அமெரிக்காவில் இது தேர்தல் சீசன். ஜார்ஜ் புஷ்ஷுக்கு பிறகு வரப்போகும் 44வது ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க கிட்டத்தட்ட ஒரு வருடம் இருக்கும் நிலையில், இப்போதே பிரசாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேர்தல் நியுஸும், பிராசரங்களுமாய் மீடியா ஏக பிசியாகி விட்டது. பிரிட்னி ஸ்பியர்ஸின் மனவியாதியும், நாலு படங்களில் மூன்றாம் ஹிரோவாக நடித்த எதோ ஒரு ஹாலிவுட் ஸ்டாரின் ஆறாவது காதல் கல்யாணமும் இப்போது அடுத்த நியுஸ் தான்.
டிவி தொகுப்பாளினிகள் காமிரா நடுவே ஓடி ஓடி நியுஸ் சேர்க்கிறார்கள். மழையிலும் பாஞ்சோ போட்டுக் கொண்டு நனைந்து கொண்டே சமீபத்திய தேர்தல் எண்களை ஓயாமல் பேசுகிறார்கள். சி.என்.என்னில் அறுபது இஞ்ச் டச் ஸ்கிரீன் எல்.சி.டிகளை வைத்துக் கொண்டு, அமெரிக்கா வரைப்படத்தில் ஸூம்-இன்/அவுட் செய்து முன்-தேர்தல் ரிசல்டுகள் அறிவிக்கப்படுகின்றன. அனலிஸ்டுகள் ஓயாமல் பேசுகிறார்கள். ஒரே பேச்சு வெள்ளம்.
மக்களும் ஒரு கையில் மைக்குடன், ஸ்டார்பக்ஸ் காபியை ஸிப் செய்து கொண்டே சாந்தமாய் தான் யாருக்கு ஓட்டுப் போடப் போகிறேன் என்று பேட்டி கொடுக்கிறார்கள். போஸ்டர்கள் ஒட்டாமல், நாற்பதடி கட்-அவுட் வைக்காமல், தெருவடைச்சானாக பந்தல் போட்டு கரகர தீப்பொறிக் குரலில் சோடா பாட்டில் பேச்சுக்கள் இல்லாமல், “சே என்ன ஒரு தேர்தல் !!” என்று சோர்வு தட்டும் அளவுக்கு தேர்தல் மேளா ஆரம்பித்திருக்கிறது.
ஜனநாயக(டெமாக்ரடிக்) மற்றும் குடியரசு(ரிபப்ளிகன்) என்று இரண்டு கட்சிகள் தான். அவ்வப்போது, க்ரீன் பார்ட்டி என்று ஒரு தனிக்கட்சி எதோவொன்று தலைக்காட்டுகிறது.
ஒவ்வொரு கட்சியிலும் மூன்று நான்கு பேர் தன்னை ஜனாதிபதிக்கு போட்டியிட நிறுத்துமாறு முன்வருகிறார்கள். நம்மூரைப் போலவே ஒவ்வொரு கட்சியின் பொதுக்குழுவே தேர்தலில் நிற்கப்போகும் தலைவரை முடிவு செய்கிறது. ஆனால் கட்சியின் பொதுக்குழு, உள்கட்சிக் குழு, ஓட்டுப் போடும் பொதுகுழு என்றெல்லாம் குழப்படி கேஸ் பண்ணாமல், அந்தந்த கட்சியில் ரிஜிஸ்டர் செய்திருக்கும் மக்கள் அனைவரும் ஓட்டுப் போட வாய்ப்பளித்து, பொதுக்குழு(delegates)வை தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த டெலிகேட்ஸ்ஸுகள், இந்த சம்மரில் நடக்கும் கன்வென்ஷனில் கலந்து கொண்டு ஜனாதிபதிக்கு நிற்கப்போகும் தலைவரை தேர்ந்தெடுக்கிறார்கள்.
இவ்வாறு மக்கள் டெலிகேட்ஸ்களை தேர்ந்தெடுக்கும் முன்- தேர்தலை தான் ப்ரைமரி அல்லது காக்கஸ்(caucus) என்கிறார்கள். ப்ரைமரியில் ஓட்டு இயந்திரத்தில் ஓட்டுப்போடப்பட்டு, அந்த மிஷின் ஓட்டுகளை எண்ணுகிறது. காக்க்ஸ் என்பது கொஞ்சம் பழைய ஓட்டுப் போடும் முறை. அதில் எதாவது ஒரு சர்ச்சிலோ, கல்யாண மண்டபத்திலோ மக்கள் தனக்கு பிடித்த வேட்பாளரின் பக்கமாய் பிரிந்து நின்று, கையுயர்த்தி ஓட்டளிக்கிறார்கள்.
இரண்டு மாதங்களாக நடக்கும் இந்த தேர்தலுக்கு-முந்திய-தேர்தலில், இரண்டு மூன்று மாநிலங்களில் தோற்று விட்டால், இனிமேல் பிரயோஜனமில்லை என்று ஒவ்வொரு ஜனாதிபதி வேட்பாளராய் கழற்றிக் கொள்கிறார்கள்.
குடியரசுக் கட்சியில் ஜான் மெக்கெய்ன், மைக் ஹக்கபீ என்று இரண்டு தலைகள் தான் இன்னும் போட்டியில் இருக்கிறார்கள். இதில் மெக்கெய்ன் ஒரு வியட்நாம் போர்வீரர். ரொம்ப காலமாய் வாஷிங்டன்வாசி. அரசாங்க இயக்கங்கள் புரிந்தவர். மைக் ஹக்கபீ சர்சில் ஒரு பாஸ்டராய் இருந்தவர். இவர்களுக்கு இடையே மெக்கெய்ன் தற்போது அதிக பிரதிநிதிகளை தன் வசம் வைத்திருக்கிறார்.
ஜனநாயக கட்சியில் தான் ஏக கெடுபிடி. பாரக் ஒபாமா என்ற ஆப்பரிக்க அமெரிக்கருக்கும், ஹில்லரி கிளிண்டனுக்கும் தான் போட்டி. இவர்களில் யார் ஜனாதிபதியானாலும், அது ஒரு வராலாற்று நிகழ்வு தான். இதனால் இந்த போட்டியை, race vs gender போட்டி என்கிறார்கள்.
பாராக் ஒபாமாவை மாற்றத்தின் பிரதிநிதியாக மக்கள் பார்க்கிறார்கள். சியாட்டலில் போன வாரம் அவர் வந்திருந்த போது, ஒரு பாஸ்கெட் பால் ஸ்டேடியம் நிரம்பி வழிய, கிட்டத்தட்ட 18,000 பேர் நின்று கொண்டு அவர் பேச்சைக் கேட்டார்கள். “யெஸ் வி கேன்”, என்ற ஒபாமாவின் பிராசர வாசகம் இப்போது யுடூபில் ஏக பிரபலம்.
ஹில்லாரி கிளிண்டனை, அவரது கணவரான பில் கிளிட்டனின் ஜனாதிபதியாக ஆண்ட போது இருந்த அமெரிக்க பொருளாதார செழுமைக்கு, மீண்டும் கொண்டு செல்லக் கூடிய சக்தியாக பார்க்கிறார்கள்.
இவர்கள் இருவரும் ஒரே மேடையில் விவாதிக்கும் போது, மிடியா சந்தோஷத்தில் குதிக்கிறது. கிட்டத்தட்ட ஒரு ரியாலிடி ஷோ போல இவர்களின் விவாதம் ஆன போது, சட்டென்று புரிந்து கொண்டு, இருவரும் சற்றே அமைதியாய் எதிர்த்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். டிவி எழுத்தாளர்கள் ஸ்ட்ரைக் நடந்து கொண்டிருந்த போது, இவர்களைப் பற்றிய நியூஸைத் தான் ப்ரைம் டைம் டிவி நம்பிக் கொண்டிருந்தது.
இவர்கள் சண்டையில், ரிபப்ளிகன் பார்ட்டி மீண்டும் வந்து விடும் என்று ஆருடம் சொல்லுகிறார்கள். யார் வருகிறார்களோ இல்லையோ, இந்த அதிவேக கலாசாரத்தில், டுவிட்டர், டிக்க், வோர்ட்பிரஸ். சி.என்.என், யு-டியுப் ஆகிய இடங்களில், யாராரோ சதா சர்வ காலமும் எதையாவது எழுதிக் கொண்டோ, பேசிக் கொண்டோ இருக்கிறார்கள். கொஞ்சமாய் தலைச் சுற்றுகிறது !!