இன்று

வீட்டிற்கருகில் இருக்கும் மைக்ரோசாப்ட்டின் வழியாக காரோட்டிக் கொண்டிருந்தேன். ரஜினி படம் கணக்காக, விண்டோஸ் மெஸஞ்சரின் இரண்டு மனித பொம்மைகளின் பதினைந்தடி கட்-அவுட் வைத்திருக்கிறார்கள். அழகாக இருந்தது. விண்டோஸ் லைவ்(windows live) என்னும் சாப்ட்வேர் பாக்கேஜை இந்த வாரம் அறிமுகப்படுத்தியது தான் காரணம்.

இந்த தமிழக கட்-அவுட் கலாசாரம் ரெட்மண்ட் வரை வந்ததற்கு காரணம் பச்சைத் தமிழ் மைரோசாப்ட் ஆசாமிகளா என்று நண்பர்களை கேட்க வேண்டும்.

————————–

சியாட்டல் இந்தியர்கள் தத்தம் பால்கனிகளில் அகல் விளக்கேற்றி தீபாவளி கொண்டாடுகிறார்கள். பார்க்க ஆனந்தமாய் இருக்கிறது. இன்ஜினியர் கணவர்கள் விளக்கு தவறி விழுந்து தீ பற்றிக் கொள்ளுமோ, ஃபையர் என்ஜின் வருமோ என்று பயந்து, கடுங்குளிரிலும் பால்கனியை காவல் காத்ததும் பார்க்க நேர்ந்தது.

————————–

அமெரிக்காவில் பங்குச் சந்தை படுத்துக் கொண்டிருக்கிறது. அடுத்த வருடம் மார்ச்க்கு பின் தான் தலை தூக்கும் என்கிறார்கள். அதுவரை வங்கிகளும், ரீடைல் நிறுவனங்களும் இழுத்துப் பிடிப்பது நலம். அமெரிக்காவின் வருடாந்திர ஷாப்பிங் சீசன் ஆரம்பிக்கப் போகும் இந்நிலையில் இந்த அழுமூஞ்சி ஸ்டாக் மார்க்கெட் பல நிறுவனங்களின் வயிற்றை க.கொ இருக்கிறது.

இந்த சோக கீதத்திற்கு காரணம், வீட்டு கடன்கள் தான். சப்-ப்ரைம்(sub-prime) எனப்படும் மார்க்கெட் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் கடன் கொடுத்தது தான் காரணம்.

அமெரிக்காவில் 50களில் பில் ஃபேர்(Bill Fair) என்னும் இன்ஜினியரும், இயர்ல் ஐஸாக்(Earl Issac) என்னும் கணக்கு பேராசிரியரும் ஆரம்பித்த நிறுவனம் தான் ஃபைகோ(FICO – Fair Issac and Company). இது தான் இன்று வரை அமெரிக்கர் ஒவ்வொருவரின் கடன் வாங்கக்கூடிய சக்தியை பல ஆயிரக்கணக்கான variables, வங்கி கணக்குகள், க்ரெடிட் கார்டு செலவுகளை திருப்பிக் கட்டும் தன்மைகள் ஆகியவற்றை வைத்து கணக்கிடுகிறது. இது தான் க்ரெடிட் ஸ்கோர். இந்த க்ரெடிட் ஸ்கோரை எல்லா வங்கிகளும் ஃபைகோவிடமிருந்து காசு கொடுத்து வாங்கி, அவரவர் ஸ்கோருக்கு ஏற்றாப் போல் கடனளிக்கின்றன.

ஓவ்வொருவரின் க்ரெடிட் ஸ்கோரும்(Fico Score) சுமார் 300லிருந்து 850 வரை இருக்கலாம். அதிகம் இருப்பின் நலம். 700 க்கு மேல் க்ரெடிட் ஸ்கோர் இருக்கும் வாடிக்கையாளர்களை, ப்ரைம் மார்க்கெட் என்கிறார்கள். 620க்கு கீழ் ஸ்கோர் இருப்பவர்களை ஸப்-ப்ரைம் மார்க்கெட் எனக் குறிக்கிறார்கள். அமெரிக்கர்களில் 25% இந்த சப்-ப்ரைம் மார்க்கெட்வாசிகள்.

இந்த சப்-ப்ரைம் மார்க்கெட்வாசிகளுக்கு வீட்டுக் கடனிப்பது பற்றி வங்கிகள் யோசிக்கின்றன. கொடுத்தால் திருப்பிக் கொடுப்பார்களா அல்லது டபாய்ப்பார்களா என்று தெரியாது என்கிறார்கள். அப்படியும் சில வங்கிகள் இந்த சப்-ப்ரைம் மார்கெட்டுக்கு கடன் கொடுக்கிறார்கள். போன இரண்டு வருடங்களில் சப்-ப்ரைம் கடனாளிகள் சிலர், வேலையின்மையாலேயும் விலைவாசி உயர்வாலும் மாச இன்ஸ்டால்மெண்டை திருப்பிக் கொடுக்க முடியாமல் போனதால், வங்கிகள் நஷ்டக் கணக்கு காட்ட, ஸ்டாக் மார்கெட் ஓவராக ரியாக்ட் செய்ய, மற்றதெல்லாம் இந்த வார நியூஸ்.

இந்த களேபாரத்திலும் வீட்டு மனை விலைகள் குறையாத சில நகரங்களில் சியாட்டலும் ஒன்று. ஆனாலும் இரண்டு மாதங்களாக வீட்டு விலைகள் சற்றே குறைய ஆரம்பித்துள்ளன. இந்த நியூஸ் கேட்டவும் புது வீடு கட்டும் ஏஜெண்டுகள், தோண்டிய மண்ணை அப்படியே க்ரேனில் போட்டு விட்டு ஓடிவிட்டாற்போல் இருக்கிறது.

தினமும் சி.என்.பீ.சியில் நியுயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ் சில் இருந்து கெட்ட செய்தியாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதெல்லாம் பிசினஸ் சைக்கிள் என்றே தோன்றுகிறது. பைனான்ஸ் டிபார்ட்மெண்டில் விடாமல் கூட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் இரண்டொரு மாதத்தில் இந்நிலையை முழுமையாக திருப்பிப் போட்டு எகானமியை கண்டிப்பாய் முன்னேற்றி விடுவார்கள்.

Create a website or blog at WordPress.com