இயந்திர பித்து

tonyhawk project 8

2005 தாங்ஸ்கிவ்விங்[thanksgiving] அன்று, காம்ப் யு.எஸ்.ஏ சென்று நடுநிசியில் நின்றது போன்ற அனுபவம் சென்னையிலும் கிடைக்காது. போனது எதுவும் வாங்குவதற்கல்ல. அந்த ஷாப்பிங் அனுபவத்திற்காக. கண்டிப்பாய் கிடைப்பதரிது. வருங்காலத்தில் யாராவது கேட்டால், “டேய் நான் கூட பனியில வெடவெடன்னு வாய் டைப்படிக்க, அந்த பெரிய லைன்ல நின்னுகிறேன்” என்று மார் தட்டலாம். எந்த கடைக்குப் போனாலும், தாங்ஸ்’கிவ்விங்’ என்று கையில் உள்ள காசத்தனையும் பிடுங்கிக் கொண்டு தான் விடுகிறார்கள்.

அந்த வகையில் அது ஒரு பந்தா அனுபவம். ஆனால் இந்த கன்ஸ்யுமர் கலாசாரத்தினூடே ஒரு கருப்பு அனுபவம் தான் அது. குளூரில் நிற்கும் கூட்டம், கடை திறந்தவுடன் ஓட்டமெடுத்து, வேண்டியது வேண்டாதது என்று எல்லாவற்றையும் பொறுக்கி, பில் போடுவதற்கு முன் தூக்கிப் போடும் வெறித்தனம். எலக்ட்ரானிக்ஸ் பித்துக்கள். அநியாயம் !!

போன வருடம் தாங்ஸ் கிவ்விங்கிற்கு வாங்கியது இரண்டு இயந்திரங்கள். இரண்டையும் வெளியே போகாமல் வீட்டிலிருந்தே, ஜவ்வரிசி வடாம் கொறித்துக் கொண்டு, இணையத்தில் வாங்கினேன். ஒன்று சினிமா புரஜக்டர். அது ஒரு அப்பிராணி. சின்னதாய் ஒரு தட்டு போல தரையில் உட்கார்ந்து, அந்த பெரிய வெள்ளைச் சுவற்றில் ஜேம்ஸ் பாண்டையும் எஸ் ஜே சூர்யாவையும் உயிர்ப்பிக்கும் எளிமை இயந்திரா.

அடுத்தது XBOX 360. தாங்ஸ் கிவ்விங்கிற்கு இரண்டு நாட்கள் முன்பு தான் அமெஸானில் ஒரு போட்டி இருப்பதாகவும், பொதுவாய் முந்நூறு டாலருக்கு விற்கும் xboxகள், அன்று மட்டும் நூறு டாலருக்கு கிடைக்குமென மெயில் வந்தது. இந்தச் சலுகை முதல் ஆயிரம் xboxகளுக்கு மட்டுமே என்றும் பொடி எழுத்துக்களில் கீழே போட்டிருந்தார்கள்.

நண்பர்கள் அனைவரும் இதற்கு இந்தியா – பாக் கிரிக்கெட் மாட்சுக்கு அளவுக்கு பில்ட்-அப் கொடுத்ததால், தாங்க்ஸ் கிவ்விங் அன்று காலை, லுங்கியை மடித்துக் கட்டி போட்டியிட உட்கார்ந்தேன்.டெஸ்க்டாப்பில் firefoxம், லாப்டாப்பில் IEயும் ஓப்பன் செய்து, சரியாக 11:00 மணிக்கு அமேஸான் சென்று லிங்கை கிளிக் செய்தால், firefoxல் கிடைத்தது பரிசு என்று மெசேஜ். IE இன்னும் ஈ ஓட்டிக் கொண்டிருந்தது. அப்படி வாங்கிய xboxக்காக அது கிடைக்காத நண்பர்களின் வயித்தெரிச்சல் வேறு. அந்த ஆயிரம் xboxகளும் 29 விநாடிகளில் விற்றுப்போனது பிறகு படித்த செய்தி.

ஒரு மாதத்திற்கு குறைந்தது மூன்று புது கேம்களாவது விளையாடுவது என்று நினைத்து கிட்டத்தட்ட xbox 360க்கு இருக்கும் அத்தனை நல்ல கேம்களையும் blockbusterல் இருந்து வாங்கி, விளையாடி முடித்தாயிற்று. மிகவும் பிடித்தது Haloவும், Project 8ம் தான். Halo என்னும் ஒரு சயன்ஸ் பிக்’ஷன் டமால் டுமில் சண்டை விளையாட்டின் அடுத்த வெளியிடு Halo 3 கூடிய சீக்கிரம் வருகிறது. சட்டை பாக்கெட்டில் பணத்துடன் தயாராக உள்ளேன்.

Tony Hawkன் Project 8 சுத்தமான அக்மார்க் சாராயம். அடிக்’ஷன். சாதாரண ஸ்கேட்போர்டிங் ஸ்போர்ட் தான் என்றாலும் அதன் முடிவில்லாத தன்மை(open ended) பைத்தியமாக்கும். இந்த க்ராபிக்ஸ் renderingகும், உங்களின் கண்ட்ரோலுக்கு மிக நுட்பமாக மேலும் கீழுமாய் பறந்து அடிபணியும் ஸ்கேட்டர் பிம்பங்களும் தான், Project 8ன் வெற்றி. உங்களுக்கு ESPNல் போடும் அந்த எக்ஸ்டிரீம் ஸ்போர்ட்ஸ் பிடிக்கவில்லையென்றாலும் இது பிடிக்கும்.

பிடிக்கும் என்றால், மைக்ரோவேவில் இருக்கும் பால் சூடாகி குளிர்ந்து போகும் வரையில் விளையாடுவீர்கள். வீட்டில் யாரும் இல்லாத போது அப்பாடா என்று உட்கார்ந்து புத்தகம் படிக்காமல், டிபன் சாப்பிடாமல், கால் மாற்றி கால் மாற்றி உச்சாவை அடக்கி அடுத்த முறை அந்த ஸ்கேட்டர் கீழே விழுந்தவுடன் பாத்ரூம் நோக்கி ஸ்கேட்கிங் செய்யும் பைத்தியக்காரத்தனம்.

மூன்று மாதமாய் விளையாடும் Project 8 இன்னும் வெறுத்தபாடில்லை. எப்பொழுதாவது வெறுத்தால் சொல்லி அனுப்புகிறேன், இந்த xbox இம்சையை யாராவது திருடிப் போங்கள். 147 தமிழ்ப் புத்தகங்களும் சில டஜன் ஆங்கில நான்-பிக்’ஷன்களும் படிக்கப்பட வீடெங்கும் இரைந்து கிடக்கின்றன.