இது போர்க்களமா?

ப்ளாக் ப்ளாக் என்று காமெடியாய் ஏதோ ஆரம்பித்து இன்று கொலை மிரட்டலில் வந்து நிற்கிறது. கேதி சியரா(Kathy Sierra) என்னும் ஒரு பிரபல ப்ளாகர் ஒருவரரின் வலைப்பதிவிற்கு வந்த ஏராளமான, பெயரில்லாத மிரட்டல் கமெண்டுகளால், அவர் பேசவேண்டிய ஒரு கான்பெரன்ஸிலிருந்து விலகிக் கொண்டார். கேதி ப்ளாக் தவிர சில ஜாவா சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் எழுதியவர். இவர் வலைப்பதிவு எழுதுவதிலிருந்து விலகுவதாக அறிவிக்க போய், பூதம் கிளம்புகிறது.

இவரின் Creating Passionate Users என்னும் பிரபல வலைப்பதிவில் இது சம்பந்தமான இந்த ப்ளாக் போஸ்டைக் கண்டு வலைப்பதிவுலகம் சற்றே சலசலத்துப் போயிருக்கிறது. பிரபல வலைப்பதிவாளர்கள் கொஞ்சம் அதிர்ந்து போய் விடுமுறையில் போய்விட்டார்கள். இதனால் நிறைய வளர்ச்சியடையாத வலைப்பதிவு சட்டங்கள், உடனடி இயக்கத்துக்கு வந்தால், முன்னேற்றம் தான். பிபிசி செய்தி.

இந்திய வலைப்பதிவுலகிலும், இது போல நடந்திருக்கிறது. எனக்கு தெரிந்த ஒரு வலைப்பதிவாளர், இது போல சில கமெண்டுகளாலும் அவர் பெயரில் யாரோ எழுதிய மற்றொரு வலைப்பதிவாலும், தன் ப்ளாகை மூடி ஜூட் ஆகியது சோகம் தான். அது யாருக்கும் தெரியாதது மற்றோர் சங்கடம்.

வலைப்பதிவின் மூலம் இது போல, “மவனே நான் யார் தெரியுமா, என்னோட ஹிட் எவ்ளோ தெரியுமா ?” சங்கதிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அவ கிடக்கிறா பிட்ச், அந்த போஸ்ட் எழுதின அவள அப்படியே ரேப் பண்ணணும் என்றெல்லாம் கேட்க ஆளின்றி எழுதுகிறார்கள். கேட்டால் freedom to talk, first amendment என்று ஜல்லி.

தன்னுடைய வலைப்பதிவில் கவிதை, கதை, நாடகம், ஊடகம் என்று நல்லவர்களாய் எழுதி, பெயரில்லாமல் மற்றவர் வலைப்பதிவில் யார் எப்படி உச்சா போகிறார்கள், எந்த பிரபல ப்ளாகர் எந்த ஆண் குறியை குறி வைக்கிறார் என்றும் சதா வாந்தி எடுக்கிறார்கள். இதைப் போல் எழுத ‘தில்’ இல்லாதவர்கள் இவர்களுக்கு ஜால்ராயிட்டு உசுப்புவது மற்றோரு விஷயம். ஒருவர் எழுதிய எழுத்தை எதிர்க்கப் போய், நிறையவே பர்சனலாகி, விஷயம் சீரியஸாகிவிட்டது.

இவர்களையெல்லாம் வருகிற மே மாதத்தில் எந்த பேட்டையிலாவது இரண்டு குடம் தண்ணீருக்கு அலைய விடலாம் அல்லது 725ஆம் நாளன்று, சாந்தி தியேட்டரில் சந்திரமுகி பார்க்க வைக்கலாம்.

எப்படி கடவுள் நம்பிக்கைகளும், கோயில்களும் அதிகமாக, அந்த செயல்பாடுகளில் கயமைத்தனங்கள் புகுந்து, அதை எதிர்க்க நாத்திகவாதம் உருவாகி கடவுளே இல்லை என்று அறைகூவும் நிலைமை உருவானதோ அதை போல தான் இதுவும். சில பிரபலர் செய்யும் கயமைத்தனங்களை எதிர்க்க உருவான கூட்டம் வேறோரு இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

இவை எல்லாமும், 15 நிமிட பிரபலத்துக்குத் தான். யாரோ ஒருவர் ஸ்லாஷ் டாட்டில் சொன்னது போல, “The Internet used to be a university. Then it became a shopping mall. But now, it’s a war zone.”