ஹாலிவுட் நகரங்கள்

நியூயார்க் ஒரு self-indulgent நகரம். சென்டர் ஆப் தி யூனிவர்ஸ். நம்மூர் பம்பாயைப் போல. அதாவது, பம்பாயே ஒரு உலகம் போல, அதனைப் பற்றி பேசுவதற்காகவே ஆழேழு சானல்கள், அரை டஜன் செய்திப்பத்திரிக்கைகள், தினமும் பலப்பல குற்றங்கள், குவியும் மக்கள் கூட்டம் என்று தன்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும் நகராதி நகரம். தப்பல்ல. இந்த நகரங்களுக்குள் அடங்கி இருக்கும் self-sustaining ecological system போன்றோரு அமைப்புத் தான் இந்த ‘தன்னைச் சுற்றித் தான் உலகம்’ என்ற மாயைக்கு காரணம்.

நியூயார்க்கில் எல்லாம் கிடைக்கும். அதாவது எல்லாம் எல்லாம். என்ன எல்லாமே அங்கே கொஞ்சம் அவசரம். வேலையிலிருந்து சாப்பாடு, தூக்கம், வாழ்க்கை என்று எல்லாவற்றிலுமே அவசரம். நியூயார்க் பல மில்லியன் வாழ்கைகளை உண்டாக்கியிருக்கிறது. வந்தவர்களுக்கெல்லாம் வாழ உதவியிருக்கிறது. காட்ஃபாதர் இரண்டில் வந்திரங்கும் அந்த சிறுவனை காட்ஃபாதர் ஆக்குவதிலிருந்து, வால் ஸ்ட்ரீட் analystsவரை எல்லோரும் வந்து சேரும் இடம். இதன் அத்தனை குணங்களும் பம்பாய்க்கும், டோக்கியோவுக்கும், பாரிஸுக்கும், லண்டனுக்கும் ஏன் லாஸ் ஏஞ்சல்ஸுக்கும் உண்டு.

ஆனால் நியூயார்க் மக்களை விட நியூயார்க்கை ரொம்ப பிடித்திருப்பது ஹாலிவுட்காரர்களுக்குத் தான். இதற்கு காரணங்கள் பல. முழுமையான காரணம், நியூயார்க்கும் அதன் சுதந்திர தேவியின் சிலையும் தான், அமெரிக்காவின் முதல் அடையாளம். அதன் முகம். எல்லா மொழிப் படங்களிலும் அமெரிக்காவை காட்டும் போது முதலில் இறங்கும் ப்ளேனையும், சுதந்திரதேவி சிலையின் ஹெலிகாப்டர் க்ளோஸப்பும் பின்பு, எஸ்கலேட்டரில் ஹீரோ சன்க்ளாஸுடன் இறங்கும் காட்சியும் நிச்சயம்.

இன்னும் ஒரு மாதத்தில் ரிலிஸாகவிருக்கும் இரண்டு ஹாலிவுட் படங்களில் நியூயார்க்கில் சண்டை நடக்கிறது. ஒன்றில் ப்ரூக்ளின் ப்ரிட்ஜ் உடைகிறது. மற்றொன்றில் சுதந்திர தேவியின் தலை உருளுகிறது. எவ்வளவு முறை இதைப் போல டிஸ்ஸாஸ்டர் படம் வந்தாலும், மீண்டும் அதையே செய்கிறார்கள். தாலி சென்டிமெண்ட் போல, நியூயார்க் சென்டிமெண்ட்.

i-am-legend.gif

I am Legend என்னும் வில் ஸ்மித்தின்[Will Smith] சயின்ஸ் பிக்-ஷன் படத்தில், நியூயார்க்கில் ஒருவரும் இல்லை, வில் ஸ்மிதையும் அவருடைய நாயையும் தவிர. முதலில் புத்தகமாக வந்த இந்தக் கதை இது வரை நான்கு முறை திரைப்படமாக்கப்பட்டுள்ளது. வில் ஸ்மித்தை Global Movie Machine என்கிறார்கள். உங்கள் ஊருக்கு படம் வந்தால், யாரும் சொல்லாமலேயே கண்டிப்பாய் பார்ப்பீர்கள்.

Cloverfield என்னும் படத்தில் ஐந்து நியூயார்க் இளைஞ/இளைஞிகள் தங்கள் நண்பர்களுக்கு அளிக்கும் பேர்வெல் பார்ட்டியின் நடுவில் ஒரு பல மாடிக் கட்டிடம் உடைந்து விழுகிறது. பிறகு சில கிராதகர்கள் வருகிறார்கள். இந்த படத்தின் தயாரிப்பாளர், Lost என்னும் பரபரப்பு சீரியலின் எழுத்தாளர் ஜெ.ஜெ. அப்ராம்ஸ். கதையை மூச்சு விடாமல் இருக்கிறார். பார்க்கலாம்.

லாஸ் ஏஞ்சல்ஸும் எக்கச்சக்க ஹாலிவிட் படங்களில் வந்து விட்டது. எல்.ஏ(LA)வில் தான் ஹாலிவுட் இருக்கிறது. அதைத் தவிர அங்கு இருக்கும் எல்லா ஊர் மக்களும், பல நாட்டவர் வந்து போகும் இடமாதலாலும் நீங்கள் எந்த மொழிப் படத்தை வேண்டுமானாலும் இங்கு எடுக்கலாம்.

சியாட்டல் ரொம்ப சாதுவான நகரம். அதிகமான படங்களில் இடம் பிடிப்பதில்லை. மழையில் எடுக்கப்படும் திகில் படமாக(Ring) இருந்தால், அல்லது ஏதாவது ரொமாண்டிக் படமாக(Sleepless in Seattle) இருந்தால் மட்டுமே சியாட்டலுக்கு வருகிறார்கள். கடைசியாக இங்கு எடுத்த படம் ஒரு சரியான மொக்கைப் படம்.

இன்று

வீட்டிற்கருகில் இருக்கும் மைக்ரோசாப்ட்டின் வழியாக காரோட்டிக் கொண்டிருந்தேன். ரஜினி படம் கணக்காக, விண்டோஸ் மெஸஞ்சரின் இரண்டு மனித பொம்மைகளின் பதினைந்தடி கட்-அவுட் வைத்திருக்கிறார்கள். அழகாக இருந்தது. விண்டோஸ் லைவ்(windows live) என்னும் சாப்ட்வேர் பாக்கேஜை இந்த வாரம் அறிமுகப்படுத்தியது தான் காரணம்.

இந்த தமிழக கட்-அவுட் கலாசாரம் ரெட்மண்ட் வரை வந்ததற்கு காரணம் பச்சைத் தமிழ் மைரோசாப்ட் ஆசாமிகளா என்று நண்பர்களை கேட்க வேண்டும்.

————————–

சியாட்டல் இந்தியர்கள் தத்தம் பால்கனிகளில் அகல் விளக்கேற்றி தீபாவளி கொண்டாடுகிறார்கள். பார்க்க ஆனந்தமாய் இருக்கிறது. இன்ஜினியர் கணவர்கள் விளக்கு தவறி விழுந்து தீ பற்றிக் கொள்ளுமோ, ஃபையர் என்ஜின் வருமோ என்று பயந்து, கடுங்குளிரிலும் பால்கனியை காவல் காத்ததும் பார்க்க நேர்ந்தது.

————————–

அமெரிக்காவில் பங்குச் சந்தை படுத்துக் கொண்டிருக்கிறது. அடுத்த வருடம் மார்ச்க்கு பின் தான் தலை தூக்கும் என்கிறார்கள். அதுவரை வங்கிகளும், ரீடைல் நிறுவனங்களும் இழுத்துப் பிடிப்பது நலம். அமெரிக்காவின் வருடாந்திர ஷாப்பிங் சீசன் ஆரம்பிக்கப் போகும் இந்நிலையில் இந்த அழுமூஞ்சி ஸ்டாக் மார்க்கெட் பல நிறுவனங்களின் வயிற்றை க.கொ இருக்கிறது.

இந்த சோக கீதத்திற்கு காரணம், வீட்டு கடன்கள் தான். சப்-ப்ரைம்(sub-prime) எனப்படும் மார்க்கெட் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் கடன் கொடுத்தது தான் காரணம்.

அமெரிக்காவில் 50களில் பில் ஃபேர்(Bill Fair) என்னும் இன்ஜினியரும், இயர்ல் ஐஸாக்(Earl Issac) என்னும் கணக்கு பேராசிரியரும் ஆரம்பித்த நிறுவனம் தான் ஃபைகோ(FICO – Fair Issac and Company). இது தான் இன்று வரை அமெரிக்கர் ஒவ்வொருவரின் கடன் வாங்கக்கூடிய சக்தியை பல ஆயிரக்கணக்கான variables, வங்கி கணக்குகள், க்ரெடிட் கார்டு செலவுகளை திருப்பிக் கட்டும் தன்மைகள் ஆகியவற்றை வைத்து கணக்கிடுகிறது. இது தான் க்ரெடிட் ஸ்கோர். இந்த க்ரெடிட் ஸ்கோரை எல்லா வங்கிகளும் ஃபைகோவிடமிருந்து காசு கொடுத்து வாங்கி, அவரவர் ஸ்கோருக்கு ஏற்றாப் போல் கடனளிக்கின்றன.

ஓவ்வொருவரின் க்ரெடிட் ஸ்கோரும்(Fico Score) சுமார் 300லிருந்து 850 வரை இருக்கலாம். அதிகம் இருப்பின் நலம். 700 க்கு மேல் க்ரெடிட் ஸ்கோர் இருக்கும் வாடிக்கையாளர்களை, ப்ரைம் மார்க்கெட் என்கிறார்கள். 620க்கு கீழ் ஸ்கோர் இருப்பவர்களை ஸப்-ப்ரைம் மார்க்கெட் எனக் குறிக்கிறார்கள். அமெரிக்கர்களில் 25% இந்த சப்-ப்ரைம் மார்க்கெட்வாசிகள்.

இந்த சப்-ப்ரைம் மார்க்கெட்வாசிகளுக்கு வீட்டுக் கடனிப்பது பற்றி வங்கிகள் யோசிக்கின்றன. கொடுத்தால் திருப்பிக் கொடுப்பார்களா அல்லது டபாய்ப்பார்களா என்று தெரியாது என்கிறார்கள். அப்படியும் சில வங்கிகள் இந்த சப்-ப்ரைம் மார்கெட்டுக்கு கடன் கொடுக்கிறார்கள். போன இரண்டு வருடங்களில் சப்-ப்ரைம் கடனாளிகள் சிலர், வேலையின்மையாலேயும் விலைவாசி உயர்வாலும் மாச இன்ஸ்டால்மெண்டை திருப்பிக் கொடுக்க முடியாமல் போனதால், வங்கிகள் நஷ்டக் கணக்கு காட்ட, ஸ்டாக் மார்கெட் ஓவராக ரியாக்ட் செய்ய, மற்றதெல்லாம் இந்த வார நியூஸ்.

இந்த களேபாரத்திலும் வீட்டு மனை விலைகள் குறையாத சில நகரங்களில் சியாட்டலும் ஒன்று. ஆனாலும் இரண்டு மாதங்களாக வீட்டு விலைகள் சற்றே குறைய ஆரம்பித்துள்ளன. இந்த நியூஸ் கேட்டவும் புது வீடு கட்டும் ஏஜெண்டுகள், தோண்டிய மண்ணை அப்படியே க்ரேனில் போட்டு விட்டு ஓடிவிட்டாற்போல் இருக்கிறது.

தினமும் சி.என்.பீ.சியில் நியுயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ் சில் இருந்து கெட்ட செய்தியாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதெல்லாம் பிசினஸ் சைக்கிள் என்றே தோன்றுகிறது. பைனான்ஸ் டிபார்ட்மெண்டில் விடாமல் கூட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் இரண்டொரு மாதத்தில் இந்நிலையை முழுமையாக திருப்பிப் போட்டு எகானமியை கண்டிப்பாய் முன்னேற்றி விடுவார்கள்.

மற்றவை சில

சியாட்டலில் குளிர் ஆரம்பித்தாகிவிட்டது. பஸ்களில் எந்நேரமும் ஹீட்டர் போடுகிறார்கள். லைட் போடுகிறார்கள். ஆறேகாலுக்கு மேல் பசுமாடு தெரிவதில்லை. வீட்டில் தேங்காய் எண்ணெய் கட்டித்தட்டுகிறது.கார்பெட்டில் கால் பதிக்க முடிவதில்லை. ரோட்டில் எல்லோரும் குளுர் ஜாக்கெட் போட்டிருக்கிறார்கள்.

இதெல்லாம் ஒவ்வொரு வருடமும் அமெரிக்கா குளிர்காலத்திற்கு தயாராக செய்யும் பிரயத்தனங்கள். இன்னமும் கொஞ்ச நாளில் எல்லோரும் கழுத்தில் ஸ்கார்ப் போடுவார்கள். இரண்டடி எடுத்தால், ஐஸ் மூன்றடி வழுக்கும். நாலு மணிகெல்லாம் இருட்டிக் கொள்வதால், வேலை செய்ய போர் அடிக்கும். நம்மூரைப் போல எல்லோரும் எந்நேரமும் டீவி பார்ப்பார்கள். வீட்டிலேயே சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டு, எக் நாக் குடித்துக் கொண்டிருப்பதால் இருப்பதால் சம்மரில் இழந்த தொப்பை மீண்டும் வந்து சேர்ந்து கொள்ளும். சதா சர்வகாலமும் க்ரிஷ் ஸ்ரீகாந்த் போல மூக்கு சிந்த நேரிடும்.

இத்தனை காமெடிகளையும் தாண்டி அமெரிக்க குளிர் பிடித்திருக்க காரணம், சியாட்டல். சியாட்டல் ஒரு ஈர நிலம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை தண்ணீர். இந்த சியாட்டிலையும், அதில் எப்போதும் பெய்யெனப் பெய்யும் மழையும் பற்றி, ஒரு நீண்ட பத்தி, எழுத எண்ணம்.

————————-

சென்னையிலிருந்து மற்றுமொரு செட் புத்தகங்கள் வந்து இறங்கி, வீட்டை அடைத்துக்கொண்டன. முக்கியமாய், உடையாரும், படிக்கத் தவறிய சில தி.ஜானகிராமன், ருத்ரன், சோ மற்றும் சில டஜன் கிழக்கு பதிப்பக அ-புனைவுகளும்.

புத்தகங்கள் என் அப்பார்ட்மெண்டின் ஆபீஸுக்கு போஸ்டில் வந்து இறங்கின. அதை வாங்க சென்ற என் மனைவி, தூக்க முடியாமல் தூக்கி வந்தாள். “புஸ்தகத்தை பார்த்தா எங்க இருந்து தான் உங்களுக்கு இப்படி ஒரு குறும்பு சிரிப்பு வருதோ ? வேற எப்போதும் இந்த மாதிரி சந்தோஷமாய் ஒரு சிரிப்பைக் காணோம்”, என்றாள் மனைவி.

தற்போது படித்துக் கொண்டிருப்பது, ஜெயமோகனின் எழாம் உலகம். ஒரு வாரத்தில் எழுதிய நாவலென படித்திருக்கிறேன், நம்ப முடியவில்லை.

————————-

இந்த கிறுக்கல்.com எழுத ஆரம்பித்து ஆகஸ்டிலேயே ஒரு வருடம் ஆகிவிட்டது. அதுவே இப்பொழுது தான் ஞாபகம் வந்தது. இதுவரை உருப்படியாய் ஒன்றும் எழுதிதாக தெரியவில்லை.

அதற்காக எழுதியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இல்லாததால், இங்கு எழுத பிடித்திருக்கிறது.காமெண்டுகள் இல்லாததும் மற்றுமொரு காரணமாய் இருக்கலாம்.

————————-

crater lake oregon

போன மாதம், ஆரெகன் என்னும் பக்கத்து மாநிலத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு யூஜீன் என்னும் நகரத்தில் தங்கி, ஒரு நாள் முழுவது சுற்றிப் பார்த்த இடம், க்ரேட்டர் லேக்.

ஏழாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன் வெடித்த எரிமலையால் அந்த மலையில் ஒரு பெரும் பள்ளம் எழ, அதில் தோன்றிய ஒரு ஏரி தான் க்ரேட்டர் லேக். இது உலகத்தில் ஒரு யுனீக் இடம் என்றெல்லாம் மார்கெட்டிங் செய்கிறார்கள். உண்மை என்றே தோன்றுகிறது.

உலகத்திலேயே மிக தெளிவான நீர்நிலை இது தான் என்கிறார்கள். ஒரு பெரும் பள்ளத்தில் இருக்கும் நீர், ஆதலால், மற்ற நீர்நிலைகளுடன் கலப்பதில்லை. அதனாலேயே இந்த தெளிவு. Refractionல் அங்கெங்கே மிக அடர்த்தியான நீலத்துடனும், சில இடங்களில் MS பட்டு போன்ற நீலத்திலும், அந்த தண்ணீர் ஒரு தனி அழகு.

போன நூற்றாண்டு வரை, அமெரிக்க பழங்குடி இந்தியர்கள் இதை கடவுளாக வணங்கி வந்தனர். மலை உச்சியிலிருந்து தண்ணீரை பார்ப்பதையே சாமி குத்தமாக் நினைத்திருந்தனர். அங்கிருந்த போர்டுகளில், இதை பற்றியெல்லாம் கதையை படித்த போது, சில நூற்றாண்டுகளுக்கு பின் சென்று அந்த பழங்குடியினத்தவரின் வாழ்கையை நினைத்துப் பார்க்க முடிந்தது.

நயாகராவுக்கு பின் நிறைய NRIs குடும்பத்துடன் வரும் இடம் இதுதான் போலும். கலிபோர்னியாவுக்கு அருகில் என்பதால், எல்லா முக்கிலும், எல்லா வியு பாயிண்ட்களிலும், ஹோண்டா டொயோட்டா கார்களும், லெதர் ஜாக்கெட் – பட்டும் புடவையும், மஃங்கி குல்லாவும், எலுமிச்சை சாதமும் புளியோதரையும் பார்க்க முடிந்தது.

ஸ்பீல்பெர்கின் Artificial Intelligence படத்தில் வரும் அந்த வளைந்து செல்லும், அடர்ந்த உயர்ந்த ஆரெகனின் பச்சை காடுகளினூடே, “யாருக்குள் இங்கு யாரோ ?” கேட்டு/பாடிக் கொண்டே, கார் ஓட்டிய அனுபவம், மறக்க முடியாதது. Classy !!

தேவன் வருகை

devan varugai

வெள்ளிக்கிழமை அன்று, ஆபீசில் இருந்த அனேகர் கிளம்பிய பின்னர், கடலை பார்த்துக் கொண்டிருந்தேன். கொஞ்சமாய் இருட்ட ஆரம்பித்தது. சடசடவென ஒரு 10-15 நிமிடத்தில், கொஞ்சம் நன்றாக இருட்டி, மேகத்தின்னூடே சூரிய கதிர்கள் வர ஆரம்பித்தன.

புதுசாய் வாங்கிய காமிராவை பக்கத்தில் வைத்துக் கொண்டிருந்த எனக்கு கொண்டாட்டம். ஒரு இருபது போட்டோக்கள் எடுத்து தள்ளினேன். ஒரு ஆறு தான் தேறியது. அதை வைத்து தேவன் வருகை என கதை சொல்ல முடியும். ஃப்ளிக்கரில். அந்த ப்ளு டிஞ்ச் இருட்டை சற்றே அதிகமாக்குகிறது.

by the night

சியாட்டலுக்கு அந்தப் பக்கம் இருக்கும் ஆல்கய் பீச்சுக்கு இன்று சென்றபோது வெயில் அடித்துக் கொண்டிருந்தது. எப்போதும் எதையாவது குடித்து கொறித்துக் கொண்டு யுவ யுவதிகளும், ஓடிக்கொண்டும் ஸ்கேட்டிங் செய்து கொண்டும் இருக்கும் மற்ற வகை இளைஞர்களும், ஸ்பீக்கரில் சத்தமாய் வழியும் ஹிப்ஹாப்களும், அங்கிங்கென பறந்து கொண்டிருக்கும் மாடிஃபைட் மாஸ்டாக்களும் சேர்ந்து நம்மூர் பெசண்ட் நகரை ஞாபகமூட்டின.

ஒரு மூன்று மணி நேரம், அந்த ஜோதியில் அடியேனும் ஐக்கியமானேன். மின்னலே / வாலி / காதல் தேசம் என்று கேட்டுக் கொண்டே நடந்தேன். அவ்வப்போது நிக்கானினேன். லேசிலென்ஸில் அல்லது ஃப்ளிக்கரில்.

சமையல் குறிப்பு !!

“தினமும் பீட்ஸா பாஸ்தான்னு சாப்டாம ஒழுங்கா பாக்கெட் சாப்பாடு சாப்டுங்க”, என்று மோவாக்கட்டையை அழுத்திப் பிடித்து சொல்லிவிட்டு சென்னைக்கு ப்ளைட் ஏறினாள் மனைவி. பாக்கெட் சாப்பாடா ? என்று கேட்பவர்களுக்கு ஒரு மங்கையர் மலர் குறிப்பெழுதலாம்.

ஊருக்கு கிளம்ப இரண்டு நாட்களுக்கு முன், அண்டாகள் நிறைய சாம்பாரும் ரசமும் அவியலும் மற்ற சில சுவை உணவுகளுமாய் தாயராகிக் கொண்டிருக்க, யாரோ கெஸ்ட் வருகிறார்கள் என்று நானும் நினைத்தேன். “தோ பாருங்க…இங்க இதை பிடிங்க” என்று கூப்பிட்ட போது மானிட்டரில் இருந்து என்னை பிய்த்துக் கொண்டு போனேன்.

என்ன தான் மனைவியின் கைப்பக்குவம் பிடித்திருந்தாலும், ஜனகராஜ் ஸ்டையிலில் தங்கமணி என்ஜாய் என்று இரண்டொரு மாதங்களுக்கு இஷ்டத்துக்கு சாப்பிடலாம் என்ற நினைப்புக்கு எள். பல டஜன் ஸிப்லாக் பைகளில், இரண்டு மூன்று கரண்டி சாம்பாரையும் ரசத்தையும் தனித்தனியாக் ஊற்றிக் கொண்டிருந்தாள். புரிந்தது சூழ்ச்சி. இதைப் போல சாம்பார், ரசம், மோர் குழம்பு, வத்தக் குழம்பு, அவியல் மற்றும் கூட்டு என்று விதவிதமாக மொத்தம் 60-70 தனிப் பாக்கெட்டுகளில் தயார்(சுத்தத் தமிழ் வார்த்தை ஒன்று இருக்கிறது. சொன்னால் பரிசு) செய்து, காட்டெருமை சைஸ் ப்ரீஸரில் அடைத்து விட்டாள். ஒரு நாளுக்கு தேவையான அளவு ஒரு பாக்கெட்டில் அடைக்கப்பட்டது. இரண்டு மாதத்திற்கு தேவையான சாப்பாடு ரெடி.

மனைவி ஊருக்கு போன ஒருவாரத்திற்கு பிறகு நாக்கு செத்துப்போய், ப்ரீசர் சாம்பாரையும் கூட்டையும் மைக்ரோவேவில் டீபராஸ்ட் செய்து சாப்பிட்டால் கலக்கலாய் இருக்கிறது. எக்கச்சக்கமாய் எக்ஸ்பாக்ஸ் விளையாடிவிட்டு சுண்டக்காய் வத்தக் குழம்பும் லேஸ் சிப்ஸும் சாப்பிட முடிகிறது. இந்த ப்ரீசர் மேட்டர் சென்னையில் வேலைக்காகாது. என்னதான் ப்ரீசராய் இருந்தாலும் வெளியிலுள்ள தட்ப வெட்பத்தால் ரொம்ப நாள் தாங்குவது கடினம்.

தேசித் தமிழர்கள் என்னப்போல் சமையல் சோம்பெறிகளாய் இருந்தால் சிப்லாக் சாப்பாடை செஞ்சு வச்சுட்டு கிளம்புமா தாயே என்று தத்தம் மனைவிகளிடம் பெட்டிஷன் போடலாம். கொஞ்சம் வித்தியாசமாய், சேமியா உப்புமா, அடை, ஆனியன் ரவா, பருப்பு பாயசம் இத்தியாதிகளையும் பிரீஸ் செய்யும் படி கேட்கலாம். எல்லாவற்றிக்கும் தனித்தனியாய் தங்க மாளிகை பில் வரும்.

நீங்களும் இதை முயன்று பார்க்கலாமே ? (இப்படித் தான் எல்லா மங்கையர் மலர் குறிப்புகளையும் முடிக்கிறார்கள்).