முன் கதை சுருக்கம்

balakumaran [pic:andhimazhai.com]

“ஏய்…எழுந்திரு” யாரோ நெற்றியயை பின்னுக்குத் தள்ளி எழுப்பினார்கள். ஸ்டேஷனில் இப்போது கும்பல் அதிகமாக இருந்தது.

“இனிமே பீச்சுப்பக்கம் வர மாட்டேன்னு எழுதிக் கொடுத்திட்டுப் போ.”

“யார்ப்பா அது ?”

“என்னமோ தியானம் பண்ண பீச்சுக்கு வந்தானாம். இட்டந்துட்டாங்க. தடி மாடு மாதிரி இருக்கே. என்னத்துக்கு இது உனக்கு… அதெல்லாம் கிழவனுங்க வேலை…ம்… எழுது இதுல.”

“இங்கிலீஷிலயா, தமிழிலியா…” லொட்டென்று தலையில் தட்டினார்கள்.

“பெரிய மயிறு இவரு. தமிழ்ல எழுதுறா” திராவிட முன்னேற்றக் கழகம் நகரசபை பிடித்துக் கொண்ட நேரம் அது. தமிழுக்கு மரியாதை வரத்துவங்கிய காலம்.

1988ல் ஒரு பத்திரிகையில், முன் கதை சுருக்கம் என்ற பெயரில் எழுதிய பாலகுமாரனின் சுயசரிதை தொடர். அவர் எழுத்தாளனாகிய கதை. அல்லது நிஜம். நான்கு வருட இடைவெளியில் இரண்டு முறை படித்ததால் இதை பற்றிய கருத்துக்கள் நிறைய.

மனிதர் கசக்க கசக்க உண்மை பேசுகிறார். இல்லாவிட்டால் வெறும் பரபரப்புக்காக இந்த புத்தகத்தில் உள்ள சில உண்மைகளை சொல்ல வேண்டியதில்லை. கவிதை எழுதினால் கை தட்டுவார்கள் என்ற நினைப்பில் தான் ஆரம்பித்ததாகவும் அந்த ego சிறிது நாளில் அடங்கி உரைநடை பக்கம் வந்ததை மிக விளக்கமாக மிகைபடுத்தாமல் சொல்வது தான் பிடிக்கிறது.

தெருவில் போகும்போது எல்லோரும் என்னை ‘கவிஞரே’ என்று கூப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். வெறும் எஸ்.எஸ்.எல்.சி டைப்பிஸ்ட் என்பதற்கு மேல் ஒரு அடையாளம். பாலகுமாரன் பி.ஏ இல்லை. எம்.ஏ இல்லை. படிப்பு வரவில்லை. அதனாலென்ன…அவன் கவிஞன். மற்ற ஜனங்களை விட இரண்டங்குலம் உயரமாக நடப்பவன்.

என் ஈகோ என்னை இழுத்துப் போயிற்று. பாராட்டுக்கும் புகழ் போதைக்கும் மனம் தவித்தது.

மதம் தரும் பக்தி இலக்கியமே வாழ்க்கை வளப்படுத்தும் என்று தனக்கு சொல்லப்பட்டது முதலில் தெரியவில்லை என்றும் பின்னர் சென்னை திமுக நடத்திய இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் தான், மணிப்பிரவாள கதா கலாட்சேபங்கள் தாண்டி பழந்தமிழ் இலக்கியம் புலப்பட்டது என்கிறார்.

இந்தப் எழுத்தாளனாகிய கதையில் மிக முக்கியமாக எனக்கு பட்டவை இரண்டு. ஓன்று, பாலகுமாரனின் இலக்கிய வட்ட பரிச்சயம். இரண்டு, சுஜாதா-சாவியின் வாசக விழாவில், சுப்பிரமணிய ராஜு என்பவரை பார்த்து பின்பு அவர் உயிர்த் தோழனாக மாறியது.

மிக முக்கியமான தமிழ் இலக்கியவாதிகளுடன் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்தும், அவர்களிடம் இருந்து பல literary nuancesசை கற்றுக் கொண்டும், தனக்கென ஒரு பாணி அமைத்து, அதிலேயே எழுதுவது, பாலகுமாரனின் பலம். என்ன தான் இலக்கியவாதிகள், எழுத்தை விற்கிறார் என்றெல்லாம் கிண்டலடித்தாலும், பொதுஜன எழுத்து ஒரு போங்கு என்று எழுதினாலும், தனக்கு தெரிந்ததை எழுதுவதாக அவர்களிடமே சொல்லியதும் பலம்.

சுப்பிரமணிய ராஜுவின் நட்பை பற்றி அவர் இறந்த பின் இந்த புத்தகத்தில் எழுதியதால் கொஞ்சம் எதிர்ப்பு வந்ததாக தெரிகிறது. இரண்டு பேரும் சேர்ந்து நீலாயதாட்சி என்னும் பெண்ணுடன் ஊர் சுற்றியதாய் எழுதி இருந்ததால் இருக்கலாம்.

ஆனால் பாலகுமாரனும், ராஜுவும் கதை பற்றி பால பாடம் படித்த கதை தான் மனங் கவர்கிறது. இப்படி போகிறது –

‘வாசகர் வட்டம்’ என்கிற அமைப்பு நல்ல புத்தகங்கள் வெளியிட்டது. அதில் சுஜாதாவின் நெடுங்கதை ஒன்று இருந்தது. படிக்கப் படிக்கப் பிரமிப்பு தட்டியது.

‘யம்மா… எப்படி எழுதறார் இந்த ஆள்… இப்படி எழுத எனக்கு என்று வரும், என்ற ஏக்கம் எனக்கு வந்தது.

சுஜாதாவின் அடுத்த நெடுங்கதை….நான் நூறு முறையாவது அதை படித்திருப்பேன்….. அச்சில் வந்த அந்தக் கதையை நாள் வெள்ளைத்தாள் எடுத்து அப்படியே காப்பி செய்தேன். ‘இது நான் எழுதின கதை’ என்று பக்கத்து போர்ஷன் மாமியிடம் காப்பி செய்த பேப்பரை காட்டினேன். ” ஏ க்ளாஸ் கதைடா, உனக்கு ரொம்ப நன்னா எழுத வர்றது”.
….

சிறுகதை பிடிபட்டது போலவும், பிடிபடாதது போலவும் இருந்தது.

மறுபடி எழுத்தாளர் சுஜாதா சென்னை வந்திருக்கிறார் என்கிற செய்தி கிடைத்தது.

ஒன்பது மணிக்கு மறுபடி போய் வீட்டுக் கதவை தட்டினோம்.

“வாங்கய்யா” உற்சாகமாய் ரங்கராஜன்(சுஜாதா) வெளியே வந்தார்.

“சாப்பிட்டீங்களா?”

“ஆச்சு சார்” பொய் சொன்னோம். உடனே இலக்கியம் பேசத் துவங்கினோம். பார் பார் பட்டணம் பார் என்று சுஜாதா தூக்கிப் போட, ஒவ்வொரு தகவலும், ஒவ்வொரு இலக்கிய செய்தியும் வியப்பாக இருந்தது.

நான் கேட்டேன் : ” எத்தனை ட்ரை பண்ணாலும் சிறுகதை எழுத வரலை…சிக்கறது… ஒரு நல்ல சிறுகதை எப்படி எழுதறது?”

எக்மோரில் டாக்டர் நாயர் பாலத்துக்கு அடிவாரம். நான்கு முனை சந்து. அப்போது ஒரு புல்வெளி ரவுண்டானா அங்கே இருந்தது. வாகன ஓட்டம் வெகுவாய் குறைந்திருந்த பத்துமணி இரவு.

ரங்கராஜன் என்கிற சுஜாதா உற்று மெர்க்குரி விளக்கில் என் முகம் பார்த்துவிட்டு தொண்டையை செருமிக் கொண்டார்.

“கதை எழுதறது கஷ்டம் இல்லையா, சுலபம். ஒரு பத்து நிமிஷம் நான் சொல்லித் தரேன். புடிச்சிக்க !”
….
ஆனால் ரங்கராஜன் பத்தாம் வகுப்பு பையனுக்கு பாடம் நடத்துவது போல் எழுதும் கலை இது என்று எளிமையாக சொல்லித் தந்தார்.

ஒரு விழாவில் ” எனக்கு எழுதச் சொல்லித் தந்த சுஜாதா அவர்களே” என்று நான் குறிப்பிட… சுஜாதா பேசும் போது ” நான் நிறைய பேருக்கு சொல்லிக் கொடுத்தேன். அதுல பாலகுமாரனுக்கு மட்டும் உடனே புரிஞ்சுது. காரணம் ஆர்வம்.”

மணிரத்ன பட க்ளைமாக்ஸ் போல பாலகுமாரனின் இரும்புக் குதிரைகள் நாவலுக்கு ராஜா அண்ணாமலை செட்டியார் விருது கிடப்பதோடு புத்தகம் முடிகிறது. சில வருடங்கள் மற்றோரு முன் கதை சுருக்கம் வரும் என்கிறார். வருகிறது. குமுதம் பக்தியில் காதலாய் கனிந்து என்கிற தொடரில் தன் ஆன்மிக வாசத்தை பற்றியும், தன் உடல்நிலை கவலைக்கிடமான போது நிகழ்ந்தவை பற்றியும் எழுதுகிறார்.

அவரே முயன்றாலும் மீண்டும் ஒரு புத்தகம் இத்தனை மணியாய் எழுத முடியாது. Aspiring Writers கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம். தமிழ் எழுத்தாளர்களின் சுய சரிதைகளிலேயே உ.வே.சா வின் என் சரித்திரம் தான் பெஸ்ட் என்கிறார்கள். அதை படித்ததில்லை. ஆனால் மனம் திறந்து உண்மையாய் எழுதிய சுயசரிதைகளில், பாலகுமாரனுக்கு முக்கிய இடம் கட்டாயம்.

Create a website or blog at WordPress.com