பச்சைத் தமிழனின் கலைந்த தலை

sivaji rajini

எப்போதும் பச்சைத்தமிழன், அடிக்கடி முடி கலைவதும் ஸ்டைல் என சிவாஜி படப்பாடலில் சூப்பர் ஸ்டார் துதி ஓலிப்பதாக ஒரு அன்பர் ஈமெயில் அனுப்பியிருந்தார். பாடலை கேட்பதற்கும் ஓரிரு லிங்குகளை அனுப்பி, கேட்டால் தான் ஜென்ம சாபல்யம் என்பது போல ஒரு மெலிதான மிரட்டல் வேறு.

வெளியானவை மூன்று பாடல்கள். அத்தனையும் இணையத்தில். சிவாஜி பட பாடல்களே இன்னும் வெளியாக நிலையில், இணையத்தில் வெளிவந்ததனால், கடுப்பாகி இருப்பது ஷங்கர், ரஹ்மான் தரப்பு தவிர ரஹ்மான் ரசிகர்களும் தான். இதற்கு முன்பே இதைப் போல் இரண்டொரு ரஹ்மான் படப் பாடல்கள் வெளியாகி சர்சைக்குள்ளாயின.

ரஹ்மானின் மீடியா ஸ்டுடியோவில் இருந்து ஷப்ஹீக் என்றோருவர் இதெல்லாம் ஸ்கிராட்சஸ் தான். இவை பாட்டு ஷூட்டிங்கிற்காக மிக்ஸ் செய்யப்பட்ட பாடல்களெனவும், இதன் final versionஐ கேட்டால் கலாசலாகிவிடுவீர்கள் என்றும் கொஞ்சம் damage control செய்திருப்பதால், கொஞ்ச நாள் பொறு தலைவா என்று கேட்காமல் காத்திருக்கிறேன். Daylight Dude என்றொரு ராப் தான் ரஜினியின் அறிமுக பாடலாம்.

இந்த நேரத்தில், இதை இணையத்தில் அப்லோட் செய்த விஷயத்தை பற்றி சற்று யோசித்துப் பார்க்கலாம். இதை வெளியிட்ட யாருக்கும் ஒரு பைசா கூட கிடைத்திருக்காதது சர்வ நிச்சயம். இதே மூன்று பாடல்களை, ஒரு பாடல் 50 செண்ட் என்று அமெரிக்க பணத்தில் விற்க முயற்சித்திருந்தால் கூட வாங்க ரசிக கண்மணிகள் யோசிப்பார்கள். ஆளிருக்காது. இலவச டவுன்லோட் என்றவுடன் ஆளாளுக்கு மூன்று முறை டவுன்லோட் செய்வது வழக்கமாகியது துரதிஷ்டவசமே.

இதை வெளியிட்ட பச்சைத் தமிழ் வலை தளங்களில் கூட ஒரிருநாள் தான் ரசிக மொய்த்த்ல் இருந்திருக்கும். அதற்கு பிறகு யாரும் சீண்டுவதில்லை. அந்த சில நாள் சீண்டலுக்காக இந்த தளங்கள், சில நூறு டாலர்களை கொடுத்து ஹோஸ்ட் செய்யப்படுகின்றன. அப்படியிருந்தும் இவற்றை வெளியிட நோக்கமென்ன ? அண்ட சராசரத்தில் எங்கும் பரவியிருக்கும் இணையமும் அதன் டிமாக்ரடிக் இயக்கமும் தான்.

இவற்றால் சிவாஜி படத்திற்கும், பாடல்களுக்கும் பெருத்த நஷ்டம் என்பதெல்லாம் ஜல்லி. சென்னையில் ரோட்டில் இறங்கி, டிராபிக்கில் மாட்டி உயிரை மாய்த்துக் கொள்ள விரும்பாமல் வீட்டிலேயே அடை அவியல் சாப்பிட்டு டிவிடீயில் படம் பார்க்கும் தமிழனையும், பத்து டாலர் கொடுத்து ஒரு டால்பி எஃபக்ட் இல்லாமல் படம் பார்ப்பதா என்று இந்தியன் ஸ்டோரில் டிவிடிக்கு காத்திருக்கும் என்ஆர்ஐ தமிழனையும் குறை கூறி தப்பில்லை.

முதல் நாள் டிக்கெட் கட்டணம், பத்தாம் நாள் கட்டணம், தெலுங்கு காப்பி ரைட், சன் டீவி ரைட்ஸ் என்று எப்படியிருந்தாலும் ரஜினி படத்திற்கு போட்ட பணம் எடுக்கப்படும். என்ன நிறைய பணம் போட்டால், கொஞ்சம் மெனக்கெட வேண்டும். சற்று கடினம். சுஜாதாவும், ஷங்கரும், ஏ.ஆர் ரஹ்மானும், ஏ.வி.எம்மும் இருப்பதால் வெற்றி நிச்சயம்.

ஆனால் இணையத்தினால் கொஞ்சம் நன்மையும் உண்டு. இன்னும் சில நாளில் சிவாஜி பட டிரைலர் வெளியாகும். அதில் இந்த மாதிரி பச்சைத் தமிழன், பேசுவது ஸ்டைல், சூப்பர் ஸ்டார் ஸ்டைல் சமாரசாரங்களையும், கொஞ்சம் ஸ்ரேயாவும் நிறைய ரஜினியையும் கலந்திருப்பார்கள். ஆளுக்கொரு முறை யூ டியூபில் அதை வெளியிடுவார்கள். போதும் போதும் என்று அலுக்கும் வரை ப்ளாக்குகளில் குறுக்குவாட்டில் dissect செய்யப்படும். படம் வரும் வரை ஹைபிற்கு உதவும்.

இந்தியா உலகப் கோப்பை கிரிக்கெட்டில் இருந்து வெளியேரும் இந்நிலையில், மீடியாவின் அடுத்த உடனடி டார்கெட் சிவாஜி தான். பாஸ் வரப்போகிறார். களை கட்டப் போகிறது தமிழ் உலகம். கலைந்த தலையுடன் ரெடியாயிருங்கள்.