந்தில்
பயந்து கலைகிறது
தடித்த பல்லி
வாயில் கெளவிய
ஒரு பூரானோடு
– ஹரன் பிரசன்னா
சல்மாவின் காத்திருப்பு கவிதை பிரமாதமாக தொடங்கினாலும், சற்றே எதிர்ப்பாத்த முடிவு. வழக்கம் போல எஸ் ராமகிருஷ்ணனின் திரும்பிச் செல்லும் மலைகள் என்னும் சிறுகதையின் முடிவு புரியவில்லை. அதற்காக வரையப்பட்ட ஓவியங்கள் அழகாய் மாடர்னாய் இருப்பினும் அவைகளும் புரியவில்லை. பாவண்ணனின் கூடு சிறுகதையை இன்னும் படித்து முடித்தபாடில்லை.
ஜெயகாந்தனின் பதில்களில் கேள்வி கேட்பவனை பார்த்து வேண்டுமென்றே மீண்டும் கேள்வி கேட்பது தோன்றுவது எனக்கு மட்டுமா என்று தெரியவில்லை.
வார்த்தை இதழ் 500 ருபாய்களுக்கு ஒரு வருட சந்தா[ஸ்பெஷல் ஆஃபர்). ஒரு இதழுக்கு நாற்பது ருபாய்களுக்கு ஸ்டாம்ப் ஒட்டுகிறார்கள். எப்படி கட்டுப்படி ஆகிறது என்று யாராவது விளக்கலாம்.