பச்சைத் தமிழனின் கலைந்த தலை

sivaji rajini

எப்போதும் பச்சைத்தமிழன், அடிக்கடி முடி கலைவதும் ஸ்டைல் என சிவாஜி படப்பாடலில் சூப்பர் ஸ்டார் துதி ஓலிப்பதாக ஒரு அன்பர் ஈமெயில் அனுப்பியிருந்தார். பாடலை கேட்பதற்கும் ஓரிரு லிங்குகளை அனுப்பி, கேட்டால் தான் ஜென்ம சாபல்யம் என்பது போல ஒரு மெலிதான மிரட்டல் வேறு.

வெளியானவை மூன்று பாடல்கள். அத்தனையும் இணையத்தில். சிவாஜி பட பாடல்களே இன்னும் வெளியாக நிலையில், இணையத்தில் வெளிவந்ததனால், கடுப்பாகி இருப்பது ஷங்கர், ரஹ்மான் தரப்பு தவிர ரஹ்மான் ரசிகர்களும் தான். இதற்கு முன்பே இதைப் போல் இரண்டொரு ரஹ்மான் படப் பாடல்கள் வெளியாகி சர்சைக்குள்ளாயின.

ரஹ்மானின் மீடியா ஸ்டுடியோவில் இருந்து ஷப்ஹீக் என்றோருவர் இதெல்லாம் ஸ்கிராட்சஸ் தான். இவை பாட்டு ஷூட்டிங்கிற்காக மிக்ஸ் செய்யப்பட்ட பாடல்களெனவும், இதன் final versionஐ கேட்டால் கலாசலாகிவிடுவீர்கள் என்றும் கொஞ்சம் damage control செய்திருப்பதால், கொஞ்ச நாள் பொறு தலைவா என்று கேட்காமல் காத்திருக்கிறேன். Daylight Dude என்றொரு ராப் தான் ரஜினியின் அறிமுக பாடலாம்.

இந்த நேரத்தில், இதை இணையத்தில் அப்லோட் செய்த விஷயத்தை பற்றி சற்று யோசித்துப் பார்க்கலாம். இதை வெளியிட்ட யாருக்கும் ஒரு பைசா கூட கிடைத்திருக்காதது சர்வ நிச்சயம். இதே மூன்று பாடல்களை, ஒரு பாடல் 50 செண்ட் என்று அமெரிக்க பணத்தில் விற்க முயற்சித்திருந்தால் கூட வாங்க ரசிக கண்மணிகள் யோசிப்பார்கள். ஆளிருக்காது. இலவச டவுன்லோட் என்றவுடன் ஆளாளுக்கு மூன்று முறை டவுன்லோட் செய்வது வழக்கமாகியது துரதிஷ்டவசமே.

இதை வெளியிட்ட பச்சைத் தமிழ் வலை தளங்களில் கூட ஒரிருநாள் தான் ரசிக மொய்த்த்ல் இருந்திருக்கும். அதற்கு பிறகு யாரும் சீண்டுவதில்லை. அந்த சில நாள் சீண்டலுக்காக இந்த தளங்கள், சில நூறு டாலர்களை கொடுத்து ஹோஸ்ட் செய்யப்படுகின்றன. அப்படியிருந்தும் இவற்றை வெளியிட நோக்கமென்ன ? அண்ட சராசரத்தில் எங்கும் பரவியிருக்கும் இணையமும் அதன் டிமாக்ரடிக் இயக்கமும் தான்.

இவற்றால் சிவாஜி படத்திற்கும், பாடல்களுக்கும் பெருத்த நஷ்டம் என்பதெல்லாம் ஜல்லி. சென்னையில் ரோட்டில் இறங்கி, டிராபிக்கில் மாட்டி உயிரை மாய்த்துக் கொள்ள விரும்பாமல் வீட்டிலேயே அடை அவியல் சாப்பிட்டு டிவிடீயில் படம் பார்க்கும் தமிழனையும், பத்து டாலர் கொடுத்து ஒரு டால்பி எஃபக்ட் இல்லாமல் படம் பார்ப்பதா என்று இந்தியன் ஸ்டோரில் டிவிடிக்கு காத்திருக்கும் என்ஆர்ஐ தமிழனையும் குறை கூறி தப்பில்லை.

முதல் நாள் டிக்கெட் கட்டணம், பத்தாம் நாள் கட்டணம், தெலுங்கு காப்பி ரைட், சன் டீவி ரைட்ஸ் என்று எப்படியிருந்தாலும் ரஜினி படத்திற்கு போட்ட பணம் எடுக்கப்படும். என்ன நிறைய பணம் போட்டால், கொஞ்சம் மெனக்கெட வேண்டும். சற்று கடினம். சுஜாதாவும், ஷங்கரும், ஏ.ஆர் ரஹ்மானும், ஏ.வி.எம்மும் இருப்பதால் வெற்றி நிச்சயம்.

ஆனால் இணையத்தினால் கொஞ்சம் நன்மையும் உண்டு. இன்னும் சில நாளில் சிவாஜி பட டிரைலர் வெளியாகும். அதில் இந்த மாதிரி பச்சைத் தமிழன், பேசுவது ஸ்டைல், சூப்பர் ஸ்டார் ஸ்டைல் சமாரசாரங்களையும், கொஞ்சம் ஸ்ரேயாவும் நிறைய ரஜினியையும் கலந்திருப்பார்கள். ஆளுக்கொரு முறை யூ டியூபில் அதை வெளியிடுவார்கள். போதும் போதும் என்று அலுக்கும் வரை ப்ளாக்குகளில் குறுக்குவாட்டில் dissect செய்யப்படும். படம் வரும் வரை ஹைபிற்கு உதவும்.

இந்தியா உலகப் கோப்பை கிரிக்கெட்டில் இருந்து வெளியேரும் இந்நிலையில், மீடியாவின் அடுத்த உடனடி டார்கெட் சிவாஜி தான். பாஸ் வரப்போகிறார். களை கட்டப் போகிறது தமிழ் உலகம். கலைந்த தலையுடன் ரெடியாயிருங்கள்.

இணையமும் தேர்தலும்

1870களிலேயே விக்டோரியா வுட்ஹல் என்ற பெண்மணி முதல் முறையாக அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டாலும் இந்த முறை ஹில்லாரி கிளிண்டன் வெற்றி பெற வாய்ப்புக்கள் அதிகம் என்று கணக்கிடுகிறார்கள். ஆனால் அவர் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்விக்கே இன்னும் விடை தெரியாத இத்தருணத்தில் இவையனைத்தும் கணிப்புகளே. ஹில்லாரி கிளிண்டனின் டெமாக்ரடிக் கட்சியில் மற்றொரு போட்டியாளராக பாரக் ஓபாமா. இவர் ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்கர். அவரை ஒரு ராக் ஸ்டார் போல் பார்க்கிறார்கள். சியாட்டலில் தன்னை பற்றிய ஒரு புத்தக வெளியீட்டிற்கு வந்த ஓபாமாவின் பேச்சை கேட்க மக்கள் ஆயிரம் டாலருக்கு எல்லாம் டிக்கெட் வாங்கினார்கள். இவ்விதமான முக்கிய போட்டியாளர்களாலேயே 2008 தேர்தல் கலை கட்ட துவங்கி விட்டது.

2008ல் வரப்போகும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை இணையத்தின் தேர்தல் என்றும் சொல்கிறார்கள். என்ன தான் போன இரண்டு தேர்தல்களிலும் இணையத்தின் பங்கு முக்கியமானதாக இருந்தாலும், இந்த முறை தான் இணையத்தின் எல்லா இயக்கங்களும் இயக்கப்படும் என்பது கணிப்பு.

2000த்தின் தேர்தலில் இணையம் தேர்தல் நிதி வசூலிக்க பயன்பட்டது. 2004ல் ப்ளாக்ஸ் என்னும் வலைப்பதிவுகளின் மூலம் தேர்தல் பிரசாரம் செய்யப்பட்டது. இப்போதுள்ள நிலையில் இணைய பாண்ட்வித் என்பது தூசாகிவிட்டதால், அமெரிக்காவின் அடுத்த தேர்தலில், வீடியோ கான்பரன்ஸ் என்பது தான் தாரக மந்திரம். இதன் மூலம் online campaigning என்னும் விஷயம் பிரபலமாகியிருக்கிறது.

2008 தேர்தல் கோதாவில் குதிப்பதாக, போன வாரம், ஹில்லாரி கிளிட்டன் முதலில் அறிக்கை வெளியிட்டது இணையத்தில் தான். நேற்றிரவு அவரின் வலைதளத்தின் மூலம் வீடியோ சாட்டில் பொதுஜனத்திடம் பேசினார். இவர் போலவே பாரக் ஓபாமாவும் தேர்தலில் போட்டியிடுவதை அறிவித்தது இணையத்தின் மூலம் தான்.

நம்மூரிலும் இன்னும் இரண்டொரு தேர்தலில், இணையத்தின் மூலம் வாக்கு சேகரிப்பு வரக்கூடும். அதற்கு பிறகு தேர்தல் கமிஷன் இரவு 11 மணிக்கு மேல் கூட்டங்கள் நடத்த கூடாது என்றெல்லாம் ஜல்லியடிக்க முடியாது. அவரவர் வீட்டில், போடுங்கம்மாஓட்டு.காமில் எல்லா கழகங்களின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் சோடா பாட்டில் பேச்சுக்களை பார்க்கலாம்.

இப்போது போல 5 நிமிட ஆட்சியின் வெற்றி விளம்பரங்கள் குறுக்கிடாமல் இல்லத்தரசிகள், மெகா சிரியலில் மூக்கு சிந்தலாம். ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை விசிட் அடிக்கும் அரசியல்வாதிகள் தொகுதிக்கு போய் சாக்கடையில் கால் நனைத்து, இளவஞ்சி குறவஞ்சி என்று குழந்தைகளுக்கு பெயரிடாமல், துடைப்பம், முறம், முட்டை, தக்காளி இத்தியாதிகளால் தொகுதியிலிருந்து துரத்தி அடிக்கப்படாமல் வாக்கு சேர்க்கலாம். சில நூறு ஆட்டோக்களில் கரகர குரல் கத்தும் ஸ்பீக்கர் கேட்காமல் மக்கள் தத்தம் வீட்டில் ரேடியோ மிர்ச்சி கேட்கலாம், சூப்பர் ஜோடி பார்க்கலாம்.

ஓட்டுப்போடும் ஜனமோ உழுது கொண்டும், ரேஷன் வாசலில் நின்று கொண்டும் வியர்வை சிந்துவதால், அடுத்த தேர்தலில் யாராவது அவர்களுக்கு இலவச கணினியும், இணைய இணைப்பும் குடுப்பாராயின் நலம். அப்படியே தேர்தல் சம்பந்தமான் டாட்காம்யையும் வாங்கினால் சரி.

2008 அமெரிக்க தேர்தல் இணைய மார்க்கெட் கிட்டத்தட்ட $9.8 பில்லியன் என்று எதிர்பார்கிறார்கள். electionmall.com போன்ற நிறுவனங்கள் எற்கனவே இதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்த வலைதளத்தின் CEO ஒரு இந்தியர், ரவி சிங். இன்று துட்டு கொடுத்தால் நாளை முதல் வாக்கு சேர்க்கலாம் என்கிறார்கள்.

யூ டியூப் போன்ற வீடியோ பரிமாற்ற வலைதளங்களுக்கு ஏக மவுசு. 2008: The Year of the YouTube Presidency என்று கலாய்கிறார்கள். சமிபத்தில் யூ டியூப்பை 1.6 பில்லியனுக்கு வாங்கிய கூகிள் கம்பெனிக்காரர்கள் ஓரமாக சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கூகிள் ரீடர் 2.0

google reader

காலையில் ஸ்பார்கி குரைத்தது. ஸ்பார்கி[sparky], என் பக்கத்து அப்பார்ட்மெண்டின் செல்ல ஜெர்மன் ஷெப்பெர்டு. நான் இந்த அப்பார்ட்மெண்டுக்கு ஜாகை வந்த போது, முதல் இரண்டு நாள் இரவில் குரைத்து முறைத்தது. அந்த வீட்டில் இருந்த பொக்க வாய் ஸ்பானிஷ் பாட்டி, துணி துவைக்கும் போது, ஹாய் சொன்னவுடன் தான் ஸ்பார்கி கனிவு பார்வை பார்த்தது. ஸ்பார்கி என்னை போல் ஒரு அம்மாஞ்சியை பார்த்தால் தான் குரைக்கும். எதிர் வீட்டு ஆஜானுபாகு Nickகை பார்த்தால், love seatயில் முகம் புதைக்கும். ஸ்பார்கிக்கு நான் இப்படி ஒரு பில்ட்-அப் கொடுப்பது தெரிந்தால், கட்டிக் கொள்ளும்.

ஸ்பார்கி பற்றி, இங்கு சொல்ல வந்த காரணம் – கூகிள் ரீடர் 2.0. நிஜமாக. நேற்று வெளியிடப்பட்ட கூகிள் ரீட்ரின் *improved* version பற்றி இண்டர்நெட்டில் உள்ள அனைத்து வெப்சைட்களிலும் எழுதிய விஷயம் தெரிந்து, கிறுக்கா கிறுக்கா கிறுக்கலில் சீக்கிரம் கிறுக்கு கிறுக்கா, என்று மெட்டிசைத்து குரைத்தது ஸ்பார்கி.

எனிவே, இத்தனை நாட்களாக RSS வலையோடைகளை படிக்க bloglines யூஸ் பண்ணிக் கொண்டிருந்தவர்கள், அதைப் போலவே வடிவமைக்கப்படுள்ள ரீடரை யூஸ் பண்ண வேண்டிய காரணங்கள் பல. அதில் சில –

– கூகிளின் usability factor. பல shortcutகளுடன் அதன் யூஸர் இண்டர்பேஸ் ஒரு Black Forest ஐஸ்கிரீம்.
– ஜிமெயிலுபவர்கள் அதே ID வைத்துக் கொண்டு ரீடரை படிக்கலாம்.
– Ajaxஐ வைத்துக் கொண்டு, ஜிமெயிலில் செய்த அதே மாயாஜாலத்தை மீண்டும் செய்திருக்கிறார்கள். இது bloglinesயில் இது நாள் வரை இல்லாத டெக்னாலஜி.
Your Inbox to the Web என்னும் அருமையான கூகிளின் பிராண்டிங்.

ரீடரை யூஸ் பண்ணிப் பாருங்கள். அது சரி, மன்மத ராசா பாட்டு கேட்டு ஸ்பார்கி என் வீட்டின் கதவை பிராண்டின மேட்டர் தெரியுமா. பெரிய கதை.

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஆப்பிள் கம்ப்யுட்டரின் வருடாந்திர புது டெக்னாலஜி அறிமுகம் நேற்று சான் பிரான்சிஸ்கோவில் நடைப்பெற்றது. திரைப்படம் பார்க்க ஏதுவான வைட் ஸ்கிரீன் iPod புழக்கத்திற்க்கு வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்து வீடு திரும்பினார்கள். iPod Shuffle இப்போது ஒரு பாதி வெத்துப்பெட்டி சைஸில் இருக்கிறது. இன்னும் ஐந்து வருடத்தில் நானோ டெக்னாலஜி வைத்து Shuffle தேய்ந்து கட்டெறும்பானால் ஆச்சரியப்படாதீர்கள்.

நேற்றைய நிகழ்ச்சியின் வெப்காஸ்டை பார்த்து இரண்டு மணி வேஸ்ட் செய்ததில், இவ்வளவு நாளாக ஸ்டீவ் ஜாப்ஸின் மேல் இருந்த மரியாதை சற்றே குறைந்தது தான் மிச்சம். மனிதர் ஏகத்திற்க்கு hype செய்கிறார். வீணாப்போன featuresசை எல்லாம் தன் presentation skillsசை வைத்து விற்க பார்க்கிறார். செயற்கைத்தனமே மிஞ்சுகிறது.

ஏம்பா !! யாராவது அவருக்கு ஒரு சோடா உடைச்சு குடுங்கப்பா.