கொஞ்ச நாட்களாகவே இயந்திரா என்று இன்றைய விஞ்ஞானம்/வர்த்தகம்/தொழில்நுட்பம் பற்றி ஒரு வாரப்பத்தி எழுத எண்ணம். ஆலன் கே (Alan Curtis Kay) என்ற கணினி விஞ்ஞானி சொன்னது போல டெக்னாலஜி என்பது நீங்கள பிறந்த பின்பு உருவாக்கப்பட்டவையே (Technology is anything that was invented after you were born.). லூமியர் பிரதர்கள் உருவாக்கிய சினிமா புரஜக்டெர் எல்லாம் வரலாறு தான். இன்று காலை நீங்கள் ஷேவ் செய்யும் போது, ஜேம்ஸ் காமரூன் அறிமுகப்படுத்திய ஸ்டீரியோஸ்கோபிக் 3டி காமிரா தான் டெக்னாலஜி. ஆக, ‘இப்ப ராமசாமியாக’ இருக்கும் இயந்திர உலகத்தில் தினம் ஒரு நிறுவனம் எதாவது அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பது வியப்பல்ல. இவற்றில் முக்கிய சிலவற்றை பற்றி இங்கே யோசிப்பது தான் எண்ணம்.
இதை எழுதி குமுதத்திற்கு அனுப்பலாம் என்று நினைத்திருந்தேன். எழுதியும் விட்டேன். ஆனால் இன்னும் அனுப்பியபாடில்லை. அனுப்பினால் போடுவார்களா என்றும் தெரியவில்லை. பார்க்கலாம்.
போன வாரம் ஒரு மாக்கிண்டாஷ்[iMac] வாங்கினேன். விண்டோஸின் ஆதிக்கத்தில் இருந்து ஆப்பிள் நிறுவனத்தின் மாக் ஆப்பரேட்டிங் ஸிஸ்டத்திற்கு மாற வேண்டும் என்று பிராத்தனையெல்லாம் இல்லை. அதையும் உபயோகித்துப் பார்க்கும் முயற்சி தான். இருபத்தி நாலு இஞ்சில் அகலமாகக ஒரு எல்சிடி டெலிவிஷனை விட துல்லியமாக் தெரியும் திரை. அதை தவிர ஒரு கீபோர்டு மற்றும் ஒரே ஒரு பட்டன் கொண்ட மவுஸ். CPU என்ற டப்பாவே இல்லை. அதைத் தவிர சிடி, ஸ்பீக்கர், காமிரா என்று எல்லாமே திரைக்கும் பின் உள்ளடக்கி இருக்கும் ஒரு all-in-one slick டிஸைன்.
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்[Steve Jobs] ஒரு எளிமைப் பிரியர். ரொம்பவும் குழப்புகிற மாதிரி இருக்கும் இயந்திரங்களை வெறுத்து, ஒன்றும் தெரியாதவர்கள் கூட இயக்குகிற மாதிரி கணினியை செய்யும் ஆர்வமுடையவர். என்ன இதற்கு கொடுக்கும் விலை சற்று அதிகம் தான் என்றாலும், உங்கள் தாத்தா கூட யார் உதவியில்லாமல் இணையத்தில் சாட் செய்ய முடியும்.
மாக்-கை அழகிய அட்டைப் பெட்டியில் இருந்து எடுத்து கரெண்டில் கனெக்ட் செய்தவுடன் வேலை செய்ய ஆரம்பிக்கும் எளிமை இயந்திரா. விண்டோஸைப் போல ரொம்பவும் படுத்துவதில்லை. இந்த மாக்கிண்டாஷின் மென்பொருளை உற்பத்தி செய்யும் ஆப்பிள் நிறுவனமே இந்த கணினியையும் செய்வது தான் கணினியின் சிறந்த செயல்பாடுகளுக்கு காரணம். மைக்ரோசாப்ட்சின் விண்டோஸோ வேறு ரகம். மைரோசாப்ட் வெறும் மென்பொருள் மட்டும் தயாரிக்கிறது. அந்த மென்பொருள் உலகத்தில் எந்த மூலையில் செய்யப்படும் கணினியிலும் ஓட வைப்பது தான் அதன் நேர்த்தி. இதனால் ஆப்பிளையும் மைக்ரோசாப்டையும் ஒன்றோடொன்று இணைத்து பேசுவது சரியல்ல. அதே நேரத்தில் இரண்டும் ஒரு வகையான monopolyகளே.
Open Source மென்பொருளான லினக்ஸில் தான் ஜனநாயக கம்ப்யூட்டிங் இருக்கிறது. சமீபத்தில் தான் G-OS என்று இணையத்தை மட்டும் உபயோகிக்கிகும் அளவிற்கு, $200க்கும் குறைவான விலையில் லினக்ஸ் கணினி கிடைக்கிறது. வால்மார்ட்டில் போன வாரம் வந்த ஸ்டாக்கெல்லாம் இரண்டொரு நாளில் விற்று விட்டது.
மாக்கிண்டாஷ் கலை சம்பந்தப்பட்வர்களுக்கு ஒரு சொர்க்க பூமி. இசை அமைப்பதிலிருந்து, காமிக்ஸ் வரைவது, புகைப்பட சமாச்சாரம், சினிமா எடிட்டிங் செய்வது வரை எல்லா மென்பொருள்களோடும் வருகின்றது. இப்போது தான் ரஜினியின் சிவாஜியையும், மிஷன் இம்பாசிபிள் தீம் இசையையும் இணைத்து ஒரு டிரைலர் செய்ய முற்படுகிறேன். நன்றாக வந்தால் யூ டியூபில் போடுகிறேன்.
மற்றபடி மாக், காலையில் கண்முழிக்கும் போது சூப்பர் பிகர் போல அழகாக இருக்கிறது. அழகு ஆயிரம்.
தீபாவளிக்கு இந்தியாவுக்கு போன் போட்டு, ஹாப்பி தீபாவளி சொல்ல முற்பட்ட போது தான் தெரிந்தது, நம்மூரில் மொபைல் போன் பைத்தியம் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது. கல்லூரி செல்லும் கஸின் பிரதரிலிருந்து ஐந்தாம் க்ளாஸ் பொடிசு வர எல்லோரும் கேட்டது, “இன்னும் i-phone வாங்கலயா ?”.
இந்த i-phoneனின் புதிய விஷயம், பட்டனில்லாமல் மல்டி டச் எனப்படும் புதியதொரு திரையைக் கொண்டு செய்யப்பட்ட இண்டர்பேஸ் தான். இதைத் தவிர ஆப்பிள் தனித்தன்மையான அதன் உருத்தாத வடிமைப்பு தான், டைம் பத்திரிக்கை இதனை இந்த வருடத்தின் சிறந்த கண்டுபிடிப்பு எனச் சொல்ல வைத்தது.
எல்லாரும் சிலாகிக்கும் ஆப்பிளின் ஐ-போனும், ஏன் நான் ரசிக்கும் மாக்கிண்டாஷ் கணினியும் கூட ஒன்றும் புதிதல்ல. இரண்டிலும் ஓடுவது நாற்பது வருடங்கள் முன் எழுதப்பட்ட அரதப்பழசான யூனிக்ஸ்(unix) ஆபரேட்டிங் ஸிஸ்டம் தான். 60களில் AT & T நிறுவனத்தினர் பெல் லாப்களில் தயாரித்த மல்டிக்ஸ்(Multics – Multiplexed Information and Computing Service) என்னும் ஒரு ஆராய்ச்சி சிஸ்டம் தான் பின்னர் யூனிக்ஸ் தயாரிக்கப்பட வழி செய்தது.
யூனிக்ஸ்சில் எராளமான நல்ல விஷயங்கள் இருந்தாலும், இத்தனை நாட்களுக்கு பின்னும் நிலைத்து நிற்க காரணம், அதன் பாதுகாப்பான செயல்பாடுகளும், எல்லா பைல்களையும் எளிமையாக பைட் அரே(byte array)களாக கையாளும் தன்மையும் தான்.
இந்த i-phone வந்து பிரபலமான நேரத்தில் தான் கூகிளின் புதிய மொபைல் போன் ஜி-போன் வருகிறது என்று புலி கதை சொன்னார்கள். இதனால் கூகிள் பங்குகள் $660லிருந்து $700க்கு வர ரொம்பவும் மெனக்கெடவில்லை. போன வாரம் சச்சினின் செஞ்சுரி போல கடைசி நேரத்தில் ஜீபோனெல்லாம் கிடையாது, ஆனால் பல ஆயிரம் விதமான ஜீ-போன் செய்ய ஏதுவான ஓப்பன் சோர்ஸ் மென்பொருள் செய்திருக்கிறோம் என்றார்கள் கூகிள்காரர்கள்.
இந்த ஆண்ட்ராய்ட் எனப்படும் மென்பொருளை வைத்துக் கொண்டு யார் வேண்டுமானாலும் செல்போன்களுக்கு மென்பொருள் தயாரிக்கலாம். இப்போதுள்ள போன்கள் தயாரிப்பவரின் கட்டுக்குள் இருக்கின்றன. கூகிள் செய்திருக்கும் மென்பொருளை வைத்துக் கொண்டு இப்போது உங்கள் கேர்ள்-பாய் பிரண்ட் எங்கிருக்கிறார் என்றெல்லாம் சூப்பர் அப்ளிகேஷன்கள் செய்ய முடியும். உங்கள் அப்பாவிடம் மட்டும் இந்த ஜீபோனைப் பற்றி சொல்லிவிட வேண்டாம்.
ஜீபோன்கள் உபயோகத்திற்கு வர அடுத்த வருடம் ஆகலாம். வந்தாலும் ஐ-போனைப் போல அழகாக இருக்குமா என்று தெரியாது ஆனால் உபயோகமாக இருக்கும் என நம்பலாம்.
இணையம் மக்கள் புழக்கத்திற்கு வந்த ஆரம்ப நாட்களில், அது கன்னாபின்னாவென்று வளரப் போவதை அறிந்து, தன் மனைவின் ஊரான சியாட்டலுக்கு வந்து, உலகின் மிக நீளமான ஆற்றின் பெயரில் ஆரம்பித்த அமேசான்.காமின் நிறுவனர் தான் மேலே உள்ள படத்தில் தோன்ரும். ஜெப் பிஸாஸ்(Jeff Bezos). ஜெப் நேற்று காலை, நியுயார்க்கின் நிருபர்களை, கோலிவுட் நடிகைகள் போல பிரஸ் மீட்டுக்கு அழைத்தார். அப்போது அவர் அறிமுகப்படுத்தியது தான் கிண்டில் எனப்படும் ஈ -புக் ரீடர்.
ஏற்கனவே புத்தகங்கள் இணையத்தில் வாங்கி விற்கப்பட வழி செய்த அமெசான், தற்போது புத்தகங்களை அச்சிடாமல் படிக்க ஏதுவான எலக்ட்ரானிக் கருவியை உருவாக்கியுள்ளது. இதன் தற்போதைய விலை $399. சோனி நிறுவனம் இந்த வருடத்தின் முதல் பாதியில் தன்னுடைய ஈ-புக் ரீடரை அறிமுகப்படுத்தியது. இதன் விலை $299. சோனியின் கருவி விற்றபாடில்லை. அதனால் பங்குச் சந்தை நிபுணர்கள், அமெசானின் ரீடரும் உடனே விற்று விடும் என்று எதிர்ப்பார்க்கவில்லை. புத்தக விற்பனை தொழிலில் அனுபவம் கொண்ட அமெசானால் மட்டுமே இந்த புதிய புத்தக கருவியை மக்களிடம் கொண்டும் சேர்க்க முடியும் என்று எதிர்பார்க்கிறார்கள். இதுவும் தோற்று விட்டால் இந்த ஈ-புத்தகங்களின் நிலைமை கவலைக்கிடம் தான்.
பலரும் இதனை ஆப்பிளின் ஐ-பாடுடன் இணைத்து கணக்கிடுகிறார்கள். எப்படி ஐ-பாட் இருண்ட இசை உலகை மீட்டுக் கொண்டு வந்ததோ, அதே போல கிண்டிலும் புத்தக உலகை கலக்கும் என்கிறார்கள். தற்போதைக்கு பார்க்க சுமாராக, எதோ 70களில் வந்த கருவி போல காட்சியளித்தாலும், அடுத்தடுத்த வருடங்களில் இது முன்னேறக்கூடும்.
தற்போதைக்கு கிண்டிலில் இருப்பது கருப்பு வெள்ளைத் திரையே. வயர்லெஸ் தொழில்நுட்பத்தால் ஒரு ஆயிரம் பக்கம் கொண்ட பொன்னியின் செல்வனின் முதலிரண்டு பாகத்தை, ஒரு நிமிடத்தில் டவுன்லோடு செய்யலாம். தமிழ் புத்தகங்கள் இன்னும் இந்த வடிவத்தில் வரவில்லை. ஒரு கிண்டிலில் 200 புத்தகங்களை வைத்துக் கொள்ள முடியும். வலை தளங்களை படிக்கலாம், செய்திப் பத்திரிக்கைகள் படிக்கலாம், அவைகளில் கமெண்ட் செய்யலாம்.
மற்றபடி இதில் இன்றுள்ளபடி, திரைப்படங்களை டவுன்லோடு செய்ய முடியாது. அப்படி அவர்கள் செய்யாத வரை நலம். இல்லையென்றால் புத்தகம் படிக்க கண்டுபிடித்த கருவியில், ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களின் கவர்ச்சிக் கன்னிகள் கவனம் கலைப்பார்கள். சே சே !!