கடயநல்லூர் ராமசாமி, ஸீரோ டிகிரி மற்றும் டைம் பாஸ்

வழக்கம் போல இந்த ஞாயிறு பத்திரிக்கையையும் யாரோ சுட்டுக் கொண்டு போய் விட்டார்கள். இதுவரை நான் பேப்பர் போட மறந்து விட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால் போன ஞாயிறன்று, பேப்பர் எடுக்காமல் வெளியே போய் திரும்பி வந்தால் பேப்பரை காணோம். எந்த பிரகஸ்பதியோ டிஸ்கவுண்ட் கூப்பனுக்காக எடுத்து கொண்டு போய் விட்டார்.

இந்த வாரமாவது, திருடனை பிடிக்க ஆறரைக்கு கண் விழித்த போது, ஸ்பார்கி குரைத்து கூச்சல் போட்டது. “ஆஹா ஸ்பார்கி !! திருடனை பிடித்ததற்கு உனக்கு பர்கர் கிங்கில் இருந்து ஒரு லார்ஜ் ஆனியன் ரிங்க்ஸ்” என்று எனக்குள் சொல்லிக் கொண்டே வெளியே போனேன். ஸ்பானிஷ் பாட்டி, ஸ்பார்கியை லீஷில் பிடித்துக் கொண்டிருந்தாள். பாட்டியின் கடிகாரத்தை பார்த்து ஸ்பார்கி எகிறி எகிறி குரைத்த போது உரைத்தது. இன்னிக்கு Daylight Saving Time முடிகிறது. Spring forward , Fall Back என்பார்கள். அப்படியானால் நேற்று இரவு 2 மணிக்கு, கடிகாரத்தை திருப்பி 1 மணிக்கு வைத்திருப்பார்கள். ஒரு மணி நேரம் மிச்சம். மாற்றாத என் கடிகாரத்தில் காட்டிய ஆறரை ஆக்சுவலாக இப்போது ஐந்தரை காட்ட வேண்டும். ஆக திருடனை பிடிக்க எழுந்ததில், வீக்கெண்ட் தூக்கம் பாழ்.


குளிர் வந்தாகிவிட்டது. நேற்றும் இன்றும் ஸீரோ டிகிரியில் வீசிய காற்று, மூடிய ஜன்னல்களில் நுழைந்து, இன்னும் இரண்டு போர்வை கேட்கிறது. மக்கள் நடமாட்டம் மால்களில் குறைகிறது. எல்லோரும் எதோ சிட்காம் பார்த்துக்கொண்டோ, இண்டர்நெட்டில் துணை தேடிக்கொண்டோ, பாப்கார்ன் கொறித்து, அமெரிக்க ஒபிஸிட்டியை ஆளுக்கு ஒரு calorieயாக கணமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த மாத calorie consumptionக்காக சூப்பர் பவுலும், என்.பி.ஏவும் காத்துக் கொண்டிருக்கின்றன.

என்ன தான் மழை அடித்தாலும் ரோடில் தண்ணி பெருக்கெடுப்பதில்லை. குண்டும் குழியும் காணக் கிடைப்பதில்லை. எந்த கழக கண்மணி நாட்டை ஆண்டாலும், infra-structureஐ மட்டும் தப்பாமல் பார்த்துக் கொள்கிறார்கள். மூன்று மாதங்களில் நம்மூர் ஜெமினி பிரிட்ஜ் மாதிரி ரெண்டு மடங்கு பெரியதாக பிரிட்ஜ் கட்டி ஒரு வீக்கெண்டில், திறப்பு விழா நடத்தாமல், இங்கு வீற்றிருக்கும் நகராட்சி தலைவர் அவர்களே என்று சோடா உடைக்காமல், நடை திறக்கிறார்கள்.


போன வாரம், NPR என்னும் பொது மக்களின் நன்கொடைகளால் நடத்தப்படும் Public Radio கேட்டுக் கொண்டே கார் ஓட்டிய போது விவிதபாரதியின் நேயர் விருப்பத்தையும், கடயநல்லூர் ராமசாமியையும் மிஸ் பண்ணினேன். இது போல் தெரியாத ஊர்களிலிருந்து ராமசாமிகளும், புழுதிவாக்கம் மோகன்களும், கைக்காங்குப்பம் சரவணன்களும், குடவாசல் கோமதிகளும், கேட்கும் பாடலை ஒலிபரப்பும் விவிதபாரதியும், அதை சரளமாக படிக்கும் அந்த வெண்கல குரலையும், அதற்கு பின் வரும் அந்த not-so-popular பாடலையும், மறுபடி கேட்பதெப்போது. தொலைந்து போனது நானா, அவர்களா அல்லது நாங்களா ?

நேரம்டா நேரம் !! – 2

சியாட்டல் டைம்ஸ்

என்னை கேட்டால், இதை படிப்பதற்கு முன் முந்தைய Time மேட்டரை படிப்பது சாலச் சிறந்தது என்பேன்.

இரண்டு நாட்கள் முன்பு ஆபிஸ் செல்லும் போது பஸ்சில், படித்துக் கொண்டிருந்தது, மாலனின் ஜன கண மன. காலை பஸ்சில், வழக்கமாக எனக்கு அருகில் உட்காரும் அந்த ஜப்பானிய இளைஞன் படிப்பது ஜப்பானிய புத்தகங்கள் தான். அவனை பார்த்து தான் நாமும் நமது vernacular மொழியில் படிக்கலாம் என்று எண்ணி, ஒரு வருடம் முன்பு பஸ்சில் தமிழ் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன். அதுவரை லைப்ரரியில இருந்து எடுத்த, பிலிப் ராத், ஃபாக்னர், லியான் யூரி என்று ஜல்லியடித்துக் கொண்டிருந்தேன்.

பஸ்சில் பக்கத்து சீட்டு அமெரிக்கர்கள் சிலர், என்ன புத்தகம் படிக்கிறீர்கள், இது என்ன மொழி என்று நிஜ ஆர்வத்துடன் கேட்பார்கள். அவர்களில் இரண்டொருவருக்கு, சுஜாதா – அசோகமித்திரன் பற்றி சொல்லி இருக்கிறேன். சிலர் ஜேம்ஸ் பாட்டர்சனை படித்துக் கொண்டே, என் புத்தகத்தில் எட்டிப் பார்ப்பார்கள். சிலர் ஒன்றும் கண்டு கொள்ளாமல், மாக்கிண்டாஷுவார்கள்.

இரண்டு நாட்கள் முன்பு எதிரில் உட்கார்ந்து கொண்டிருந்த அந்த IPod பெண், தமிழ் புத்தக அட்டையை பார்த்து கொஞ்சம் முகம் சுளித்தது, சங்கடமாய் இருந்ததால், புத்தகத்தை மூடி வைத்து விட்டு மோட்டுவளையை பார்த்துக் கொண்டே தூங்கிப் போனேன்.

நேற்று சியாட்டல் பை படித்துக் கொண்டிருந்த போது, கண்ணில் பட்ட விஷயம் விவகாரமாயிருந்தது. சியாட்டல் விமான நிலையத்தில், தொலைபேசியில் தமிழ் பேசிக் கொண்டிருந்த அப்பாவி தமிழனை சந்தேக கேஸில் பிடித்து விசாரித்து பின்பு விட்டு விட்டார்கள். என்ன தான் அமெரிக்க போலிஸ் நியாயமாக நடந்து கொள்பவர்களாய் இருந்தாலும், நம்ம ஆளு கொஞ்சம் கடியாகி, இனிமேல் விமான நிலையத்தில் தமிழே பேச மாட்டேன் என்று சொல்லி விட்டு சிக்காகோ பிளைட் ஏறியிருக்கிறார்.

மாலனின் புத்தகத்தில் கோட்சே துப்பாக்கியெடுத்து பிர்லா தோட்டம் செல்லும் வரை படித்து விட்டு படுக்கும் போது தான் அது ஞாபகம் வந்தது. டைம் வாரப் பத்திரிக்கை சந்தாவை நிறுத்தலாம் என்று முடிவு செய்து இருந்தாலும், காலை காபிக்கு துணையாக Seattle Times பேப்பர் போட சொல்லியிருந்தேன். ஜிம் போவத்ற்காக காலை 5:30க்கு கதவு திறந்தால் வாசலில், ஒரு குயர் பேப்பரை ரப்பர் பேண்டில் கட்டி போட்டிருந்தார்கள்.

ஏதோ காபிக்காக ஐம்பது செண்ட்டுக்கு வாஙகும் சியாட்டல் டைம்ஸ், ஒரு இரண்டு கிலோவாவது இருக்கும். இருக்கிற information overloadல் இந்த ரெண்டு கிலோ இன்பர்மேஷன் வேறு. பஸ்சில் எடுத்து சென்றால் எக்ஸ்ட்ரா டிக்கெட் கேட்பார்கள் என்று முக்கியமான பேப்பரை மட்டும் எடுத்து செல்கிறேன். இனிமேல் அந்த iPod பெண் வந்தால் முகம் சுளிக்காமல், பாட்டு கேட்கலாம். எனக்கு என்னவோ ஒரு Time போய் இன்னோரு Time வந்த்து, கத்தி போய் வாள் வந்ததாய் தான் தோன்றுகிறது.

நேரம்டா நேரம் !!

டைம் இந்தியா டுடே

நீங்கள் டைம் படித்திருக்கிறீர்களா ? டைம் ஒரு அமெரிக்க வார இதழ். அதை விடுங்கள், நம்மூர் இந்தியா டுடே பார்த்ததுண்டா. அதைப் போலவே டைமும், அமெரிக்க நடுத்தரவர்க்க பார்த்சாரதிகளுக்கும், சுரேஷ்களுக்குமான பத்திரிக்கை. சந்தா ஓன்றும் அதிகமில்லை. வருஷத்துக்கு இருபதே டாலர், ஜெண்டில்மென். வெறும் இருபதே டாலர்.

நல்ல வழவழ அட்டையில், எதாவது கொழ கொழ மேட்டரை, பேனை பெருமாளாக்கி கவர் ஸ்டோரி போடுவார்கள். அதை நாமும் பஸ்சில், பாதி தூக்கத்தில், ஏக குளுரில், படித்துக் கொண்டே ஆபிஸ் செல்வோம். கடைசி ரெண்டு பக்கத்தில், ஏஞ்சலினா ஜோலியின் குழந்தையும், டாம் க்ரூஸின் அடுத்த கர்ள் பிரண்டும் பல் இளிப்பார்கள். அதை பற்றி ஒரு மூன்று பத்தியும், லண்டனில் நடந்த கேட்வாக்கில் அவிழ்ந்த பாவடையும் பற்றியும் ‘சுவாரசியமாக’ எழுதி விட்டு, இனிதே முற்றும் போடப்படும். நடுநடுவே சூப்பர்மேன் என்னும் கற்பனை ஹீரோ, Gayயா இல்லையா ? ப்ளாகிங் என்னும் புதிய மீடியா தாக்குப்பிடிக்குமா புடுங்கிக்குமா ? சதாம் ஹுசைனா சாகிர் ஹுசைனா ? என்று ‘time’ly கட்டுரைகள் வேறு.

இவ்வளவு கடுப்பாக காரணம், டைம் பத்திரிகை அல்ல. பல வருடங்களாக இந்தியா டுடே படித்து வந்தும், அது ஒரு டைமின் க்ளோன் என்று தெரியாமல் போனதால் வந்த வெறுப்பு தான். கடந்த ஒரு வருடமாக டைம் படிக்கும் நான் ஆழ்ந்து கவனிப்பது, இந்தியா டுடேவின் காப்பி திறமை தான். என்னமாய் அடிக்கிறார்கள். அட்டையில் இருந்து, க்டைசி பக்கம் வரை அதே மாதிரி ரிப்போர்டிங், புகைப்படங்கள், கருத்து கணிப்புகள், gossipகள் என்று எல்லாமே அதே அதே.

ஏப்ரல் 2007ல் முடியும் எனது சந்தாவிற்கு இப்பொழுதே பணம் கட்டச் சொல்லி கடிதம் போட்டிருக்கிறார்கள். இருபது டாலர் செக் அனுப்பினால், ஒரு வருட சந்தாவும், ஒரு ‘டைம்’பீஸும் தருகிறார்கள். இதை எழுத ஆரம்பித்த பொழுது அனுப்பலாம் என்றிருந்தேன், இப்போ ம்ஹும். No Way.

எந்தரோ மஹானுபாவுலு !!

போன வாரம் லேனா தமிழ்வாணன், தமிழ் சங்கம் சார்பில் சியாட்டல் வந்திருந்தார். இரண்டு வாரம் முன்பு யேசுதாஸின் கச்சேரியில், எள் போட்டு எண்ணை எடுத்தார்கள். இன்னும் இரண்டொரு வாரங்களில் எஸ்.பி.பியும் சரணும் தகரம் கூட தங்கம் தானே பாட வருகிறார்கள். சியாட்டலில் இது போல தமிழ் / தெலுங்கு / ஹிந்தி நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் அம்முகிறது. காரணத்தை கார் ஒட்டிக் கொண்டே யோசித்துப் பார்த்தால் சற்றே புகை விலகுகிறது.

நேற்று கோவிலில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த இரண்டு மூக்குப்பொடி மாமாக்கள், யேசுதாஸின் கச்சேரியை அலசி ஆராய்ந்தார்கள். காதை கொஞ்சம் அந்த பக்கம் சாய்த்தேன். அவர்கள் கொஞ்சம் கர்னாடகத்தை பற்றி பேசி விட்டு, சென்னை சபா கச்சேரிக்கும் சியாட்டல் கச்சேரிக்கும் ஆறு வித்தியாசம் போட போய் விட்டார்கள். அவர்களின் மருமகள்கள் கச்சேரிக்குப் போனதை ஏதோ சிவாஜி படத்தை பர்ஸ்ட் ஷோ பார்த்த மாதிரி பீலா விட்டுக் கொண்டிருந்தார்கள்.

இப்படியாக இந்திய கலை நிகழ்ச்சிகளுக்கு ஒரு விதமான artificial expectation கிளம்புவதால், நம்மூர் பட்டு மாமி sistersகள் ஸ்ருதி பெட்டி தம்பூரா சகிதமாக க்ளீவ்லாண்டையும், அட்லாண்டாவையும், பச்சை டாலர்களையும் படை எடுக்கிறார்கள்.

பல desiக்கள், மாதா மாதம் அம்மா அப்பாவுக்கு ஒரு 200 டாலரை money2indiaவில் அனுப்பிவிட்டு, இங்கிருந்தே சென்னை கனவு காண்கிறார்கள். தமக்கும் சென்னைக்குமான gapஐ குறைப்பதாக நினைத்துக் கொண்டு, கச்சேரியை முற்றுகையிட்டு, எல்லா பாட்டுக்கும் ஆதி தாளத்தை தொடை தட்டுகிறார்கள். குழந்தைககு diaper மாற்றி்க் கொண்டே, ஆலாபனைக்கு நடுவில் சபாஷ் போடுகிறார்கள். கர்னாடக சங்கீதம் எங்கோ எஸ்கேப் ஆகிறது.

ஏறக்குறைய சொர்க்கம்

ஒரு வருஷம் இருந்தால் போதும், சியாட்டல் போதும் போதும் என்றாகிவிடும். சென்னையில் மழையே இல்லை என்று சொல்பவர்களில் ஒரு பத்து பேரை சியாட்டல் அனுப்பினால், மவனே !! ஆள விடு என்று ஒடிவந்து விடுவார்கள். ஆனால் மைக்ரோ சாப்டும் மயூரியும், தமிழ் மனங்களை மாற்றிக் கொண்டிருக்கின்றன. மைக்ரோ சாப்டில் தமிழ் ஆசாமிகள் அதிகம் போலிருக்கிறது.

மைக்ரோ சாப்ட் பற்றி தெரிந்தவர்களுக்கு, தெரியாத மயூரி பற்றி ஒரு சின்ன இன்ட்ரோ. மயூரி ஒரு மளிகை கடை. அவ்வளவேதான். ஆனால் நீங்கள் மயூரி போனீர்களேயானால், அங்கு கேட்கும் டயலாக்குகள் படு சுவாரசியமானவை.

“ஏம்மா நான் வேணும்னா எடுத்து தரட்டுமா” – CPWDல் இருந்து ரிடையர் ஆகி மகள் பிரசவத்திற்காக வந்த அப்பா.

“உளுத்தம் பருப்பு சின்ன பாக்கட் தான் இருக்காம். உங்களுக்கு அது கிடைக்கிற வரைக்கும் இட்லி கெடயாது. சீரியல் தான்” – ஒரு சுடிதார் மாமி, ஜீன்ஸ் மாமாவிடம்.

“ஏங்க உங்க செல்போனை குடுங்க, அர்ச்சனா நம்பரை நோட் பண்ணிக்கலாம்” – போன வாரம் தான் வந்து இறங்கியதால், ஜந்துக்களை போல அமெரிக்காவை பார்க்கும் புதுப் பெண் தீபா.

இப்படியாக எங்கு திரும்பினாலும் தமிழ்.

தமிழ் சங்கத்தில் ஈ ஓட்டுகிறார்கள். மயூரியில் தமிழ் வழிகிறது. ஒன்றிரண்டு ‘ஐ டோண்ணோ தமில் யார்’ தமிழர்கள் ஓப்பன் டாப் பி.எம். டபிள்யு-வில் வந்து பராத்தாவும், தால் மக்னீயும் வாங்கி போவார்கள். அவர்களை லூசில் விட்டு பார்த்தால், தமிழ் வளர்கிறது. Atleast Tamil continues. தமிழ் காதில் கேட்கும் பொழுது குஜால்சாக இருக்கிறது. ஏறக்குறைய சொர்க்கம். ஏறக்குறைய.