தீபாவளி நினைவுகள்

இந்த சியாட்டல் தீபாவளி ஏற்கனவே முடிந்து விட்டது. போன வாரம், வேறு கவுண்டியில் வசிக்கும் நண்பர் ஒருவரின் வீட்டில் சிகரெட் லைட்டரால் ஒரு அடி மத்தாப்பு ஏற்றி, பாம்பு மாத்திரை கொளுத்தி, புஸ்வானம் விட்டு, மைக்ரோவேவ் திரட்டிப்பால் சாப்பிட்டு கிருஷ்ணனையும் நரகாசுரனையும் நினைத்துக் கொண்டேன். அண்டை வீட்டார் புகை வருவதைப் பார்த்து, கலிபோர்னியா காட்டுத் தீயென பயந்து வெளியே எட்டிப் பார்த்தார்கள்.

சென்னையில் பால்ய தீபாவளி கொண்டாடிய பொழுது, பட்டாசுக்காக சாப்பாடு துறந்தது பல முறை. அம்மா தரும் ஒரு கோலியுருண்டை மருந்தை அப்படியே முழுங்கி சரம் வெடிக்க தலை தெறிக்க ஓடியதும் பல முறை. புரசைவாக்கத்தில் அந்த கூட்டமான வெள்ளாளத் தெருவின் பல சந்துகளில் ஒரு பெரிய சந்தில் தான் என் தீபாவளி நினைவுகள் ஒட்டிக் கொண்டிருக்கின்றன.

பாத்ரூம் க்ரில்லில் வைத்த ‘ஆட்டம் பாம்’ வெடித்து க்ரில் பெயர்த்துக் கொண்டு வந்ததும், கொட்டாங்குச்சி மூடி வைத்த லஷ்மி வெடி வெடிக்கிறதா என்று பார்த்த போது, முகத்தில் கொட்டாங்குச்சி வெடிக்க எதிர் வீட்டு சுஜ்ஜு சிரித்ததும்(scrabbleலில் அவளை தோற்கடித்து பழி தீர்த்துக் கொண்டேன்), சாணியில் நட்ட எதோஒரு வெடி வெடித்து, நாயரின் வீட்டின் சுவர் நாஸ்தியானதும், ராதாக்ரிஷ் விட்ட ராக்கெட் நானாவின் வேட்டியை துளைத்ததும் அந்த சந்தில் தான். வீட்டில் இருந்த வெடியெல்லாம் தீர்ந்து போக நண்பர்களுடன் ரோட்டை மேய்ந்து, வெடிக்காத வெடிகளை ‘புஸ்’ கொளுத்தி அப்பாவிடம் அடி வாங்கியதும் நினைவில் வருகின்றன.

ஸ்கூலில் ஒரிரு வாரத்திற்கு முன்பே திபாவளி fire பற்றிக்கொள்ள, மூச்சும் பேச்சும் தீபாவளி. பக்கத்தில் உட்காரும் சேட்டுப் பெண் ஷீக்கா, ஹிந்தி க்ளாஸுக்கு போகாமல், என்னோடு தமிழ் க்ளாஸில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு திபாவளி கதை பேசும் அளவுக்கு திபாவளி முக்கியமானது. இப்போது ஷிக்கா யாரைக் கட்டிக் கொண்டு எவ்வளவு குழந்தைகளோடு தீபாவளி பற்றி அளக்கிறாள் என்று தெரியவில்லை.

பத்தாவதுக்குப் பின் கொஞ்சமாய் பட்டாசில் நாட்டம் குறைந்து, தீபாவளி என்றால் தீபாவளி ரிலீஸ் என்றானது. தளபதியில் இருந்து தேவர் மகன், திருடா திருடா என்று கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு சினிமா தான்.

மூன்று வருடங்களாக, சியாட்டலில், திபாவளி அன்று காலை கங்காஸ்நானம் செய்து, சன் டீவியில் ‘முதல் முறையாக’ என்று எதை போட்டாலும் சட்டை செய்யாமல், டை கட்டி டைம்(time) படித்துக் கொண்டே பஸ்சில் ஆபீஸ் செல்கிறேன். அமெரிக்காவில் தீபாவளி என்ன, எல்லா பண்டிகைகளும் வீக்கெண்டில் தான் வருகின்றன. அல்லது வரவழைக்கப்படுகின்றன. அதுவும் ஒரு வகையில் சுவாரசியம் தான்.

இந்த தீபாவளிக்கு ஷாருக்கின் ஒம் ஷாந்தி ஓம் பார்ப்பதாய் எண்ணம். அடுத்த வாரம் தான் ATM சியாட்டலுக்கு வருகிறார். ரஹ்மானுக்காவும் விஜய்க்காவும் அதையும் பார்க்க எண்ணம். பார்க்கலாம்.

Create a website or blog at WordPress.com