நேரம்டா நேரம் !! – 2

சியாட்டல் டைம்ஸ்

என்னை கேட்டால், இதை படிப்பதற்கு முன் முந்தைய Time மேட்டரை படிப்பது சாலச் சிறந்தது என்பேன்.

இரண்டு நாட்கள் முன்பு ஆபிஸ் செல்லும் போது பஸ்சில், படித்துக் கொண்டிருந்தது, மாலனின் ஜன கண மன. காலை பஸ்சில், வழக்கமாக எனக்கு அருகில் உட்காரும் அந்த ஜப்பானிய இளைஞன் படிப்பது ஜப்பானிய புத்தகங்கள் தான். அவனை பார்த்து தான் நாமும் நமது vernacular மொழியில் படிக்கலாம் என்று எண்ணி, ஒரு வருடம் முன்பு பஸ்சில் தமிழ் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன். அதுவரை லைப்ரரியில இருந்து எடுத்த, பிலிப் ராத், ஃபாக்னர், லியான் யூரி என்று ஜல்லியடித்துக் கொண்டிருந்தேன்.

பஸ்சில் பக்கத்து சீட்டு அமெரிக்கர்கள் சிலர், என்ன புத்தகம் படிக்கிறீர்கள், இது என்ன மொழி என்று நிஜ ஆர்வத்துடன் கேட்பார்கள். அவர்களில் இரண்டொருவருக்கு, சுஜாதா – அசோகமித்திரன் பற்றி சொல்லி இருக்கிறேன். சிலர் ஜேம்ஸ் பாட்டர்சனை படித்துக் கொண்டே, என் புத்தகத்தில் எட்டிப் பார்ப்பார்கள். சிலர் ஒன்றும் கண்டு கொள்ளாமல், மாக்கிண்டாஷுவார்கள்.

இரண்டு நாட்கள் முன்பு எதிரில் உட்கார்ந்து கொண்டிருந்த அந்த IPod பெண், தமிழ் புத்தக அட்டையை பார்த்து கொஞ்சம் முகம் சுளித்தது, சங்கடமாய் இருந்ததால், புத்தகத்தை மூடி வைத்து விட்டு மோட்டுவளையை பார்த்துக் கொண்டே தூங்கிப் போனேன்.

நேற்று சியாட்டல் பை படித்துக் கொண்டிருந்த போது, கண்ணில் பட்ட விஷயம் விவகாரமாயிருந்தது. சியாட்டல் விமான நிலையத்தில், தொலைபேசியில் தமிழ் பேசிக் கொண்டிருந்த அப்பாவி தமிழனை சந்தேக கேஸில் பிடித்து விசாரித்து பின்பு விட்டு விட்டார்கள். என்ன தான் அமெரிக்க போலிஸ் நியாயமாக நடந்து கொள்பவர்களாய் இருந்தாலும், நம்ம ஆளு கொஞ்சம் கடியாகி, இனிமேல் விமான நிலையத்தில் தமிழே பேச மாட்டேன் என்று சொல்லி விட்டு சிக்காகோ பிளைட் ஏறியிருக்கிறார்.

மாலனின் புத்தகத்தில் கோட்சே துப்பாக்கியெடுத்து பிர்லா தோட்டம் செல்லும் வரை படித்து விட்டு படுக்கும் போது தான் அது ஞாபகம் வந்தது. டைம் வாரப் பத்திரிக்கை சந்தாவை நிறுத்தலாம் என்று முடிவு செய்து இருந்தாலும், காலை காபிக்கு துணையாக Seattle Times பேப்பர் போட சொல்லியிருந்தேன். ஜிம் போவத்ற்காக காலை 5:30க்கு கதவு திறந்தால் வாசலில், ஒரு குயர் பேப்பரை ரப்பர் பேண்டில் கட்டி போட்டிருந்தார்கள்.

ஏதோ காபிக்காக ஐம்பது செண்ட்டுக்கு வாஙகும் சியாட்டல் டைம்ஸ், ஒரு இரண்டு கிலோவாவது இருக்கும். இருக்கிற information overloadல் இந்த ரெண்டு கிலோ இன்பர்மேஷன் வேறு. பஸ்சில் எடுத்து சென்றால் எக்ஸ்ட்ரா டிக்கெட் கேட்பார்கள் என்று முக்கியமான பேப்பரை மட்டும் எடுத்து செல்கிறேன். இனிமேல் அந்த iPod பெண் வந்தால் முகம் சுளிக்காமல், பாட்டு கேட்கலாம். எனக்கு என்னவோ ஒரு Time போய் இன்னோரு Time வந்த்து, கத்தி போய் வாள் வந்ததாய் தான் தோன்றுகிறது.

Create a website or blog at WordPress.com