இயந்திரா 3 – ப்ளர்ப்

blurb

blurb (blûrb)
n.
A brief publicity notice, as on a book jacket.

blurb whore
n.
A writer who provides flattering comments about a book or movie in exchange for meals, travel, or some other perk.

போன மாதம் நடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் எத்தனை பேர், “நல்லாருக்கு”, என்று யாரோ சொல்லியோ எங்கோ படித்தோ, புத்தகம் ஒன்றை வாங்கினீர்கள். அப்படியானால், நீங்களும் ஒரு ப்ளர்ப்வாசி தான். காது வழிச் செய்தியும் கிட்டத்தட்ட ப்ளர்ப்(blurb) தான். கிட்டத்தட்ட.

புத்தகங்களின் மேல் பின் அட்டையிலும், முதலிரண்டு பக்கங்களிலும் அடிக்கடி புள்ளிகள் வைத்து எழுதப்படும், அந்த புத்தகத்தை/ஆசிரியரைப் பற்றிய பில்டப் தான் ப்ளர்ப்.

blurb

நான் ஒரு ப்ளர்ப் ரசிகன். கையில் கிடைக்கிற எந்த புத்தகங்களானாலும் அதன் ப்ளர்புகளை முதலில் படித்துவிடுவேன். ஆனாலும் ப்ளர்புகளினால் இருக்கும் பயன்களை சந்தேகிக்கிற ஆசாமி. சிலவற்றில் கதையே தெரிந்துவிடும். சிலது எளிதில் பிடிபடாது. பலவற்றில் இது பில்டப் என்று தெரிந்துவிடும். பல ப்ளர்புகளின் உண்மையை அறிய அந்த புத்தகத்தை படிக்க வேண்டி வரும். இப்படி படித்து படித்து தான், யார் உண்மையான விமர்சனவாதி, யார் டகால்டி என்று இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. முன்பெல்லாம், டூ தம்ஸ் அப் என்று யாராவது சொன்னால் போதும், படத்தைப் பார்த்து விடுவேன். இப்போதெல்லாம், டாப் 10, டாப் 12.26 என்றெல்லாம் போடுகிற கணக்குகளை மதிப்பதில்லை. அப்படி போடுபவர் கபடநாடக வேஷதாரி, நம்பாதீர்கள்.

ப்ளர்ப் என்ற வார்த்தையின் எட்டிமாலஜி ரொம்பவும் சுவாரசியம். ப்ளர்ப் உருவாகி நூறு வருடம்(1907) தான் ஆகிறது. ஷேக்ஸ்பியர் நாடகத்துக்கும் சார்லஸ் டிக்கின்ஸின் புத்தகங்களுக்கும் யாரும் ப்ளர்ப் எழுதிய மாதிரி தெரியவில்லை. கெலெட் பர்ஜிஸ்(Gelett Burgess) என்னும் அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர், Are you a bromide ? என்னும் தன்னுடைய பிரபல புத்தகத்தின், சிறப்பு பதிப்பின் போது, அதன் அட்டையில்(dust jacket) மிஸ் ப்லிண்டா ப்ளர்ப் என்னும் ஒரு கற்பனைப் பெண்ணின் படத்தை வரைந்து, அந்த புத்தகத்தை ஹைப் செய்து ஓரிரு வாக்கியங்கள் எழுதியிருந்தார்.

பிறகு புத்தகங்களில் இந்த மாதிரி வரும், ஓரிரு வரி விளம்பரங்களுக்கு, அந்த பெண்ணின் பெயரே, நிலைத்து விட்டது.

blurb

ஆங்கில மற்றும் உலக மொழிகளில் பிரபலமான அளவு தமிழில் ப்ளர்ப் பிரபலமாகவில்லை தான். அப்படி ஆகுமா என்பதும் மில்லியன் டாலர் கேள்வி. பல தமிழ் எழுத்தாளர்கள் தான் எழுதியதையே மீண்டும் படித்து படித்து மீண்டும் அதையே எழுதிக் கொண்டிருக்கிறார்கள். வேண்டுமானால், அவர்களே அவர்களின் அடுத்த புத்தகத்தின் ப்ளர்ப்பை எழுதிக்கொள்ளலாம்.

இவை தவிர நம்மூர் பத்திரிக்கைகள் அப்படி ஒன்றும் ப்ளர்ப் போடுகிற அளவுக்கு புத்தக விமர்சனம் செய்வதில்லை. புத்தகத்தின் பின் அட்டையை படித்து விட்டு புத்தக விமர்சனம் எழுதுபவர்கள் தான் அதிகம். அப்படி ஒரு இரண்டு வரிகளை எழுதிவிட்டு, புத்தகம் கிடைக்குமிடம், புத்தக பதிப்பாளர், விலை பத்து ரூபாய் என்று எழுதி முடித்து விடுகிறார்கள். இதைப் பற்றி முன்னமே எழுதியிருக்கிறேன். தமிழ் புத்தகங்களில் போடுகிற அளவுக்கு juicyயாக விமர்சனங்களும் வருவதில்லை.

கடைசியாக தமிழில் நான் படித்த ப்ளர்ப், சுப்ரமண்யராஜுவின் கதைகள் என்ற கிழக்குப் பதிப்பக புத்தகத்தில் தான். அது கூட, சுஜாதா வேறோரு தருணத்தில், “சிறந்த பத்து சிறுகதைகளை தேடிக் கொண்டிருக்கின்றேன், அவைகளில் சுப்ரமண்யராஜுவின் கதையும் ஒன்று” என்ற வரி தான். இது தவிர அசோகமித்திரன் ராஜுவின் மரணத்திற்கு பிறகு எழுதிய கட்டுரையில் வந்த வரிகளும் ப்ளர்பாகின.

அமெரிக்க புத்தக பதிப்பக உலகமே இந்த ப்ளர்புகளை நம்பித்தான் இருக்கின்றது. ஒரு புத்தகம் எழுதப்பட்டவுடன், அதன் manuscriptஐ, அந்த புத்தகத்தின் துறையை சேர்ந்த பல பிரபலங்களுக்கும் அனுப்புகிறார்கள். அவர்களில் ஒரு சிலர் படித்துவிட்டு எழுதியனுப்பும் சில பத்திகளிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தகளை புத்திசாலித்தனமாக கோர்த்து, ப்ளர்புகள் உருவாக்கப்படுகின்றன. இதற்காகவே பல ப்ளர்ப் எழுத்தாளர்களை, பதிப்பகங்கள் வைத்திருக்கின்றன.

அப்படி இல்லாமல் போனால், ஒரு அரை டஜன் ப்ளர்ப்புகளை எழுதி அனுப்பி, இவைகளில் ஏதாவதொன்றை செலக்ட் செய்ய சொல்லி மெயிலனுப்புகிறார்கள். ஒரு ப்ளர்ப் எழுதப்பட, அந்த பிரபலங்களுக்கு காபி/டிபன் என்று ஏராளமாய் செலவழிக்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு பிரபல எகனாமிக்ஸ் புத்தக ஆசிரியருக்கு வந்த ஒரு ப்ளர்ப் வேண்டிக் கடிதம்,

If you find ________ and ________’s ideas as compelling and inspiring as we do, a quote from you that we could print on the jacket would make a world of difference. I would be happy to help craft a quote if you prefer. My contact info is below.

தற்போது படித்துக் கொண்டிருக்கும், Bill Brysonனின் The Life and Times of a Thunderbolt Kidல் எழுதப்பட்டிருக்கும் ப்ளர்பில் ஒன்று,

“The book, which is very funny…is an excercise in hyperbole, the ideal trope for the United States during this time of gragantuan confidence in progress.” – Katherine A. Powers, Boston Globe

இது மாதிரி எழுதப்படும் ப்ளர்ப்புகள் புத்தக அட்டையில், போஸ்டர்களில் பிரிண்ட் செய்யப்பட்டு, கடைகளில் விற்கப்படுகின்றன. ப்ளர்புகளை படித்து விட்டு பிடித்து விட்டால், ஆயிரக்கணக்கில் புத்தக விற்பனை அதிகரிக்கிறது. கிட்டத்தட்ட எல்லா பிரபல ஆங்கில எழுத்தாளர்களின் புத்தக அட்டையிலும் “No. 1 New York Best Selling Author” என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கும். இதுவும் ஒரு வகையான ப்ளர்ப் தான்.

அது சரி, தமிழில் ப்ளர்புக்கு சரியான தமிழ் வார்த்தை இதுவரை இல்லை. அல்லது எனக்குத் தெரியவில்லை. வேண்டுமானால், இலக்கியம் + விளம்பரம் = இலம்பரம் எனலாம். பேஷனாய் இல்லை எனக் குறை கூறுபவர்கள், கெலெட் பர்ஜிஸ்ஸின் கல்லறைக் கதவைத் தட்டி, ப்ளர்ப்பிற்கு தமிழ் வார்த்தைக் கேட்கலாம்.

—————————

இயந்திராவிற்கும் புத்தக ப்ளர்ப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பவர்களுக்கு – இயந்திர-விஞ்ஞான-வியாபார உலகத்தை பற்றி ஓரு தொடர் எழுத ஆரம்பித்த போது, கிடைத்த பெயர் தான் இயந்திரா.

அவ்வப்போது நமிதா பற்றியும் நாசா பற்றியும் கொஞ்சம் சுதந்திரமாக எழுதிப் பார்க்க நினைத்த பத்தி தான் இது.

Create a website or blog at WordPress.com