நேரம்டா நேரம் !!

டைம் இந்தியா டுடே

நீங்கள் டைம் படித்திருக்கிறீர்களா ? டைம் ஒரு அமெரிக்க வார இதழ். அதை விடுங்கள், நம்மூர் இந்தியா டுடே பார்த்ததுண்டா. அதைப் போலவே டைமும், அமெரிக்க நடுத்தரவர்க்க பார்த்சாரதிகளுக்கும், சுரேஷ்களுக்குமான பத்திரிக்கை. சந்தா ஓன்றும் அதிகமில்லை. வருஷத்துக்கு இருபதே டாலர், ஜெண்டில்மென். வெறும் இருபதே டாலர்.

நல்ல வழவழ அட்டையில், எதாவது கொழ கொழ மேட்டரை, பேனை பெருமாளாக்கி கவர் ஸ்டோரி போடுவார்கள். அதை நாமும் பஸ்சில், பாதி தூக்கத்தில், ஏக குளுரில், படித்துக் கொண்டே ஆபிஸ் செல்வோம். கடைசி ரெண்டு பக்கத்தில், ஏஞ்சலினா ஜோலியின் குழந்தையும், டாம் க்ரூஸின் அடுத்த கர்ள் பிரண்டும் பல் இளிப்பார்கள். அதை பற்றி ஒரு மூன்று பத்தியும், லண்டனில் நடந்த கேட்வாக்கில் அவிழ்ந்த பாவடையும் பற்றியும் ‘சுவாரசியமாக’ எழுதி விட்டு, இனிதே முற்றும் போடப்படும். நடுநடுவே சூப்பர்மேன் என்னும் கற்பனை ஹீரோ, Gayயா இல்லையா ? ப்ளாகிங் என்னும் புதிய மீடியா தாக்குப்பிடிக்குமா புடுங்கிக்குமா ? சதாம் ஹுசைனா சாகிர் ஹுசைனா ? என்று ‘time’ly கட்டுரைகள் வேறு.

இவ்வளவு கடுப்பாக காரணம், டைம் பத்திரிகை அல்ல. பல வருடங்களாக இந்தியா டுடே படித்து வந்தும், அது ஒரு டைமின் க்ளோன் என்று தெரியாமல் போனதால் வந்த வெறுப்பு தான். கடந்த ஒரு வருடமாக டைம் படிக்கும் நான் ஆழ்ந்து கவனிப்பது, இந்தியா டுடேவின் காப்பி திறமை தான். என்னமாய் அடிக்கிறார்கள். அட்டையில் இருந்து, க்டைசி பக்கம் வரை அதே மாதிரி ரிப்போர்டிங், புகைப்படங்கள், கருத்து கணிப்புகள், gossipகள் என்று எல்லாமே அதே அதே.

ஏப்ரல் 2007ல் முடியும் எனது சந்தாவிற்கு இப்பொழுதே பணம் கட்டச் சொல்லி கடிதம் போட்டிருக்கிறார்கள். இருபது டாலர் செக் அனுப்பினால், ஒரு வருட சந்தாவும், ஒரு ‘டைம்’பீஸும் தருகிறார்கள். இதை எழுத ஆரம்பித்த பொழுது அனுப்பலாம் என்றிருந்தேன், இப்போ ம்ஹும். No Way.

Create a website or blog at WordPress.com